Sidebar

17
Fri, Jan
34 New Articles

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்?

திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) கூறுகின்றன.

திருக்குர்ஆனில் பிறமொழிச் சொற்களும் இடம் பெற்று இருக்கும் போது தெளிவான அரபுமொழி என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று திருக்குர்ஆனில் குறை காணப் புகுந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உலகில் உள்ள எந்த மொழியாக இருந்தாலும் அதில் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் இருக்காது. பிறமொழிச் சொற்கள் கலப்பதால் அது வேறுமொழியாக ஆகாது.

பிறமொழி பேசும் மக்களின் பெயர்கள் பிறமொழியில் தான் அமைந்திருக்கும். அந்த மக்களின் பெயர்களை நாம் பயன்படுத்தும் போது அப்படியே தான் பயன்படுத்தியாக வேண்டும்.

அது போல் ஒரு பகுதியில் விளையும் பொருள்கள், அல்லது தயாரிக்கப்படும் பொருட்கள் இன்னொரு மொழிபேசும் பகுதிக்குப் போகும்போது சில நேரங்களில் பிறமொழிப் பெயருடனே போய்ச் சேர்ந்து விடும். இட்லி எனும் உணவுப் பொருளை அறியாத பகுதிக்கு இட்லி அறிமுகமாகும் போது இட்லி என்ற பெயரிலேயே அறிமுகமாகி விடும். இது போன்ற காரணங்களாலும் பிறமொழிக் கலப்பில் இருந்து எந்த ஒரு மொழியும் தப்பிக்க முடியாது.

தெளிவான அரபுமொழி என்பதற்குப் பிறமொழிச் சொற்கள் கலப்பு இல்லாதது என்று பொருள் இல்லை.

ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணமும், மரபுகளும் உள்ளன. அதைப் பேணி ஒருவன் பேசினால் அவன் தெளிவான மொழியில் பேசுகிறான் என்று சொல்வோம். அதை மீறினால் தெளிவான மொழியில் பேசுகிறான் என்று சொல்ல மாட்டோம்.

உதாரணமாக மக்கள் என்பதை மக்கள்கள் என்றும், பறவைகள் வந்தன என்பதை பறவைகள் வந்தது என்றும், அவன் வெட்டப்படுவான் என்பதை அவனை வெட்டப்படும் என்றும், செய்திகள் வாசிப்பவர் என்று சொல்லாமல் செய்திகள் வாசிப்பது என்றும் இன்னும் பல வகைகளிலும் மொழியைக் கொலை செய்கிறார்கள். இவை தமிழ்ச்சொற்களாக இருந்தாலும் இதைச் சரியான தமிழ் என்று நாம் சொல்ல மாட்டோம்.

அது போல் பேச்சு வழக்கில் பல சொற்களைச் சிதைத்தும் பேசுகிறார்கள். எங்கிருந்து வருகிறாய் என்பதை எங்கேந்து வர்ரே என்பது போல் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

இது போல் தமிழ் மொழியின் இலக்கணத்தை மீறி தமிழில் பேசினாலும் அது தெளிவான தமிழ் என்று சொல்லப்படாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தும் திருக்குர்ஆனில் இதுபோல் கொச்சையான அரபுநடை காணப்படவில்லை. மொழிப்பண்டிதர்கள் பேணக் கூடிய அளவுக்கு திருக்குர்ஆன் இலக்கணத்தையும், மொழிமரபையும் பேணியுள்ளது. கொச்சையான நடை இதில் இல்லை. வார்த்தைகளைக் கடித்துக் குதறுதல் இல்லை.

இதைத்தான் தெளிவான அரபி என்று சொல்வார்கள்.

ஜார்ஜ் புஷ் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் துபாய் போனார் என்று ஒருவர் பேசினால் அதில் போனார் என்பதும், ஏர்லைன்ஸில் என்பதில் உள்ள இல் என்பதும் தவிர மற்ற அனைத்துமே வேற்று மொழிச்சொற்கள் தான். ஆனாலும் இதை நல்ல தமிழ் என்போம். ஏனெனில் பிற மொழிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ் இலக்கண விதிப்படி இது அமைந்துள்ளது.

நாமல் அனைவர்களும் முதல்வரிட்டெ முறையிடோனும் என்று ஒருவன் பேசினால் எல்லாமே தமிழ்ச் சொல்லாக இருந்தும் கொச்சைத் தமிழ் என்போம். இச்சொற்கள் தமிழாக இருந்தாலும் அது சிதைக்கப்பட்டு விட்டது தான் காரணம்.

தெளிவான அரபி, கொச்சையான அரபி என்பதும் இது போல் தான் பயன்படுத்தப்படுகின்றன.

எல்லா மொழிகளிலும் பிறமொழிச் சொற்கள் கலந்திருப்பது போல் அரபுமொழியிலும் கலந்துள்ளதால் திருக்குர்ஆனிலும் அந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுவது இயல்பானது தான். இதனால் திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் உள்ளது என்பதற்கு முரணாக ஆகாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account