தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள்
- மௌனம் காக்கும் தமிழ் போராளிகள்!!
- வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித் தகவல்கள்
மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தமிழகக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும்போது தான் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு தமிழக மீனவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தக்கூடியவர்கள் யார் என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சுகின்றது.
இலங்கையில் மீன்பிடித் தொழில் செய்யும் தமிழ் மீனவர்கள்தான் தமிழகத்திலிருந்து எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றனர் என்பதுதான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.
இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் சென்றால் இராணுவம் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றது. அதே நேரத்தில் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களிடம் தமிழகத்திலிருந்து செல்லும் தமிழ் மீனவர்கள் சிக்கி விட்டால் பின்னி எடுத்து, நையப் புடைத்து அனுப்பும் சம்பவங்கள் நடக்கின்றன.
தமிழக மீனவர்களைத் தாக்குபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள்தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஒரு மாதத்துக்கு முன் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது போட்டு உடைத்தார். இதைக்கேட்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நாம் கூறிய செய்திகளை உண்மைப்படுத்தும் விதத்தில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி அன்றுவெளியான, “தி ஹிந்து நாளேட்டின் தமிழ் பதிப்பில், “இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் " அந்த நாளேட்டிற்கு அளித்த பிரத்தியேக பேட்டி வெளியிடப்பட்டது. அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் பல உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
அந்த பதில் இதோ :
கேள்வி :
தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?
பதில் :
உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய - இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே.
இந்திய மீனவர்கள், தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில், நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய நெருங்கிய தூரத்திலேயே வந்து ஏன் மீன் பிடிக்கிறார்கள்? பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம்,இந்தியக் கடல் பிராந்தியத்தில் இழு வலைப்படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்துக் காலி செய்து விட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது. உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால் இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க வருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும்.
எங்கள் நாட்டில் இழு படகுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல.
இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல;பவளப்பாறைகள் கூட இழுத்து வரப்படுகின்றன. இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர்.
மேற்கண்ட பதிலில் பல உண்மைகளை நாம் அறிய முடிகின்றது.
தமிழக மீனவர்களைத் தாக்குபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள்தான். அதுபோல அங்கிருந்து இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையால் சிறையில் அடைத்து சித்திரவதைக்கு ஆளாகுபவர்களும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களே! ஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் கொலைவெறித் தாக்குதலுக்கும், சித்திரவதைக்கும் உள்ளாகுபவர்கள் தமிழர்களே!
இந்தச் செய்தியை நாம் சொல்லும்போது நம்ப மறுத்தவர்கள் தற்போது, இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சொல்லும்போது வாய்மூடி மௌனம் காக்கின்றனர்.
உண்மையிலேயே இங்குள்ள தமிழ் அமைப்புகள் தமிழ் மீனவர்கள் மீது அக்கறை செலுத்துகின்றோம்; அவர்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றோம் என்று தாங்கள் சொல்லும் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்காகவும், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்காகவும் போராட வேண்டும். மொத்தத்தில் ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமா இல்லையா? அதை இவர்கள் செய்வார்களா?
ஈழப் பிரச்சனையில் தனி ஈழம் வேண்டும்; தமிழர்களுக்கு அமைதி வேண்டும்; நிம்மதி வேண்டும் என்று இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் போராடுகின்றோம் என்று சொல்லக் கூடியவர்கள் இந்த விஷயத்தில் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்?
அதுபோல இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்படும் இலங்கை தமிழ் மீனவர்களுக்காக இவர்கள் இதுவரை போராடாதது ஏன்? என்ற கேள்விக்கும் இவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களுக்காக நாங்கள் போராடுகின்றோம். இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக் காக்க உயிரையும் கொடுக்கத் தயார் என்று தமிழகத்திலுள்ள தமிழ்ப் போராளிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் பேச்சுக்களெல்லாம் வெறும் வெத்து வேட்டு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது. நாம் சொல்லிக் காட்டிய செய்தியும் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
28.11.2013. 4:40 AM
தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode