Sidebar

16
Tue, Apr
4 New Articles

278. உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

278. உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்?

இவ்வசனங்களுக்கு (19:30-32) பல அறிஞர்கள் தவறாக மொழிபெயர்த்துள்ளனர்.

தவறான மொழிபெயர்ப்பின் காரணமாக ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழிபெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.

எனவே எந்த மொழிபெயர்ப்பு சரியானது என்பதைத் தக்க காரணங்களுடன் நாம் அறிந்து கொள்வோம்.

1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான். (19:30)

2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்கு மாறும் எனக்குக் கட்டளையிட்டான். (19:31)

3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (19:32)

மேற்கண்டவாறு இந்த வசனங்களை அதிகமான அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

தவறான கொள்கை உடையவர்கள் இந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்புகின்றனர்.

19:31 வசனத்தில் "நான் உயிருள்ளவனாக இருக்கும்போது தொழ வேண்டும்; ஜகாத் கொடுக்க வேண்டும்'' என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஜகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஜகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஜகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.

மேற்கண்ட மொழிபெயர்ப்பின் அடிப்படையில் இவ்வாதம் சரியானதாக இருந்தாலும் இம்மொழி பெயர்ப்பு தவறு என்பதால் இவர்களின் வாதம் அடிபட்டுப் போகிறது. அது எப்படி என்று பார்ப்போம்.

இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32 வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.

எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.

இவ்வசனத்தில் "வ பர்ரன் பி வாலிதத்தீ" என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. "எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்'' என்பது இதன் பொருள்.

செய்பவன் + ஆக + உம் (செய்பவனாகவும்) என்பதில் உம்மைப் பொருளை எங்கே தொடர்புபடுத்துவது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

உம்மைப் பொருளைப் பொறுத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன் என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு உம்மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் "கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்'' என்ற வரிசைப்படி அமையும்.

'நல்லவனாகவும்' என்பதைத் தொடர்புபடுத்துவதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இவ்வசனத்தை (19:32) ஆராய்வோம்.

"என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்'' என்பதை எங்கே தொடர்புபடுத்த வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதைத் தொடர்புபடுத்த முடியும்.

என்னை நபியாகவும் ஆக்கினான் என்று 19:30 வசனம் கூறுகிறது. இதனுடன் தொடர்புபடுத்தினால் "என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்'' என்ற கருத்து கிடைக்கிறது.

இப்படித்தான் பெரும்பான்மை அறிஞர்கள் தொடர்புபடுத்துகின்றனர்.

இதை 19:31 வசனத்தின் இறுதியிலும் தொடர்புபடுத்த முடியும்.

"நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்'' என்ற கருத்து இதிலிருந்து கிடைக்கும். இப்படி தொடர்புபடுத்துவது தான் சரியான தாகும்.

உம்மைப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் தொடர்புபடுத்த வேண்டும். அருகில் தொடர்புபடுத்த முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் உள்ள வாக்கியங்களுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்பது அரபு இலக்கண விதியாகும்.

"என் தாயாருக்கு நன்மை செய்பவனாக" என்பது 19:32வது வசனம்.

அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் தொடர்புபடுத்த வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு

அதற்கும் முன்னால் உள்ள 19:30 வசனத்தில் தொடர்புபடுத்துவது பொருத்தமாகாது.

"நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் ஜகாத் கொடுக்குமாறு கட்டளையிட்டான்'' என்பது தான் சரியான பொருளாகும்.

எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஜகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

வேறு விதமாகச் சொல்வதென்றால் ஈஸா நபிக்கு ஜகாத் எப்போது கடமையாகும் என்றால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் கூறுகிறான்.

1. ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும்.

2. அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்பவராக இருக்க வேண்டும்.

இவ்விரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருந்தால் தான் அவர்கள் மீது ஜகாத் கடமையாகும்.

ஈஸா நபி உயர்த்தப்படுவதற்கு முன்பு தான் இது பொருந்தும். அப்போது தான் அவர்கள் உயிருடனும் இருந்தார்கள். தாயாருக்கு நன்மை செய்யும் நிலையிலும் இருந்தார்கள்.

அவர்கள் தாயாரை விட்டு எப்போது உயர்த்தப்பட்டார்களோ அப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் உள்ளது. "தாயாருக்கு நன்மை செய்பவராக' என்ற நிபந்தனை இல்லை.

இன்று கூட ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் இல்லை.

ஈஸா நபி உயிருடன் உள்ளார் என்ற கருத்தை வலுவூட்டும் மற்றொரு சான்றாகவும் இது அமைந்து விடுகிறது.

* ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார். எனக் கூறும் 43:61 வசனமும்,

* அவர் மரணிப்பதற்கு முன்னால் வேதமுடையோர் யாரும் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள் எனக் கூறும் 4:159 வசனமும்,

* அவருக்கு முன் சென்றவர்கள் மரணித்து விட்டார்கள். எனக் கூறும் 5:75 வசனமும்

ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதைக் கூறுவது போல் இவ்வசனமும் ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இறுதிக் காலத்தில் ஈஸா நபி வரும்போது ஜகாத் கொடுப்பாரா? மாட்டாரா? தொழுவாரா? தொழ மாட்டாரா? தொழுவார்; ஜகாத் கொடுப்பார் என்றால் தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் அவர் இல்லையே என்பது தான் அந்தக் கேள்வி.

ஈஸா நபி அவர்கள் இந்தப் பூமிக்கு இறங்கி வரும்போது நபியாக இறங்க மாட்டார்கள். முஹம்மது நபியுடைய சமுதாயத்தின் உறுப்பினராகத் தான் இறங்குவார்கள். அதற்கு முன் அவர்களுக்கு எந்தச் சட்டம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவற்றில் எதையும் அவர்கள் செயல்படுத்த மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தின்படியே தீர்ப்பளிப்பார்கள்.

எனவே அவருக்கு எந்தத் தொழுகை ஏற்கனவே கடமையாக்கப்பட்டு இருந்ததோ அந்தத் தொழுகையை அவர் தொழ மாட்டார். அந்த ஜகாத்தையும் கொடுக்க மாட்டார்.

தொழுமாறும், ஜகாத் கொடுக்கு மாறும் அல்லாஹ் கட்டளையிட்டதாக அவர் சொல்லும் போது ஒரு தொழுகையையும் ஒரு ஜகாத்தையும் மனதில் கொண்டு சொன்னார். அந்தத் தொழுகையை அவர் இறங்கி வரும்போது தொழ மாட்டார். அந்த ஜகாத்தை அவர் கொடுக்க மாட்டார்.

இந்த சமுதாயத்துக்குக் கடமையாக் கப்பட்ட தொழுகையையும், ஜகாத்தையும் தான் நிறைவேற்றுவார் என்பதால் இதில் அவர் சொன்ன சொல்லை மீறவில்லை.

ஈஸா நபி மரணித்து விட்டார்களா? அல்லது உயர்த்தப்பட்டு இறுதிக் காலத்தில் இறங்கி வந்து மரணிப்பார் களா என்பது பற்றி மேலும் அறிய 93, 101, 133, 134, 151, 342, 456 ஆகிய குறிப்புகளையும் காண்க!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account