Sidebar

19
Fri, Apr
4 New Articles

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கு உரியவர்கள் என்ற வசனம் பொய்யா?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கு உரியவர்கள் என்ற குர்ஆன் வசனம் பொய்யானதா?

திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று நாம் தக்க சன்றுகளுடன் வாதிட்டு வருகிறோம்.

அந்த அடிப்படையான வாதத்துக்கு பதில் சொல்லாமல் குர்ஆனுக்கு குர்ஆன் முரண்படுகிறதே? அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று விதண்டாவதாம் செய்கிறார்கள்.

இவர்கள் முன்னால் முக்கியமான கேள்விகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன.

அறிவிப்பவர்களிடம் குறை தென்படாவிட்டால் அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படவே செய்யாது; இதோ அதற்கான ஆதாரங்கள் என்று இவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

அறிவிப்பாளர்களிடம் குறை தென்படாவிட்டாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு முரண்பட்டால் அது ஹதீஸ் அல்ல என்பதற்கு நாம் எந்த ஆதாரங்களை எடுத்து வைத்து வாதங்களை முன் வைத்தோமோ அந்த ஆதாரங்களும், வாதங்களும் இன்னின்ன காரணங்களால் தவறானவை என்று இவர்களுக்குப் பதில் சொல்ல வக்கில்லை.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் சிலவற்றை நாம் உதாரணத்துக்கு எடுத்துக் காட்டி அவை எப்படி முரண்படுகிறது என்று விளக்கினோம். சாலிமுக்குப் பாலூட்டுதல் உள்ளிட்ட இது போன்ற ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படவில்லை என்று பதில் சொல்லவும் இவர்களிடம் திராணியில்லை.

இது போல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத இவர்கள் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பாரதூரமான கேள்வியை வைக்கின்றனர்.

அதாவது ஹதீஸ் மட்டுமா குர்ஆனுக்கு முரண்படுகிறது? குர்ஆனும் குர்ஆனுக்கு முரண்படுகிறது எனக் கூறி குர்ஆனில் முரண்பாடு உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி போலி ஹதீஸ்களைக் காப்பாற்ற புறப்பட்டுள்ளனர்.

தமது அடையாளத்தை வெளிப்படுத்தினால் மக்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்க வேண்டி வரும் என்பதற்காகவும், குர்ஆனை நிராகரிக்கும் தமது குஃப்ர் தனம் வெளிப்பட்டு விடும் என்பதற்காகவும் இப்படி முகம் மறைக்கும் கூட்டம் செயல்பட்டு வருகிறது.

அவர்களின் அந்த விதண்டாவாதம் இதுதான்:

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.

திருக்குர்ஆன் : 24:26

இக்குர்ஆன் வசனத்தில் கெட்ட பெண்களுக்கு கெட்ட ஆண்களும், நல்ல பெண்களுக்கு நல்ல ஆண்களும் என்று கூறப்பட்டிருக்கிறது.

கேள்வி என்னவெனில் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு உதாரணமாக பிர்அவ்னின் மனைவி ஆசியா ரலியல்லாஹு அன்ஹா என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் (66:11) ஆனால் அவருடைய கணவன் பிர்அவ்னோ அநியாயக்காரன் என்றும் அல்லாஹ் குர்ஆன் கூறுகிறான். இங்கே ஒரு கெட்ட ஆணுக்கு நல்ல பெண் கிடைத்திருக்கிறதே! இதனால் மேலே உள்ள குர்ஆன் வசனத்திற்கு முறன்படுகிறதே? முரண்பட்டால் மறுக்க வேண்டுமென்றால் இதில் எதை எடுக்க வேண்டும்? எதை மறுக்க வேண்டும்?

மேலும், நூஹ், லூத் அலைஹிஸ்ஸலாம் நபிமார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். ஆனால் அவர்களின் மனைவிமார்களோ காஃபிர்கள் என்றும், பாவிகள் என்றும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். ஆனால் நல்ல ஆண்களான நபிமார்களுக்கே கெட்ட பெண்கள் கிடைத்திருக்கிறதே! இங்கேயும் மேலே பதியப்பட்டுள்ள குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருக்கிறதே? இதில் எதை எடுக்க வேண்டும்? எதை மறுக்க வேண்டும்?

மேலும் தற்போதுள்ள நடைமுறையிலும் கூட ஒரு நல்ல பெண்ணுக்கு தீய ஆண்கள் அதாவது தொழுகையில்லாத குடிகாரன்கள், வட்டிக்காரர்கள் அமைந்துள்ளார்களே! ஆண்களுக்கும் இதே போன்று கெட்ட பெண்கள் அமைந்துள்ளார்களே!!! எனவே இக்குர்ஆன் [24:26] வசனம் நடைமுறை வாழ்விலும் பார்த்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றைச் சொல்கிறதே!!! எனவே இதை மறுக்கத் தயாரா?

இதுதான் மேற்படி முகம் தெரியாமல் கொல்லைப்புறமாக கேள்வி கேட்கும் கொள்கைவாதிகளின்(?) அறிவுப்பூர்வமான(?) கேள்வி.

இதற்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்டால் கூட பொறுத்துக் கொள்ளலாம். குர்ஆனை மறுக்கத் தயாரா என்று கேட்கும் அளவுக்கு இந்தக் கூட்டம் குர்ஆனுக்கு எதிராக போர் தொடுக்கிறது.

இப்போது இவர்கள் எழுப்பியுள்ள குதர்க்கமான கேள்விக்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே பீஜே தெளிவாக்கியுள்ளார்.

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா?

இந்த வசனத்தின் பொருள், கெட்ட ஆண்களுக்கு கெட்ட பெண்கள் தான் மனைவியராக அமைவார்கள் என்பதல்ல.

கெட்டவர்களாக இருந்து கொண்டு மனைவியர் மட்டும் நல்லவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டா? என்று இடித்துரைப்பது தான் இதன் கருத்து.

நல்லவனாக இருக்கும் நீ கெட்ட பெண்ணை மணம் முடிக்காதே என்பதற்கும்

நல்லவனாக உள்ளவனுக்கு நல்ல மனைவி தான் அமைவாள் என்பதற்கும்

வித்தியாசம் உள்ளது.

கெட்டவனுக்கு கெட்ட மனைவி தான் அமைவாள் என்பதற்கும்

கெட்டவனுக்கு கெட்டவள் தான் தகுதியானவள் என்பதற்கும்

வித்தியாசம் உள்ளது.

சட்டமாகச் சொல்வது வேறு.

இப்படித்தான் அமையும் என்று முன்னறிவிப்பு செய்வது வேறு.

இந்த வசனம் இப்படித்தான் அமையும் என்று முன்னறிவிப்பு செய்யும் வகையில் அருளப்படவில்லை.  இப்படித்தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டம் சொல்வதற்காகவே அருளப்பட்டது.

இந்த வசனத்தின் இறுதியில் இது மூமின்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 24 : 3

ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் இவ்வசனங்கள் அமையவில்லை.

ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.

விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது.

அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

மேலும் இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர் ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணை மணமுடிக்க நாடிய போது அதைத் தடை செய்து இவ்வசனம் இறங்கியது.

1755حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ مَرْثَدَ بْنَ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيَّ كَانَ يَحْمِلُ الْأَسَارَى بِمَكَّةَ وَكَانَ بِمَكَّةَ بَغِيٌّ يُقَالُ لَهَا عَنَاقُ وَكَانَتْ صَدِيقَتَهُ قَالَ جِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقَ قَالَ فَسَكَتَ عَنِّي فَنَزَلَتْ وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ فَدَعَانِي فَقَرَأَهَا عَلَيَّ وَقَالَ لَا تَنْكِحْهَا رواه أبو داود

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்கு) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது விபச்சாரம் செய்தவளை,விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (24:3 வது) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மணமுடிக்காதே என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் (1755)

ஆணோ, பெண்ணோ வாழ்க்கைத் துணை தேடும் போது விபச்சாரம் செய்யாத நல்லொழுக்கமானவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது.

(அதே நேரத்தில் விபச்சாரம் செய்த ஆணோ, பெண்ணோ தனது தவறை உணர்ந்து திருந்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்போது விபச்சாரம் செய்தவர் என்ற பட்டியலில் சேர மாட்டார். பாவத்தில் இருந்து திருந்தியவர் பாவம் செய்யாதவரைப் போல் கருதப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

கணவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் அவனுடைய மனைவியும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்பதால் அவளுடைய கணவனும் ஒழுக்கம் கெட்டவன் என்றும் முடிவு செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். நல்லொழுக்கமுள்ளவர்களின் மீது வீண் பழி சுமத்தியாவது குர்ஆனைப் பொய்யாக்கத் துடிக்கிறார்கள்.

எனவே யாருக்கு யார் மனைவியாக அமைவார் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக எத்தகையவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைப் பற்றியே பேசுகின்றது.

அடுத்து நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்கள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

மேற்கண்ட வசனம் விபச்சாரம் செய்த பெண்ணை மணப்பது குறித்து அருளப்பட்டதால் விபச்சாரம் செய்பவர்களையே கெட்ட பெண்கள் எனக் கூறுகிறது. வேறு பாவங்கள் செய்து கெட்டவர்களாக ஆனவர்களைக் குறிக்கவில்லை.

நூஹ் நபி, மற்றும் லூத் நபி ஆகியோரின் மனைவியர் கொள்கை கெட்டவர்களாக இருந்துள்ளனர். நடத்தை கெட்டவர்களாக இருந்திருக்கவே மாட்டார்கள். அப்படி இருந்தால் நபிமார்கள் அவர்களுடன் வாழ்க்கை நடத்தும் அளவுக்கு சொரணையற்றவர்கள் கிடையாது.

தமது மனைவியர் சோரம் போன பின்பும் அவர்களுடன் நபிமார்கள் வாழ்ந்துள்ளனர் என்று சொல்லத் துணிந்து விட்டது இந்தக் கேடுகெட்ட கூட்டம்.

இணைகற்பிக்கும் பெண்ணை மணக்கக் கூடாது என்ற சட்டம் நமக்கு உள்ளது. முந்தைய சமுதாயத்துக்கு இச்சட்டம் இருக்கவில்லை. எனவே இணை வைப்பவரை எப்படி அவர்கள் மணக்கலாம் என்று கேட்க முடியாது.

மொத்தத்தில் குர்ஆனில் முரண்பாடு உள்ளது என்று கூறியாவது பொய்யான ஹதீஸ்களை நியாயப்படுத்த துணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account