Sidebar

25
Thu, Apr
17 New Articles

1980களில் ஏகத்துவப் புரட்சி -

தவ்ஹீத் உரைகள் விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

1980களில் ஏகத்துவப் புரட்சி-

மலரும் நினைவுகள்!

பொதுவாக 80 களில் (1980) தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனை தலை தூக்க ஆரம்பித்தது என்று சொல்லப்பட்டாலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இந்தச் சிந்தனையின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்தது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் மனப்பாங்கு, சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை துணிந்து சொல்லும் நெஞ்சுரம் போன்றவை ஆங்காங்கே துளிர்விடத்தான் செய்தன.

இதற்கு ஆதாரமாக சில செய்திகளைத் தரலாம் என்று எண்ணுகிறோம்.

1980 க்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பள்ளி மற்றும் மதரசாவில் பணி புரிந்த பீ. ஷேக் அலாவுதீன் என்கிற பீ.எஸ் அலாவுதீன், பீ. ஜைனுல் ஆபிதீன் ஆகிய இரண்டு சகோதரர்கள் அப்போதைய அப்பள்ளி நிர்வாகத்தினரின் கருத்துக்களோடு முரண்பட்டு, சங்கரன்பந்தல் என்ற ஊர் சென்றது பலருக்குத் தெரியாத செய்தியாக இருக்கலாம்.

அங்கே தான் இச்சகோதரர்கள் ஒத்த கருத்துடையோருடன் இணைந்து முழு மூச்சுடன் ஏகத்துவப் பிரச்சாரத்திலும், சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதிலும் ஈடுபட்டனர்.

இச்சகோதரர்கள் உள்ளூரில் பணியாற்றிய போது பல்வேறு அனாச்சாரங்களை எதிர்த்து வந்ததால் சொந்த ஊரில் நண்பர்களை விட எதிரிகளை அதிகம் சம்பாதித்திருந்தனர். அவ்வாறு எதிர்த்த பலரின் வாரிசுகள் இப்போது ஏகத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டது இறைவன் செய்த அருட்கொடைகளில் ஒன்று என்பது வேறு விஷயம்.

அப்பகுதிகளில் நடைபெற்ற சந்தனக்கூடு வைபவங்கள், தட்டு தாயத்து விற்பனைகள், மெளலீது கச்சேரிகள், வரதட்சணைத் திருமணங்கள், சடைப்பக்கீர்களின் கோமாளித்தனங்கள் போன்றவற்றை எதிர்ப்பதில் இவர்கள் காட்டிய வேகம் தீவிரமானதாகும்.

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வது அன்றைக்கு தொண்டியில் சமுதாயக் குற்றமாக கருதப்பட்ட காலத்தில் இச்சகோதரர்கள் இருவரும் தங்களது திருமணத்தின் போது வரதட்சணை வாங்கவில்லை.

மேலும், இவர்களின் இளைய (மூன்றாம்) சகோதரரின் திருமணமும் எந்தவித வரதட்சணையும் இல்லாமல் தான் நடந்தேறியது.

இது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான உள்ளூர் மக்கள் பிரட்சனைக்காகவும் இச்சகோதரர்கள் அக்காலகட்டத்தில் போராடினர்.

இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

அவர்களின் சொந்த ஊரான தொண்டிக்கும் அருகிலுள்ள தாலுக்காத் தலைநகரான திருவாடானை என்ற ஊருக்கும் பல ஆண்டுகளாக நகரப்பேருந்து இல்லாத நிலை இருந்தது.

இதற்கென போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் உள்ளூர் அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்ட போது, அவர்களோடு இணைந்து போராடி நகரப்பேருந்து வசதிப் பெற்று தந்ததில் இச்சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என உள்ளூர்வாசிகள் இன்றும் கூறுகிறார்கள்.

இவர்கள், தங்களின் சொந்த ஊரில் (தொண்டி) பணியாற்றிய காலத்தில் கேரளாவிலிருந்து அந்தர் தீவு மவ்லானா என்ற நபர் ஒருவர் வந்திருந்தார். இவரைப் பெரிய மகான் என்றும், அவ்லியா என்றும் உள்ளூர் ஜமாஅத்தினர் கூறிக்கொண்டு அவருக்கு பெரும் மரியாதையெல்லாம் செய்து வந்தனர்.

இவர் கூறினால் மழை வரும், இவரிடம் அபூர்வ சக்திகள் பல உள்ளன என்ற ரீதியில் ஊரில் செய்திகள் பரப்பப்பட்டன.

இதை விமர்சித்த இவர்களை (பீ.எஸ். அலாவுதீன் மற்றும் பீ. ஜைனுல் ஆபிதீன்) அம்மகானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜமாஅத்தினர் உத்தரவிட்டனர்.

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று கூறித் தான் இவர்கள் ஊரை விட்டு கிளம்பி தஞ்சை மாவட்டம் வந்தடைந்தனர்.

சங்கரன்பந்தல் அருகிலுள்ள பெரம்பூர், காரைக்கால், கிளியனூர் ஆகிய ஊர்களில் சொந்தமாக மளிகை வியாபாரம் சிலகாலம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தான் ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவராகவும், கிளியனூர் (மயிலாடுதுறறை) அரபுக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்த அறிஞர் அப்துஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி இவ்விருவரையும் சந்தித்து, திறமைமிக்க நீங்கள் இருவரும் வியாபாரத்தில் இறங்கி உங்கள் திறமைகளை வீணடிக்க வேண்டாம். பள்ளிவாசல்களில் இமாமாக பணியாற்றுவது சுயமரியாதையைப் பாதிக்கும் என்று நீங்கள் எண்ணினால் ஏதாவது அரபுக்கல்லூரியில் நீங்கள் இருவரும் பேராசிரியராக பணியாற்றலாமே என்று கூறி வந்தார்.

கடைசியில் அவரது அறிவுரை பலன் தந்தது. இருவரும் அரபுக்கல்லூரிகளில் பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.

இதன் பின்னர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் சங்கரன்பந்தல் மதரசாவில் முதல்வராக அவராலேயே (அப்துஸ்ஸலாம் ஹஜரத்) சேர்த்து விடப்பட்டார்.

மற்றொரு சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீனை தம்முடைய கிளியனூர் மதரசாவில் பேராசிரியராக சேர்த்துக் கொண்டார். பின்னர், அவரும் (பிஜே) சங்கரன்பந்தல் மதரசாவிலேயே பேராசிரியராக சேரும் வாய்ப்பு ஏற்பட்டது.

சகோதரர்கள் இருவரும் இடையில் சிறிது காலம் நிறுத்தியிருந்த ஏகத்துவப்பணிகளை முழுவீச்சுடன் மீண்டும் செய்யத் துவங்கினார்கள்.

இச்சகோதரர்களில் மூத்தவரான பீ.எஸ். அலாவுதீன் (1985 இல்) கடும் நோய்வாய்ப்பட்டிருந்த போதும், உள்ளூர் ஜும்மாக்களில் நடத்தப்பட்ட அபத்தங்களை படுத்துக் கொண்டே எதிர்த்து வந்தார்.

அதற்கு ஆதாரமாக அப்போது வெளியிடப்பட்ட ஈட்டியின் முனையில்.. என்ற தலைப்பிலான பிரசுரம் ஆதாரமாக உள்ளது.

கடும் இதய நோயால் அவதிப்பட்ட அவரிடம் உறவினர்கள் சிலரால் தொண்டியில் உள்ள தர்கா ஒன்றில் தங்கி அவ்லியாக்களிடம் வேண்டினால் எல்லா நோய்களும் குணமாகும் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டது.

ஆயினும், அவர் கடைசி மூச்சுள்ள வரை இது போன்ற யோசனைகளுக்கோ, தட்டு தாயத்து போன்ற மந்திர தந்திரங்களுக்கோ உடன்படவேயில்லை.

பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் மதுரை மருத்துவமனை ஒன்றில் இருந்த காலகட்டத்தில் ஏகத்துவ சிந்தனைவாதிகள் மற்றும் அவரது மாணவர்கள் ஆகியோர் அவருக்கு உதவியாக இருந்தனர்.

பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் மிகவும் நோயுற்ற காலகட்டத்தில் தான் நஜாத் மாத இதழ் திருச்சியிலிருந்து வெளியானது.

பின்னர், இவ்விதழ் அந்நஜாத் என்று பெயர் மாற்றப்பட்டது.

அந்நஜாத், புரட்சி மின்னல், அல்முபீன், அல்ஜன்னத், ஏகத்துவம் மற்றும் தீன்குலப்பெண்மணி என்று ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் இதழ்களின் பட்டியல் நீண்டன.

உணர்வு இதழைப் பொறுத்தவரை அது சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களுக்கும் முஸ்லிம்களின் பல்வேறு ஜீவாதாரப் பிரச்சனைகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அந்நஜாத், அல்ஜன்னத், ஆகியன, தற்போது வேறு சிலரது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. புரட்சி மின்னல் மற்றும் அல்முபீன் போன்றவை ஏகத்துவம் இதழாக வளர்ந்து வெளியாகி வருகிறது.

தீன்குலப்பெண்மணியானது முஸ்லிம் பெண்களுக்கான இதழாக பரிணமிக்கிறது.

இந்த அச்சு ஊடகங்களை விட தொலைக்காட்சியில் தினசரி இரவு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் தான் மக்களை அதிகமாகவும், விரைவாகவும் சென்றடைவதில் முதலிடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நஜாத் வெளிவருவதற்கு முன்னேயே நர்கிஸ் மாத இதழில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதி வந்த விற்பனைக்காக கற்பனைக் கதைகள் என்ற ஆய்வுத் தொடர் ஏகத்துவ சிந்தனைகளுக்கு உரமிட்டது எனலாம்.

ஆயினும், அப்பத்திரிக்கை நிர்வாகம், ஒரு சில சுன்னத் வல் ஜமாஅத்தினரின் (?) மிரட்டலுக்குப் பயந்து தொடரை இரண்டு மூன்று அத்தியாயங்களோடு நிறுத்திக் கொண்டது.

நஜாத்தின் முதல் இதழில் (1985) சகோதரர் பீ.எஸ். அலாவுதீன் அவர்களின் கட்டுரை வெளியானது. அடுத்த இதழ் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.

அவரின் அகால மரணத்திற்கு அப்போதைய காலகட்டத்தில் காட்டப்பட்ட தீவிர கபுர் வணக்க எதிர்ப்பே காரணமென்றும், அவ்லியாக்களின் கோபப்பார்வைக்கு ஆளாகி விட்டார் என்றும் தர்கா வணங்கிகளால் செய்திகள் பரப்பப்பட்டதை அந்நேரத்தில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும், சகோதரர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் நோய் வாய்ப்பட்ட நேரத்தில் மற்றொரு சகோதரரான பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காயல்பட்டினத்தில் இணை வைப்பவர்களுடன் நடத்திய முபாஹலாவும் இவரது சகோதரரின் மரணத்திற்கு காரணம் என்றும் செய்திகள் பரப்பினர் தர்கா வணங்கிகள்.

இந்த பொய்யுரைகளையெல்லாம் மீறி இன்று எண்ணற்றவர்களின் கொள்கையாக இந்த ஏகத்துவக் கருத்துக்கள் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு வல்ல இறைவனே காரணம்.

- ஹலிமா

நன்றி: உணர்வு வார இதழ்

(கடந்த 2008 ஆம் ஆண்டு உணர்வு வார இதழில் வெளியான கட்டுரை)

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account