Sidebar

20
Fri, Sep
4 New Articles

393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்

4:3 வசனத்தில் பல திருமணங்கள் செய்வது, அனாதைகளுக்கு நீதி செலுத்துவதுடன் சம்பந்தப்படுத்தி கூறப்பட்டுள்ளது.

வசதி படைத்த ஒருவர் தமது சிறு வயது மகளை விட்டு விட்டு மரணித்தால் அவரது உறவினர் அந்த அனாதைப் பெண்ணையும், அவரது சொத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது வழக்கம்.

இவ்வாறு பொறுப்பேற்றுக் கொண்டவர் தமது பொறுப்பில் உள்ள அனாதைப் பெண்ணை தானே மணந்து கொள்வார். உரிய மஹரும் கொடுக்க மாட்டார். அப்பெண்ணின் சொத்தையும் தனதாக்கிக் கொள்வார்.

இப்படித் தனது பொறுப்பில் உள்ள அனாதைகளை ஏமாற்றுவோருக்கு எச்சரிக்கையாகத் தான் இவ்வசனம் அருளப்பட்டது.

இரண்டு, மூன்று, நான்கு பெண்களை மணந்து கொள்ள அனுமதியிருக்கும்போது உங்கள் பொறுப்பில் நம்பி ஒப்படைக்கப்பட்ட அனாதைப் பெண்களை ஏன் ஏமாற்றி மணந்து கொள்கிறீர்கள் என்று அறிவுறுத்தவே இவ்வாறு கூறப்படுகிறது.

பொதுவாக மனிதன் தனது பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தன்னையும் அறியாமல் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான். நாம் தானே இவர்களைப் பராமரிக்கிறோம் என்ற எண்ணத்தின் காரணமாக இப்படி நடந்து கொள்கிறான்.

இந்தப் பலவீனத்தைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான். உங்கள் பொறுப்பில் உள்ள அனாதைகளை அவர்களுக்குத் தகுதியான இடங்களில் மணமுடித்து வையுங்கள்! நீங்கள் வேறு பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. இதை 4:127 வசனத்திலிருந்து அறியலாம்.

மேலும் அனாதைப் பெண்களின் சொத்துக்களில் மட்டுமின்றி அவர்களின் திருமண உரிமைகளிலும் கூட அநீதி இழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. தனக்குக் கீழே உள்ள அனாதைப் பெண் விரும்பாத போதும் தனது பொறுப்பில் இருப்பதைப் பயன்படுத்தி அவளை வலுக்கட்டாயமாக மணந்து கொள்ளும் அநியாயமும் நடக்க வாய்ப்புள்ளது.

அந்த அநியாயத்தையும் இவ்வசனம் எடுத்துக் கொள்ளும். "அனாதைகளிடம் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்'' என்பது எல்லா வகையான அநியாயத்தையும் உள்ளடக்கிய சொல்லாகும்.

பலதார மணத்துக்கு அனுமதி ஏன் என்பதை அறிய 106 வது குறிப்பைக் காண்க!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account