Sidebar

25
Thu, Apr
17 New Articles

வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா?

மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈஸா) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கை கொண்டவர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர். நாம் அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதை கவனிப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

திருக்குர்ஆன் : 5:75

ஆயினும், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் மேற்கண்ட வசனத்தை தமது கருத்துக்குச் சான்றாக முன் வைக்கின்றனர். "அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர்'' என்ற சொற்றொடரை ஆதாரமாகக் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

ஈஸா நபி உயிரோடு இருந்தால் அவர் உணவு உட்கொள்ள வேண்டும். வானத்தில் உணவுப் பொருட்கள் பயிரிடப்படுகின்றனவா? அங்கே எப்படி உணவு உட்கொள்ள முடியும்?

என்றெல்லாம் அற்புதமான (?) கேள்விகளைக் கேட்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று நிறுவ முயல்கின்றனர். ஈஸா நபி இப்பூமியில் இல்லாததால் அவர் உணவு உட்கொள்ள வில்லையாதலால் அவர் மரணித்து விட்டார் என்பது உறுதி என்பது இவர்களின் வாதம்.

பொதுவாக நபிமார்கள் உணவு உட்கொள்பவர்களாகவே இருந்தனர் எனக் கூறும் 21:8, 25:20 ஆகிய வசனங்களையும் தமது கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இது அறியாமை நிறைந்த வாதம் என்றாலும் இதை ஒரு வலுவான ஆதாரமாக மாற்றுக் கருத்துடையவர்கள் சித்தரிக்கிறார்கள்.

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தான் அடிப்படையான பிரச்சனை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிவிட்டால், அதிலிருந்தே அவர்கள் உணவு உண்கிறார்கள் என்றோ அல்லது உணவு உண்ணாமல் வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்றோ முடிவு செய்தாக வேண்டும்.

உயிருடன் இருக்கிறார்கள் என்பதிலிருந்து உணவு உட்கொள்கிறார்கள் என்று விளங்குவதற்கு பதிலாக ஈஸா நபி உணவு உண்பது தமக்குத் தெரியவில்லை என்பதிலிருந்து அவர் மரணித்து விட்டார் என்று தலைகீழாக விளங்கிக் கொள்கின்றனர்.

உணவு என்பது அரிசியும், பருப்பும் மட்டும் அல்ல. அல்லாஹ் நாடினால் வாய் வழியாக இல்லாமல் தனது வல்லமையால் உணவளிக்க இயலும் என்பதற்கு திருக்குர்ஆனில் பல சான்றுகள் உள்ளன.

கஹ்ப் அத்தியாயத்தில் நன்மக்கள் சிலரை பல வருடங்கள் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். (18:11)

அவர்கள் ஒரு பக்கமாகவே படுத்துக்கிடந்தால் உடலைப் பாதிக்கும் என்பதற்காக வலப்புறமும், இடப்புறமும் புரட்டிப் போடுவதாக 18:18 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பல வருடங்கள் உண்ணாமல் ஒருவர் தூங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரே பக்கமாகப் படுத்துக் கிடப்பதே முடியாது என்பதால் அவர்களைப் புரட்டிப் போடும் இறைவன் உணவு வழங்கவே இல்லை. இறைவன் மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணவளித்திருக்க வேண்டும்; அல்லது உணவு உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அவர்கள் உணவு உட்கொள்ளாததிலிருந்து அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கருதுவது அறியாமையாகும்.

இது போல் ஒரு நல்லடியாரை அல்லாஹ் நூறு வருடங்கள் மரணிக்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது "அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.79

திருக்க்குர் ஆன் 2:259

இந்த நல்லடியாரை உறக்க நிலையில் இறைவன் வைத்தான் என்று ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் விளக்கம் கூறுகின்றனர்.

நூறு வருடங்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் அந்த நல்லடியாரை உயிர் வாழச் செய்த இறைவன் ஈஸா நபியை வாழச் செய்வான் என்பதில் மட்டும் சந்தேகம் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவு பகல் 24 மணி நேரமும் தொடர்ந்து பல நாட்கள் நோன்பு நோற்றனர். மற்றவர்களுக்கு அதைத் தடை செய்தனர். "என் இறைவன் புறத்திலிருந்து எனக்கு உணவளிக்கப்படுகிறது'' என்று விளக்கமும் கூறினார்கள்.

(புகாரி 1961, 1962, 1963, 1964)

இந்த உணவு வாய்வழியாக அளிக்கப்படும் உணவு என்றால் நோன்பு முறிந்துவிடும். எனவே, இறைவன் வேறு விதமாக வழங்கும் ஆற்றல் என்பதே இதன் கருத்தாகும்.

அல்லாஹ் ஒருவரை உயிர் வாழச் செய்ய நினைத்தால் அவன் அதற்கான ஏற்பாட்டைச் செய்வான் என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

பூமியில் மட்டும் தான் உண்பதற்குரிய உணவுகள் உள்ளன என நினைப்பதும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

"இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை அனுப்பு என்று ஈஸா நபி பிரார்த்தனை செய்தார்கள். அதை ஏற்று அல்லாஹ் அதை வழங்கினான் என்பதை 5:114 வசனத்திலிருந்து அறியலாம்.

"வானத்தில் உணவெல்லாம் கிடையாது. பூமியிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக வானத்திலிருந்து உணவை இறக்கி வைத்தான். மன் ஸல்வா என்னும் பதார்த்தங்களை மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறக்கி வைத்ததாக 20:80, 7:160, 2:57 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இதன் பிறகும் வானத்தில் உணவு கிடைக்குமா என்று கேட்பது அறியாமையில்லாமல் வேறு என்ன?

51:22, 34:24, 16:73 ஆகிய வசனங்களில் வானங்களிலும் உணவு உள்ளன என்பது தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் பல உள்ளதாலும், இறைவனைப் பொருத்த வரை உணவு என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்பதாலும் இவர்களின் இந்த வாதமும் அடிபட்டுப் போகின்றது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account