Sidebar

18
Thu, Apr
4 New Articles

அத்தியாயம் 49

தமிழ் மொழிபெயர்ப்பு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அத்தியாயம் : 49 அல் ஹுஜ்ராத்

மொத்த வசனங்கள் : 18

அல் ஹுஜ்ராத் - அறைகள்

இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில், அறைகளுக்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கக் கூடாது என்று கூறப்படுவதால் அறைகள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

2. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.

3. அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப்படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கின்றன.

4. (முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள்.

5. நீர் அவர்களிடம் வரும் வரை அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

6. நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

7. உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அதிகமான காரியங்களில் அவர் உங்களுக்குக் கட்டுப்பட்டிருந்தால் சிரமப்பட்டிருப்பீர்கள். மாறாக அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு விருப்பமானதாக ஆக்கினான். அதை உங்கள் உள்ளங்களில் அழகாக்கினான். (இறை) மறுப்பையும், குற்றத்தையும், மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கினான். அவர்களே நேர்வழி பெற்றோர்.

8. இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருளும், பாக்கியமுமாகும். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

9. நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

10. நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

11. நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

12. நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.368 நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்.508 அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

14. "நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக "கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்திட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

15. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.

16. உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

17. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் உமக்கு உதவி செய்து விட்டதாக நினைக்கின்றனர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்குச் செய்த உபகாரமாகக் கருதாதீர்கள்! அல்லாஹ்வே நம்பிக்கை கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்'' என்று கூறுவீராக!

18. வானங்களிலும்,507 பூமியிலும் மறைவாக உள்ளதை அல்லாஹ் அறிவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account