Sidebar

13
Sun, Jun
11 New Articles

பொய்களைப் பரப்பி நல்லிணக்கமா

கட்டுரைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பொய்களைப் பரப்பி நல்லிணக்கமா?

செப்டம்பர் 8ம் தேதி தினமணி நாளிதழில் இஸ்லாமியப் பார்வையில் சிறுபான்மைச் சமுதாயம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையாசிரியர் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் ஹாஜா கனி என்பவராவார். இஸ்லாமிய ஆட்சியில் பிற சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், நீதி தவறாத ஆட்சி முறைகளையும் எடுத்துக் கூற வேண்டும் என்பதுதான் கட்டுரையாளரின் முக்கியமான நோக்கம் என்பதைப் போன்று அவர் இஸ்லாமியர்களிடம் படம் காட்டியுள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் அருமை நபித்தோழர்களும் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் பிற சமுதாய மக்களுடன் எந்த அளவிற்கு நியாயமான முறையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் நபிமொழி நூற்களில் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் கட்டுரையாளரோ அந்தச் சம்பவங்களையெல்லாம் அறியாமல் பொய்யான கட்டுக் கதைகளையும், இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்த பொய்களையும் உண்மையான ஆதாரங்கள் போல் காட்டியுள்ளார்.

அவருடைய கட்டுரையில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் உள்ளன.

முதலில் பாகிஸ்தானில் சிறுபான்மைச் சமுதாய மக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு இந்தச் செய்திகளை மறுக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் இறுதியில் சிறுபான்மையினருக்கு மட்டும் சீரழிவுகள் நடக்கிறது எனில் அதை இஸ்லாமிய நாடு என்று அழைக்கக் கூடாது. சிறுபான்மையினரின் அவல நிலையை மாற்றுவதற்கு அனைத்து வகை முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும், உலகளாவிய அழுத்தமும் தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மை ஹிந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று பாசிச ஊடகங்கள் பொய்யான செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடுகின்றன. அந்த பாசிச சக்திகளின் ஊதுகுழலாய் அவர்களின் கருத்தை ஆமோதிக்கும் வகையிலேயே ஹாஜா கனியின் கட்டுரையும் அமைந்துள்ளது.

அந்த அடிப்படையில் தான் இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மைச் சமுதாயத்தினர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதற்குச் சான்றாக இவர் எடுத்து வைக்கும் சான்றுகளும் அமைந்துள்ளன.

இஸ்லாமியர்கள் சிலை வணக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்பது தான் காவிச் சிந்தனையாளர்களின் அடிப்படையான கோட்பாடு. அவர்களின் காவிச் சிந்தனைக்கு தீனி போடும் வகையிலும், இஸ்லாமிய ஓரிறைக் கொள்கைக் கோட்பாடுகளை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் அமைந்த பொய்யான சம்பவங்களை மிகப் பெரும் உண்மைகள் போன்று காட்டியிருப்பதிலிருந்தே இந்தக் கட்டுரையாளரின் மோசடித்தனத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்ற திருமறை வசனத்தை காவிச் சிந்தனையாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் கட்டுரையாளர் கையாண்டுள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் அவர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்க வேண்டும் என்பதற்காக எவ்வளவோ கெஞ்சினார்கள். அவர்கள் இறைமறுப்பாளராக மரணித்தபோது கண்ணீர் வடித்தார்கள். அல்லாஹ் தடுக்கின்றவரை பாவமன்னிப்புக் கோரினார்கள். ஆனால் அந்தச் சம்பவத்தைக் கூட கட்டுரையாளர் பாசிச வாதிகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திரித்துள்ளார்.

இஸ்லாமியப் பெருமக்கள் இவர்கள் அவிழ்த்துவிடும் பொய்யான கதைகளை நம்பி கொள்கையில் தடம் புரண்டுவிடக் கூடாது என்பதற்காக அவற்றை நாம் விரிவாக விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிவாசலில் சிலை வணக்கத்திற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்களா?:

நபிகள் நாயகம் (ஸல்) தம்முடைய ஆட்சிக்காலத்தில் பிற சமுதாய மக்களோடு மிகவும் அழகிய முறையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவத்தை சான்றாகக் குறிப்பிடுகிறார் த.மு.மு.க செயலாளர் ஹாஜா கனி.

நபிகள் நாயகத்துடன் விவாதிப்பதற்காக மஸ்ஜிதுந்நபவி எனப்படும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசலுக்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் வந்திருந்தனர். அவர்களின் வழிபாட்டு நேரம் வந்ததும் புறப்பட்டனர். உடனே நபிகள் நாயகம், நீங்கள் விரும்பினால் இதே பள்ளிவாசலில் நீங்கள் வழிபாடு செய்யலாம்' என அனுமதி அளித்தார்கள்.

மேற்கண்ட சம்பவம் நபியவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவமாகும்.

இது போன்ற ஒரு சம்பவம் ஆதாரமற்ற சில நூற்களில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நூற்களிலுமே இப்னு இஸ்ஹாக் என்பார் வழியாகத் தான் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்னு இஸ்ஹாக் என்பவருக்கு இந்தச் சம்பவத்தை அறிவிப்பவர் முஹம்மத் பின் ஜஃபர் பின் சுபைர் என்பவர் ஆவார். இவர் ஹிஜ்ரி 110லிருந்து 120க்கு இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்து விட்டார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கிடையாது. இவர் அடுத்த தலைமுறையின் கடைசிப் படித்தரத்தில் உள்ளவராவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தான் அதனை அறிவிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தையே அடையாத ஒரு மனிதர் இது போன்ற சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். எனவே இது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த ஒரு செய்தியாகும். இது போன்ற செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படை அறிவு கட்டுரையாளருக்கு இல்லை.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நஜ்ரான் பகுதி கிறித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாதப் பிரதிவாதங்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் ஏனைய பல நூற்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்புகளிலும் நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று கூறப்படவில்லை.

இப்படி ஒரு சம்பவம் நபியவர்கள் காலத்தில் நடந்திருந்தால் பிரபல்யமான இந்தச் சம்பவத்தை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்திருப்பார்கள். அவை ஆதாரப்பூர்வமான நூற்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் எந்த ஒரு நபித்தோழருமே இது போன்ற ஒரு சம்பவத்தை அறிவித்ததாக எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்தச் சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டதாக இருப்பதுடன் இது திருமறைக் குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதக் கூடியதாக அமைந்துள்ளது.

பள்ளிவாசல்கள் என்பது அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஆலயங்களாகும். அங்கு ஒரு போதும் அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படக் கூடாது என்பதுதான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

ஆனால் இந்த இறைக் கட்டளைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய பள்ளியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு அனுமதித்திருப்பார்களா?

மேலும் கட்டுரையாளர் காவிச் சிந்தனையாளர்களைத் திருப்திப்படுத்துவற்காக இதுபோன்ற பொய்யான சம்பவங்களை எடுத்துக் கூறுவதின் மூலம் பள்ளிவாசல்களை இணைவைப்பின் கேந்திரங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

மேலும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உடைக்கின்ற கேவலமான காரியத்தையும் செய்துள்ளார்.

மேற்கண்ட பொய்யான சம்பவத்தை சான்றாகக் காட்டி காவிச் சிந்தனையாளர்கள் பள்ளிவாசலின் ஒரு பகுதியை சிலை வணக்கத்தை நிறைவேற்ற ஒதுக்கிக் கேட்டால் ஒதுக்கித் தரவேண்டும் என்று கட்டுரையாளர் கூறுவாரா?

முஸ்லிம் அல்லாத மக்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்முறையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு எத்தனையோ உண்மைச் சான்றுகள் இருக்கும் போது திருமறைக் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எதிரான இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களை எடுத்துக் கூற வேண்டியதன் அவசியம் என்ன?

பார்க்க பிற மதத்தவர்களுடன் அன்பு

அரசியல் சாக்கடையில் இறங்கிவிட்டதால், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பிற மதத்து அரசியல்வாதிகள் வழிபாடு நடத்த அனுமதிப்பதற்காக இந்தக் கட்டுக்கதையை எழுதினாரா?

இதை இந்தக் கட்டுரையாளர் உண்மை என்று நம்பினால் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் இது போல் சிலை வணக்கத்தை அனுமதிக்குமாறு கடிதம் எழுதுவார்களா?

வக்ஃபு வாரியத்துக்கு ஆளாய்ப்பறக்கும் இவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகம் வந்தால் பள்ளிவாசல்களில் சிலை வழிபாடும், சிலுவை வழிபாடும் நடத்துவார்கள் போலும்.

உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதார்களா?:

கட்டுரையாளர் ஹாஜா கனி அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்ததாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்' என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.

கட்டுரையாளர் கூறுவது போல் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த வரலாற்று நூற்களிலும் கூறப்படவில்லை. இது உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையாகும்.

இந்தச் சம்பவத்தை சிந்தித்துப் பார்த்தால் தேவாலயங்களில் தொழுவதைக் கூடும் என்று உமர் (ரலி) அவர்கள் ஆதரித்தார்கள் என்பதுதான் வெளிப்படுகிறது. ஏனென்றால் உமர் தொழுதால் பின்வரும் மக்கள் உரிமை கோரிவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் உமர் (ரலி) அவர்கள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றே இதில் கூறப்பட்டுள்ளது. தேவாலயங்களில் தொழுவது கூடாது என்ற அடிப்படையில் அல்ல.

உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களிடம் எவ்வளவு நீதமாக, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான உண்மைச் சான்றுகள் உள்ளன. ஆனால் கட்டுரையாளரோ உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு பொய்யான சம்பவத்தைச் சான்றாகக் காட்டியுள்ளார்.

சத்தியக் கொள்கையின் பாதுகாவலராகத் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களை அசத்தியக் கொள்கையின் பாதுகாவலராக கட்டுரையாளர் சித்தரித்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக்கிய கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் ஏற்படும் என்று சபித்துள்ளார்கள்.

மேலும் சமாதிகளை நோக்கியும், உருவப்படங்களை நோக்கியும் தொழுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே! என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (1341)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, 1390, 4441

கிறித்தவ ஆலயங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய இடம் அல்ல என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும் போது நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர் (ரலி) தேவாலயங்களில் தொழலாம் என்றும் வேறு காரணத்திற்காக நான் தொழவில்லை என்றும் கூறியிருப்பார்களா? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட சம்பவம் உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட சம்பவம் தான் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

உமர் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டிற்கு வருகை தந்தபோது ஒரு கிறித்தவர் அவர்களுக்கு உணவைத் தயார் செய்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம் நீங்களும் உங்களுடைய தோழர்களும் என்னிடத்திற்கு வருகை தந்து என்னை சங்கை செய்வதை நான் விரும்புகிறேன் என்று கூறினார். அவர் ஷாம் நாட்டிலுள்ள அந்தஸ்து மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருக்கு கூறினார்கள் : நாங்கள் உங்களுடைய தேவாலயங்களில் உருவங்கள் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அங்கே நுழைய மாட்டோம் என்று கூறினார்கள்.

நூல் : பைஹகி (பாகம் 2 பக்கம் 270)

கட்டுரையாளர் தான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பினால் அதை அவர் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதாவது கோவில்களிலும், தேவாலயங்களிலும் முஸ்லிம்கள் தொழலாம் என்று பத்வா கொடுப்பாரா? அது போல் நம்முடைய பள்ளிவாசல்களுக்குள் பிறமதத்தவர்கள் சாமி கும்பிடலாம் என்று பத்வா கொடுப்பாரா? முஸ்லிம்களுக்கு இப்படி அறிவுறை கூறுவாரா? மமகவுக்கு ஆதரவாக இருக்கும் உலமாக்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? நிச்சயமாக இப்படி இவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துச் சொல்ல முடியாது. தாங்கள் நம்பாத ஒன்றை ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்?

முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருத்தும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் அதற்கு மாற்றமான ஒரு கருத்தும் சொலவது பச்சை முனாபிக்தனம் அல்லவா?

கிறித்தவ ஆலயங்களில் தொழலாமா?:

உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள். புகாரி 434 ஆம் ஹதீஸின் பாடத் தலைப்பு

கிறித்தவ ஆலயங்களில் நுழைவதைக் கூட தவிர்த்துக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவது கூடும் என்பதை ஆதரிப்பதைப் போன்று நடந்திருப்பார்களா?

உமர் (ரலி) அவர்களின் கொள்கைப் பிடிப்பைக் கேலி செய்கின்ற வகையில் அமைந்த பொய்யான கட்டுக்கதையை தமக்குச் சான்றாக கட்டுரையாளர் காட்டியிருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்.

ஓட்டுப் பொறுக்கிகள் ஓட்டுக் கேட்கும்போது கோவில்களில் பரிவட்டம் கட்டி, திலகம் இடுவதை நியாயப்படுத்துவதற்காக இதுபோன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றார்கள்.

சங்பரிவாரம் காலாகாலமாகச் சொல்லிவரும் சித்தாந்தத்துக்கு இஸ்லாமியச் சாயம் பூசுகின்றார் கட்டுரையாளர். முஸ்லிம்கள் மீது மன்னிக்க முடியாத அவதூறை இவர் சுமத்தியுள்ளார். கலீபா உமர் (ரலி) அவர்களின் சம்பவம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள் என்பதற்காக அதில் உரிமை கொண்டாடும் அளவுக்கு முஸ்லிம்கள் கேடுகெட்டவர்களாக இருப்பார்களா?

ஒரு இடத்தில் ஒருவர் தொழுதால் அந்த இடம் அவர்களுக்குச் சொந்தம் என்று கடுகளவு மூளையுள்ள எந்த முஸ்லிமாவது சொல்வானா?

நமது பள்ளிவாசல்கள் எல்லாம் இப்படி பிறமத மக்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதுதான் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் நச்சுக்கருத்தை கட்டுரையாளர் பக்குவமாக விதைக்கின்றார்.

எந்தப் பொருளும் முறையாக விலைக்கு வாங்கப்பட்டால், அல்லது அன்பளிப்பாகப் பெறப்பட்டால் மட்டுமே உரிமையாக முடியும். பிறருக்குச் சொந்தமான இடத்தைத் தட்டிப்பறிக்க எந்த முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை எனும்போது, பள்ளிவாசலுக்காக அதை அபகரிப்பது கூடுமா?

முஸ்லிம்கள் இப்படி நடப்பார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியிருப்பார்களா?

ஏசுநாதர் சிலை மூக்குடைப்பும், உமர் (ரலி) ஆட்சியும்:

கட்டுரையாளர் ஹாஜாகனி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மைச் சமுதாயத்தின் வழிபாட்டு உரிமைகளை எந்த அளவிற்கு பாதுகாத்தார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவத்தை சான்றாக வைக்கிறார்.

கலீபா உமரின் ஆட்சியில், இராக் நாட்டில் இருந்த ஏசுநாதர் சிலையின் மூக்கு சிதைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் கலீபாவிடம் முறையிட்டனர். ஒரு வார காலத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாவிடில், பொது இடத்தில் வைத்து நீங்களே என் மூக்கைச் சிதைக்கலாம் என்றார். குறித்த காலக்கெடுவுக்குள் குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. கலிபா உமர் தன் மூக்கை சிதைத்திடுமாறு, கிறித்தவ மக்கள் முன்பு வந்து நின்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கூட்டத்திலிருந்த ஒரு கிறித்தவ இளைஞன், ஏசுவின் சிலையை தானே சிதைத்ததாகவும், இஸ்லாமிய ஆட்சியில் கிறிஸ்தவர்களின் உரிமை மதிக்கப்படுகின்றதா என்பதைச் சோதிக்கவே அவ்வாறு செய்ததாகவும் ஒப்புக் கொண்டான்.

கட்டுரையாளர் கூறும் இந்தச் சம்பவமும் கட்டுக்கதையாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பிற சமுதாய மக்களிடம் நேர்மையாக நீதியாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு எத்தனையோ உண்மைச் சம்பவங்கள் சான்றாக இருக்கும் நிலையில், காவிச் சிந்தனையாளர்களின் சிந்தனைக்கு தீனி போடும் வகையில் அமைந்த இந்தப் பொய்யான சம்பவத்தை கூற வேண்டியதன் அவசியம் என்ன? கட்டுரையாளர் பாசிச சக்திகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தன்னுடைய கட்டுரையை வடிவமைத்துள்ளார் என்பதற்கு இதுவும் ஒரு தெளிவான சான்றாகும்.

இதுபோன்ற ஒரு சம்பவம் நாம் ஆய்வு செய்த வகையில் எந்த வரலாற்று நூற்களிலும் இடம் பெறவில்லை.

சிலைகளுக்கு அணு அளவும் சக்தியில்லை என்பது தான் இஸ்லாமியக் கோட்பாடாகும். ஒரு கற்சிலையின் மூக்கு உடைக்கப்பட்டதற்காக உயிரோடு உள்ள மனிதனின் மூக்கை அறுப்பதற்கு ஏகத்துவப் பாசறையில் வளர்ந்த உமர் (ரலி) அவர்கள் சம்மதித்தார்கள் என்று கூறுவது அறியாமையின் உச்சகட்டமும், இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையை குழிதோண்டிப் புதைப்பதும் ஆகும்.

உண்மையில் சிலையை உடைத்த குற்றவாளியைப் பிடிக்கமுடியவில்லை என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்வின் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய மூக்கை அறுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள் என்பது மார்க்கச் சட்டமா? தவறு செய்த ஒருவனைப் பிடிக்க முடியவில்லை என்பதினால் தவறே செய்யாத ஒருவர் தண்டிக்கப்படுவது நியாயமானதா? இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு முடிவிற்கு உமர் (ரலி) அவர்கள் வந்திருப்பார்களா?

குற்றம் செய்தவர்களை இத்தனை நாட்களுக்குள் பிடித்து விடுவேன் என்று கூற மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

குற்றவாளிகள் பிடிபடுவதும், பிடிபடாமல் போவதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது என்ற அடிப்படை அறிவு கூட கட்டுரையாளருக்கு இல்லாமல் போகலாம். உமர் (ரலி) அவர்களுக்கும் அந்த அறிவு இல்லை என்று கட்டுரையாளர் சித்தரிக்க முயல்கின்றார்.

கட்டப்பட்ட கப்ருகளையும், உருவச் சிலைகளையும் வழிபடக் கூடாது; அவை அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட உமர் (ரலி) அவர்கள், இறைச்சட்டத்தின் அடிப்படையில் நடத்திய ஆட்சியில் இது போன்று நடந்திருப்பார்கள் என்பது உமர் (ரலி) அவர்களை இழிவுபடுத்துவதாகும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

அலி (ரலி) யின் கவச ஆடையும், கூபா நகர கிறித்தவரும்:

கலீபா அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது கவச ஆடை காணாமல் போனது. பிறகு, அது கூபா நகரைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது கவசத்தை மீட்டுத்தருமாறு குடியரசின் தலைவர், நீதிமன்றத்தில் முறையிட்டார். (ராணுவத்தையோ, காவல்துறையையோ, அடியாட்களையோ பயன்படுத்தவில்லை) வழக்கை விசாரித்த நீதிபதி ஷரஹ்பின் ஹாரிஸ், கவசம், அலி (ரலி) உடையதுதான் என்பதற்கு ஆதாரம் கோரினார். அது அலியுடையது என்பதற்கு அவரது மகன் ஹசன் சாட்சி கூறினார்.

தந்தைக்காக மகன் கூறும் சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது எனக் கூறி, கலீபா அலி(ரலி )யின் வழக்கை இஸ்லாமிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பால் மனம் நெகிழ்ந்துபோன கிறிஸ்தவர், உண்மையை ஒப்புக்கொணடு, கவச ஆடையை அலி(ரலி)யிடமே ஒப்படைத்தார்.

அலி (ரலி) அவர்களின் வாழ்க்கையில் மேற்கண்டவாறு ஒரு சம்பவம் நடைபெற்றதாக நாம் பார்த்தவரை எந்த வரலாற்று நூற்களிலும் இல்லை.

முடிவுரை:

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மைச் சமுதாய மக்கள் எந்த அளவிற்கு நீதமாக, நேர்மையாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கு ஏராளமான திருமறை வசனங்கள் சான்றாக உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த எத்தனையோ உண்மைச் சம்பவங்கள் சான்றாக உள்ளன. அவற்றை எடுத்துரைத்து இஸ்லாத்தின் மகிமையை நாம் உலகுணரச் செய்ய முடியும். ஆனால் இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரான பொய்யான சம்பவங்களைக் கூறி காவிச் சிந்தனைவாதிகளை திருப்திப்படுத்த நினைப்பது நம்மை இவ்வுலகில் வழிகெடுத்து மறுமையில் நிரந்த நரகத்தில் தள்ளிவிடும்.

என் மீது யார் வேண்டுமென்றே ஒரு பொய்யைக் இட்டுக் கட்டிக் கூறுவானோ அவன் தன்னுடைய இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் (நூல்:முஸ்லிம்) என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

சமய நல்லிணக்கம் என்ற பெயரில் பள்ளிவாசல்களைக் கோவிலாக்குவதையும், கோவில்களைப் பள்ளிவாசல்களாக்குவதையும் இஸ்லாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. அவரவர் வழிபாட்டுத்தலங்கள் அவரவருடைய வழிபாட்டுக்குரியதாகவே நீடிக்க வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளருக்கு இல்லை.

மார்க்க அறிவும், ஆராய்ச்சித்திறனும் இருந்தால் இவர்கள் அதில் முறையாக ஈடுபடட்டும். அவ்வாறு இல்லாதவர்கள் ஓட்டுப்பொறுக்கும் வேலையை மட்டும் செய்து கொண்டு இருக்கட்டும் என்று அறிவுரை கூறுகின்றோம்.

பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும் என்பதற்காக எந்த மாதிரி எழுதினால் வெளியிடுவார்கள் என்பதில் கவனம் செலுத்தி மார்க்கத்தைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கின்றோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அருமை நபித்தோழர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் அமைந்துள்ள மேற்கண்ட பொய்யான சம்பவங்களை எடுத்துக் கூறுவதை விட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் உண்மையாளர்களின் கூட்டத்தில் நாம் அனைவரையும் சேர்த்து அருள்புரிவானாக.

குறிப்பு : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற மதத்தவர்களிடம் எப்படி நல்லிணக்கத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு இவர் கூறும் கட்டுக்கதைகள் ஆதாரமாகாது. பதிவு செய்யப்பட்ட ஆதாரப்பூர்வமான நபி மொழி நூற்களிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற மதத்தவர்களிடம் எப்படி நல்லிணக்கத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கான ஏராளமான சான்றுகள் காணக்கிடைக்கின்றன.

அவற்றை மாமனிதர் என்ற நூலில், பிறமதத்தவர்களிடம் அன்பு என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

மாமனிதர் நபிகள் நாயகம்

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account