Sidebar

28
Tue, May
112 New Articles

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை

மத்ஹப் - தக்லீத் - தரீக்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை

எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிது ஓதிக்  கொண்டிருந்தவர்கள்  தான்.  இவ்வாறு  ஓதுகின்ற அந்த மவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடைய உள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது.

தாயத்து, தகடுகள், கப்ரு வணக்கங்கள், தர்ஹாக்கள், அவற்றில் நடக்கும் அனாச்சாரங்கள் இவை அனைத்தும் நம்மை வெகுவாகப் பாதித்தன. இவை அந்த நெருப்புப் பொறியைப் பற்றி, கனன்று எரிய வைத்தன. அதன் விளைவாக எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய அருட்கொடை தான் ஏகத்துவ சிந்தனை.

இது எந்தத் தனி மனிதனாலும் நமக்குக் கிடைத்ததல்ல! இறைவனாக நமக்குத் தந்த சிந்தனை!

அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை மக்களிடம் முன்வைத்தோம். அவ்வாறு முன் வைத்த மாத்திரத்திலேயே எதிர்ப்புகள் நம்மை நோக்கி ஏவுகணைகளாகப் பாய்ந்தன. இந்த ஏவுகணைகள் மக்களிடமிருந்து வரவில்லை; உலமாக்களிடமிருந்து தான் வந்தன.

இந்த ஏவுகணைகளை எதிர் கொள்வதற்கு நாம் கையில் எடுத்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த வாதம் என்ற ஆயுதம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆயுதம் ஏந்தி ஒரே ஒரு முறை தான் சிலைகளை உடைத்தார்கள். ஆனால் வாதம் என்ற ஆயுதம் ஏந்தி அறிவுப் பூர்வமாக எதிரிகளின் தலைகளை உடைத்து விட்டார்கள். இதை அல்குர்ஆனில் அவர்களைப் பற்றிக் கூறும் வசனங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஷம்சுல்ஹுதாவுடன் ஒரு சந்திப்பு

உண்மை என்று தெரிந்து அதில் உறுதியாக ஆனதும், இதற்கு ஆலிம்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர்கொள்ளும் முகமாக, நீடூர் மிஸ்பாஹுல் ஹுதாவின் முதல்வர், நீடூர் ஜாமிஆ பள்ளிவாசல் இமாம், மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களிடம் சந்திப்பதற்கான நாள், நேரம் கேட்டோம். அவர்களும் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.

ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு, பி. ஜைனுல் ஆபிதீன், எம். ஷம்சுல்லுஹா, முஹம்மது  யூசுப் மிஸ்பாஹி  ஆகிய மூவரும் சந்திக்கச் சென்றனர். ஷம்சுல்ஹுதா அவர்கள் முன்னிலையில் அவரது மாணவர்கள் சம்மணமிட்டு உட்காரக் கூடாது; மண்டியிட்டுத் தான் உட்கார வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தியிருந்தார். பி.ஜே.யைத் தவிர மற்ற இருவரும் ஷம்சுல்ஹுதா அவர்களின் மாணவராக இருந்தாலும், மண்டியிட்டு அமர்வதற்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்பதால் சம்மணமிட்டுத் தான் அமர வேண்டும் என்று கண்டிப்புடன் பி.ஜே. தெரிவித்திருந்தார்.

ஒரு நாள் இஷாவுக்குப் பிறகு ஜாமிஆ பள்ளிவாசலில் உள்ள அவரது அறையில் சந்திப்பு துவங்கியது. சந்திப்பு துவங்கும் முன், கையில் எடுத்துச் சென்ற டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொள்ளலாமா? என்று அவரிடம் பி.ஜே. அனுமதி கேட்டார். அதற்கு அவர் கூடாது  என்று ஒரேயடியாக  மறுத்து விட்டார்.

ஷம்சுல் ஹுதா அவர்களுடன் நட்த்திய உரையாடல் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கிளியனூர் மத்ரஸா ரஹ்மானிய்யாவின் முதல்வர் எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் அவர்களை பி.ஜே. மற்றும் ஷம்சுல்லுஹா ஆகியோர் சந்தித்து விவாதித்தனர். இந்த விவாதத்தின் போது மதரஸா மாணவர்கள் அனைவரும் அருகில் இருந்தனர். பி.ஜே. தொடுத்த கேள்விகளுக்கு அப்துஸ்ஸலாம் அவர்கள் பதில் அளிக்க முடியவில்லை. பல கேள்விகளுக்கு, பார்த்துச் சொல்கிறேன் என்ற பதிலைத் தான் தர முடிந்தது.

அப்துஸ்ஸலாம் அவர்களுடன் நடந்த உரையாடல் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

திருப்பந்துருத்தி முஹம்மது அலீ அவர்கள் அத்திக்கடையில் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். இவர் தான் பி.ஜே.யின் ஆசிரியர். அவரையும் அத்திக்கடையில் போய் சந்தித்து, இருவருக்கும் மத்தியில் விவாதம் நடந்தது.

அதிராம்பட்டிணம் ரஹ்மானிய்யா மதரஸாவின் முதல்வராக உள்ள முஹம்மத் குட்டி அவர்களையும் பி.ஜே. சந்தித்து, விவாதித்தார்.

வலிமார்கள் மாநாடு என்ற பெயரில் தஞ்சையில் நஞ்சைக் கக்கும் ஒரு மாநாடு! இறந்து விட்ட பெரியார்களிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று அம்மாநாட்டில் உலமாக்கள் உரத்து முழங்கினர். இதைக் கண்டித்து அன்று சங்கரன்பந்தலில் பணியாற்றிய பி.ஜே. தனது ஒரு மாதச் சம்பளத்தைச் செலவு செய்து, ஒரு நாடகம் அரங்கேறியது என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார்.

அந்தப் பிரசுரம் இதுதான்:

ஒரு நாடகம் அரங்கேறியது

இது ஆலிம்கள் வட்டாரத்தில் பெரும் புயலையும், பூகம்பத்தையும் கிளப்பியது. இதை விசாரணை செய்வதற்காக திருப்பந்துருத்தியில் ஜமாஅத்துல் உலமா கூடப் போவதாகவும், அந்த விசாரணையில் பி.ஜே. கலந்து கொள்ள வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அந்த நேரத்தில் பி.ஜே. பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஜமாஅத்துல் உலமா மாவட்டச் செயலாளர்.  ஷம்சுல்லுஹா செயற்குழு உறுப்பினர்.

இந்தக் கூட்டத்திற்கு மறைந்த பி.எஸ். அலாவுதீன், பி.ஜே., ஷம்சுல்லுஹா, ஆகியோர் சென்றிருந்தனர். மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் எஸ்.ஆர் ஷம்சுல் ஹுதா தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் விசாரணை தொடங்கியது. வாதங்கள் நடந்தன. முடிவில் மூவரையும் நீக்கப் போவதாக ஜமாஅத்துல் உலமா அறிவித்தது. தேவையில்லை உங்கள் ஜமாஅத்துல் உலமாவின் பொறுப்பு! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தூக்கி எறிந்து விட்டு வந்தனர்.

இதுவெல்லாம் தனி நபராக இருப்பினும், ஒரு கூட்டமாகக் கூடியிருக்கும் சபையாக இருப்பினும் வாதக் களங்களைச் சந்திப்பதற்கு நாம் தயங்கியதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள்.

முபாஹலாவும் முஜாதலாவும்

ஏகத்துவக் கொள்கை வேர்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்ற தலைப்பில் காயல்பட்டிணத்தில் ஓர் உரை! அந்தத் தலைப்பில் பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, முஹய்யித்தீனிடம் உதவி தேடலாம், இது தொடர்பாக என்னிடம் முபாஹலா செய்யத் தயாரா? என்று ஒரு துண்டுச்சீட்டு மேடைக்கு வருகின்றது. அதைப் பார்த்து விட்டு, "முபாஹலாவுக்குத் தயார்! ஆனால் அதற்கு முன்னால் முஜாதலா (விவாதம்) இருக்கின்றது; விவாதத்திற்குப் பிறகு தான் முபாஹலா'' என்று பி.ஜே. அறிவித்தார்.

இதன் பின்னர் விவாதத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அழைத்தவர் முபாஹலா தான் செய்ய வேண்டும் என்று சாதிக்கவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முபாஹலாவுக்குரிய தேதி குறித்ததும், book ready என்று சங்கேத வார்த்தையில் தந்தி கொடுப்போம்; ஏனெனில் வேறு யாராவது, வாருங்கள் என்று அழைத்து அசம்பாவிதத்தை ஏற்படுத்தி, அதைக் கொண்டு தவ்ஹீது அணியினருக்குத் தோல்வி என்று கூறி விடக் கூடாது என்பதற்காக இந்த சங்கேத வார்த்தை!

குழுவினர் கூறியது போல் சங்கேத வார்த்தையில் தந்தி வந்தது. பி.ஜே., தனது நான்கு நாள் கைக்குழந்தையுடனும், மூன்று வயதுடைய மூத்த மகனுடனும் மனைவியுடனும் காயல்பட்டிணத்தில் முபாஹலாவில் கலந்து கொண்டார். அன்று ஏகத்துவம் பேசிய எந்த மதனியும் ஜலீல் முஹைதீனின் இந்த முபாஹலா அறைகூவலைக் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர்,

 கோட்டாரில் ஏ.எல். பத்ருத்தீனுடன் விவாதம்

கோவையில் காதியானிகளுடன் விவாதம்

மதுரையில் கிறித்தவர்களுடன் விவாதம்

ஏர்வாடியில் பிறை தொடர்பான விவாதம்

சென்னையில் அஹ்லெ குர்ஆன் என்று சொல்லிக் கொள்ளும் 19 குரூப்புடன் விவாதம்

இலங்கையில் ஷர்புத்தீன் பாக்கவி மற்றும் உமர் அலீ ஆகியோருடன் விவாதம்

இப்படி விவாதக் களங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

அவர்கள் நல்லவர்கள்; இவர்கள் நயவஞ்சகர்கள்

இவையெல்லாம் விவாதக் களமானாலும், முபாஹலா களமானாலும் இது வரை நாம் சந்திக்கத் தயங்கியதில்லை என்பதற்கான சத்திய சாட்சியங்கள்.

நம்முடன் மோதினார்களே அவர்கள் உண்மையில் நல்லவர்கள்; நன்றிக்குரியவர்கள். காரணம், அவர்கள் நடிக்கவில்லை; கபட நாடகம் ஆடவில்லை. சொன்னது சொன்னபடி வந்தார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் விவாதத்திற்குத் தயார் என்று வீராவேசமாக அறிவித்து விட்டு களத்திற்கு வராமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத் தக்கவர் ஸைபுத்தீன் ரஷாதி. அண்மையில் இப்படி ஒரு நாடகக் கூட்டமே கிளம்பி விட்டது. தமிழகம் முழுவதும் நடத்தப்படும் நாடக மேடைகளில் நயவஞ்சகமாகப் பேசி நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் ஸைபுத்தீன் ருஷ்டிகளும், ஷேக் அப்துல்லாஹ் கோமாளிகளும் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தோம். பாக்கியாத் உலமாக்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டு நாடகத்தின் உச்சக் கட்டத்திற்கே சென்று விட்டனர். அதனால் இந்த நாடகக் குழுவின் கபட வேடத்தைக் களைவது ஏகத்துவத்தின் கடமையாகி விட்டது.  அதற்காகவே  இந்த  விளக்கக் கட்டுரை!

ஓடிப் போன திருப்பூர் உலமாசபை

தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அழைப்பை ஏற்று திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை 17.7.2003 சனிக்கிழமை அன்று விவாத ஒப்பந்தத்திற்கு வர சம்மதித்தது.

விவாத ஒப்பந்தத்திற்கு திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா நிர்ணயித்த மேற்குறிப்பிட்ட தேதியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எம்.ஐ. சுலைமான், கே.எஸ். அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி, எஸ். கலீல் ரசூல் ஆகியோர் சென்று விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொண்டனர். ஜமாஅத்துல் உலமா சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார். 27.09.2003 மற்றும் 28.09.2003 ஆகிய தேதிகளில் விவாதம் செய்ய வேண்டும் என்ற விவாத ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதை ஓய்ப்பதற்கான வழியை திருப்பூர் ஜமாஅத்துல் உலமா தேடி அலைந்து கொண்டிருந்தது. மண்டை காய்ந்து போய், மண்டபம் கிடைக்கவில்லை; மண்டபம் கிடைக்கவில்லை என்ற மழுப்பல் மொழியைப் பேசிக் கொண்டிருந்தது. இது சரி வராது என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் ரகசியமாக மண்டபத்தை வாடகைக்குப் பிடித்துக் கொண்டனர்.

இவர்கள் மழுப்பி, நழுவி விடக் கூடாது என்று கருதி, இவர்களைச் சிக்க வைக்கும் விதமாக திருப்பூர் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒரு வேலையைச் செய்தார்கள். திருப்பூரில் 27.09.2003 அன்று தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், திருப்பூர் ஜமாஅத்துல் உலமாவுக்கும் இடையே விவாதம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக என்று மண்டபத்தின் பெயரைக் குறிப்பிட்டு மக்களை வரச் சொல்லி சுவரொட்டிகள் ஒட்டினர்.

இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, மண்டபத்திற்கு பார்வையாளர்களாக இரு தரப்பிலும் 200 வீதம் 400 பேர் தான் வர வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கையில், நீங்கள் எப்படி மக்கள் அனைவரையும் அழைக்கலாம் என்று கேட்டு, இதைத் தங்கள் சறுக்கலுக்கு சரியான காரணமாக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தார்கள் இந்த உலமா சபையினர்.

"யார் வரா விட்டாலும் நான் வருவேன்'' என்று எழுதிக் கையெழுத்துப் போட்ட ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் ஓட்டம் எடுத்தார்.

அன்று ஓட்டம் எடுத்தவர்கள் தான் இந்தத் திருப்பூர் ஜமாஅத்துல் உலமா சபையினர். இன்னும் திரும்பிப் பார்க்கவில்லை.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாளில் தவ்ஹீது ஜமாஅத்தினர் மண்டபத்தில் போய் காத்திருந்தனர். யார் வரா விட்டாலும் நான் மண்டபத்திற்கு வருவேன் என்று சவடாலாகப் பேசி திருப்பூர் ஜமாஅத்துல் உலமாவிற்கு தெம்பு கொடுத்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட எ வரும் மண்டபம் இருந்த திசைக்கே வராமல் ஓடி விட்டனர்.

பொதக்குடியில் புறமுதுகு காட்டிய கோமாளிகள்

பொதக்குடியிலும் மேடையில் பேசும் போது, தவ்ஹீது ஜமாஅத்தினருடன் விவாதம் செய்யத் தயார் என்று ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி என்ற கோமாளி சவடால் அடித்துள்ளார். உடனே நமது ஜமாஅத்தினர் அவரை அங்கேயே பிடித்து, விவாதத்திற்குத் தயாரா? என்று கேட்டவுடன் நான் விவாதத்திற்குத் தயார், ஆனால் இங்கு பேச மாட்டேன், சென்னையில் தான் பேசுவேன்  என்று நழுவி  ஓடினார்.

அம்மணத்தை மறைக்க அங்கவஸ்திரம்

தவ்ஹீத் ஜமாஅத்தினர் விவாதத்திற்கு அழைத்து விட்டார்களா? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மக்கள் கேட்கும் போது, நாங்கள் தயார் என்று சொல்வது! அதன் பின் ஏதாவது சாக்குப் போக்கைச் சொல்லி தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதுபழியைப் போட்டு விட்டுத் தப்பி விடுவது!

தங்கள் அம்மணத்தை மறைப்பதற்கு, திருப்பூர் ஜமாஅத்துல் உலமா இப்படி ஒரு அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொண்டு தன்னைத் தப்பிக்கச் செய்து கொண்டது. திருப்பூர் ஜமாஅத்துல் உலமா கையில் எடுத்த ஆயுதம் வேறொன்றுமில்லை. சாட்சாத் கலீல் அஹ்மத் கீரனூரி, சாகஸ மன்னன் ஸைபுத்தீன் ரஷாதி ஆகியோரின் கை வசமிருக்கும் ஆயுதம் தான்.

கீரனூரியின் கீர்த்தனை

அன்றிலிருந்து இன்று வரை தவ்ஹீத் ஜமாஅத்தினர், இப்ராஹீம் (அலை) அவர்களின் விவாதம் எனும் அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றனர். இதைக் கண்டு அசத்தியவாதிகள் பயந்து ஓடுகின்றனர். அல்லது பேச முன்வந்து தோற்கின்றனர். இவ்விரண்டுக்கும் இடைப் பட்டவர்கள், இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்கள் பாசாங்கு செய்கின்றனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாதப் பொறியிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது; அதே சமயம் மக்களிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கொள்கை விஷயத்தைப் பேச முன்வராமல், எதற்கும் பயன்படாத ஒரு தலைப்பைச் சொல்லி விவாதிக்கத் தயாரா? என்று கேட்கின்றனர்.

பி.ஜே. அப்படிச் செய்தார்; இது பற்றி விவாதிக்கத் தயாரா? என்பது போன்ற சவால்களை விடுவது! அல்லது நாம் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக நினைத்துக் கொண்டு இது பற்றி விவாதிப்போமா?  என்று கேட்பது!

தராவீஹ் என்ற வார்த்தை ஹதீஸில் வருவதாக நாம் கூறவேயில்லை. ஆனால் கலீல் அஹ்மத் கீரனூரி, தராவீஹ் 8 ரக்அத்துக்கள் என்று ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்ட முடியுமா? இதைப் பற்றி விவாதம் செய்வோமா? என்று கேட்பார்.

உண்மையில் நாம், தராவீஹ் என்ற வார்த்தையே ஹதீஸில் இல்லை என்று தான் கூறி வருகின்றோம். இரவுத் தொழுகை என்று தான் குறிப்பிடு கிறோம். ஆனால் நாம் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி நாம் விவாதிப்போமா? என்று கேட்பார்கள்.

இதில் உள்ள நடிப்பை, நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் உண்மை என நம்பி விடுகின்றனர். மக்களின் இந்த அப்பாவித்தனத்தை முதலீடாகக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

சறுகல் மன்னன் ஸைபுத்தீன் ருஷ்டி

தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்த மாதிரியும் இருக்க வேண்டும்; விவாதமும் நடக்கக் கூடாது என்ற நயவஞ்சக நாடக நடிப்புக் கலையில் இவரை மிஞ்சிய ஆளில்லை என்று சொல்லும் அளவுக்குக் கை தேர்ந்தவர் ஸைபுத்தீன் ரஷாதி!

இவர் சிதம்பரத்தில் 3.7.2005 அன்று நடந்த கூட்டத்தில் இந்தப் பாணியைக் கையாண்டு, சவால் விடுகின்றார். கூட்டத்திற்கு வந்திருந்த தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சில சகோதரர்கள் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்ட போது, கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா சபையினர், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

கூட்டம் முடிந்ததும் நமது சகோதரர்கள் அவரைச் சந்தித்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர், பி.ஜே. ஒரு பொய்யர் என்ற தலைப்பில் நான் விவாதிக்கத் தயார் என்று கூறுகின்றார்.

இதைத் தான் நாம் குள்ள நரித்தனம் என்கிறோம். கள்ள சிந்தனை கொண்ட கபட நாடகம் என்கிறோம். காரணம் பி.ஜே. என்ற நபர் தன் பக்கம் மக்களை அழைத்தால் அவர் ஒரு பொய்யர் என்று சொல்லி அவரை விட்டும் மக்களைத் தடுக்கலாம். ஆனால் அவர் குர்ஆன், ஹதீஸின் பக்கம் அல்லவா மக்களை அழைக்கின்றார். அவ்வாறிருக்கையில், அவரது அந்தக் கொள்கை தவறு என்று வாதிக்காமல், அவரைப் பொய்யர் என்று வாதிப்பதில் என்ன பயன்?

எனவே தேவையற்ற நிபந்தனை கூறி தட்டிக் கழிக்க முயல்கின்றார் என்றே அங்கு தெளிவானது. இருப்பினும் விவாதத்தை விட்டுத் தப்பி விடக் கூடாது என்பதற்காக அதற்கும் பி.ஜே. ஒப்புக்  கொள்கிறார்.

சிதம்பரத்தில் நடந்தது என்ன?

03.07.05 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் வழக்கம் போல் ஸைபுத்தீன் ரஷாதி நரகல் நடையில் பேசத் துவங்கியதும், இது குறித்து பி.ஜே.யின் முன்னிலையில் நேரடியாக விவாதிக்கத் தயாரா? என்ற கருத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு துண்டுச் சீட்டு எழுதி மேடைக்கு அனுப்புகின்றார்கள்.

வழக்கம் போல் தயார் என்று அறிவித்து விட்டு பெங்களூர் பறந்து விட்டார் ஸைபுத்தீன் ரஷாதி.

இந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவைத் தொடர்பு கொண்டு விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா, ஸைபுத்தீன் ரஷாதி மேடையில் சொல்லும் வார்த்தைகளை எழுத்து வடிவில் தந்தது.

மார்க்கம் தொடர்பான ஆரோக்கியமான எந்தவொரு விவாதத்தையும் ஜமாஅத்துல் உலமா பேரவை வரவேற்கிறது…. என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், பி.ஜே. பொய்யர் என்று விவாதம் செய்யத் தயார் என்று அறிவித்திருந்தது.

சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமாவிற்கு பி.ஜே. அளித்த பதில் கடிதத்தில்…

ஸைபுத்தீன் ரஷாதி என்பவர் அறைகூவல் விட்டதைப் போல் பி.ஜே. மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியுள்ளாரா? என்ற தலைப்பில் விவாதம் செய்யவும், பி.ஜே. கூறியது பொய் என்று நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்கவும், மார்க்க மேடையில் பேச மாட்டேன் என்று உறுதி மொழி அளிக்கவும் பி. ஜைனுல்ஆபிதீன் ஆகிய நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால் எந்த விவாதமும் ஒரு தரப்பானதாக இருக்கக் கூடாது.

பி.ஜே. மார்க்க விஷயத்தில் பொய் சொல்கிறார் என்பது ஸைபுத்தீன் ரஷாதியின் நிலை, ஜமாஅத்துல் உலமாவின் நிலை.

மத்ஹபு நூல்களில் மார்க்க விஷயத்தில் நிறைய பொய்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும், பைத்தியக்காரத்தனமான உளறல்களும், அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்களும், முரண்பாடுகளும் உள்ளன என்பது எனது நிலை. மேலும் ஸைபுத்தீன் ரஷாதி ஒரு பொய்யர் என்பதும் எனது நிலை.

எனவே ஸைபுத்தீன் ரஷாதி கூறுவதை நான் ஏற்றுக் கொண்டது போல் நான் கூறும் தலைப்பைப் பற்றியும் விவாதிக்க அவர்கள் முன்வர வேண்டும். அந்த விவாதத்தில் மத்ஹபு நூல்கள் மீதான எனது குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் இது வரை மத்ஹபை ஆதரித்ததற்காக ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அத்துடன் மேடையிலேயே மத்ஹபு நூற்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், இனிமேல் மார்க்க மேடைகளில் உலமாக்கள் ஏறுவதில்லை என்றும் எழுதித் தர வேண்டும். ஸைபுத்தீன் பொய்யர், பித்தலாட்டக்காரர் என்பதை நான் நிரூபித்து விட்டால் அவரும் நான் எழுதித் தருவது போல் எழுதித் தர ஒப்புக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு விவாதம் என்றாலும் இரு தரப்புக்கும் சமமானதாக இருக்க வேண்டும். நீங்கள் விவாதிக்க வலியுறுத்தும் தலைப்பை எவ்வித மறுப்புமின்றி நான் ஏற்றுக் கொள்வது போல் நான் வலியுறுத்தும் தலைப்பை ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நீ அவல் கொண்டு வா! நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி, ஊதித் தின்னலாம் என்பது போல் ஒரு தரப்பாக விவாதம் இருக்கக் கூடாது. சொல்லப் போனால் நம்மை ஜமாஅத்துல் உலமா எதிர்ப்பதற்குக் காரணமே நமது மத்ஹபு எதிர்ப்பு தான். இது தான் முக்கியமான தலைப்பாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு எட்டப்பட்டு விட்டால் மற்ற விஷயங்கள் யாவும் முடிவுக்கு வந்து விடும்.

இவ்வாறு சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவுக்கு பி.ஜே. பதிலளித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஸைபுத்தீனின் பதில்

நான் விவாதத் தலைப்பில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பி.ஜே. ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்பதை ஏராளமான அத்தாட்சிகளுடன் நிரூபிக்கிறேன்.

அப்படி நிரூபிக்கப்பட்டு விட்டால் இது நாள் வரை மார்க்கப் பிரச்சாரம் செய்ததற்கு சமுதாயத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், இனிமேல் எழுத்தால், பேச்சால், இன்ன பிற எந்த வழிகளிலும் மார்க்கப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என உறுதி மொழி எழுதித் தர வேண்டும்.

இதே கண்டிஷனில் ஸைபுத்தீன் ஆகிய என்னையும் உடன்படுத்துகிறேன் என்று தெளிவு படுத்தி உள்ளேன்.

சுருக்கமாகச் சொன்னால் மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. இன்னும் ஸைபுத்தீன் ஆகிய இருவரில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டங்கள், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்தப்பட வேண்டும் என்பது சமநிலை விவாதம் தானே?

பி.ஜே. யைப் பற்றி மட்டும் தான் விவாதிப்பேன், என்னைப் பற்றி விவாதிப்பதற்கு உடன்பட மாட்டேன் என்று நான் கூறியிருந்தால் அதைச் சமநிலை இல்லாத ஒரு தரப்பான விவாதம் என்று கூறலாம். நான் அவ்வாறு கூறவில்லையே. இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடுடைய ஃபிக்ஹ் சட்டங்களைப் பற்றி விவாதிப்பது அடுத்தக்கட்ட முயற்சி தான். அதுவும் செய்யப்பட வேண்டும். அதையும் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாகச் செய்வோம்.

இவ்வாறு ஸைபுத்தீன் தனது பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

பி.ஜே.யின் பதில்

மத்ஹபைப் பற்றிய நமது குற்றச்சாட்டுக்களை முதலில் விவாதிக்க வேண்டும் என்பது தான் நமது நிலை. எனினும் ஏதேனும் காரணம் சொல்லி விவாதத்திற்கு வராமல் நழுவிவிடும் அவர்களை விவாதத்திற்கு எப்படியும் அழைத்து வர வேண்டும் என்பதால் அவர்களுடைய நிபந்தனையை  ஏற்கிறோம்.

மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. இன்னும் ஸைபுத்தீன் ஆகிய இருவரில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டங்கள், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பது சமநிலை விவாதம் தானே? என்று ஸைபுத்தீன் கேட்டிருக்கிறார்.

மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. ஒரு புறம் – ஸைபுத்தீன், ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மார்க்கம் கூறும் விஷயத்தில் பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித் தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்த வேண்டும் என்பது தான் உண்மையிலேயே சமநிலை விவாதமாகும்.

எனவே அவர்களுடைய வார்த்தைப் படி, மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே. ஒரு புறம், ஸைபுத்தீன், ஜமாஅத்துல்உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மார்க்கம் கூறும் விஷயத்தில்

பொய் பித்தலாட்டம், ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்?

குர்ஆன், ஹதீஸில் இல்லாததை இஸ்லாம் என்ற பெயரில் பொய்யாகச் சொல்பவர்கள் யார்?

குர்ஆன் ஹதீஸிற்கு முரணான கருத்தைக் கூறி அல்லாஹ்வுடனும் அவனுடைய  தூதருடனும்  மோதுபவர்கள் யார்?

குர்ஆன், ஹதீஸ்களின் கருத்துக்களை தனது இச்சைக்கேற்ப வளைத்தவர்கள் யார்?

ஹதீஸ்களில் இல்லாத வார்த்தையை வேண்டுமென்றே இணைத்துக் காட்டி தப்பர்த்தம் செய்தவர்கள் யார்?

ஹதீஸின் முக்கியப் பகுதியை மனமறிந்து நீக்கி தவறான கருத்தை வெளிப்படுத்தியவர்கள் யார்?

இமாம்கள் என்று ஜமாஅத்துல் உலமாவால் கருதப்படுபவர்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்றியவர்கள் யார்?

ஃபிக்ஹ் நூல்களில் சொல்லப்படாத கருத்துக்களை, இருப்பதாக பொய்யான பக்க,  பாக  விபரங்களை  ஜோடித்துக் கூறியவர்கள் யார்?

ஆலிம்களையும் மக்களையும் ஏமாற்றுவதற்காகவே நூல்கள் பதிப்பகம், பதிப்பகத் தேதி போன்ற பொய் அட்டவணையைத் தொகுத்துக் காட்டியவர்கள் யார்?

இது போன்ற மோசடிகள், பித்தலாட்டங்கள், பித்துக்குளித் தனங்கள் செய்த  கள்ளப்  பேர்வழிகள்,  கயவர்கள்  யார்?

என்ற தலைப்பிலேயே விவாதம் செய்வதற்கு நாம் தயார்.

இவ்வாறு தனது கடிதத்தில் பி.ஜே. குறிப்பிட்டிருந்தார்.

ஸைபுத்தீன் எழுதிய பதில்கடிதம்

விவாதத் தலைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளபி.ஜே.,

ஒரு புறம் பி.ஜே. மற்றொரு புறம் ஸைபுத்தீன் இன்னும் ஜமாஅத்துல் உலமா அவர்களின் அனைத்து அறிஞர்கள் என்ற நிலையில் தான் விவாதம் நடைபெற வேண்டும் என்று எழுதியுள்ளார்.

ஆனால் அவர், ஸைபுத்தீன் மற்றும் ஜமாஅத்துல் உலமா இன்னும் அறிஞர்கள் அனைவரின் மீதும் குற்றச்சாட்டு கூறுவாராம். அவ்வனைவர்கள் சார்பாகவும் நான் பதில் கூற வேண்டுமாம்.

இது தான் சம நிலை விவாதமாம்.

இதை சமநிலை என்று அறிவுள்ள யாரும் கூற மாட்டார்கள்.

நான் பி.ஜே. மீது பொய், பி த்தலாட்டம், அவதூறு, போக்கிரித்தனம் போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறேன். அதை நிரூபிக்கிறேன் என்று அழைக்கிறேன். அவர் விவாத அரங்கில் மக்கள் முன்னிலையில்  மறுக்கட்டும். அல்லது மாட்டிக் கொண்டு முழிக்கட்டும்.

அதே போன்று என் மீது மேற்படி குற்றச்சாட்டுகளைக் கூறி நிரூபிக்கட்டும். நான் மறுக்கிறேன். அல்லது அதற்குரிய தண்டனையை ஏற்கிறேன்.

இது தான் எல்லோரும் ஏற்கும் படியான அறிவுப்பூர்வமான சமநிலை விவாதமாகும்.

இது ஸைபுத்தீனின் பதில் கடிதம்.

பி.ஜே.யின் பதில்

நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவாதிக்க நீங்கள் மறுப்பதால் விவாதத்திற்கு முன்பே தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அல்லாஹ் வெற்றியைத் தந்து விட்டான். அல்ஹம்து லில்லாஹ்.

மார்க்க விஷயத்தில் பி.ஜே. பொய் சொல்லியிருக்கிறார் என்ற தலைப்பை மட்டும் தான்  விவாதிப்போம்  என்று நீங்கள் கூறினீர்கள்.

எங்களைப் பொருத்த வரை இது தேவையற்ற தலைப்பு என்ற போதும் உங்களை விடக் கூடாது என்பதற்காக அத்தலைப்பு முழுமையானதாகவும் சம நிலையிலும் இருக்க வேண்டும் என்ற  அடிப்படையில் அதை ஏற்றுக் கொண்டோம்.

சமநிலை என்பது விவாதிக்கும் மனிதர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. நிலைபாட்டில் சமநிலை என்பது தான் சரியானதாகும்.

பி.ஜே. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து மார்க்கத்தைக் கூறுகிறார். தவ்ஹீத் உலமாக்களும் அவ்வாறே கூறுகின்றார்கள்.

ஆனால் ஸைபுத்தீன் ரஷாதி அவ்வாறு கூறுவதில்லை. மற்றவர்கள் செய்த முடிவைச் சொல்பவராகத் தான் இருக்கிறார்.

எனவே சமநிலை என்பது, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை ஆய்வு செய்திருப்பதாக ஸைபுத்தீன் ரஷாதி நம்புகின்ற மத்ஹபு முன்னோடிகள் மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியிருக்கின்றார்களா?

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை ஆய்வு செய்து கூறும் ஜைனுல் ஆபிதீன் மார்க்க விஷயத்தில் பொய் சொல்லியிருக்கின்றாரா?

என்பது தான் சம நிலையாகும்.

மத்ஹபு முன்னோடிகள் உயிருடன் இல்லாததால் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஸைபுத்தீன் ரஷாதி, மத்ஹபு முன்னோடிகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்.

இந்த சமநிலையைத் தான் நாம் குறிப்பிட்டோம்.

மத்ஹபைப் பின்பற்றக் கூடாது, குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை அறிந்து தான் ஒருவர் மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிறர் ஆய்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்வது தவறு என்று ஜைனுல் ஆபிதீன் கூறுகின்றார்.

மத்ஹபைப் பின்பற்ற வேண்டும். மத்ஹபு முன்னோடிகளின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று ஸைபுத்தீன் ரஷாதி கூறுகின்றார்.

எனவே நிலைபாட்டைப் பொருத்த வரை ஸைபுத்தீனும், ஜைனுல் ஆபிதீனும் சமநிலையில் இல்லை. மத்ஹபைப் பின்பற்றக் கூடாது என்றும் பிறர் ஆய்வுகளை அப்படியே ஏற்பது தவறு என்றும் ஸைபுத்தீன் ரஷாதி பகிரங்கமாக அறிவித்தால் அப்போது தான் ஜைனுல் ஆபிதீனும், ஸைபுத்தீனும் நிலைபாட்டில் சம நிலையில் உள்ளார்கள் என்று கூற முடியும்.

ஆய்வு செய்பவர்கள் என்ற அடிப்படையில் மத்ஹபு முன்னோடிகளும் அவர்களின் தவறுகளை நியாயப்படுத்தும் ஸைபுத்தீனும் ஒரு அணி என்பதும்,

ஜைனுல் ஆபிதீன் ஒரு அணி என்பதும் தான் சம நிலையாகும்.

மத்ஹபைப் பின்பற்ற வேண்டும், மத்ஹபு முன்னோடிகளின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று ஸைபுத்தீன் கூறுவது போல்,

பி.ஜே.யைப் பின்பற்ற வேண்டும், பி.ஜே.யின் ஆய்வுகளை அப்படியே ஏற்க வேண்டும் என்று யாராவது கூறினால் அவரும் ஸைபுத்தீனும் சம நிலையில் உள்வர்களாக ஆவார்கள்.

எனவே மார்க்கத்தைக் கூறுபவர்களின் நம்பகத் தன்மை என்பதில் சமநிலை இருக்க வேண்டும்.

மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

மார்க்கத்தைச் சொல்பவர்களின் நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டியது முதலில் அவசியம் என்ற ஸைபுத்தீன் ரஷாதியின் லைப்பை நாம் ஏற்றுக் கொண்டோம். அது சமநிலையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் நாம் வற்புறுத்துகிறோம்.

விவாதத்துக்கான நேரத்தையும் இடத்தையும் நீங்களே முடிவுசெய்து அறிவியுங்கள் என்று நாம் முந்தைய கடிதங்களில் எழுதியிருந்தோம். இது குறித்து நீங்கள் (சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா) 23.08.2005 அன்று எழுதிய கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டீர்கள்.

இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எப்பொழுது வைத்துக் கொள்வது என்பது தெரிவியுங்கள். இத்துடன் எழுத்து மூலம் தொடர்பு கொள்வதை விட்டு நேரடி விவாதத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

மேலும் ஸைபுத்தீன் ரஷாதி தனது 19.08.2005 அன்று எழுதிய கடிதத்தின் இறுதியில் பின் வருமாறு  குறிப்பிட்டுள்ளார்.

விவாத அமைப்பு பற்றிய விசயங்களைக் கலந்து பேசி முடிவெடுக்க எப்பொழுது அழைத்தாலும் நான் வரத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் பொறுப்பை எங்களிடமே விட்டு விட்டீர்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

எனவே விவாதம் செய்வது குறித்து ஒப்பந்தம் செய்வதற்காக 27.09.2005 செவ்வாய்க்கிழமை பகல் 2.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்.

இவ்வாறு பி.ஜே. தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜே.யும் ஸைபுத்தீனும் எப்படிப்பட்டவர்கள் என்று விவாதம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?

இரண்டு அணியினரின் கொள்கை குறித்து விவாதிப்பது தான் சமநிலை என்ற சரியான விளக்கம் கொடுத்து நாம் கடிதம் எழுதிய பிறகு ஸைபுத்தீனிடமிருந்து சத்தமில்லை.

சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா சபையிடமிருந்து சுத்தமாக பதில் இல்லை.

நாம் சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவிற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது போல் 27.09.2005 அன்று நமது ஜமாஅத் சார்பாக ஐவர் குழு சிதம்பரத்திற்குச் சென்றது.

சரியாக மதியம் 12.30 மணி முதல் மாலை 6.45 வரை கடிதத்தில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தும் அவர்கள் தரப்பில் விவாத ஒப்பந்தத்திற்கு யாரும் வரவில்லை. மேலும் எந்தத் தகவலும்  தரவில்லை.

விவாத ஒப்பந்தத்திற்குக் கூட வரத் திராணி இல்லாதவர்களா விவாதம் செய்ய வரப் போகின்றார்கள்? தலை சிறந்த பலமார்க்க அறிஞர்களை(?) வைத்திருக்கும் ஜமாஅத்துல் உலமாவிற்கு சவாலைச் சந்திக்கத் திராணியில்லாமல் போனது ஏனோ?

இதைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே  பொய்  அழிந்து  விடுகிறது.

(அல்குர்ஆன் 21:18)

நாம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்கள் வரமாட்டார்களா? என்று விவாத ஒப்பந்தத்திற்காகக் காத்துக் கிடந்தோம். அப்போது வராத ஸைபுத்தீனும், ஜமாஅத்துல் உலமாவும் சென்னையில் மீண்டும் சவால் விடத் துவங்கினர்.

தவ்ஹீது ஜமாஅத்துக்குப் பகிரங்க சவால் என்ற தலைப்பில் சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் பி.ஜே.க்கு பகிரங்க சவால் என்ற தலைப்பில் சென்னையிலுள்ள சு.ஜ. பள்ளிகளில் துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப் பட்டன. அதில் 1.10.2005 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை மண்ணடி, மூர்தெருவில் ஸைபுத்தீன் ரஷாதி உரையாற்றப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுக் கூட்டம் என்றோ, மார்க்க சொற்பொழிவு என்றோ தலைப்பில் போஸ்டர் ஒட்டியிருந்தால் அதை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.

ஆனால் பகிரங்க சவால் என்றால் அதை நாம் சந்தித்தே தீரவேண்டும், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்ற அடிப்படையில் 1.10.2005 மாலை 6 மணிக்கு மண்ணடி மூர்தெருக்கு பி.ஜே. உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் சென்று காத்திருந்தனர். ஆனால் அங்கு ஸைபுத்தீன் ரஷாதியோ, ஜமாஅத்துல் உலமாவோ யாரும் வரவில்லை. மீட்டிங் கேன்சல் என்று அங்கு அறிவிக்கப்பட்டது.

மத்ஹபு விவாதத்திற்கு பயந்து நடுங்கும் பாக்கியாத்

பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு

8.5.2005 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின் மகத்தான அருளால் குறிப்பிட்ட தேதியில் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் திரண்டு வந்து சத்திய மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசும் போது, "மார்க்க அறிஞர்களைத் தயார் செய்து தமிழகத்துக்கே வழங்கும் சிறப்பு பெற்றது வேலூர். மிகச் சிறந்த உலமாக்கள் இவ்வூரில் நிறைந்துள்ளனர். இத்தகைய உலமாக்கள் நிறைந்த இவ்வூரில் நான் அறைகூவல் விடுகின்றேன். மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு விரோதமானவை. மத்ஹபு நூற்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான சட்டங்களும் உளறல்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பட்டியலிடுகின்றேன்'' என்று குறிப்பிட்டார். மேலும் மத்ஹபு நூற்களில் உள்ள அபத்தங்களில் சிலவற்றையும் அரபு மூலத்துடன் பாகம், பக்கத்துடன் வாசித்துக் காட்டி, இதைச் சரியென நிரூபிக்க இயலுமா? என்று சவால் விட்டார்.

நான் கூறியது தவறு என்றால் பாக்கியாத் உலமாக்களோ, வேறு எந்த உலமாக்களோ பகிரங்கமான விவாதத்துக்கு முன் வரட்டும் என்றும் அறைகூவல் விட்டார்.

விவாதத்திற்கான பி.ஜே.யின் இந்த அழைப்பை ஏற்று, தாங்கள் போற்றி மதிக்கும் மத்ஹபுகளைச் சரி என்று நிரூபிக்க வேண்டியது உலமாக்களின் கடமையாகும். ஆனால் அவர்களோ, "பி.ஜே. பொய் சொல்கின்றார். அவரை நம்பாதீர்கள். பலமுறை விவாதத்திற்கு அழைத்தும் அவர் வர மறுக்கின்றார்'' என்று உள்ளூர் பிரமுகர்களைத் தேடிச் சென்று சமாதானப்படுத்த முயன்றனர்.

அவ்வாறு அவர்கள் சந்தித்த பிரமுகர்களில் முனவ்வர் என்ற சகோதரரும் ஒருவர். அவர் உண்மையை அறிய விரும்பி, பி.ஜே.யைத் தொடர்பு கொண்டு விபரம் கேட்டார். உடனே முனவ்வர் அவர்களுக்கு பி.ஜே. ஒரு கடிதம் எழுதுகின்றார்.

அந்தக் கடிதத்தில்…

பாக்கியாத் உலமாக்கள் என்னை விவாதத்திற்குப் பல முறை அழைத்ததாகவும், நான் அதை ஏற்காமல் பின்வாங்கி விட்டதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். அது உண்மையா? என்று கேட்டீர்கள்.

பாக்கியாத் உலமாக்களோ, ஜமாஅத்துல் உலமா சபையினரோ, தப்லீக் ஜமாஅத்தினரோ என்னை விவாதத்திற்கு ஒரு காலத்திலும் அழைத்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தர்கா வழிபாடு, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் மற்றும் நபி வழியின் அடிப்படையில் விவாதம் நடத்த நான் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாக்கியத் உலமாக்களிடம் இந்தக் கடிதத்தின் நகலைக் காட்டி அவர்கள் விவாதத்திற்குத் தயாரா? என்று கேட்டு எனக்குத் தகவல் தரவும்….

என்று பி.ஜே. குறிப்பிட்டிருந்தார்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், உலமா சபையினருக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளில் முதன்மையாக உள்ளது மத்ஹபு தான். வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பி.ஜே. பேசும் போதும், மத்ஹபுகள் குறித்து பேசிய கருத்துக்கள் தான் உலமாக்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது.

விவாதத்திற்கு ஒப்புக் கொண்டு நாம் கடிதம் கொடுத்தும் பாக்கியாத் அதைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. ஆனால் பொது மக்கள் விடுவதாக இல்லை. வேலூர் மக்களின் நச்சரிப்பு தாங்காமல் இரண்டு மாதங்கள் கழித்து 12.07.05 அன்று பாக்கியாத் அரபிக் கல்லூரியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் ஹய்அத்தின் சார்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது. பி.ஜே. விவாதத்திற்கு வந்தால் பாக்கியாத் சார்பாக மவ்லானா மஹ்மூதுல் ஹஸன், மவ்லானா இக்பால் காசிமி ஆகிய இருவருடன் ஹய்அத் விரும்பும் ஆலிம்களைச் சேர்த்துக் கொள்வது. இது சம்பந்தமாக ஹாஜி முனவ்வர் பாஷாவுடன் பேசி இதற்கான ஏற்பாடுகளைச் செய்வது.

என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

பொது மேடையில் பி.ஜே. விவாதத்திற்கு சவால் விட்டிருந்தும், அதை 10.05.05 அன்று எழுதிய கடிதத்தில் பி.ஜே. உறுதி செய்திருந்தும், "பி.ஜே. வந்தால் நாம் விவாதம் செய்வது'' என்று பாக்கியாத்  வேண்டா வெறுப்பாக முடிவு செய்தது.

பொதுக் கூட்டத்தில் பி.ஜே. கூறிய மத்ஹபுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல்

அஹ்லு சுன்னத்தும் தக்லீதும்

குர்ஆன் ஹதீஸ் இருந்த போதும் இஜ்மா கியாஸ் அவசியம் என்ன?

கொள்கைக் குழப்பங்களும் தெளிவுகளும்

என்ற தலைப்புகளில் கே.ஏ. நிஜாமுத்தீன், முஹம்மத் இக்பால் காசிமி, கலீல் அஹ்மத் கீரனூரி ஆகியோரைக் கொண்டு மத்ஹபுகளை நியாயப்படுத்திப் பேசுவதற்கும் அதே கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இது சான்றல்லவா!

இதைத் தொடர்ந்து வேலூர் ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆகியோரின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் 12.07.05 அன்று அனுப்பப்பட்டது.

உருது மொழியில் அனுப்பப்பட்ட அந்த அழைப்பிதழில்…

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நம்முடைய ஊர் வேலூரில் அஹ்லெ சுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படையான கொள்கைகளையும் ஃபிக்ஹ் மஸாயில்களையும் எடுத்துக் கொண்டு சில தவறான ஜமாஅத்தார்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரில் இளைஞர்களை மூளைச் சலவை செய்ய அதிக முயற்சி செய்து வருகின்றனர்.

சங்கை மிகு ஸஹாபாக்களையும், மேன்மை மிக்க உலமாக்களையும் பிரபலமான பிக்ஹ் நூல்களையும் உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவது அவர்களுடைய பிரியத்திற்குரிய வேலையாக உள்ளது. பல இடங்களில் இவர்களது பிரச்சாரத்தின் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்….

என்று குறிப்பிட்டு அது தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது.

பிக்ஹ் மஸாயில்களை எடுத்துக் கொண்டு குழப்பம் செய்கிறார்கள்; பிரபலமான பிக்ஹ் நூல்களைப் பற்றி உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவதன் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றெல்லாம் நம்மைப் பற்றிக் குறிப்பிட்டு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தது ஏன்?

நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனையே மத்ஹபு தான் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

12.07.05 அன்று பாக்கியாத் ஆலோசனைக் கூட்டம்

16.07.05 அன்று ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆலோசனைக் கூட்டம்

21.07.05 அன்று ஹய்அத்து ஷரீஆ மற்றும் விஷேச அழைப்பாளர்கள் கூட்டம்

31.07.05 அன்று மத்ஹபு விளக்கக் கூட்டம் என்று அடுத்தடுத்துப் போடப்பட்ட கூட்டங்களும் அவற்றுக்கிடையே முக்கியஸ்தர்களைத் தனித்தனியே சந்தித்து மத்ஹபை நியாயப்படுத்தி விளக்கங்கள் அளித்ததும் எதற்காக?

நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகளாக உள்ளன.

ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் மத்ஹபுகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பதாலும் மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத் தனமான சட்டங்கள் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதாலும் பாக்கியாத் அந்தர் பல்டி அடிக்க முயற்சி செய்தது.

01.08.05 அன்று மத்ஹபைப் பற்றி விவாதிக்க மறுத்தும், வேறு ஒரு தலைப்பில் மட்டும் தான் விவாதம் செய்வோம் என்று கூறியும் முனவ்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்அனுப்பினார்கள்.

அந்தக் கடிதத்தில்….

"தர்கா வழிபாடு, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் விவாதம் நடத்த பி.ஜே. தயாராக உள்ளதாக''

தங்களுக்கு வந்த கடிதத்தை அனுப்பியிருந்தீர்கள். ஆனால் எங்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள அடிப்படைப் பிரச்சனையான பின்வரும் தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நிலையாகும்.

எனவே ஷரீஅத் பேரவை தலைமையில் பாக்கியாத் உலமாக்களும் இவ்விஷயத்தில் விவாதம் செய்யத் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவாதத் தலைப்பு: ஷரீஅத்துடைய அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன், ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா?

என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

நமக்கும் பாக்கியாத்திற்கும் இடையே ஒரேயொரு விஷயத்தைத் தவிர வேறு எதிலும் பிரச்சனை இல்லை என்பதைப் போல் எழுதியுள்ளனர்.

தர்ஹா, கத்தம் பாத்திஹா, தரீக்கா போன்ற விஷயங்களில் அவர்களுக்கு உள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகள். அந்தத் தலைப்புகளில் அவர்கள் விவாதிக்க ஒப்புக் கொண்டாலே பாக்கியாத் பல கூறுகளாகப் பிரிந்து விடும். ஷரீஅத் பேரவையும் பல துண்டுகளாகி விடும். ஜமாஅத்துல் உலமா சிதைந்து சின்னாபின்னமாகி விடும்.

எனவே மேற்கண்ட தலைப்புகளில் விவாதம் செய்வதால் உலமாக்களுக்கு இடையே பிளவுகள் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுவதில் நியாயம் இருக்கின்றது.

ஆனால் மத்ஹபைப் பற்றி அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ஜமாஅத்துல் உலமாவில் அங்கம் வகிக்கும் அனைத்து உலமாக்களும் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பதில் ஒருமித்தக் கருத்தில் தான் உள்ளனர். நாம் மட்டும் தான் மத்ஹபுகளைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

எனவே பாக்கியாத் குறிப்பிட்டுள்ள தலைப்பை விட, மத்ஹபைப் பற்றி விவாதிக்கத் தான் அவர்கள்  முன் வந்திருக்க வேண்டும்.

குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள இயலும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் இதை விட முக்கியமான பிரச்சனையான மத்ஹபைப் பற்றியும் விவாதம் நடத்த அவர்கள் ஒப்புக் கொள்வது தான் முறையாகும்.

குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் ஒரு வேளை நிரூபித்து விட்டாலும் அதனால் மத்ஹபு நூல்களில் உள்ள உளறல்கள் அனைத்தும் சரி என்று ஆகி விடாது. மத்ஹபு நூல்களில் எழுதப்பட்டது சரியா? தவறா? என்று தனி விவாதம் நடத்தித்  தான்  அதை முடிவு செய்ய வேண்டும்.

எனவே நழுவுவதற்கான தந்திரங்களைக் கையாள்வதை விட்டு விட்டு பாக்கியாத் உலமாக்கள் கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அவற்றுள் முதன்மையான மத்ஹபு பற்றியும் விவாதிக்க முன் வர வேண்டும்.

பாக்கியாத்தின் திருப்திக்காக அவர்கள் கூறும் தலைப்பில் விவாதம் செய்ய நாம் தயார். அதே சமயம் மற்றொரு தலைப்பாக மத்ஹபும் விவாதிக்கப்பட வேண்டும்.

இதை ஒப்புக் கொள்வதே நியாயமானது என்று தெரிவிக்கிறோம்.

பாக்கியாத் உலமாக்கள் குறிப்பிட்டது போல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விவாதிக்கும் குழுவில் பி.ஜே.யும் இன்ஷா அல்லாஹ் இடம் பெறுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு நாம் பாக்கியாத்திற்குப் பதில் கடிதம் அனுப்பியிருந்தோம்.

நாம் அனுப்பிய இக்கடிதத்திற்குப் பதிலாக பாக்கியாத் சார்பில் 21.08.05 அன்று வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.

அதில், மத்ஹபைப் பற்றி நாம் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே அவர்கள் பதில் சொல்லி விட்டதாகவும், தற்போது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்பதை அந்தப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இவர்களது இந்த அறிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இறுதியாகக் கொடுத்த பதில் இதோ:

நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?

ஹைஅத்துஷ் ஷரீஅத்தின் வெள்ளை அறிக்கையும் விவாத ஒப்பந்தமும் என்ற தலைப்பில் 21.08.05 அன்று பாக்கியாத் மத்ரஸா மூலம் வெளியிடப்பட்ட பிரசுரம் கிடைக்கப் பெற்றோம்.

ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்று நீங்கள் மிகவும் பிடிவாதமாக உள்ளீர்கள்.

நீங்கள் கூறிய தலைப்பிலும் விவாதிக்கத் தயார். ஆனால் அந்தத் தலைப்பு முழுமையாக இல்லை என்று நாங்கள் காரண, காரியங்களோடு விளக்கியிருந்தோம்.

ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளை குர்ஆன் ஹதீஸில் இருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? அல்லது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் மத்ஹபு நூல்களிலுருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்று தலைப்பின் வாசகத்தை திருத்தம் செய்யக் கோரினோம்.

அதற்கு பதிலளிக்கும் வண்ணம்,

வாதத் தலைப்பு :

"ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற மார்க்க அடிப்படையை நிர்ணயிக்கிற, இன்று இவர்கள் முன்வைக்கிற மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பை நாம் விவாதத்துக்குக் கொடுத்துள்ளோம். ஏனெனில் தனித்தனியே ஒவ்வொன்றையும் விவாதிப்பதென்பது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாக ஆகாது. நாம் கொடுத்துள்ள இந்தத் தலைப்பு எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒட்டு மொத்தமாகத் தீர்வு கிடைத்து விடுகிற ஓர் உயர்ந்த தலைப்பு. அவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கும் மத்ஹபு பற்றிய விவாதத்துக்கும் இறுதி முடிவு கிடைத்து விடும்''

என்று நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.

நீங்கள் கொடுத்துள்ள விளக்கத்தை உள்ளடக்கிய மேற்கண்ட தலைப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பு என்று நீங்கள் விளக்கம் தருகின்ற,

ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற அந்த தலைப்பிலேயே உங்களுடன் விவாதம் செய்ய நாங்கள் தயார்.

எவருடனும் விவாதம் செய்ய நாம் தயார் என்ற போதும் 8.05.2005 ல் நாம் பாக்கியாத்திற்குத் தான் நேரடி அறைகூவல் விடுத்தோம். ஹைஅத்துஷ் ஷரீஅத் எங்களின் சவாலை ஏற்று பதிலளித்தது. நாங்களும் அதனை ஏற்றுக் கொண்டோம்.

எனவே இந்த விவாதம் பாக்கியாத் மற்றும் ஹைஅத்துஷ் ஷரீஅத் என்ற இரு அமைப்புகள் அடங்கிய ஒரு அணிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற மற்றொரு அணிக்கும் இடையில் நடக்கும் விவாதமாகும்.

எங்களது முந்தயை அறிக்கையில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்ற தேதியை அறிவிக்கும்படி உங்களைக் கேட்டிருந்தோம்.

அதற்கு நீங்கள் அளித்த பதிலில்

"நாங்கள் மேற்குறிப்பிட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரத்தக்க அத்தலைப்பில் எப்போதும், எங்கும் ஒளிவு மறைவின்றி விவாதிக்கவும், அதற்குரிய ஒப்பந்தங்கள் செய்து  கொள்ளவும்  தயாராக இருக்கிறோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறோம்''

என்று தெரிவித்துள்ளீர்கள்.

எப்போதும் தயார் என்று எழுதி ஒப்பந்தத் தேதியை அறிவிக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டதற்கு மிக்க நன்றி.

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விவாத ஒப்பந்தம் செய்வதற்காக 01.10.2005 திங்கட்கிழமை பகல் 12.00 மணிக்குக் கீழ்க்காணும் முகவரியில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்.  (இன்ஷாஅல்லாஹ்)

tntj

மஸ்ஜிதே நூர் காம்பவுன்ட்

5, அப்துல் கலாம் நகர்,

ரஹ்மத் பாலா, வேலூர். 1

நேரடியாக 01.10.2005 அன்று சந்திப்பதைத் தவிர வேறு எதனையும் உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் இனியும் இழுத்தடிக்கும் கடிதங்களை எழுதினால் அவற்றை நாங்கள் அலட்சியப்படுத்தி விடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவாத ஒப்பந்தத்தில் பேசி இறுதி செய்வதற்காக எங்கள் தரப்பில் ஐந்து பேர் வருகிறோம். தாங்களும் ஐந்து பேருக்கு மிகாமல் வரவும்.

எங்கள் தரப்பில் வீடியோ பதிவு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து கொள்கிறோம். உங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நாம் பதில் எழுதியிருந்தோம். இதற்கு அவர்கள் இன்று வரை எந்தப்  பதிலும் அனுப்பவில்லை.

நேரில் சென்றும் வரவில்லை

இறுதியாக நாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல் 01.10.05 அன்று ஐந்து பேர் அடங்கிய குழு வேலூருக்குச் சென்றது. சரியாக காலை 11.45 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காத்திருந்தும் பாக்கியாத் தரப்பிலிருந்து யாரும் விவாத ஒப்பந்தத்திற்கு வரவில்லை.

வெகு நேரமாகியும் யாரும் வராததைக் கண்ட நமது குழுவினர் பாக்கியாத் மதரஸாவிற்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். தொலைபேசியை பாக்கியாத் மதரஸாவின் வாட்ச்மேன் எடுத்தார். "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விவாத ஒப்பந்தத்திற்குக் கடிதத்தில் குறிப்பிட்டபடி நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் வரவில்லையா? உங்கள் முதல்வரைக் கூப்பிடுங்கள்''  என்று நமது குழுவினர் கூறினர். அங்கிருந்த பாக்கியாத் முதல்வரிடம் இது குறித்து வாட்ச்மேன் கேட்டு விட்டு, "முதல்வர் வர மறுத்து விட்டார்' என்று கூறி போனை வைக்கச் சொல்லி விட்டார்'' என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

பல அறிஞர்களை தமிழ்நாட்டிற்கு சப்ளை செய்யும் தமிழகத்தின் தாய்க் கல்லூரி என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் வேலூர் பாக்கியாத்தில் உள்ள ஒருவருக்குக் கூட விவாத ஒப்பந்தத்திற்கு வருவதற்குத் துணிவில்லாமல் போய் விட்டது தான் வேதனைக்குரிய விஷயம்.

மத்ஹபுகள் தான் இஸ்லாத்தின் வழிகாட்டி என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் விவாதத்திற்கு அழைத்ததை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதி அவர்கள் வந்திருக்க வேண்டும்.

நமது தரப்பில் எவ்வளவோ இறங்கிச் சென்றும் , அவர்கள் சொல்லும் நிபந்தனைகள் அத்தனைக்கும் சம்மதித்தும், அவர்கள் சொல்லிய தலைப்பிலேயே விவாதிக்க ஒப்புக்கொண்ட பிறகும் விவாதம் செய்ய அவர்கள் வர மறுக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத்தனமான உளறல்களுக்கும் , ஆபாசக்களஞ்சியத்திற்கும் அவர்களால் ஒரு போதும் பதில் சொல்ல முடியாது என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை.

மத்ஹபுகள் தான் மார்க்கத்தின் வழிகாட்டி என்று இவர்கள் பிரச்சாரம் செய்வது மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் என்பதையும், மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு முரணானவை என்று தெரிந்து கொண்டே தான் இந்த ஆலிம்கள் மார்க்கத்தை மறைக்கின்றார்கள் என்பதையும் பாக்கியாத் உலமாக்களின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்தி விட்டன.

உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எப்படியேனும் விவாதத்தை நடத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்த பிரமுகர்களும், பொதுமக்களும் பாக்கியாத் உலமாக்களிடம் உண்மையில்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள், அல்ஹம்து லில்லாஹ்.

"மத்ஹபுகள் மார்க்க ஆதாரங்கள் அல்ல; குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்கள்'' என்ற சத்தியக் கருத்துக்கு அல்லாஹ் அளித்த மகத்தான வெற்றி இது என்றால் மிகையல்ல.

1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும், வீரியத்தையும் பார்க்க முடிந்தது. அங்கு தான் ஆலிம்களின் வெறித்தனத்தையும் காண முடிந்தது. காரணம் தமிழகத்திலேயே அதிகமான அரபி மதரஸாக்கள் தஞ்சையில் தான் நிறுவப்பட்டிருந்தன.

சோழ நாடு சோறுடைத்து என்ற தஞ்சையின் மண் வளத்தைப் போலவே அங்கு வாழும் முஸ்லிம்களின் மன வளமும் அமைந்திருந்தது. அத்துடன் அந்த மக்களின் சிங்கப்பூர், மலேஷிய பயணங்கள் அவர்களது செல்வச் செழிப்பை மேலும் வளமாக்கின.

அந்த வளத்திற்குத் தக்க, தான தர்மங்கள், விருந்தோம்பல்கள் இன்று வரை அந்த மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் அடையாளச் சின்னங்கள் தான் இந்த அரபி மதரஸாக்கள்.

நீடூர், கிளியனூர், அரங்கக்குடி, அத்திக்கடை, அதிராம்பட்டிணம், கூத்தாநல்லூர் ,பொதக்குடி, சங்கரன்பந்தல் போன்ற பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஊர்களில் அரபி மதரஸாக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆலிம்களின் சங்கமமாக தஞ்சை அமைந்து விட்டது.

இதனால் அங்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பலைகள் மிக வேகமாகக் கிளம்பின. இந்த மதரஸாக்களில் முக்கியமானதாக விளங்கியது நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா என்ற மதரஸாவாகும்.

எஸ். ஆர். ஷம்சுல் ஹுதா என்பவர் இந்த மதரஸாவின் அன்றைய முதல்வராக இருந்தார். அத்துடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் இருந்தார்.

இம்மாதிரியான பொறுப்பில் உள்ளவர்கள் மாறி விட்டால் மொத்த சமுதாயமும் மாறுவதற்கு வாய்ப்பாக அமையுமே என்று கருதி அன்னாரிடம் சந்திப்புக்கான நாள் கேட்டோம். அது போல் அவர் சந்திப்பதற்கு நாள் வழங்கினார்.

ஷம்சுல்லுஹா அவர்களுடன் நடந்த உரையாடல்

ஒரு நாள் இரவு நேரம். இஷாவுக்குப் பின் மவ்லவி பி.ஜே., நான், பொட்டல்புதூரைச் சார்ந்த ஒரு மவ்லவி ஆகிய மூவரும் ஷம்சுல்ஹுதா அவர்கள் நீடூரில் இமாமாகப் பணிபுரியும் பள்ளியில் போய் சந்தித்தோம்.

பி.ஜே. தனது வாதத்தைத் தொடங்கினார்.

பி.ஜே : ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பதற்கு என்ன ஆதாரம்?

ஷம்சுல்ஹுதா: உதாரணமாக மார்க்கத்தை பால் என்று எடுத்துக் கொண்டால் அதில் தயிர், மோர் என்று இருக்கின்றதல்லவா? அது போல் தான் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று மார்க்கம் நான்கு வகைகளில் அமைந்திருக்கின்றது.

பி.ஜே: ஹஜ்ரத்! நான் உங்களிடம் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் கேட்கின்றேன். நீங்களோ உதாரணம் காட்டுகின்றீர்கள்.

ஷம்சுல்ஹுதா: ஏன் உதாரணம் கூறக் கூடாதா?

பி.ஜே: உதாரணம் கூறக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆதாரத்தைக் கேட்கும் போது, குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறுமனே உதாரணத்தை மட்டும் கூறக் கூடாது என்கிறேன். சரி!

மார்க்கத்துக்கு நீங்கள் பால் என்று உதாரணம் காட்டியதால் தயிர், மோர், நெய் எல்லாம் அதில் உள்ளது என்கிறீர்கள். இப்போது நான் மார்க்கத்துக்கு தண்ணீர் என்று உதாரணம் காட்டுகிறேன். அதில் தயிர் நெய் எல்லாம் இல்லையே?

ஷம்சுல்ஹுதா: (மவ்னம் –)

சிறிய இடைவெளிக்குப் பிறகு குர்ஆன் ஏழு எழுத்துக்களில் அருளப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு வசனத்திற்கு ஒரு நேர்முகக் கருத்தும் ஓர் அந்தரங்கக் கருத்தும் இருக்கின்றது. (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னுஹிப்பான், மஜ்மவுஸ் ஸவாயித், முஸ்னதுல் பஸ்ஸார், அல்முஃஜமுல் அவ்ஸத் ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் உள்ளது) என்று வருகின்றதல்லவா? இந்த அடிப்படையில் தரீகத் என்ற மறைமுக ஞானம் இருக்கலாம் அல்லவா?

பி.ஜே: அப்படியானால் நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். இதற்கு வெளிரங்க, அந்தரங்கக் கருத்தைக் கூறுங்கள்.

ஷம்சுல்ஹுதா : (மவ்னம்)

பி.ஜே: அல்ஹம்து லில்லாஹி என்று சொல்லும் போது, புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது என்பது நேரடி அர்த்தம். எந்த ஒரு நன்மையான காரியத்தின் போதும் நாம் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று விளங்கிக் கொள்கிறோம் அல்லவா? இது மறைமுகக் கருத்து. அவ்வளவு தானே! இதல்லாத மறை முகக் கருத்து இதில் என்ன இருக்கின்றது?

ஷம்சுல்ஹுதா: கிழ்ர் நபி, மூஸா (அலை) சம்பவத்தில் அல்லாஹ், "அல்லம்னாஹு மில்லதுன்னா இல்மா – நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்'' என்று சொல்கின்றான். எனவே, "இல்ம லதுன்னி'' (இறைவனிடமிருந்து வந்த தனிப்பட்ட ஞானம் ஆகும். அதாவது வஹ்யீயைப் போன்று வெளிப்படையாக வராத, அந்தரங்கமாக வரும் அகமிய ஞானம் ஆகும்) என்ற அடிப்படையில் அந்தரங்க, அகமிய ஞானம் ஒன்று உள்ளதல்லவா?

பி.ஜே. : லதுன் என்று வருகின்ற வார்த்தையை வைத்து அகமிய ஞானம் என்று முடிவுக்கு வருகிறீர்கள். ஜக்கரியா நபி இறைவனிடம் பிரார்த்திக்கும் போது, லதுன் என்ற வார்த்தை தான் இடம் பெறுகின்றது. அவர்கள் கேட்டது போன்று யஹ்யா என்ற குழந்தையையும் அல்லாஹ் கொடுக்கிறான். அதனால் அந்தக் குழந்தைக்கு வலத் லதுன்னி அல்லது துர்ரியத் லதுன்னி "அல்லாஹ்விடமிருந்து வந்த தனிப்பட்ட குழந்தை'' என்று கொள்வோமா? நிச்சயமாகக் கொள்ள மாட்டோம். அது போல் தான் இந்த இல்ம லதுன்னி. இது தனிப்பட்ட ஞானத்தையெல்லாம் ஒரு போதும் குறிக்காது. எனவே கிழ்ர், மூஸா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்த அகமியக் கல்விக்கு எந்தவொரு ஆதாரமும் எடுக்க முடியாது.

ஷம்சுல்ஹுதா: (மவ்னம்)

பி.ஜே. : இறந்து விட்ட நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்ய ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? இறந்து போன நல்லடியார்கள் பதிலளிப்பார்களா?

ஷம்சுல்ஹுதா: நபி (ஸல்) அவர்கள் உஹத் போரின் போது, அதில் ஷஹீதானவர்களிடம் வழியனுப்புவது போன்று பேசிக் கொண்டிருந்தார்களே?

பி.ஜே. : நீங்கள் கூறும் அந்த நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்கள் தான் அங்கு பேசியிருக்கின்றார்கள். அங்கிருந்து ஏதேனும் பதில் வந்ததா?

ஷம்சுல்ஹுதா: அங்கிருந்து பதில் வரவில்லை.

பி.ஜே. : அங்கிருந்து பதில் வரவில்லை எனும் போது, இறந்தவர்களிடம் எப்படிக் கேட்க முடியும்? எனவே அது இணை வைப்பாகத் தான் அமையும்.

இதன் பிறகு சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் வெளியேறுகின்றோம்.

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வரும் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற விஷயத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? என்று தமிழகத்தில் மாபெரும் மேதை என்று மதிக்கப்பட்ட ஷம்சுல்ஹுதா ஆலிமிடம் கேள்வி தொடுக்கப்பட்ட போது அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாமல் தலையைத் தொங்கப் போட்டார்.

இது ஷம்சுல்ஹுதா மீது நான் அளவு கடந்து கட்டி வைத்திருந்த மரியாதைக் கோட்டையை ஒரு நொடிப் பொழுதில் மடமடவென்று தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கி விட்டது.

ஷம்சுல்ஹுதா அவர்கள் பார்ப்பதற்கு எடுப்பான தோற்றத்தைக் கொண்டவர். தன்னைவிட சிறியவராக இருந்தாலும், வாடா போடா என்றெல்லாம் பேசாமல், "தம்பி! வாங்க!'' என்று அழைத்துப் பேசுகின்ற தனிப் பாங்கைப் பெற்றிருந்தார்.

எப்போதும் வெள்ளை ஆடை தான் அணிவார். கவர்ச்சி மிக்க மேடைப் பேச்சு! காந்தத்தைப் போல் கவருகின்ற ரீங்காரக் குரல், கிராஅத்! பாடம் நடத்துவதிலும் தனக்கென தனி பாணியைத் தன்னகத்தே கொண்ட ஒருவர் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் விழி பிதுங்கியது, மொழி தடுமாறியது எல்லாம் இவர் சத்தியத்தில் இல்லை என்ற எண்ணத்தை என்னிடம் ஆழமாகப் பதிய வைத்தது. சத்தியத்தில் ஆணித்தரமாக அடியெடுத்து வைக்க உதவியது. இங்கு இதை நான் கூற முன் வருவதற்குக் காரணம் என்னுடைய மன மாற்றத்தைக் கூறுவதற்காக அல்ல!

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற கருத்துக்கு இவர்களிடம் கடுகளவு கூட ஆதாரம் இல்லை. எனவே அவையெல்லாம் மாயாஜால, மந்திரக் கதைகளாக அமைந்து விட்டன.

அது போல் இறந்து விட்ட பெரியார்களிடம் உதவி தேடுவதற்கு, பிரார்த்தனை செய்வதற்கு எள்ளளவும் ஆதாரத்தை இந்த மாபெரும் மேதைகளால் சமர்ப்பிக்க இயலவில்லை என்பதை இந்தக் கலந்துரையாடல் வடிவில் அமைந்த விவாதம் தெரிவிக்கின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.

(அல்குர்ஆன் 21:18)

இந்த விவாதத்தை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மதீனாவில் கையேந்தும் காசுக்காக இங்கு வேலை செய்யும் வர்க்கத்தில் உள்ளவர்கள் இல்லை நாங்கள்! ஏகத்துவம் என்ற வெளிச்சம் 80 களில் எங்கள் உள்ளங்களில் வெள்ளமாய் பாய்ச்சப்பட்ட மாத்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை சத்தியத்தைச் சொல்கிறோம். இன்ஷாஅல்லாஹ் இறுதி மூச்சு வரை சொல்வோம் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

அப்துஸ்ஸலாம் ஆலிமுடன் ஒரு சந்திப்பு

அடுத்தக்கட்ட முயற்சியாக கிளியனூர் மத்ரஸாவின் முதல்வர் மவ்லானா மவ்லவி எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் அவர்களைச் சந்திப்பதற்கு முயற்சி எடுத்தோம். அதற்கு அவரும் இசைவு தெரிவித்தார். இங்கு அப்துஸ்ஸலாம் அவர்களைப் பற்றி சில விபரங்களைத் தருகின்றோம். அவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர். சிறந்த அறிஞர். ஷம்சுல்ஹுதா ஆலிமுடன் இணைந்து படித்தவர். கிளியனூரில் பி.ஜே. மளிகைக் கடை நடத்தி வந்தார். பி.ஜே.யின் சகோதரர் பி.எஸ். அலாவுதீன் கிளியனூருக்கும் சங்கரன்பந்தலுக்கும் இடையிலுள்ள ஒரு ஊரில் மளிகைக் கடை நடத்தி வந்தார்.

அப்போது அப்துஸ்ஸலாம் அவர்கள் பி.ஜே.யை அடிக்கடி சந்தித்து, "நீங்கள் இந்த மார்க்கத் துறைக்கு வர வேண்டும்'' என்று வலியுறுத்தி, தனது ரஹ்மானிய்யா மத்ரஸாவில் பி.ஜே.யை ஆசிரியராகப் பணியாற்றும் படி செய்தார். அந்த மத்ரஸாவில் பணியாற்றிய பிறகு தான் பி.ஜே. சங்கரன்பந்தல் மத்ரஸாவில் பணியாற்றினார். அப்போது தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஷம்சுல்ஹுதா ஆலிமைச் சந்திக்கச் சென்ற அதே குழுவினரில் ஒன்றிரண்டு பேர் அதிகமாக இதில் இடம் பெற்றிருந்தனர்.

ஷம்சுல்ஹுதாவைப் போன்று மறுக்காமல் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்வதற்கு அனுமதியளித்தார். ஒரு மாலை நேரத்தில் மத்ரஸாவின் மைய வளாகத்தில் அமர்வு தொடங்கியது. கூடவே மத்ரஸா மாணவர்களும் இருந்தனர்.

பி.ஜே.: இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யலாமா? இதற்கு ஆதாரம் இருக்கின்றதா?

அப்துஸ்ஸலாம்: குர்ஆனில் இதற்கு ஆதாரம் இருக்கின்றது.

பி.ஜே.: எங்கே இருக்கின்றது?

அப்துஸ்ஸலாம்: பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகின்றார். அந்த விவகாரம் மூஸா (அலை) அவர்களிடம் வருகின்றது. மாட்டின் ஒரு பகுதியைக் கொண்டு கொலையுண்டவரின் மீது அடிக்கப்படுகின்றது. அவர் எழுந்து வந்து பதில் சொல்கின்றார் அல்லவா?

(அப்போது தான் ஏகத்துவ சிந்தனையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்களுக்கு இது பெரிய ஆதாரமாகத் தோன்றியது.)

பி.ஜே.: நீங்கள் சொல்கின்ற அந்தச் சம்பவத்தில் கொலையுண்டு இறந்தவரின் உயிர் மட்டும் வந்ததா? அல்லது உயிருடன் உடலும் சேர்ந்து அப்படியே எழுந்து வந்தாரா?

அப்துஸ்ஸலாம்: (உடலும் உயிரும் சேர்ந்து) அப்படியே உயிர் பெற்று எழுந்து வந்தார்.

பி.ஜே.: இங்குள்ள நிலைமை அப்படி இல்லையே! முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பெயரால் நடத்தப்படும் யாகுத்பா எனும் திக்ர் சபையில் முஹய்யித்தீனின் உயிர் மட்டும் வருகின்றது என்று தானே மக்கள் நம்புகின்றார்கள். உடலுடன் சேர்ந்து வந்தால் தான் பிரச்சனையே இல்லையே! இதற்கு என்ன சொல்கின்றீர்கள்?

இதற்கு அப்துஸ்ஸலாம் ஆலிம் எந்தச் சரியான பதிலையும் தரவில்லை. பின்னர் யாகுத்பா, புர்தா போன்றவற்றில் வரும் ஷிர்க்கான, இறைவனுக்கு இணை கற்பிக்கும் கவிதை வரிகள் பற்றி பி.ஜே. கேட்டார். எல்லாவற்றுக்கும் "பார்த்துப் பதில் சொல்கின்றேன்'' என்று சொன்னார். அத்துடன் அமர்வு நிறைவு பெற்றது.

தமிழகத்தில் இதுவரை நடந்து வருகின்ற இந்த குத்பியத் திக்ர் எனும் இணைவைப்புப் பிரார்த்தனைக்கு தமிழகத்தில் மூத்த அறிஞர்களின் பட்டியலில் இருந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா, எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம் போன்ற அறிஞர்களிடம் கூட ஆதாரமில்லை என்று அப்போது நன்கு தெளிவாகத் தெரிய வந்தது.

சத்தியம் என்று வருகின்ற போது அங்கு பதில்கள் நெத்தியடியாக இருக்க வேண்டும். அசத்தியத்தின் கபாலங்கள் தெறித்தோடி மூளையைத் துளைத்து எடுக்கும் சுத்தியல் அடியாக இருக்க வேண்டும். இதைத் தான் அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.

(அல்குர்ஆன் 21:18)

அந்த நெத்தியடி, சுத்தியல் அடி நம்மிடம் தான் இருக்கின்றது, அவர்களிடம் இல்லை என்பது உறுதியானது. அதுவே சத்தியப் பாதையில் கடுகளவும் சலனம், சஞ்சலமின்றி நடை போட வைத்தது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account