Sidebar

20
Fri, Sep
4 New Articles

நதிநீர் இணைப்பு சாத்தியமா?

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நதிநீர் இணைப்பு சாத்தியமா?

நதிநீர் இணைப்பு சாத்தியமா? அப்படி இணைத்தால் அது மக்களுக்கு பயன்படுமா? ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத சினிமா கூத்தாடிகள் எல்லாம் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்கின்றார்களே! இதன் உண்மை நிலை என்ன?

- ஆரிஃப் ராஜா, மங்கலம்பேட்டை.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்றால் கொள்கை அளவில் அது சாத்தியம் தான் என்றாலும், இந்தியாவில் அது சாத்தியப்படாது. பெரிய அளவில் பொருளதாராத்தைச் செலவிட்டு தண்ணீர் பாய்ந்து செல்லும் வழிகளை ஏற்படுத்தினால் நதிகள் இணைந்துவிடும். ஆனால் நமது நாட்டு மக்கள் மொழி உணர்வின் அடிப்படையிலும், மாநில உணர்வின் அடிப்படையிலும் வெறியூட்டப்பட்டு உள்ளதால், நமது நாட்டுக்கு இது சாத்தியமாகாது. மேலும் உலகில் உள்ள நாடுகளில் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிக்க திராணியில்லாத நாடுகளில் நமது நாடு முதலிடம் பிடித்துள்ளதாலும், இது சாத்தியமாகாது.

கர்நாடகாவின் நதியை அன்றைய மன்னர்கள் இங்குள்ள காவிரியுடன் இணைத்தார்கள். அதுபோல் கேரளாவின் முல்லைப் பெரியாறு மற்றும் ஆந்திராவின் பாலாறு உள்ளிட்ட நதிகள் தமிழகத்துடன் அன்றைக்கு இணைக்கப்பட்டன. ஆனால் இன்று நிலைமை என்னவென்பதை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். வெள்ளம் பெருக்கெடுத்து கர்நாடக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்னும் போது தான் தண்ணீரைத் திறந்துவிட்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். மற்ற நேரங்களில் அணைக்கு மேல் அணை கட்டி தமக்கே சொந்தம் கொண்டாடுகின்றனர். முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் கதையும் இப்படித்தான் உள்ளது.

உறுதிமிக்க சட்டத்தினை தாட்சண்யம் இல்லாமல் கடைப்பிடிக்கும் ஒரு ஆட்சி இருந்தால், இந்தப் பிரச்சினைக்கு எப்போதோ முடிவு கட்டப்பட்டிருக்கும். அத்தகைய திராணி ஆள்கின்ற எந்தக் கட்சிக்கும் இல்லை. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ்காரன் தண்ணீரை விடாதே என்கிறான். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரன் தண்ணீரைத் திறந்துவிடு என்கிறான். பா.ஜ.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தேசியக் கட்சிகளின் நிலையும் இதுதான். இத்தகைய மக்களையும் இத்தகைய முதுகெலும்பு இல்லாத ஆட்சியையும் இத்தகைய இரட்டை வேடம் போடும் கட்சிகளையும் கொண்ட நாட்டில் நதிகளை எப்படி இணைக்க முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் தண்ணீர் செல்லும் பாதையை ஆழப்படுத்தும் வரை அந்த மாநில மக்கள் மவுனமாக இருப்பார்கள். அடுத்த மாநிலத்திற்குள் நதியைக் கொண்டு செல்லும் வேலையை ஆரம்பித்தவுடன் எல்லா கட்சிகளும் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள்.

தப்பித்தவறி கங்கையைக் கொண்டு வந்து காவிரியில் இணைத்து விட்டாலும், வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே கங்கை நீர் காவிரியில் கலக்கும். இல்லாவிட்டால் அணைகள் கட்டி தங்களுடைய மாநிலத்திற்குத் தான் பயன்படுத்தப்படும் என்று வடக்கு-தெற்கு வெறி ஊட்டப்படும். மொழி வெறியும் மாநில வெறியும் ஊட்டப்படும். செலவு செய்த பல கோடிகளும் பாழாய்ப் போய்விடும். எனவே இது நடைமுறையில் சாத்தியமாகாது. சாத்தியமானாலும் அதனால் பயன் ஏற்படாது. மாறாக வெள்ள அபாய காலங்களில் தமிழகம் வடிகாலாகவே பயன்படும். அதனால் இங்கே பேரிழப்புகள் ஏற்படும் என்பதுதான் உண்மை நிலை.

நடிகர்கள் ஒரு கோடி கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். ரஜினிகாந்த் என்ற நடிகரைப் பற்றித்தான் நீங்கள் கேட்கிறீர்கள். கர்நாடகம் தண்ணீர் விட மறுத்த போது நடிகர்கள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக நெய்வேலியில் போராட்டம் நடத்தினார்கள். நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத் துறையினர் பலர் திரளாக அதில் கலந்து கொண்டனர். ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினிகாந்த் மட்டும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கர்நாடகாவைக் கண்டிக்கவில்லை. அவர் கன்னடர் என்பது மட்டும் காரணமில்லை. தமிழர்களிடம் சம்பாதித்து கர்நாடகாவில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அம்மாநிலத்தைக் கண்டிக்கவில்லை.

இதனால் மக்களிடம் ஏற்பட்ட வெறுப்பைச் சரி செய்வதற்காக தனியாக உண்ணாவிரத நாடகம் நடத்தி, நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவதாகக் கூறி பிரச்சினையை திசை திருப்பினார். நதிகளை இணைக்க முடியாது என்று தெரிந்திருந்தும், தனது துரோகத்தை மறைக்க அவர் அடித்த ஸ்டண்டுதான் அது.

ஒரு பேச்சுக்கு நதிநீர் இணைப்பு வேலை ஆரம்பமானாலும், அவர் ஒரு கோடி கொடுக்க மாட்டார். கொடுத்த வாக்குறுதியை மீறும் நடிகர்களில் ரஜினி முதலிடத்தில் இருக்கிறார். தனது மகளின் திருமணத்திற்கு ஏழை ரசிகர்கள் வரவேண்டாம் என்று அறிவித்து, தனக்குச் சமமான பிரமுகர்களை மட்டும் அழைத்து நடத்தினார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்துப் போனார்கள். இந்த அயோக்கியனுக்காகவா உழைத்தோம் என்று நொந்து போனார்கள்.

எனது ரசிகர்கள் மனம் குளிரும் வகையில் அவர்களை அழைத்து பெரிய விருந்து ஒன்று வைப்பேன் என்று அப்போது ரஜினி அறிவித்தார். அந்தக் கல்யாணம் முடிந்து பேரன் பேத்திகளும் எடுத்தாகி விட்டது. ஆனால் ரசிகர்களுக்கு இன்னும் சோறு போடவில்லை. ஒரு கோடி ரூபாய் அறிவிப்புக்கும் இந்த கதிதான் ஏற்படும்.

மேலும், பலகோடி ரூபாய் செலவாகும் இந்தத் திட்டத்திற்கு நூறு கோடி தருவதாக சொல்லியிருந்தால் கூட அது அவரது வசதிக்குக் குறைவுதான். நாம் தேனீருக்குச் செலவு செய்யும் பத்துரூபாய் எப்படியோ, அதுபோல் ரஜினிக்கு ஒரு கோடி ரூபாய் என்பது அற்பத்திலும் அற்பமாகும். பிரச்சினையின் தீவிரத்தை மறக்கடிக்க வைப்பதற்காக இப்படி அறிவித்து நாடகமாடி அதில் வெற்றி கண்டுள்ளார். இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ள வேண்டாம்.

உணர்வு 16:50

08.08.2012. 15:33 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account