Sidebar

20
Sat, Apr
0 New Articles

பைஅத்தை நியாயப்படுத்தும் பொருந்தாத ஆதாரங்கள்!

மத்ஹப் - தக்லீத் - தரீக்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பைஅத்தை நியாயப்படுத்தும் பொருந்தாத ஆதாரங்கள்!

இலங்கை உமர் அலி என்பவர் பைஅத் அவசியம் என்று பேசி வருகிறார். இதற்கு 48:10,  9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்.

பையத் ஓர் ஆய்வு என்ற உங்கள் பயானில் கூறிய விஷயங்களுக்கு அவர் மறுப்பாக  9:103  வசனத்தை எடுத்துக் காட்டுகிறார். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க வழிபாடுகள் செய்வதாக உறுதி மொழி எடுக்கக் கூடாது  என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்கள் தானே? அவர்களிடம் மட்டும் பைஅத் செய்யலாமா என்றும் அவர் கேட்கிறார்.

பதில் :

நம்மைப் போல் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள மனிதர்களிடம் பைஅத் செய்யக் கூடாது என்று நாம் கூறியதை மட்டும் வைத்து இவ்வாறு  கேள்வி எழுப்பியுள்ளார். முன்பின் வாசகங்களையும் நாம் கூறிய விளக்கங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை.

உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுத மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

திருக்குர்ஆன் 48:10

இந்த வசனத்துக்கு நாம் அளித்த முழு விளக்கத்தையும் நீங்கள் படித்தால் இவர்கள் கேட்கும் அர்த்தமற்ற கேள்விக்கு நீங்களே பதில் கூறி விடலாம். இதோ அந்த விளக்கம்.

இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட பைஅத் எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகிறது.

இந்த வசனத்தைச் சான்றாகக் கொண்டு போலி ஆன்மீகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இவ்வசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.

நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத் எனும் உறுதிமொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதிமொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதிமொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதிமொழியாகும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.

இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத் எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். நாங்கள் தொழுவோம்; நோன்பு வைப்போம்: தப்புச் செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள்.

பார்க்க திருக்குர்ஆன் 60:12

இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதிமொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதிமொழி தான்.

இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலை சிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித்தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை.

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரிடம் வந்து "நாங்கள் ஒழுங்காகத் தொழுவோம்; நோன்பு நோற்போம் என்றெல்லாம் யாரும் எந்த பைஅத்தும் எடுக்கவில்லை.

இறைவனிடம் செய்கின்ற உறுதிமொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் வணக்க வழிபாடுகள் குறித்து பைஅத் செய்தார்கள்.

எனவே நபிகள் நாயகத்தைத் தவிர எந்த மனிதரிடமும் நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துகிற, தங்களையும் இறைத் தூதர்களாக கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழிமுறையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கலைத் தவிர மற்றவர்களிடம் உறுதிமொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதிமொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.

இந்த உறுதிமொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமர் (ரலி) அவர்களிடம் செய்தார்கள்.

இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது.  இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல. ஆட்சியாளராக ஏற்றுக் கொள்ளும் பைஅத் ஆகும்.

இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்மந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும் வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி - பைஅத் - எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அவரது உரிமை சம்மந்தப்பட்டதாகும்.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர் அந்த நிறுவனத்தின் ஊழியரிடம் நிறுவனத்தின் விதிகளைக் கூறி உடன்படிக்கை பைஅத் எடுக்கலாம்., ஏனேனில் இது அவர் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானது. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும்.

நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.

அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதிமொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தது.

48 : 10  ம் ஆவது வசனத்துக்கு மேற்கண்டவாறு நாம் விளக்கம் அளித்திருந்தோம்.

இவ்விளக்கத்தைப் புறக்கணித்து விட்டு வணக்கவழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமையிடம் ஆன்மீக பைஅத் செய்யக் கூடாதென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை இல்லையா? அவர்களிடம் மட்டும் பைஅத் செய்யலாமா என்ற கேள்வி அர்த்தமற்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அவர்களிடம் மட்டும் ஆன்மீக பைஅத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்துள்ளான்.  அல்லாஹ் அனுமதி கொடுத்த பிறகு அதற்கு எதிராகக் கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை.

வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர்த்து உமர் அலீ உட்பட மற்ற யாரிடத்திலும் ஆன்மீக பைஅத் செய்யக் கூடாது.

போலி பைஅத்வாதிகள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் ஆதாரமாகக் காட்டிய  48: 10  வது வசனத்துக்கு சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இது வரை அதற்கு இவர்கள் பதில் கூறவில்லை.

இவர்களின் கொள்கையை வேரோடு களையும் வகையில் அமைந்த அந்த வசனத்துக்கும், நாம் எழுப்பிய பல வினாக்களுக்கும் பதில் கூறாமல் அர்த்தமற்ற கேள்வியை மட்டும் கேட்பதிலிருந்து உமர் அலியின் சுய ரூபம் தெளிவாகிறது.

பின்வரும் வசனத்தை எடுத்துக்காட்டி உமர் அலி எழுப்பும் கேள்வி சரியா?

(முஹம்மதே) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 9:103

இதிலிருந்து அவர் எடுத்து வைக்கும் வாதம் என்ன? 9 : 103  ஆவது வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.

மக்களிடமிருந்து ஸகாத் வசூலிக்க வேண்டும் என்பது ஒரு கட்டளை.

பிறகு அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது இன்னொரு கட்டளை.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! என்று அல்லாஹ் கூறுவதால் தர்மத்தை வசூலிப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தகுதி. மற்றவர்களுக்கு ஸகாத்தை வசூலிக்க அனுமதியில்லை என்று கூறுவீர்களா? என்பதே இவர்களின் வாதம்.

பைஅத் எப்படி நபிகளுக்கு மட்டும் உரியதாக உள்ளதோ அது போல் தான் ஜகாத் வசூலிப்பதும் நபிகளுக்கு மட்டும் உரியது. அப்படி இருந்தும் நாம் ஜகாத் வசூலிக்கிறோம். அது போல் தான் பைஅத்தும் எடுக்கலாம்.

இதுதான் உமர் அலியின் வாதம்

மேற்கண்ட வசனத்தில் ஸகாத்தை வசூலிக்கும் தகுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது என்று அல்லாஹ் கூறவில்லை.

நபியே உம்மிடம் இவர்கள் ஸகாத் வழங்குவது அல்லாஹ்விடம் வழங்குவதாகும் என்று அந்த வசனத்தில் கூறப்பட்டிருந்தாலே ஸகாத்தை வசூலிப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தகுதி என்று புரியலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய கட்டளையாக இருந்தால் அதைத் தெளிவாகவோ, மறைமுகவோ அல்லாஹ் தெளிவுபடுத்தி விடுவான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சட்டம் என்பதை உணர்த்தக் கூடிய எந்தச் சான்றும் இல்லாமல் பொதுவாக இறைவன் ஒரு கட்டளையைப் பிறப்பித்தால் அது எல்லோருக்கும் உரிய சட்டமாகும்.

உதாரணமாக

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

திருக்குர்ஆன் 25:58

இவ்வசனத்தில் அல்லாஹ்வையே சார்ந்திருக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தான் அல்லாஹ் உத்தரவிடுகிறான். எனவே மற்றவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை போற்றிப் புகழ வேண்டும் என்று புரிந்துகொள்ள மாட்டோம்.

மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு உத்தரவிடுவதன் மூலம் நாமும் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறான் என்றே புரிந்து கொள்வோம்.

இறைவனிடமும் இறைத்தூதரிடம் மட்டுமே ஆன்மீக பைஅத் செய்ய முடியும் என்று நாம் கூறுவதற்கு 48:10 வது வசனத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளோம்.

மற்றவர்களிடமும் ஆன்மீக பைஅத் எடுக்கலாம் என்று உமர் அலீ கூறுவதற்குத் தான் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருந்தால் அவர் எடுத்துக் காட்டட்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account