அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கலாமா?

இதர நம்பிக்கைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கலாமா?

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் பெயரால் பிராணிகளை அறுப்பதும், பலியிடுவதும் இஸ்லாத்தில் தடுக்கப்படுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்:

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.171 வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:173

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஹராம் என இவ்வசனம் கூறுவதைப் பார்ப்போம்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் உஹில்ல என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் சப்தமிடப்பட்டவை என்பதாகும். அன்றைய அறியாமைக் கால அரபு மக்கள் அல்லாஹ் அல்லாத தெய்வங்களின் (?) பெயரைச் சப்தமிட்டுக் கூறிவிட்டு அறுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே அல்லாஹ் அல்லாதவர்களுக்காகச் சப்தமிடப்பட்டவை என்று இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்களை சப்தமின்றிக் கூறி அறுத்தால் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்றே இந்த இடத்தில் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தில் விலக்கப்பட்ட உணவுகளை இறைவன் பட்டியலிடுவது போல் 5:3 வசனத்திலும் பட்டியலிட்டுக் கூறுகிறான். அந்த வசனத்தில் கற்களுக்காக அறுக்கப்பட்டவை என்று தெளிவாகக் கூறுகிறான். உஹில்ல என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தாமல் துபிஹ (அறுக்கப்பட்டவை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக சப்தமிடப்பட்டவை என்பது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை 5:3 வசனத்தை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யலாம்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகள் என்றாலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுமானால் அவற்றை உண்ணக்கூடாது. பன்றியின் மாமிசம், தாமாகச் செத்தவை போன்று இவையும் ஹராமாகும்.

நாகூர் ஆண்டவருக்காக, முஹ்யித்தீன் ஆண்டவருக்காக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், பிராணிகளை அறுக்கின்றனர். உண்கின்றனர். மேற்கண்ட வசனத்தை மறுமை நாளின் விசாரணையை அஞ்சி - சிந்தித்தால் இவ்வாறு அறுப்பதும், உண்பதும் இவ்வசனத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளதை உணரலாம்.

ஆயினும் தெளிவான இந்த வசனத்தைக் கூட அர்த்தமற்றதாக்கும் வகையில் விதண்டாவாதங்களில் இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களில் (?) சிலர் ஈடுபட்டுள்ளனர்.

நாம் - நமக்காக நாம் உண்பதற்காக பிராணிகளை அறுக்கிறோம். நமது வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்களுக்காகவும் அறுக்கிறோம். நமக்காகவும், விருந்தினருக்காகவும் அறுக்கப்படுவதால் இதுவும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காகத் தான் அறுக்கப்படுகின்றது. இதை உண்ணக்கூடாது என்று கூற முடியுமா? இதுபோல் தான் அவ்லியாக்களுக்காக அறுக்கப்படுவதும் அமைந்துள்ளது. விருந்தினருக்காக அறுக்கப்படுவதை உண்பது போலவே அவ்லியாக்களுக்காக அறுக்கப்பட்டதையும் உண்ணலாம் என்று அவர்கள் வாதம் செய்கின்றனர்.

இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசங்களை இவர்கள் உணராதிருப்பதே இந்த விதண்டாவாதத்திற்கு அடிப்படையாகும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டவை என்று கூறும் போது அதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அது போலவே அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை என்று கூறும்போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டவை என்பது அல்லாஹ் உண்பதற்காக அறுக்கப்பட்டவை என்று சிறிதளவு அறிவுள்ளவரும் விளங்க மாட்டார். அல்லாஹ்வுக்கு என்றால் அவன் உண்பதற்காக அன்று, மாறாக இந்தப் பிராணியின் உயிர் அவனுக்குரியது, அதை அவனுக்கே உரித்தாக்குகிறோம் என்பதே அதன் பொருளாகும்.

நமக்காகவும் நமது விருந்தினருக்காகவும் அறுக்கப்படுவது அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் கருதப்படுவதில்லை. அவ்லியாக்களுக்காக அறுக்கப்படுவது அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவது போல் கருதப்படுகின்றது. இந்த வித்தியாசத்தைத் தான் அவர்கள் விளங்குவதில்லை.

அவ்லியாக்களுக்கு அறுப்பவர்கள் அந்த அவ்லியா அதை உண்பார் என்று கருதி அறுப்பதில்லை. அவர் அதை உண்பதுமில்லை. அல்லாஹ் நமக்கு அருள்புரிவான் என்பதற்காக, புரிந்த அருளுக்கு நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அறுக்கப்படுகின்றதைப் போன்று அந்த அவ்லியா அருள் புரிவார் என்பதற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் தான் அவருக்காக அறுக்கப்படுகின்றது.

அல்லாஹ்வுக்காக அறுக்கும்போது மாமிசமோ, இரத்தமோ அவனைச் சென்றடையாது. உள்ளத்திலிருக்கும் பக்தியே அவனைச் சென்றடையும் என்று குர்ஆன் கூறுகிறது.

அவ்லியாவுக்காக அறுக்கும் போதும், இரத்தமோ மாமிசமோ அவரைச் சென்றடையாது. அவ்லியாக்களின் மீது அறுப்பவர் கொண்ட பக்தியே அவரைச் சென்றடைகிறது என்று அவ்லியாவுக்காக அறுப்பவர் நம்புகிறார்.

விருந்தாளிக்காக அறுக்கும் போது மாமிசம் தான் அவரைச் சென்றடைகிறது. அல்லாஹ்வைப் போல் அவர் அருள்புரிவார் என்று எவருமே நம்புவதில்லை. விருந்தாளிகள் மீது பக்தி கொள்வதுமில்லை.

சுருங்கச் சொல்வதென்றால் அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுதல் என்பதன் பொருள் அல்லாஹ் உண்பதற்காக அறுக்கப்படுதல் அல்ல. மாறாக அவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்துதல் என்பதே ஆகும்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுதல் என்பதன் பொருள் அல்லாஹ் அல்லாதவர் உண்பார் என்பதற்காக அறுக்கப்படுவதல்ல. அல்லாஹ் அல்லாதவர் மீது நமக்கிருக்கும் பக்தியை வெளிப்படுத்துவதற்காக அறுக்கப்படுவதே ஆகும். இவ்வாறு அறுக்கப்படுவதே, தடுக்கப்படுகின்றது. அல்லாஹ் அல்லாதவர் உண்பதற்காக அறுக்கப்படுவது விலக்கப்பட்டதாக ஆகாது.

இந்த அடிப்படையை உணராதவர்களின் வாதம் விதண்டாவாதமே என்பதில் ஐயமில்லை.

அவ்லியாக்களுக்காகப் பிராணிகளை அறுப்போர், அவ்வாறு அறுக்கப்பட்டவைகளை உண்ணலாம் எனக் கூறுவோர் மற்றொரு விசித்திரமான வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயர் எதன் மேல் கூறப்பட்டதோ அதை உண்ணுங்கள் (அல்குர்ஆன் 6:118) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ண அல்லாஹ் அனுமதிக்கிறான். அவ்லியாக்களுக்காக அறுப்பவர்கள், அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித் தான் அறுக்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டாலும், அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்கப்படுவதால் அதை உண்ணலாம் என்பது இவர்களின் வாதம்.

அறுப்பது பற்றிக் கூறும் இரண்டு வசனங்களும் தனித்தனியான இரண்டு நிபந்தனைகளைக் கூறும் வசனங்கள் ஆகும். இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று கூறினால் இரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். உதாரணமாக, தொழுகைக்கு உலூவும் வேண்டும், உடையும் வேண்டும். இரண்டும் தனித்தனி நிபந்தனைகள் ஆகும். ஒருவன் உலூவைச் செய்து விட்டு நிர்வாணமாகத் தொழுதால் அல்லது உடையணிந்து விட்டு உலூவின்றித் தொழுதால் அத்தொழுகை நிறைவேறும் என்று யாரும் சொல்வதில்லை. இரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர இருந்தாக வேண்டும் என்றே அனைவரும் புரிந்து கொள்வர்.

இவ்வாறு தான் அறுக்கப்படும் ஹலாலான பிராணிகளை உண்பதற்கு இரண்டு தனித்தனி நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் பெயர் கூற வேண்டும். என்பது ஒரு நிபந்தனை.

அல்லாஹ்வுக்காகவே அறுக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படுவதால் அங்கே ஒரு கட்டளை செயல்படுத்தப்பட்டுள்ளது உண்மை தான். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கக் கூடாது என்ற மற்றொரு கட்டளை மீறப்பட்டுள்ளது. யார் பெயர் கூறி அறுத்தீர்கள்? என்று கேட்டால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தோம் என்று இவர்கள் கூற முடியும். யாருக்காக அறுத்தீர்கள்? என்று கேட்டால் நாகூர் ஆண்டவருக்காக என்று தான் இவர்களால் பதில் கூற முடியுமே தவிர அல்லாஹ்வுக்காக என்று கூற முடியாது.

இரண்டு கட்டளைகளில் ஒன்று மீறப்பட்டாலும் உண்ணப்படுவதற்கான தகுதியை அது இழந்து விடுகின்றது.

ஒருவர் ஒரு சமாதியில் போய் ஸஜ்தாச் செய்கிறார். சமாதியில் அடங்கப்பட்டவரை மதிப்பதற்காக ஸஜ்தாச் செய்கிறார். இவ்வாறு ஸஜ்தா செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுகிறார். அல்லாஹு அக்பர் எனக் கூறிவிட்டதால் சமாதிக்குச் செய்த ஸஜ்தாவை எவ்வாறு நியாயப்படுத்த முடியாதோ அது போலவே அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுப்பதும் அமைந்துள்ளது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுவது ஹராம் ஆகும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மேலும் பல சான்றுகள் உள்ளன.

உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக

அல்குர்ஆன் 108: 23

தொழுவது இறைவனுக்காக மட்டுமே அமைய வேண்டும் என்பது போலவே அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்காகவே அமைய வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

صحيح مسلم

5239 - حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَسُرَيْجُ بْنُ يُونُسَ كِلاَهُمَا عَنْ مَرْوَانَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِىُّ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ قَالَ كُنْتُ عِنْدَ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ مَا كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يُسِرُّ إِلَيْكَ قَالَ فَغَضِبَ وَقَالَ مَا كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يُسِرُّ إِلَىَّ شَيْئًا يَكْتُمُهُ النَّاسَ غَيْرَ أَنَّهُ قَدْ حَدَّثَنِى بِكَلِمَاتٍ أَرْبَعٍ. قَالَ فَقَالَ مَا هُنَّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قَالَ « لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا وَلَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الأَرْضِ ».

நான் அலி (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒருவர் வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களுக்கு இரகசியமாகக் கூறியவை என்ன? என்று அவர் கேட்டார். அதைக் கேட்டதும் அலி (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மக்களுக்கு மறைத்துவிட்டு எனக்கென்று எந்த இரகசியத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதில்லை என்றாலும் என்னிடம் நான்கு போதனைகளைக் கூறியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்போது நான் அமீருல் மூமினீன் அவர்களே! அந்த நான்கு போதனைகள் யாவை? என்று கேட்டேன். அதற்கு அலி (ரலி) அவர்கள் யார் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கிறான். தம் பெற்றோரைச் சபிப்பவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான். பித்அத்களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் தருபவனையும் அல்லாஹ் சபிக்கிறான். பூமியில் உள்ள எல்லைக் கற்களை மாற்றியமைப்பவனையும் அல்லாஹ் சபிக்கிறான். (இவையே அந்த நான்கு விஷயங்கள்) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபுத்துஃபைல்

நூல்கள்: முஸ்லிம் 3657, 3659, நஸயீ 4346, அஹ்மத் 813, 908, 1338

அல்லாஹ் அல்லாதவர்களுக்குப் பலியிடுதல் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இந்த நபிமொழி தெளிவாக விளக்குகின்றது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் பலியிடுவது ஒரு புறமிருக்கட்டும். அல்லாஹ்வுக்காகப் பலியிடும் போது அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் பலியிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

سنن أبي داود

3313 حدَّثنا داودُ بن رُشَيد، حدَّثنا شعيبُ بن إسحاقَ، عن الأوزاعيِّ، عن يحيى بن أبي كثيرِ، حدَّثني أبو قِلابةَ حدَّثني ثابتُ بن الضحَّاك، قال: نذرَ رجلٌ على عهدِ رسولِ الله -صلَّى الله عليه وسلم- أن ينحرَ إبلاً ببُوانةَ، فأتى رسول الله -صلَّى الله عليه وسلم -، فقال: إني نذرتُ أن أنحر إبلاً ببُوانةَ، فقال رسول الله -صلَّى الله عليه وسلم-: "هل كان فيها وثنٌ من أوثانِ الجاهليةُ يُعبَدُ؟ " قالوا: لا، قال: "هل كان فيها عِيدٌ من أعيادِهم؟ "

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தெய்வங்கள் ஏதும் உள்ளனவா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று கூறினார்கள். அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை என்றனர். அப்படியானால் உமது நேர்ச்சையை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும் மனிதனுடைய கை வசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்டதையே அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழிபாடு நடத்தப்படும் இடங்களில் நிறைவேற்றக் கூடாது என்றால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக என தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டு அறுப்பது எவ்வளவு பெருங்குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இதுபோல் அறுத்துப் பலியிடாமலும் அவ்வாறு பலியிடப்படுவதை உண்ணாமலும் இருக்க வேண்டும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account