Sidebar

09
Fri, May
29 New Articles

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மத்ஹப் - தக்லீத் - தரீக்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்?

பைசுல் ரஹ்மான்.

பதில் :

மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம். நாம் யாரை நேசித்தாலும், பகைத்தாலும் அல்லாஹ்விற்காக என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். இறை நேசத்தை விட வேறு எதுவும் மோலோங்கி விடக்கூடாது.

صحيح البخاري

16 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.
அறிவிப்பவர் :  அனஸ் (ரலி)
நூல் : புகாரி 16

நேசம் என்பது வணக்கம் ஆகும். நாம் அல்லாஹ்வைப் போன்று யாரையும் நேசிப்பது கூடாது.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்று அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான்.

மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூஃமின்கள் என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.

யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். இய்யாக நஃபுது' (இறைவா உன்னையே வணங்குகிறோம்) எனும் உறுதிமொழியை மீறியவராவார்.

இறைவனை நேசிக்கும் அளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை பின்வரும் வசனம் விளக்குகின்றது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

இறைவனின் பெயரைக் கூறும் போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் – இறைவனின் – அழைப்பை பாங்கைக் கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும் போது ஒருவனுக்கு ஏற்படுமானால் அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடிகொண்டுள்ளது என்று பொருள்.

இய்யாக நஃபுது' என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை. இறைவனது கட்டளை இது தான் என்று கூறப்படும் போது எனது தந்தை, எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்!

இய்யாக நஃபுது' என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

பின்வரும் வசனங்களில் நாம் இறைவனை விட வேறு யாரையும் நேசிக்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!

அல்லாஹ்வை நேசித்தல் என்பது இறைச் செய்திகளைப் பெற்றுத் தந்த நபிகள் நாயகத்தை நேசிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களைவிட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

صحيح البخاري

15 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 15

صحيح البخاري

6632 – حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَقِيلٍ زُهْرَةُ بْنُ مَعْبَدٍ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ» فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الآنَ يَا عُمَرُ»

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும் விட நீங்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் விருப்பமானவனாக ஆகும் வரை (நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை விடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது தான்  உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 6632

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கொடுக்கும் இடத்தை யாருக்கும் கொடுக்காத வகையில் தான் மற்றவர்களை நேசித்தல் இருக்க வேண்டும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account