Sidebar

27
Sat, Jul
5 New Articles

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

ஆடை அலங்காரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நடுவிரலில் மோதிரம் அணியலாமா? கீழ்க்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நடுவிரலிலும், அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைபாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் ஏகத்துவம், தீன் குலப்பெண்மணி இதழ்களிலும் இவ்வாறே முன்னர் எழுதி இருந்தோம். நடுவிரலையும், அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார். இந்த ஹதீஸில் நடுவிரலில் என்று உறுதியாக சொல்லப்படவில்லை.

நடுவிரலிலோ அதற்கு அடுத்த விரலிலோ மோதிரம் அணிய தடை செய்தார்கள் என்று சந்தேகத்துடன் கூறப்பட்டுள்ளது.

 3911 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ قَالَ عَلِيٌّ نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ هَذِهِ قَالَ فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا رواه مسلم

நடுவிரலையும், அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ, அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.

நூல் : முஸ்லிம் முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில்

 نهاني – يعني النبي صلى الله عليه وسلم – أن أجعل خاتمي في هذه ، أو التي تليها – لم يدر عاصم في أي الثنتين

இரண்டு விரல்களில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبد الله بن إدريس عن عاصم عن أبي بردة عن علي قال نهاني رسول الله صلى الله عليه وسلم أن أتختم في هذه وفي هذه يعني الخنصر والإبهام

கட்டை விரலிலும், சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.

நூல் : இப்னுமாஜா இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள். இந்த இரு அறிவிப்புகள் சொல்வது என்ன? முதல் ஹதீஸ்படி நடுவிரலிலும், அதற்கடுத்த விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்றும், இரண்டாம் ஹதீஸ் படி கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்றும் தெரிகிறது. இந்த விரல், இந்த விரல் என்று சொல்லும் போது கட்டை விரலையும் சுண்டு விரலையும் சுட்டிக்காட்டியதாக ஆசிம் ஒரு அறிவிப்பில் கூறுகிறார். ஆனால் இந்த விரல், இந்த விரல் என்று சொல்லும் போது நடு விரலையும் அடுத்த விரலையும் சுடிக்காட்டியதாக அதே ஆசிம் அறிவிக்கிறார். நடு விரல் அடுத்த விரல் என்று சொல்வதை உறுதியாகவும் அவர் சொல்லவில்லை. இரண்டில் ஒன்றைச் சொன்னார்கள். அது எது எனத் தெரியவில்லை என்ற பொருள் பட கூறுகிறார். இது குறித்த சரியான தகவல் ஆசிமிடம் இல்லை என்பதும், முரண்பட்டும் சந்தேகத்துடனும் தான் அறிவிக்கிறார் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. நடுவிரலில் மோதிரம் அணியக் கூடாது என்ற கருத்தை உறுதியாகச் சொல்லும் அறிவிப்புகள் இல்லை. குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account