Sidebar

19
Fri, Apr
4 New Articles

111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்து விட முடியும் என்றாலும் சில நேரங்களில் இவ்வாறு பங்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

சொத்தை விட பங்கின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய பங்கில் குறைவு ஏற்படலாம். பங்குகளை விட சொத்தின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது கிடைக்க வேண்டிய பங்குகளை விட ஒவ்வொருவருக்கும் அதிகமாகக் கிடைக்கும் நிலை ஏற்படக் கூடும்.

இதைச் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு ரொட்டி இருக்கின்றது. அதை

யூஸுஃப் என்பவருக்கு நான்கில் ஒன்று,

உமர் என்பவருக்கு எட்டில் ஒன்று,

காலித் என்பவருக்கு எட்டில் மூன்று

அப்பாஸ் என்பவருக்கு இரண்டில் ஒன்று

என கொடுக்கச் சொல்கிறோம். நாம் கூறியபடி அனைவருக்கும் கொடுக்க முடியுமா?

எட்டில் ஒன்று, எட்டில் இரண்டு எனப் பிரிப்பதாக இருந்தால் ரொட்டியை எட்டு துண்டாக ஆக்க வேண்டும்.

அதில் நான்கில் ஒன்று என்பது இரண்டு ரொட்டித் துண்டுகளாகும்.

அதில் எட்டில் ஒன்று என்பது ஒரு ரொட்டித் துண்டாகும்.

அதில் எட்டில் மூன்று என்பது மூன்று ரொட்டித் துண்டுகளாகும்.

அதில் இரண்டில் ஒன்று என்பது நான்கு ரொட்டித் துண்டுகளாகும்.

ஆக மொத்தம் கூட்டினால் பத்து துண்டுகள் ஆகின்றன. இருப்பதோ எட்டுத் துண்டுகள் தான்.

மேற்கண்ட நான்கு நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட கணக்குப்படி பங்கிட முடியாத நிலை ஏற்படுகிறது.

அவரவருக்குக் கிடைத்த துண்டுகளின் எண்ணிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு ரொட்டியை எட்டு துண்டுகளாக ஆக்குவதற்குப் பதிலாக, பத்து துண்டுகளாக ஆக்கினால் எல்லோருக்கும் சமமான அளவில் பாதிப்பு ஏற்படும். அதாவது ரொட்டியை எட்டுத் துண்டுகளாக ஆக்காமல் பத்து துண்டுகளாக ஆக்கி யூஸுஃபுக்கு இரண்டு, உமருக்கு ஒன்று, காலிதுக்கு மூன்று, அப்பாஸுக்கு நான்கு எனப் பிரித்தால் மீதமில்லாமல் ரொட்டியை நால்வருக்கும் பிரித்துக் கொடுக்க முடியும்.

ஆனால் யூஸுஃபுக்கு எட்டுபாகம் வைத்து அதில் இரண்டு கிடைப்பதற்குப் பதிலாக பத்துபாகம் வைத்து அதில் இரண்டு கிடைக்கிறது. இருபது சதவிகிதம் இவருக்குக் குறைகிறது. இது போல் ஒவ்வொருவருக்கும் இருபது சதவிகிதம் என்ற அளவில் குறைவாகக் கிடைக்கிறது.

இப்படி ஒவ்வொருவரின் பங்கும் சமஅளவில் குறைக்கப்படுகின்றது. இதனால் ஒருவர் பாதிக்கப்பட்டு மற்றவர் பாதிக்கப்படாத நிலை ஏற்படாது.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்திலும் சில நேரங்களில் இவ்வாறு பிரிக்க முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது சாத்தியமில்லாத ஒன்றை அல்லாஹ் சட்டமாக்கி விட்டான் என்று விமர்சிக்க வாய்ப்பு உண்டு. அல்லாஹ் சொன்னபடி பிரித்துக் காட்டுங்கள் என்று கேள்வி எழுப்பவும் வாய்ப்பு உண்டு.

இந்தச் சட்டத்தை வழங்கிய இறைவனுக்கு அனைத்தும் தெரியும் என்பதால் இதுபோல் விமர்சனங்கள் வரமுடியாத வகையில் இவ்வசனத்தில் உரிய சொற்களைச் சேர்த்துச் சொல்கிறான். இந்தப் பங்கீடுகள் பாதிப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இவ்வசனத்தில் சேர்த்து விட்டான்.

சில நேரங்களில் இவ்வாறு பிரித்துக் கொடுக்க முடியாமல் போகும் என்றும், இது போன்ற சந்தர்ப்பங்களில் பாதிப்பு இல்லாத வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும் எனவும் யாரும் விமர்சிக்க இடம் கொடுக்காமல் அவனே முன்கூட்டி சொல்லி விடுகிறான்.

ஒரு பெண் இறக்கும்போது,

கணவன்

இரண்டு பெண் குழந்தைகள்

தாய்

தந்தை

ஆகியோரை விட்டுச் சென்றால்

கணவனுக்கு நான்கில் ஒன்று 1/4

இரு பெண் குழந்தைகளுக்கு மூன்றில் இரண்டு 2/3

தாய்க்கு ஆறில் ஒன்று 1/6

தந்தைக்கு ஆறில் ஒன்று 1/6

எனப் பங்கிட வேண்டும் என்பது திருக்குர்ஆன் கூறும் சட்டம்.

மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டுமானால் இரண்டுக்கும் பொதுவான 12 பங்குகளாக மொத்தச் சொத்தைப் பிரித்தால் தான் இது சாத்தியமாகும்.

பன்னிரண்டு பங்கு வைத்து அதில் நான்கில் ஒரு பங்கு (கணவனுக்கு) - 3

பன்னிரண்டு பங்கில் மூன்றில் இரு பங்கு (இரு மகள்களுக்கு) - 8

பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தந்தைக்கு) - 2

பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தாய்க்கு) - 2

இவ்வாறு பங்கீடு செய்தால் 8+3+2+2 = 15 ஆகும்.

பன்னிரண்டு பங்கு வைத்து மேற்கண்டவாறு பிரித்தால் மொத்தம் 15 பங்குகள் தேவை என்பதால் மூன்று பங்குகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மொத்த சொத்தை 12க்கு பதிலாக 15 பங்குகளாக ஆக்கினால் பற்றாக்குறை இல்லாமல் அனைவருக்கும் கொடுக்க முடியும்.

பன்னிரண்டு பங்கில் இந்தத் தொகையைக் கொடுத்தால் தான் அவரவருக்குரிய சதவிகிதம் கிடைக்கும். ஆனால் இப்போது 15 பங்கிலிருந்து தான் மேற்கண்ட பங்கைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கொடுக்கும் போது அல்லாஹ் குறிப்பிட்டுள்ள பாகம் யாருக்கும் கிடைக்காது. 12ல் 3 கொடுத்தால் தான் அது கால் பாகமாக ஆகும். 15ல் 3 கொடுத்தால் அது கால் பாகமாக ஆகாது.

இப்படியே ஒவ்வொருவரின் பங்கும் குறைகிறது. ஒருவர் மட்டும் 12ல் 3 தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் சிலருக்கு மட்டும், உதாரணமாக கணவனுக்கு மட்டும் 12 பங்கில் 3 கொடுத்து விட்டு மற்றவர்களுக்குக் குறைத்தால் அது மற்றவர்களுக்குக் கேடு தரும்.

15 பங்கிலிருந்து பங்கிட்டுக் கொடுத்தால் நால்வருக்கும் அவரவர் சதவிகிதத்திற்கேற்ப சிறிது குறையும். ஒருவருக்குக் குறைந்து மற்றவருக்கு நிறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படாது.

இவ்வாறு அவரவர் சதவிகிதத்திற் கேற்ப குறைத்துப் பங்கிட வேண்டும் என்பதற்காகத் தான் "பாதிப்பு ஏற்படாத வகையில்'' என்ற சொல் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இழப்பை அனைவரும் சமமான சதவிகிதத்தில் பிரித்துக் கொள்ளும் போது ஒருவருக்கு மட்டும் பாதிப்பு வராது. இது போன்ற நிலைமைகளுக்காகவே "யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்'' என அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வளவு நுணுக்கமாக தேவையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது இது இறைவனின் வார்த்தை தான் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account