Sidebar

18
Wed, Sep
1 New Articles

புலிகளின் முஸ்லிம் இனப்படுகொலை

பிரபாகரன் - புலிகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
 
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.
 
'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்' இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.
 
ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844.
 
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.
 
முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.
 
அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.
 
இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.
 
1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
 
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.
 
இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
 
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account