Sidebar

02
Mon, Nov

✍️ஜகாத் வசூலிப்பவர் தேடிச் சென்று வசூலிக்க வேண்டும்

✍️ஜக்காத்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்லாமிய ஆட்சிமுறை மற்றும் நிருவாக அமைப்பின்கீழ், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளுக்கான ஜகாத் எனும் கடமைக்கொடையை வசூலிக்கும் போது, அதிகாரியானவர் உரிமையாளரின் இருப்பிடத்திற்கோ அல்லது அக்கால்நடைகள் பராமரிக்கப்படும் இடத்திற்கோ நேரில் சென்றுதான் வசூலிக்க வேண்டும்; மாறாக, அவர்களைத் தேடி வரவழைக்கக் கூடாது.

அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஜகாத் வசூலிப்பு அதிகாரி, ஆட்டுப்பண்ணையோ அல்லது கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடமோ எங்கு அமைந்துள்ளதோ, அங்கு நேரில் சென்றுதான் வசூல் செய்ய வேண்டுமே தவிர, தான் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, "உன்னிடம் உள்ள ஆடுகள் அனைத்தையும் ஓட்டிக்கொண்டு வந்து என் முன்னே காட்டு" என்று அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு கட்டாயப்படுத்தி ஓட்டி வரச் சொல்வதை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது: "لا توخزصدقاتھم الابدورھم ولا جنب "

رواہ ابو داود واحمد(அவர்களுடைய ஜகாத்துகளை அவர்களுடைய இல்லங்களிலேயே - அதாவது அவை பராமரிக்கப்படும் இடங்களிலேயே - சென்றுதான் நீங்கள் வசூலிக்க வேண்டும்) என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். வசூலிக்கச் செல்பவர்தான் அச்செல்வம் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, அதிகாரத்தின் பெயரால் உரிமையாளரைத் தம்மிடம் வருமாறு பணிக்கக் கூடாது.

ஏனெனில், ஓர் அதிகாரி நிழலில் அமர்ந்துகொண்டு, "எல்லா ஆடுகளையும் என் முன்னால் ஓட்டிக்கொண்டு வா" என்று பணிப்பதில் ஓர் அடக்குமுறையும், அடிமைத்தனமும், ஏமாற்று வேலைகளும் அமைந்திருக்கின்றன. நல்ல வசதிபடைத்த செல்வந்தன் ஒருவனிடம் 200 ஆடுகள் இருக்கும் போது, அவன் அதிகாரி அமர்ந்திருக்கும் இடத்திற்கு 100 ஆடுகளை மட்டும் ஓட்டிவந்து காட்டி ஏமாற்றவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஓட்டி வருவதைப் பார்த்துவிட்டு அதிகாரி கணக்கு முடித்தால், அது நீதியான கணக்கீடாக அமையாது. கஷ்டப்பட்டு உழைப்பவருக்கு அது சிரமத்தையும் ஏற்படுத்தும்.

அப்படியாயின், "சொந்தக்காரன் சொல்வதை அப்படியே நம்பி வசூலித்துவிட்டுப் போய்விடலாமா?" என்றால், அவ்வாறும் செய்துவிடக் கூடாது. அதனால்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜகாத்திற்குரிய கால்நடைகளை உரிமையாளர் எந்த இடத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த இடத்திற்கே வசூலிப்பவர் நேரில் செல்ல வேண்டும் என்று சட்டமாக்கினார்கள். வசூலிக்கும் அதிகாரி இருக்கும் இடத்திற்கு அச்செல்வத்தைக் கொண்டு வருமாறு பணிக்கவும் கூடாது; அதேபோன்று, அக்கால்நடைகளை வழக்கமாக இருக்கும் இடத்தை விட்டு மாற்றச் சொல்லவும் கூடாது.

உதாரணமாக, "என் வீட்டின் வாசலில் ஒரு மாட்டைப் பூட்டியிருக்கிறேன், அதை இங்கு கொண்டு வந்து பார்" என்று உரிமையாளரிடமும் கூறக் கூடாது. எந்த இடத்தில் அந்த ஆடு மாடுகள் எப்போதும் இருக்குமோ, அந்த இடத்திற்குச் சென்றுதான் வசூலிக்க வேண்டும். வசூலிப்பவர் இருக்கும் இடத்திற்கோ அல்லது உரிமையாளர் குறிப்பிடும் வேறு இடத்திற்கோ ஆடு மாடுகளை இடமாற்றம் (ட்ரான்ஸ்ஃபர்) செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தேவையற்ற அலைச்சலுக்கும் சிரமத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், "லா தூகது சதகாத்துஹும் இல்லா ஃபீ தூரிஹிம்" - அதாவது, "அவரவர் அதற்காக வைத்திருக்கும் இடங்களைத் தவிர வேறு இடங்களில் வைத்து ஜகாத்தைச் சேகரிக்கக் கூடாது" என்று மார்க்கம் தெளிவுபடுத்துகிறது.

அவற்றை இழுத்துக்கொண்டு வரக்கூடாது என்றால், வசூலிப்பவர் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, "உன்னுடைய ஆடுகளையெல்லாம் ஒரே ஆளாக ஓட்டிக்கொண்டு வா" என்று கேட்கக் கூடாது. அதேபோன்று, 'ஜனப்' என்று சொல்லப்படக்கூடிய நடைமுறையானது என்னவெனில், வசூலிப்பவரை ஆட்டுப்பண்ணைக்குள் வரவிடாமல், " நீங்கள் பண்ணைக்குள் வர வேண்டாம், நான் எல்லா ஆடுகளையும் தெருவின் முனையில் கொண்டு வந்து நிறுத்துகிறேன், அங்கேயே கணக்குப் பார்த்துவிட்டுப் போங்கள்" என்று உரிமையாளரும் இடமாற்றம் செய்யக் கூடாது. அதிகாரியும் இடமாற்றம் செய்யக் கூடாது; உரிமையாளரும் இடமாற்றம் செய்யக் கூடாது.

எனவே, ஜகாத் வசூலிப்பதில் மிகத் தெளிவான நடைமுறை இருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல முறைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூதாவுத் மற்றும் அஹ்மத் போன்ற முதன்மையான ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ள தெளிவான வழிகாட்டுதலாகும்.