அன்பளிப்பைத் தவிர்ப்பது நபிவழியா?
கேள்வி :
ஹாமீத் பக்ரி சம்பந்தமாக தாங்கள் வெளியிட்ட பதில்கள் பகுதியில் தாங்கள் எழுதியிருந்த செய்தி படித்தேன். அதில் உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலங்கையிலிருந்து ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்ட பணத்தை தாங்கள் வாங்க மறுத்த விஷயத்தையும், அதை வாங்குவதற்கு ஹாமீத் பக்ரி அவர்கள் ஆலாய்ப் பறந்த விஷயத்தையும் தெளிவுபடுத்தியிருந்தீர்கள்.
நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற நாட்டு மன்னர்கள் கொடுத்த அன்பளிப்புகளையெல்லாம் பெற்றுக் கொண்டார்கள் என்று சொல்லும் நீங்கள் இந்தப் பணத்தை வாங்குவதில் என்ன தவறு?
அது மட்டுமல்லாமல், சமீபத்தில் வளைகுடா வந்திருந்த டிஎன்டிஜே தாயீ ஒருவருக்கு அன்பளிப்பாக விலையுயர்ந்த ஐஃபோன் வாங்கிக் கொடுத்த போது விடாப்பிடியாக அதை அவர் மறுத்து வேண்டாம் என்று உதறிவிட்டு, ஓடியதைக் கண்கூடாகப் பார்த்தோம். வெளிநாடு செல்வோர் அன்பளிப்புகள் வாங்கக் கூடாது என்பது ஜமாஅத் நிலைப்பாடு என்று அவர் கூறினார். இப்படி தரக்கூடிய அன்பளிப்புகளையெல்லாம் வேண்டாம் என்று மறுப்பது நியாயமா? மார்க்கத்துக்கு முரணான இந்தப் பாலிசி ஏன்?. விளக்கம் தரவும்.
அமீர் அன்வர் – குவைத்
பதில்:
(இவர் சுட்டிக் காட்டும் செய்தி முன்னர் நமது தளத்தில் எழுதப்பட்டு பின்னர் உணர்வில் வெளியிடப்பட்ட ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும் என்பது தான். தேவைப்படுவோர் அதை வாசித்துக் கொள்ளவும்.
அன்பளிப்புகளை மறுக்காமல் பெற்றுக் கொள்வது தான் நபிவழி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் இது குறித்து மேலதிகமான விபரங்களையும், நாங்கள் பட்ட அனுபவங்களையும் நீங்கள் அறிந்து கொண்டால் தான் நாங்கள் பல அன்பளிப்புகளை மறுப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
உறவினர்களும், நண்பர்களும் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கும் போது அதில் அன்பு மட்டுமே இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் அதில் இருக்காது. அன்பளிப்பு பெற்றவரை இழிவாகக் கருதும் தன்மை அன்பளிப்பு அளித்தவர்களுக்கு இருக்காது.
ஆனால் மார்க்க அறிஞர்களும், செல்வந்தர்களும் தங்கள் நடவடிக்கையால் அன்பளிப்பின் அர்த்தத்தையே மாற்றிவிட்டனர்.
நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்தோம். அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தொழில் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். சிங்கப்பூரில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் செல்வந்தர் ஒருவர் சொந்த ஊர் வந்து விட்டால் தினமும் ஆலிம்கள் கூட்டத்தினர் அந்தச் செல்வந்தரின் வீட்டின் வாசலில் அவர்கள் கொடுக்கும் அற்பக் காசுக்காக காத்துக் கிடப்பார்கள். எங்களுக்குக் கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களும் கூட அந்தச் செல்வந்தரின் வீட்டுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பார்கள்.
அது மட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊர்களில் சில வருடங்கள் ஒருவர் இமாமாகவோ, மதரசாவில் ஆசிரியராகவோ பணிபுரிந்தால் அதன் மூலம் சில செல்வந்தர்களைப் பழக்கம் பிடித்துக் கொள்வார். அந்தத் தொடர்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவில் சிங்கப்பூர் அல்லது மலேஷியாவுக்கு கப்பல் ஏறிவிடுவார். அங்கே பெரிய தலைப்பாகையும், நீண்ட ஜுப்பாவும் போட்டுக் கொண்டு கடைகள் தோறும் ஏறி இறங்கி ஒரு வெள்ளி இரண்டு வெள்ளி (வெள்ளி என்பது அந்த நாட்டு நாணயம்) என்று கவுரவப்பிச்சை எடுத்து விட்டு வந்து உடனே சொந்தமாக வீடு கட்டிக் கொள்வார்.
மானத்தை விற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வது பற்றி இவர்களுக்குக் கொஞ்சமும் உறுத்தல் இல்லை என்பதை இதன் மூலம் கண்கூடாகக் கண்டோம்.
மார்க்கத்தைச் சொல்பவர்கள் மரியாதையுடனும், கண்ணியமாகவும் பார்க்கப்பட்டால் தான் அவர்களின் சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்கும். ஆனால் உலமாக்கள் இப்படி யாசிக்கும் நிலையில் நடந்து கொள்வதால் உலமாக்களை இழிவான வேலை செய்பவனுக்குச் சமமாக செல்வந்தர்கள் கருதினார்கள். அவர்களைப் பின்பற்றி பொதுமக்களும் அப்படியே கருதினார்கள்.
இதனால் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொல்லக் கூடிய துணிவை உலமாக்கள் இழந்தனர். அப்படியே அவர்கள் சில உண்மைகளைச் சொன்னாலும் கொடுக்கும் கூலிக்கு ஏற்ப பேசக்கூடியவர்கள் என்று மக்கள் எண்ணுவதால் அந்தச் சொல்லுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் இருந்தது.
மிம்பரில் இமாம் ஏறும் போது முத்தவல்லி இன்னும் வரவில்லை; அசரத் கீழே இறங்கு என்று கூறி மிம்பரில் ஏறிய இமாமைக் கீழே இறக்கிய நிலையை எல்லாம் நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம்.
மலேசியாவில் உள்ள பித்அத்களை அந்தச் செல்வந்தர்கள் சொந்த ஊரிலும் அரங்கேற்ற ஆலிம்களை அழைக்கும் போது அந்தப் பணக்காரரின் தயவுக்காக தீய காரியம் என்று தெரிந்தே அதற்கு ஆலிம்கள் துணை போனார்கள். செல்வந்தர்கள் போடும் பிச்சைக் காசுகள் தான் இதற்குக் காரணம்.
தப்பித்தவறி ஆலிமுக்கு ஒரு பெண்பிள்ளை இருந்தால் போதும், குமர் காரியம் என்று கூறியே பல ஆண்டுகளுக்கு கல்லா கட்டி விடுவார்கள்.
நாங்கள் பெரிதும் மதிக்கும் எங்கள் ஆசிரியரை அசரத் இங்கே வா என்று செல்வந்தர் ஒருமையில் அழைப்பதை நாங்கள் பார்த்துள்ளோம், அந்த ஆலிமும் கூனிக்குறுகி அவர் முன்னால் நிற்பதையும் நாங்கள் பலமுறை பார்த்து நொந்து போயிருக்கிறோம்.
பிரபலமான ஆலிம்களைப் பேச்சாளர்களாக அழைக்கும் போது அந்த ஆலிம்களின் பெயரைச் சொல்லி வசூல் செய்வார்கள். ஆலிமை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்று கூறி வசூல் செய்திருக்கும் போது அவர் கூறும் போதனைகளுக்கு என்ன மரியாதை இருக்கும்?
ஆலிம்களுக்குக் கொடுக்கும் அன்பளிப்பு எந்த அளவுக்கு கவுரவமாக இருந்தது என்பதை விருந்து நடக்கும் சபைகளில் நாங்கள் பார்த்து புரிந்து கொண்டோம்.
விருந்துகளில் எல்லோருக்கும் கொடுப்பது போல் விருந்து கொடுத்தால் அதுதான் சரியான மரியாதையாகும். ஆனால் ஆலிம்களுக்கு சபையில் இரண்டு பிளேட் பிரியாணி கொடுங்கள் என்றும், இரண்டு பங்கு இறைச்சிக் கோப்பையைக் கொடுங்கள் என்றும் கூறி அவ்வாறே கொடுப்பார்கள்.
மற்றவர்களை விட ஆலிம்கள் சாப்பாடு விஷயத்தில் மோசம் என்று காட்டும் இது போன்ற செயல்களைக் கூட ஆலிம்கள் பெருமையாகக் கருதி சாப்பாட்டை ஒருபிடி பிடிப்பார்கள். சில ஆலிம்கள் இந்த மரியாதை தரப்படாவிட்டால் ஹசரத்துக்கு இரண்டு பங்கு கிடையாதா என்று கேட்டு வாங்குவதும் உண்டு. சமுதாயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு எந்தத் தரத்தில் இருந்தது என்பதை இதில் இருந்து அறிந்து கொண்டோம்.
இவை எல்லாம் அன்பளிப்பு என்று நினைக்க முடியுமா?
அன்பளிப்பை மறுக்கக் கூடாது என்று மட்டும் மார்க்கம் சொல்லவில்லை. அன்பளிப்புகள் எப்படி வழங்கப்பட வேண்டும் என்றும் மார்க்கம் சொல்கிறது.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
திருக்குர்ஆன் 76:8,9
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:262
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் 2:264
கொடுத்ததைச் சொல்லிக் காட்டாமலும் கொடுத்ததற்காக எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமலும் கொடுப்பது தான் அன்பளிப்பாகவோ, தானமாகவோ ஆக முடியும்.
அன்பளிப்பு கொடுத்து விட்டு அதைச் சொல்லிக் காட்டுவதும், அன்பளிப்பு கொடுத்த காரணத்தால் அன்பளிப்பு பெற்றவர்கள் அதற்காக அவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அவர்களின் பரிந்துரையை ஏற்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பதும் அன்பளிப்பு பெற்றவரை இழிவாக நினைப்பதும் இருக்குமானால் அது அன்பளிப்பாக ஆக முடியாது.
தவ்ஹீத் பிரச்சாரத்தை மேற்கொண்ட துவக்க காலத்தில் நாங்கள் பெற்ற அனுபவமும் அன்பளிப்புகள் விஷயத்தில் கூடுதலாக நாங்கள் கவனம் செலுத்துவதற்கு காரணமாகியது.
நான் நாகர்கோவிலில் 1990களில் அல்ஜன்னத் மாத இதழின் ஆசிரியராக இருந்த போது சில தனவந்தர்கள் சில சமயங்களில் ஆலிம்களுக்கு ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்புவார்கள்.
ஒரு வள்ளல் என்று பெயர் எடுத்தவர் ஒரு தடவை எனக்கும் ஆயிரமோ ஐநூறோ கொடுத்து அனுப்பினார். நான் மறுத்த போது நீங்கள் சொன்ன ஹதீஸைச் சொல்லி அன்பளிப்பை மறுக்க வேண்டாம் என்றார். நானும் வாங்கிக் கொண்டேன். அதன் பின்னர் அந்தச் செல்வந்தர் நோய்வாய்ப்பட்ட போது அனைவரும் நோய் விசாரிக்கச் சென்றனர். அவர் ஜாக் இயக்கத்துக்கு அதிகம் உதவி செய்தவர் என்பதால் நானும் நோய் விசாரிக்கச் சென்றேன்.
அதிகமான மக்கள் அவரை நோய் விசாரிக்கக் கூடி இருந்த போது உங்களுக்கு ஜகாத் கொடுத்து விட்டேனே கிடைத்ததா என்று என்னிடம் கேட்டார். இன்னும் பலரிடமும் இப்படி கேட்டார். அனைவருக்கும் முன்னால் இப்படி அவர் கேட்ட போது நான் பட்ட வேதனையை வார்த்தையால் வடிக்க இயலாது. அன்பளிப்பு என்று அவர் சொல்லி அனுப்பியதால் தான் அன்பளிபை மறுக்கக் கூடாது என்று அதை நான் வாங்கினேன். மார்க்க அறிஞர்களுக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பு என்பது எல்லா நேரங்களிலும் இந்தத் தரத்தில் தான் இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் எனக்குப் புரிய வைத்தது.
எல்லா விஷயத்திலும் தவ்ஹீத் செல்வந்தர்கள் மாறிவிட்டாலும் மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்பு என்ற பெயரில் எதையாவது கொடுத்தால் அதன் அர்த்தம் இதுவாகத் தான் உள்ளது என்ற எண்ணம் வலுப்பட்டது. அதன் பின்னர் அவர் எனக்குக் கொடுத்த எந்த அன்பளிப்பையும் நான் பக்குவமாக மறுத்து விட்டேன்.
யார் என்று ஓரளவு நான் அறிந்து வைத்திருந்தவரிடம் இது போல் ஆணவப் போக்கும், மற்றவர்களை இழிவுபடுத்தும் போக்கும் இருக்கும் போது யார் என்று தெரியாத ஒருவர் கொடுத்த அன்பளிப்பை எப்படி ஏற்க முடியும்?
ஒருவர் நமக்கு ஒரு அன்பளிப்பு தருகிறார் என்றால் நாம் நாலு பேருடன் இருக்கும் போது நான் அதைக் கொடுத்து விட்டேனே கிடைத்ததா என்று கேட்பார். அந்த நாலு பேர் முன்னிலையில் அதைச் சொல்லிக் காட்டி மானத்தை வாங்கி விடுவார். இது போல் அவமானப்படுத்தப்பட்ட நம் சகோதரர்கள் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் தேடி வந்த அன்பளிப்பு என்பதற்காகத் தான் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் கொடுத்தவர்களோ அன்பளிப்பு கொடுத்து விட்டு அவரை விட நான் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்திலும், அவரை இழிவுபடுத்தும் விதத்திலும் தான் கொடுத்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.
நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள் அப்போது நம் ஜமாஅத்தின் சார்பில் (அப்போது அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்று பெயர்) வெளிநாட்டுக்குப் பிரச்சாரம் செய்வதற்காகச் சென்றார்கள். அவர்கள் பிரச்சாரம் முடித்து விட்டு வரும்போது சில அன்பளிப்புகளை அங்குள்ளவர்கள் தாமாகக் கொடுத்து அனுப்பினார்கள். அவர்களும் அன்பளிப்பு என்ற எண்ணத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டு வந்து விட்டனர்.
(அப்போது அன்பளிப்பு வாங்கக் கூடாது என்ற நிலைபாடு எடுக்கப்படவில்லை)
இது நான் தமுமுகவில் அமைப்பாளராக இருந்த போது நடந்ததாகும். இது நடந்து சில மாதங்கள் சென்ற நிலையில் அந்த நாட்டில் இருந்து அங்குள்ள நிர்வாகிகள் விடுப்பில் தாயகம் வந்த போது என்னை தமுமுக அலுவலகத்தில் சந்தித்தனர். இன்னும் பல தமுமுக நிர்வாகிகளும் அப்போது என்னுடன் இருந்தனர். அப்போது அவர்கள் மேற்படி பேச்சாளர்களுக்கு அதைக் கொடுத்து விட்டோம்; இதைக் கொடுத்து விட்டோம் என்று பெருமையாகவும், அந்தப் பேச்சாளர்களை மட்டப்படுத்தும் வகையிலும் எங்களிடமே பேசலானார்கள்.
இதுவாவது பரவாயில்லை. இதைவிடக் கொடுமையான இன்னொன்றையும் அப்போது எங்களிடம் சொன்னார்கள். அதாவது அந்தப் பேச்சாளர்களை விமான நிலையத்தில் ஏற்றி அனுப்ப நாங்கள் வந்த போது விமான நிலையத்தில் அதிகமான விலையுள்ள உணவை அந்த இருவரும் வாங்கிக் கேட்டார்கள்; அதையும் வாங்கிக் கொடுத்தோம் என்று குற்றப்பத்திரிகையாக எங்களிடம் சொன்னார்கள்.
பசி எப்போதும் வரலாம். ஒரு பொருளைப் பார்த்தவுடன் கூட பசி வரலாம். வெளிநாட்டில் விருந்தாளியாகச் சென்றுள்ள போது அங்கே செல்லுபடியாகும் காசு கையில் இல்லாத காரணத்தினால் தான் அவர்கள் அவ்வாறு கேட்டிருப்பார்கள். அந்த இருவரும் நம்முடன் இப்போது இல்லாவிட்டாலும் இந்த அடிப்படையில் தான் அவர்கள் நடந்திருப்பார்கள் என்று நான் இப்போதும் நம்புகிறேன்.
ஆனால் இக்கட்டான நிலையில் வெளிநாட்டில் பசி ஏற்பட்ட போது உணவு வாங்கித் தருமாறு கேட்டதைக் கூட குற்றமாகச் சொல்லிக் காட்டுகிறார்கள் என்றால் அதை ஒரு காதில் வாங்கி மறு காதில் நாங்கள் விட்டு விட முடியாது. தவ்ஹீத் கொள்கைக்கு வந்த பிறகும் கூட ஆலிம்களைப் பற்றிய பார்வை மக்களுக்கு மாறவில்லை. இது பிரச்சாரத்தின் மதிப்பைக் கட்டாயம் கெடுத்து விடும் என்ற சிந்தனையை எங்களுக்கு ஏற்படுத்தியது.
அவர்கள் அப்படி நினைப்பது போல் நம்முடைய உலமாக்களில் சிலரும் நடந்து கொண்டதையும் நான் மறுக்க முடியாது. ஜாக் இயக்கத்தில் நாங்கள் இருந்த போது ஒரு மாநாட்டுக்காக நாங்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டு ஐந்து பேர் (என்று நினைக்கிறேன்) சென்றோம். இலங்கையில் உள்ள அந்த நிறுவனத்தினர் எங்களை நல்ல முறையில் உபசரித்தனர். ஆனால் எங்களுடன் வந்த ஆலிம்களில் ஒருவர் (அவர் ஜாக்கில் இருக்கிறார்) உணவின் முன்னால் அமர்ந்து கொண்டு இதெல்லாம் மனிதன் சாப்பிடுவதா? நாங்கள் மெஹ்மான் (விருந்தினர்)கள் வந்துள்ளோம். இது தான் எங்களை மதிக்கும் இலட்சணமா? என்று கேட்டு அந்த மக்களைக் கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னையே கேவலப்படுத்தினார். எங்களையும் கேவலப்படுத்தினார்.
கூத்தாநல்லூரில் நாம் பார்த்த அதே ஆலிம்களின் குணம் கொண்டவர்கள் இங்கேயும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் கண்டோம்.
இது போன்ற சம்பவங்களுக்குப் பின்னர் தான் என்னைப் பொருத்தவரை சில முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
உறவினர்களிடமிருந்து அன்பளிப்பு பெறுவதை நான் தவிர்த்துக் கொள்வதில்லை.
எனக்கு மட்டும் இல்லாமல் என் குடும்பத்தினருடன் பழக்கமான சில குடும்பத்தினர் உள்ளனர். அது போன்ற குடும்பத்தினர் தரும் அன்பளிப்புகளை நான் மறுக்காமல் பெற்றுக் கொண்டுள்ளேன்.
அதுபோல் யாரிடமும் அன்பளிப்பு பெறக்கூடாது என்ற நிலைபாடு எடுப்பதற்கும் முன்னர் சில நண்பர்களிடம் அன்பளிப்புகள் பெற்றுள்ளேன். இந்த நிலைபாடு எடுத்த பின்னர் நல்ல நண்பர்களிடம் கூட அன்பளிப்பைப் பெற்றதில்லை மேலும் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்ற நிலைபாட்டை எடுப்பதற்கு முன்னர் சிலரிடம் கடன் வாங்கி குறித்த காலத்துக்கு முன்னரே கொடுத்து முடித்துள்ளேன். ஆனால் இந்த நிலைபாடு எடுத்த பின்னர் யாரிடமும் கடன் கூட வாங்குவதில்லை.
இவர்கள் தவிர தனிப்பட்ட முறையில் நண்பர்களாக நான் கருதும் நபர்களிடம் தவிர எந்த அன்பளிப்பும் நான் பெறுவதில்லை.
அந்த நண்பர்களிடமிருந்து பெறும் அன்பளிப்புகளும் கூட தாவாவுக்குப் பயன்படும் லேப்டாப் போன்ற சாதனங்களாகவும், பேனா, டிஜிட்டல் டைரி போன்ற பொருள்களாகவும் தான் இருக்கும். என்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்காது.
நண்பர்களாக நான் நினைத்த சிலரிடம் இது போல் அன்பளிப்பு பெற்றுள்ளேன். பின்னர் அவர்கள் நமக்கு எதிராகச் சென்று விட்டனர். அவர்களிடம் நாம் வாங்காமல் இருந்திருக்கலாம் என்று இப்போது தெரிந்தாலும் உள்ளங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பதால் ஏற்பட்டதாகும்.
இது அல்லாதவர்களிடமிருந்து அன்பளிப்பு பெறுவது அன்பளிப்பாக இருப்பதில்லை என்பதால் அதை நான் தவிர்க்கிறேன்.
பெரிய அன்பளிப்புகளில் மட்டுமின்றி மற்றவர் செலவில் வழங்கப்படும் உணவுகள் விஷயத்தில் கூட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற உணர்வை ஏர்போர்ட் சம்பவமும், ஆலிமுக்கு இரு பங்கு என்ற கலாச்சாரமும் ஏற்படுத்தியுள்ளது.
எந்த விருந்துக்குச் சென்றாலும் சொல்லிக் காட்ட முடியாத அளவுக்கு மிக மிகச் சாதாரண உணவாக இருந்தால் மட்டுமே நான் சாப்பிடுவேன். வகை வகையாக உணவு சமைத்து வைத்திருந்தால் பசி இல்லை தண்ணீர் மட்டும் கொடுங்கள் என்று நான் கூறி ஒதுங்கி விடுவதற்கும் இதுவே காரணம்.
சில வீடுகளில் உணவு பரிமாறும் போது வீடியோ கேமராவுடன் அதைப் படம் பிடிக்க ஆட்கள் தயாராக இருப்பார்கள். இது போன்று சில வீடுகளில் சாப்பிட்டு மாட்டிக் கொண்டதுண்டு. அதன் பின்னர் கேமராவுடன் யாராவது நிற்கிறார்களா என்பதை அலசி ஆராய்ந்து விட்டுத் தான் சாப்பிடுவதா இல்லையா என்று முடிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். கேமராவுடன் தயாராக இருந்தார்கள் என்றால் எவ்வளவு பசியாக இருந்த போதும் எனக்குப் பசி இல்லை. ஒரு டீ கொடுங்கள்; மற்றவர்களுக்காகவே நானும் வந்தேன் என்று கூறி சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்கிறேன்.
இப்போது எல்லாம் நான் தங்கியுள்ள இடத்துக்கு ஒரு தோசை வாங்கி அனுப்புங்கள் அது போதும். வீடுகளுக்கு அழைக்க வேண்டாம் என்று சொல்லி அல்லாஹ்வின் அருளால் தப்பித்துக் கொள்கிறேன்.
இரண்டு இட்லி வாங்கிக் கொடுத்தேன் என்று யாரும் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்க முடியாது. வகை வகையான உணவுகளைப் பரிமாறினால் அதைப் பெருமையுடன் சொல்லிக் காட்டும் மனநிலை உள்ளவர்கள் அதிகம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
என்னளவில் நான் இப்படி நடப்பதை மிகைப்படுத்தப்பட்டதாக சிலர் எண்ணலாம். அவர்கள் எண்ணுவது சரியாகவும் இருக்கலாம். ஆனாலும் நான் சந்தித்த அனுபவங்கள் இப்படி என்னை மாற்றி விட்டது. மற்றவர்கள் இப்படி நடக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன்.
இது தவிர மாநிலப் பேச்சாளர்களாகவும், மாநில நிர்வாகிகளாகவும் உள்ளவர்கள் அழைப்பின் பேரில் வெளிநாடு சென்றால் எக்காரணம் கொண்டும் அற்பப் பொருளையும் கேட்கக் கூடாது என்பதில் நாங்கள் ஒத்த கருத்தில் இருக்கிறோம். எங்கள் பெயரைச் சொல்லி எந்த வசூலும் செய்யக் கூடாது என்பதிலும் நாங்கள் ஒத்த கருத்தில் இருக்கிறோம். நாம் கேட்காமல் அவர்களாக வலுக்கட்டாயமாக அன்பளிப்பை வழங்கினால் அதை இயன்றவரைத் தவிர்த்து விட வேண்டும் என்பதை அறிவுரையாகச் சொல்லி அனுப்புகிறோம்.
துவக்க காலத்தில் நாங்கள் இலங்கை சென்ற போது சில அன்பளிப்புகளை வழங்கினார்கள். நாங்களும் பெற்றுக் கொண்டோம். அதன் பின்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பின்னர் பல தடவை இலங்கை சென்ற போதும், அமீரகம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு நாங்கள் சென்ற போதும் எங்களுக்காக எந்த அன்பளிப்பும் தரக்கூடாது என்றும் எங்கள் பெயரில் எந்த வசூலும் செய்யக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துத் தான் சென்றோம்.
அன்பளிப்புகளை பொதுவாக நாங்கள் தவிர்ப்பதில்லை. தக்க காரணத்துடன் அன்பளிப்பு இல்லாதவை அன்பளிப்பு என்ற நிலையில் போலித் தோற்றம் அளிப்பதால் தான் தவிர்க்கிறோம்.
அன்பளிப்பைத் தவிர்ப்பது நபிவழியா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode