ஹஜ் மானியம் ஒரு பித்தலாட்டம்!
முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு எந்த ஒரு மானியமும் வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களை மத்திய அரசு சுரண்டி கொள்ளையடித்து வந்தது என்பதே உண்மையாகும். இந்த போலி மானியம் ஒழிக்கப்படிருப்பது முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மையே தவிர இழப்பு ஏதும் இல்லை.
இது குறித்து விபரமாக அறிந்து கொள்வோம்.
சவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. மீதி முப்பது சதவிகிதம் பயணிகளுக்கான கோட்டா அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்வோர் அதற்கான கட்டணமாக 1.80,000 (ஒரு லட்சத்து என்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். (மானியம் நடைமுறையில் இருந்த காலத்து கணக்குப்படி)
சவூதியில் இறங்கியது முதல் இந்தியா திரும்பும் வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட ஹாஜிகளின் செலவுகளுக்காக 34 ஆயிரத்தை ஜித்தாவில் இறங்கிய உடன் ஹாஜிகளின் கையில் தருவார்கள்.
இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை 1,46,000 (ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம்) ரூபாய்கள்.
மக்காவில் தங்கும் வாடகை : 50,000
மதீனாவில் தங்கும் கட்டணம் : 20,000
மக்காவில் ஹஜ் வழிகாட்டி கட்டணம், வாகனங்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லுதல் கட்டணம் வகைக்காக 25.000
ஆக விமானக் கட்டணம் இல்லாமல் ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் செலவிடும் தொகை 95,000 ரூபாய்கள் தான் ஆகிறது. ஹஜ் பயணிகளிடம் 1,46.000 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு 95,000 ரூபாய்கள் தான் ஹாஜிகளுக்குச் செலவிடப்படுகிறது.
ஹாஜிகளிடம் வாங்கிய தொகையில் 51,000 ரூபாய்கள் மீதமாக உள்ளது. இதில் விமானக் கட்டணத்தைச் சேர்க்க வேண்டும்.
விமானக்கட்டணம் மானியம் நடைமுறையில் இருந்த போது 25 ஆயிரம் தான் ஆகும்.
விமானக் கட்டணம் 25 ஆயிரம் செலுத்தியது போக ஹாஜிகளின் பணம் 26 ஆயிரம் உள்ளது. இது ஹஜ் பயணிகளிடமிருந்து அரசுக்கு கிடைக்கும் இலாபமாகும்.
ஆனால் 25 ஆயிரமாக இருந்த விமானக் கட்டணத்தை ஹஜ் காலத்தில் ஒரு லட்சமாக ஏர் இந்தியா நிர்ணயிக்கும். இப்போது நமது பணம் 51 ஆயிரம் தான் உள்ளது. மீதி 50 ஆயிரம் ரூபாய்களை விமான நிறுவனத்துக்கு அரசு மானியமாக வழங்கும். இதுதான் ஹஜ் மானியம் என்பது.
ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஏர் இந்தியாவிடம் போதிய விமானம் இல்லாவிட்டால் பிற நாட்டு விமானங்களை அடிமாட்டு கட்டணத்துக்கு ஏர் இந்தியா வாடகைக்கு எடுக்கும். அதை ஏர் இந்தியா பெயரில் இயக்கும். அதில் தான் பயணிக்க வேண்டும்.
ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 25 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை.
அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் ஹஜ் பயணிகளிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 51 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத் தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது.
மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத் தான். அதைத் தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.
ஏர் இந்தியாவின் வருமானத்தைப் பெருக்க ஒவ்வொரு ஹாஜியிடம் இருந்தும் கூடுதலாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்டு, ஏர் இந்தியாவுக்கு வழங்கிய 50 ஆயிரத்தை ஹாஜிகளின் மானியம் எனச் சொல்வது அயோக்கியத் தனமாகும்.
மேலும் ஹஜ் பயணிகளில் பாதிப் பேர் ஏர் இந்தியா மூலம் பயணம் செய்தால் மீதிப் பேர் சவூதி ஏர் லைன்ஸ் மூலம் பயணிக்கிறார்கள். பாதி மானியத்தை சவூதி ஏர்லைன்ஸுக்கு வழங்க வேண்டுமல்லவா? அப்படி வழங்குவதில்லை. செய்யாத பயணத்துக்கான பொய்யான அந்த மானியத்தையும் ஏர் இந்தியாவே அதாவது இந்திய அரசே எடுத்துக் கொள்கிறது.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களிடம் இப்படி கொள்ளையடிக்கும் நாடுகள் உலகில் எங்குமே இருக்காது. கொள்ளையும் அடித்து விட்டு மானியம் அளிப்பதாகக் கூறும் நாடுகளும் உலகில் இருக்காது.
ஏர் இந்தியாவில் தான் பயணிக்க வேண்டும் என்ற கொள்ளை அடிக்கும் கொள்கையைக் கைவிட்டு, ஹாஜிகள் தமக்கு விருப்பமான எந்த விமான சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்க வேண்டும்.
டிரான்சிட் முறையில் பயணித்தால் 15 ஆயிரம் கட்டணத்தில் ஜித்தா போக முடியும். பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் குறைந்த கட்டணத்தில் புனிதப் பயணம் செய்து ஒவ்வொரு ஹாஜியும் முப்பதாயிரத்துக்கு மேல் மிச்சப்படுத்த முடியும்.
எனவே ஹஜ் மானியம் என்ற பெயரில் நடந்து வந்த சுரண்டல் ஒழிக்கப்படுவது நல்லதே.
ஹஜ் மானியம் ஒரு பித்தலாட்டம்!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode