Sidebar

19
Fri, Apr
4 New Articles

454. நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

454. நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல்

ஒருவர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டுவரா விட்டால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம். ஆனால் மனைவியின் மீது கணவன் இவ்வாறு குற்றம் சுமத்தும் போது தனது குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு சாட்சிகள் இல்லா விட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வசனங்கள் (24:6-9) கூறுகின்றன.

மனைவி நடத்தை கெட்டவள் எனக் குற்றம் சாட்டும் கணவனுக்கு தன்னைத் தவிர வேறு சாட்சி இல்லாவிட்டால் தான் சொல்வது உண்மையே என நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவையாக நான் கூறுவது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது ஏற்படட்டும் என்று அவன் கூற வேண்டும்.

இதைத் தொடர்ந்து அவனது மனைவி நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதை மறுக்க வேண்டும். ஐந்தாவது தடவை நான் சொல்வது பொய்யாக இருந்தால் என் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் எனக் கூற வேண்டும். இந்த விபரங்கள் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன.

இவ்வாறு இருவரும் கூறிய உடன் இருவருக்கும் இடையே இருந்த திருமண உறவு தானாக முறிந்து விடும். இதன் பின்னர் மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அனுமதி இல்லை. மேலும் அவள் பெற்ற குழந்தை தன்னுடையது அல்ல என்று அவன் மறுத்தால் அந்தக் குழந்தை தாயுடன் சேர்க்கப்படும். அவனது குழந்தையாகக் கருதப்படாது. தாயின் சொத்துக்கு அக்குழந்தை வாரிசாகும். தந்தையின் சொத்துக்கு வாரிசாகாது.

இதற்கான சான்றுகள் வருமாறு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர்பாக 'லிஆன்' எனும் சட்டத்தை அருளினான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் 'லிஆன்' செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே 'லிஆன்' செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகி விட்டது. அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (தனக்குரியது என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டு வந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

நூல் : புகாரீ 4746, 4748

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் மனைவி மீது விபச்சாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன)? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள். பிறகு உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே) உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா? என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். ஆகவே, அவர்கள் இருவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸில் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன் என்று என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அந்த மனிதர், (மஹ்ராக நான் அளித்த) எனது பொருள் (என்ன ஆவது)? என்று கேட்டார். அதற்கு அவரிடம், (உம்முடைய மனைவி மீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது என்று கூறப்பட்டது.

நூல் : புகாரீ 5311

கணவன் அவளை அம்பலப்படுத்தாமல் அவளிடமிருந்து விலகி விட விரும்பினால் தலாக் கூறிப் பிரிந்து கொள்ளலாம்.

அல்லது அவன் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் முடிவு எடுத்தால் அதற்கான உரிமை அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account