Sidebar

25
Thu, Apr
17 New Articles

கப்ரு எனும் மண்ணறை வாழ்க்கை குர்ஆனுக்கு எதிரானதா?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கப்ரு எனும் மண்ணறை வாழ்க்கை குர்ஆனுக்கு எதிரானதா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே அளித்த விளக்கம்.)

51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

52. எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள்.332 அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

திருக்குர்ஆன் 36 : 51, 52

உலகம் அழிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள்     அனைவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனிதர்கள் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப சொர்க்கத்தையோ, நரகத்தையோ பரிசாகப் பெறுவார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்.

இந்த நம்பிக்கையைப் பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்தில் எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. மறுமை வாழ்வு தான் இஸ்லாத்தின் அஸ்திவாரமான நம்பிக்கையாக இருப்பதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.

உலகம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதற்கு முன் மனிதர்கள் தமது வாழ் நாள் முடியும் போது மரணித்துக் கொண்டே உள்ளனர். இவ்வாறு மரணித்தவர்கள் உலகம் முழுமையாக அழிக்கப்படும் காலம் வரை பர்ஸக் எனும் மண்ணறை வாழ்க்கையைப் பெற்றுத் தங்களின் செயல்களுக்கேற்ப தண்டனைகளைப் பெறுகிறார்கள் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைகளில் முக்கியமானதாகும்.

கப்ர் வாழ்க்கை அல்லது கப்ரில் வேதனையைப் பொருத்த வரை முஸ்லிம் சமுதாயத்தில் மிகப் பெரும் தொகையினர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆனாலும், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டும் கப்ர் வாழ்க்கை என்பதே கிடையாது; என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டும் வசனங்களைத் தான் நீங்கள் மேலே காண்கிறீர்கள்.

யாஸீன் அத்தியாயத்தின் 51, 52 ஆகிய இவ்விரு வசனங்களும் மறுமை நாளில் மனிதர்கள் எழுப்பப்படுவது பற்றிக் கூறுகின்றன.

அவ்வாறு எழுப்பப்படும் போது "எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே எழுவார்கள் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இவ்வாறு எழுப்பப்படுவது குறித்து அவர்கள் கை சேதம் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கப்ரில் அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார் என்று எப்படிக் கூறுவார்கள்?

எந்த வேதனையும் இல்லாமல், இருந்தால் தான் அவர்களால் இவ்வாறு கூற முடியும். இவ்வாறு எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் கைசேதமும் கவலையும் அடைகிறார்கள் என்றால் எள்ளளவும் அவர்கள் வேதனை செய்யப்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

கப்ரில் வேதனை இருப்பதாக ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் இந்த வசனங்களுடன் அவை நேரடியாக மோதுவதால் அதை நாம் நம்பத் தேவையில்லை என்று இந்தக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர்.

தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக மற்றொரு சான்றையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ் யாருக்கும் எந்த அநியாயமும் செய்ய மாட்டான். கப்ருடைய வேதனை இருப்பதாக நம்புவது அல்லாஹ் அநீதி இழைக்கிறான் என்ற கருத்தை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது என்பது இவர்களின் மற்றொரு வாதம்.

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ருடைய வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும் இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இறந்த ஒருவர் தொழுகையை விட்டதற்காக கப்ரில் தண்டிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது போல் இன்று மரணித்த ஒருவரும் அதே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இருவரும் வேதனை செய்யப்பட்ட காலத்தைக் கணக்கிடப்பட்டால் இன்று மரணித்த வரை விட முன்னர் மரணித்தவர் 1400 வருடங்கள் அதிகமான தண்டனை பெற்றிருப்பார். இது தான் இறைவன் வழங்கும் நீதியா? என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

மேலும் கப்ரு வேதனை பற்றி குர்ஆனில் எங்குமே கூறப்படாததையும், தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆகவே, கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது திருக்குர்ஆனை மறுப்பதாகவும் அல்லாஹ்வின் நீதியை சந்தேகிப்பதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதத்தில் உண்மையுள்ளதா? இவர்களின் வாதம் தவறு என்றால் இந்தக் கேள்விகளுக்கான விடை என்ன?

"எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?'' என்று மனிதர்கள் கூறுவதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்ற முடிவு முற்றிலும் தவறானதாகும்.

குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்விரு வசனங்களை மட்டும் தங்கள் மனோ இச்சைப்படி புரிந்து கொண்டதன் விளைவு தான் இந்த வாதம்.

ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை அடைபவர்கள் முந்தைய உலகில் நடந்தவற்றை மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பது அவர்களுக்கு அறவே நினைவுக்கு வராமல் போய்விடும். எனவே தான் கப்ரு வேதனையை அனுபவித்தவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டு வேறு உலகிற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் கப்ரில் நடந்ததை அடியோடு மறந்து விடுகிறார்கள்.

ஒரு உலகில் நடந்ததை வேறொரு உலகிற்கு இடம் பெயரும் போது மறந்து விடுவார்கள் என்பது நமது கற்பனை அல்ல. மாறாக திருக்குர்ஆனிலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.

172, 173. "ஆதமுடைய மக்களின்504 முதுகுகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்1 நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)26

திருக்குர்ஆன் 7 : 172

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தவுடன் அவர் வழியாகப் பிறக்கவுள்ள எல்லா சந்ததிகளையும் வெளிப்படுத்தி "நான் உங்கள் இறைவனல்லவா?'' என்று அல்லாஹ் கேட்டான். அனைவரும் "ஆம்'' என்றனர் என்பதை இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

"ஆம்' எனக் கூறியவர்களில் நான், நீங்கள் மற்றும் அனைத்து மாந்தரும் அடங்குவோம்.

இவ்வாறு இறைவன் கேட்டதும் நாம் "ஆம்'' எனக் கூறியதும் நமக்கு நினைவில் இல்லை. இறைவன் திருக்குர்ஆன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டிய பிறகும் நமக்கு அது நினைவுக்கு வருவதில்லை. இறைவன் கூறுவதால் அதை நாம் நம்புகிறோமே தவிர, நமக்கு நினைவுக்கு வந்து நாம் இதை நம்புவதில்லை.

ஒரு உலகிலிருந்து மறு உலகுக்கு மனிதன் இடம் பெயரும் போது முந்தைய உலகில் நடந்த அனைத்தையும், மனிதன் அடியோடு மறந்து விடுவான் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகத்தில் வைத்து அல்லாஹ்  உறுதிமொழி வாங்கினானோ, அந்த உலகத்தில் நாம் மீண்டும் எழுப்பப்படுவோம். உறுதிமொழி வாங்கிய அந்த உலகத்தில் இறைவன் எடுத்த உறுதிமொழி நமக்கு நினைவுக்கு வரும் எனவும் இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இறைவன் இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரியாதே! என்றெல்லாம் கியாமத் நாளில் யாரும் மறுத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த உறுதிமொழி என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மறுமை நாளில் அந்த உறுதிமொழி நமக்கு நிச்சயமாக நினைவுக்கு வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகில் வைத்து உறுதிமொழி எடுத்தோமோ அந்த உலகை விட்டு வந்ததும் நமக்கு அது நினைவில் இல்லை. மீண்டும் அங்கே சென்றதும் அது நமக்கு நினைவுக்கு வருகிறது என்பதிலிருந்து இந்த உண்மையை நாம் சந்தேகமற அறியலாம்.

கப்ருடைய வாழ்வு என்பது தனி உலகம், திரும்ப எழுப்பப்பட்டு இறைவன் முன்னால் நிறுத்தப்படுவது வேறு உலகம். எனவே, இவ்வுலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்குச் செல்லும் போது "எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேள்வி கேட்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கப்ரில் வேதனை இல்லை என்று மறுப்பது அறிவீனமாகும்.

ஒரு உலகிலிருந்து மறு உலகத்துக்கு இடம் பெயர்ந்தது மட்டுமின்றி மற்றொரு காரணத்தினாலும் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார் என்று கேள்வியெழுப்பியிருக்கலாம்.

பொதுவாக மனிதன் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகும் போது அதற்கு முன்னிருந்த நிலையை மறந்துவிடுவான். திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டவுடன் மனிதன் காண்கின்ற பயங்கரமான நிகழ்வுகள் அதற்கு முன் அவன் அனுபவித்த தண்டனைகளை அடியோடு மறக்கச் செய்துவிடுகிறது.

"எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று மனிதன் கேட்பதற்கு இதுவும் மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்தக் காரணமும் நமது சொந்தக் கற்பனை அல்ல. மாறாக திருக்குர்ஆனிலேயே இக்காரணம் கூறப்பட்டுள்ளதற்கு சான்று உள்ளது.

1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின்1 திடுக்கம் கடுமையான விஷயமாகும்.

2. நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

திருக்குர்ஆன் 22:1,2

மனிதன் திரும்ப எழுப்பப்படும் நாளில் காணப்படும் அதிர்ச்சிகரமான நிலைமை, அனைத்தையுமே மறக்கடிக்கச் செய்வதாக இருக்கும். பெற்ற தாய் பிள்ளையைக் கூட மறக்குமளவுக்கு கடுமையானதாக இருக்கும்.

திரும்ப எழுப்பப்படும் மனிதன் அந்த அதிர்ச்சிகரமான நிலையைக் காணும் போது பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அத்தகைய அதிர்ச்சியின் போது அவன் கூறும் வார்த்தை நூறு சதவிகிதம் உண்மையானதாக இருக்காது. மறுமை நாளின் கொடூரமான நிலை அதற்கு முன் அவன் பட்ட வேதனைகளை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. அதனால் தான் கப்ர் வேதனையை மறந்து "உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார்?'' எனக் கூறுகிறான்.

அதிர்ச்சிகரமான நிலையை அடைந்தவனின் கூற்றாகத் தான் விளக்கவுரைக்கு நாம் எடுத்துக் கொண்ட வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வின் கூற்றாக அமையவில்லை. இறந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருப்பதாக அல்லாஹ் எங்கேயும் கூறவில்லை.

அதிர்ச்சிக்கு ஆளானவன் இவ்வாறு புலம்புவதாகத் தான் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

மறுமையில் இத்தகைய காஃபிர்கள் புலம்புவதை ஆதாரமாகக் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தின் கூற்றை மறுப்பது தான் விந்தையிலும் விந்தை.

எனவே கப்ருடைய வேதனையை விடப் பலமடங்கு கடுமையான நிலையைக் கண்ட அதிர்ச்சியின் புலம்பலைத் தான் அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மறுமை நாளில் காஃபிர்கள் இது மட்டுமின்றி இன்னும் பல உண்மைக்கு மாற்றமான கூற்றுக்களைத் தான் கூறுவார்கள். அவர்கள் கூறுவதை அல்லாஹ் எடுத்துக் காட்டுவதால் அதுவே உண்மை நிலை என்று நம்புவதை விட பெரிய அறியாமை எதுவும் இருக்க முடியாது.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. திருக்குர்ஆன் தான் இவ்வாறு கூறுகிறது.

55. யுகமுடிவு1 ஏற்படும் நாளில் சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 30:55

மறுமையில் எழுப்பப்படும் இந்தக் காஃபிர்கள் உறக்கத்திலிருந்து விழித்ததாக மட்டும் கூற மாட்டார்கள். மாறாக, ஒரு மணி நேரம் கூட உலகில் அல்லது கப்ரில் தங்கியிருக்கவில்லை எனவும் கூறுவார்கள். அதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதை ஆதாரமாகக் கொண்டு மனிதன் இறந்து ஒரு மணி நேரத்தில் கியாமத் நாள் வந்து விடும் என்று இவர்கள் கூறுவார்களா? அல்லது இவ்வுலகில் சிறிது நேரமே வாழ்ந்தார்கள் என்று கூறுவார்களா? அதிர்ச்சியின் புலம்பல் என்பார்களா?

நிச்சயமாக அதிர்ச்சியின் புலம்பல் என்றே கூறுவார்கள். இது புலம்பல் என்றால் "தூக்கத்திலிருந்து எழுப்பியது யார்?'' என்று இவர்கள் புலம்புவதை மட்டும் எப்படி ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

காஃபிர்கள் அதிர்ச்சியில் புலம்புவதை ஆதாரமாகக் கொண்டு கப்ரு வாழ்க்கையை மறுப்பதை விட பெரிய அறிவீனம் எதுவும் இருக்க முடியாது.

காஃபிர்கள் உலகில் நடந்த எத்தனையோ விஷயங்களை மறுமை நாளில் மறுப்பார்கள். அவர்களுக்கு எதிராக அவர்களின்  கைகளும், கால்களும் சாட்சியமளிக்கும் என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறுகிறது. காஃபிர்கள் இவற்றை மறுப்பதால் அவர்கள் அக்காரியங்களைச் செய்யவில்லை என்று அறிவுடைய யாரேனும் விளங்கிக் கொள்வார்களா?

எனவே, காஃபிர்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து கப்ருடைய வாழ்வு இல்லை  எனக் கூறுவது அறியாமை என்பதில் சந்தேகமில்லை.

மறுமையில் வழங்கப்படும் தண்டனை தவிர வேறு தண்டனை இருப்பதாக குர்ஆனில் கூறப்படவில்லை என்ற இவர்களின் வாதமும் அறியாமையின் வெளிப்பாடு தான். "கப்ருடைய வேதனை' என்ற வார்த்தை தான் குர்ஆனில் கூறப்படவில்லை. அத்தகைய வேதனை உள்ளது பற்றி வேறு வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது. இதை அறியாத காரணத்தினால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

45. எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.

46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.349 யுகமுடிவு நேரம்1 வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

திருக்குர்ஆன் 40:45,46

கியாமத் நாள் வருவதற்கு முன், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் நரக நெருப்பின் முன்னால் காலையிலும், மாலையிலும் அதாவது தினந்தோறும் காட்டப்படுகிறார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. கியாமத் நாளில் இதை விடக் கடுமையான வேதனையுள்ளது எனவும் கூறப்படுகிறது. கியாமத் நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் அவர்கள் அன்றாடம் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று தெளிவாகவே இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கப்ருடைய வேதனை பற்றி விளக்கமளித்துள்ளனர். இத்தகைய ஹதீஸ்கள் யாவும் இவ்வசனத்தின் விளக்கவுரைகளே தவிர முரணானவை அல்ல.

சில அதிமேதாவிகள் ஃபிர்அவ்னுடைய கூட்டத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தண்டனை இது; மற்றவர்களுக்கு இது இல்லை என்கின்றனர்.

மற்றவர்களுக்கு இது இல்லை என்று கூறுவதற்கு காஃபிர்கள் மறுமையில் புலம்புவதைத் தவிர இவர்களிடம் வேறு ஆதாரம் கிடையாது.

50. (ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது,165 "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!''166 என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

51. நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.

52. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 8:50, 51, 52

மலக்குகள், அக்கிரமக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது அவர்களை அடிப்பார்கள். மேலும், "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்'' எனக் கூறுவார்கள் என்று கூறுகின்ற இறைவன் "ஃபிர்அவ்னின் கூட்ட்த்தினருக்குச் செய்யப்படுவது போல்'' எனவும் கூறுவதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.

கப்ர் வேதனை பற்றி ஃபிர்அவ்ன் கூட்டத்தார் விஷயமாக மட்டுமே இறைவன் குறிப்பிட்டுள்ளான். மற்றவர்களுக்கு இது இருக்காது என்று யாரும் கருதி விடக்கூடாது என்பதற்காகவே இவ்வசனத்தில் அற்புதமாக இவ்வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் எனக் கூறி மற்றவர்களுக்கும் கப்ரு வேதனை உள்ளது என்று இறைவன் வலியுறுத்திக் கூறுகிறான்.

எனவே கப்ர் வேதனை குர்ஆனில் இல்லை எனக் கூறுவதும், அது குர்ஆனுக்கு எதிரானது என வாதிடுவதும் குர்ஆனை அறியாதவர்களின் கற்பனையில் உதித்ததாகும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

சிலர் அதிக காலமும் சிலர் குறைந்த காலமும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? என்ற கேள்வியும் தவறாகும். இறைவனின் ஏற்பாடு இது தான் என்பது தெரிந்த பின்னர் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால், அதற்கு நியாயமான விடையும் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது. நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பாவத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செய்கிறான். மற்றவன் அப்பாவத்தைச் செய்வதற்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். நூறு வருடத்தில் நடைபெற்ற அதே பாவத்துக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளான். எனவே இவன் செய்த தப்புக்கும் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னுதாரணம். அவன் தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது அநீதி என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும்254 சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 16:25

13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 29:13

வழிகெடுத்த பாவத்தையும் ஒருவன் சுமந்தாக வேண்டும் என்று இறைவன் கூறுவதால் இவர்களின் இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது.

எனவே, குர்ஆனை முழுமையாக நம்புபவர்கள் கப்ருடைய வேதனையை ஒருக்காலும் மறுக்க மாட்டார்கள்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account