LOADING

Type to search

தாயத்து அணியலாமா?

இதர நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள்

தாயத்து அணியலாமா?

Share

தாயத்து அணியலாமா?

குர்ஆன் வசனங்கள், அல்லது எண்கள் ஆகியவற்றை எழுதி அதை ஒரு குப்பியில் அடைத்து தாயத் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர்.

தீங்குகளில் இருந்து காத்துக் கொள்ள தாயத்து உதவும் என்று முஸ்லிம்களில் பலர் நம்புகிறார்கள். முஸ்லிமல்லாதவர்களும் நம்புகிறார்கள்.

ஆனால் இஸ்லாத்தின் பெயரால் தாயத்து வியாபாரம் நடத்தப்பட்டு வந்தாலும் இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதே உண்மை.

مسند أحمد

17422 – حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ، عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: ” إِنَّ عَلَيْهِ تَمِيمَةً ” فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: ” مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள்; ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தமது கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸில் தாயத் என்று நாம் மொழி பெயர்த்த இடத்தில் தமீமா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமீமா என்ற சொல்லுக்கு சில அகராதிகளில் சொல்லப்பட்டுள்ள அர்த்தத்தை எடுத்துக் காட்டி இது நாம் அணியும் தாயத்தைக் குறிக்காது என்று தாயத்து வியாபாரிகள் ஆதாரம் காட்டுகிறார்கள்.

القاموس المحيط

والتَّميمُ : التامُّ الخَلْقِ والشديدُ وجَمْعُ تَميمَةٍ كالتَّمائمِ لخَرَزَةٍ رَقْطاءَ تُنْظَمُ في السَّيْرِ ثم يُعْقَدُ في العُنُقِ .

தமீமா என்பது கருப்பும் வெள்ளையும் சேர்ந்த மணியாகும். வாரில் இது கோர்க்கப்பட்டு பின்னர் கழுத்தில் போடப்படும்.

(அல்காமூஸுல் முஹீத்)

لسان العرب

والتَّمِيمُ العُوَذ واحدتها تَمِيمةٌ قال أَبو منصور أَراد الخَرز الذي يُتَّخَذ عُوَذاً والتَّمِيمةُ خَرزة رَقْطاء تُنْظَم في السَّير ثم يُعقد في العُنق وهي التَّمائم والتَّمِيمُ عن ابن جني وقيل هي قِلادة يجعل فيها سُيُورٌ وعُوَذ وحكي عن ثعلب تَمَّمْت المَوْلود علَّقْت عليه التَّمائم والتَّمِيمةُ عُوذةٌ تعلق على الإِنسان قال ابن بري ومنه قول سلَمة بن الخُرْشُب تُعَوَّذُ بالرُّقى من غير خَبْلٍ وتُعْقَد في قَلائدها التَّمِيمُ قال والتَّمِيمُ جمع تمِيمةٍ وقال رفاع

தமீமா என்பது கறுப்பும், வெள்ளையும் கலந்த மணியாகும். அதை வாரில் கோர்த்து பின்னர் கழுத்தில் போடப்படும் என்று அபூ மன்ஸூர் கூறுகிறார். தமீமா என்பது ஒரு மாலையாகும். அதில் வாரும் பாதுகாப்பு பொருளும் இருக்கும் ஒன்றாகும் என்று இப்னு ஜின்னீ கூறுகிறார்.

(லிஸானுல் அரப்)

தற்போது போடப்படும் தாயத்து என்பது தகடால் செய்யப்பட்டுள்ளது. நபிகளார் தடுத்தது இந்தத் தாயத்தை இல்லை. எனவே அஹ்மதில் இடம் பெறும் ஹதீஸை வைத்து தற்போது போடப்படும் தாயத்தைத் தடை செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.

இது விநோதமான விளக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களுக்குக் கிடைத்த மூலப்பொருள் மூலம் தாயத்து செய்திருப்பார்கள். அதனால் அந்த மூலப்பொருளில் இருந்தால் தான் தடை செய்ய முடியும் என்பது அறிவீனமான வாதமகும்.

நபிகளார் காலத்தில் இருந்த சிலைகள் எதனால் செய்யப்பட்டிருக்கும்? அவர்கள் காலத்தில் இருந்த கல் ,மண். மரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டிருக்கும். நபிகளார் காலத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருளால் ஒருவர் சிலையை செய்து வைத்துக் கொண்டு இந்தச் சிலையை வணங்கலாம். ஏனெனில் நபிகளார் காலத்தில் இருந்த சிலைகள் கல்லால், மண்ணால் செய்யப்பட்டது; அதைத் தான் தடுத்தார்கள் என்று கூறினால் அறிவுள்ள யாராவது ஏற்றுக் கொள்வார்களா?

கல்லாலோ, மண்ணாலோ செய்ததற்காக தடுத்தார்களா அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் தன்மை இருந்ததற்காக தடுத்தார்களா என்று சிந்திக்க வேண்டாமா?

நபிகளார் காலத்தில் கல், மண்ணால் செய்திருந்தால் அன்றைய கால மக்களின் நம்பிக்கை என்ன? அந்தச் சிலைக்கு கடவுளின் ஆற்றல் உள்ளது என்பது தான். இந்த நம்பிக்கை பிளாஸ்டிக் சிலைகளுக்கு உள்ளது என்று நம்புவதால் இதுவும் கூடாது என்று கூறுவோம்.

இதைப் போன்று தான் தாயத்து என்பது எந்த மூலப் பொருளில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அன்றைய கால மக்களின் நம்பிக்கையைப் போன்றிருந்தால் எந்தப் பொருளில் தாயத்து செய்திருந்தாலும் அதையும் கூடாது என்று தான் நாம் கூறுவோம்.

والتمائم جمع تميمة وهي خرز أو قلادة تعلق في الرأس كانوا في الجاهلية يعتقدون أن ذلك يدفع الآفات (فتح الباري – ابن حجر – (10 / 196)

தாயத்து என்பது மணியாகும். அல்லது தலையில் மாட்டப்படும் மாலையாகும். அறியாமைக் காலத்தில் ஆபத்துகளிலிருந்து இது காப்பாற்றும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

நூல் : பத்ஹுல் பாரி

தாயத்து என்பது ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் சாதனம் என்று நம்பிக்கை அன்றைய அறியாமைக் கால மக்களிடம் இருந்துள்ளது. எனவே இந்த நம்பிக்கை எந்தப் பொருளில் இருந்தாலும் அது கூடாது என்றே கூற வேண்டும்.

தாயத்தைப் பொதுவாக தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அதில் திருக்குர்ஆன் வசனங்கள் இருந்தால் தடையில்லை என்று எங்கும் கூறவில்லை.

ஓதிப் பார்த்ததைத் தடை செய்த நபிகள் நாயகம் அவர்கள் ஓதிப் பார்க்கும் வாசகங்களில் இணை வைப்பு வாசகங்கள் இல்லையானால் கூடும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

صحيح مسلم

64 – (2200) حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ، قَالَ: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ: «اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ، لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ»

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), நீங்கள் ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்லிக் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப் பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம்

இதைப் போன்று நீங்கள் தாயத்தில் எழுதி வைக்கும் வாசகங்களைக் காட்டுங்கள் என்று கேட்டு அதில் இணைவைப்பு வாசகங்கள் இல்லையானால் தாயத்தை அணிந்து கொள்ளலாம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு எந்தத் தகவலும் இல்லாத போது எந்த வாசகம் இருந்தாலும் அது கூடாது என்று கூறுவதே சரியான கருத்தாகும்.

பின்வரும் அறிஞர்கள் தாயத் அணிவதைக் கூடும் என்று கூறியுள்ளதையும் தாயத்து அணியலாம் என்பதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்:

ஹதீஸ் கலை வல்லுனர் ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் தாவீஸ் போடுவதைப் பற்றி கேட்கப்பட்டது. தாவீஸாகிறது சுருட்டி உருண்டை செய்யப்பட்டதாகவோ அல்லது பேப்பரில் இருந்தால் கூடும் என்று சொன்னார்கள்.

குர்ஆன் உள்ள தாவீஸை கழுத்தில் கட்டிக் கொள்வதில் எந்த குற்றமும் இல்லை என்று இப்னு ஸீரின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இமாம் புகாரியின் ஆசிரியர் அனஸ் பின் மாலிக் அல்லாஹ்வின் பெயர் எழுதப்பட்டவைகளை நோயாளி தன் கழுத்தில் போடுவது எந்தக் குற்றமும் இல்லை என்று சொன்னார்கள்.

குர்ஆன் எழுதப்பட்டவை தமீமாவாக ஆகாது என்று அதா என்பவர் கூறுகிறார்.

இப்படி சிலர் கூறியதை ஆதாரமாகக் கொண்டு தாயத்து போடலாம் என்று வாதிடுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும்.

இஸ்லாத்தில் ஒரு விஷயத்தைக் கூடும் என்று சொல்வதற்கும், கூடாது என்று சொல்வதற்கும் தகுதியானவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமாவார்கள். மற்ற எவரும் ஒன்றைக் கூடும் என்று கூற அல்லது கூடாது என்று கூற அனுமதியில்லை இது தான் இஸ்லாத்தின் அடிப்படை.

தாயத்து இவ்வாறு இருந்தால் அணியலாம், இவ்வாறு இருந்தால் அணியக் கூடாது என்று கூறும் நபர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்களின் கூற்று மார்க்கமாக ஆகாது. எனவே திருக்குர்ஆனோ நபிமொழியோ அல்லாத இந்த கூற்றுகள் ஆதாரமாக ஆகாது.

WordPress database error: [Table './onlinepj1_hrdb/wp_comments' is marked as crashed and last (automatic?) repair failed]
SELECT SQL_CALC_FOUND_ROWS wp_comments.comment_ID FROM wp_comments WHERE ( comment_approved = '1' ) AND comment_post_ID = 6692 ORDER BY wp_comments.comment_date_gmt ASC, wp_comments.comment_ID ASC

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *