Sidebar

27
Sat, Jul
4 New Articles

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால்?

பொருளாதாரம் - இஸ்லாத்தின் பார்வை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

என்னுடைய நண்பர் அவசரத் தேவைக்காக 4000 சவூதி ரியால் கடன் வாங்கினார். அன்றைய தினம் வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 91 ரியால்களாகும். நான்கு மாதம் கழித்து அவர் கடனைத் திருப்பித் தந்த போது வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 96 ரியால் என உயர்ந்து விட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் இந்திய ரூபாய் 2000. அதனால் என்னிடம் 4000 ரியால் கடன் வாங்கிய எனது நண்பர் கூடுதலாக 200 ரியால் தந்தார். இது வட்டியா? விளக்கம் தரவும்.

பதில்:

எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் கடன் கொடுத்தீர்களோ அதே கரன்ஸியின் அடிப்படையில் தான் திருப்பி வாங்க வேண்டும். அதிகப்படுத்தி கேட்கக் கூடாது.

صحيح البخاري

2176 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا عَمِّي، حَدَّثَنَا ابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنْ عَمِّهِ قَالَ: حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ حَدَّثَهُ مِثْلَ ذَلِكَ حَدِيثًا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَلَقِيَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَقَالَ: يَا أَبَا سَعِيدٍ مَا هَذَا الَّذِي تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ أَبُو سَعِيدٍ: فِي الصَّرْفِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الذَّهَبُ بِالذَّهَبِ مِثْلًا بِمِثْلٍ، وَالوَرِقُ بِالوَرِقِ مِثْلًا بِمِثْلٍ»

நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ, வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 2176

இந்த ஹதீஸின் அடிப்படையில் 4000 ரியால் கடன் கொடுத்திருந்தால் அதே 4000 ரியால் மட்டுமே வாங்க வேண்டும். அதிகமாகக் கேட்டு வாங்கினால் அது வட்டி என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம், கடன் கொடுத்தவர் எதையும் கூடுதலாகக் கேட்காமல், கடன் பெற்றவர் தாமாக விரும்பி எதையேனும் அதிகப்படுத்திக் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்வதில் தவறில்லை.

صحيح البخاري

2390 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، بِمِنًى يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَجُلًا تَقَاضَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ: «دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا، وَاشْتَرُوا لَهُ بَعِيرًا فَأَعْطُوهُ إِيَّاهُ» وَقَالُوا: لاَ نَجِدُ إِلَّا أَفْضَلَ مِنْ سِنِّهِ، قَالَ: «اشْتَرُوهُ، فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً»

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் கொடுத்ததைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, (அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். நபித் தோழர்கள், அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2390

கடன் வாங்கியவர் தாமாக விரும்பி, வாங்கிய கடனை விட அதிகமாகத் தந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம். இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து விட்டதால் அதிகமாகத் தர வேண்டும் என்று கடன் கொடுத்தவர் நிபந்தனை விதித்தால் அது வட்டியாகி விடும்.

ஆனால் கடன் கொடுக்கும் போதே, இன்ன கரன்ஸியின் அடிப்படையில் கடன் தருகிறேன்; அதே கரன்ஸி மதிப்பின் அடிப்படையில் தான் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கடன் கொடுக்கலாம்.

உதாரணமாக 4000 ரியால்கள் கடன் கொடுக்கும் போது, அப்போதைய இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்குப் போட்டு 44,000 ரூபாய் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கடன் கொடுக்கிறீர்கள்; கடன் வாங்கியவர் திருப்பித் தரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டது. அதாவது 44,000 ரூபாய்க்கு 4200 ரியால்கள் வருகின்றது என்றால், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 200 ரியால்கள் அதிகமாக வாங்கிக் கொள்ளலாம்.

அது போல் 44000 ரூபாய்க்கு 3800 ரியால் என்று மதிப்பு குறைந்து விட்டால் 3800 தான் வாங்க வேண்டும். 4000 ரியால் கொடுத்ததால் 4000 ரியால் தான் தர வேண்டும் என்று கேட்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் ரியால் அடிப்படையில் கடன் கொடுக்கவில்லை. இந்திய ரூபாயின் அடிப்படையில் தான் கடன் கொடுத்தீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!

திருக்குர்ஆன் 5:1

ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன.

எனவே கடன் கொடுக்கும் போது எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோமோ அதே கரன்ஸியின் மதிப்பின் அடிப்படையில் வாங்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் போகலாம். 4000 ரியால்கள் கொடுத்ததற்கு, 3800 ரியால் மட்டுமே திருப்பிக் கிடைக்கும் நிலை ஏற்படலாம்.

நாம் கடன் கொடுக்கும்போது நமக்கு நட்டம் வராத வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஐந்து பவுன் தங்கத்தின் மதிப்புக்கு உரிய தொகையை உனக்குக் கடனாகத் தருகிறேன். நீ திருப்பித் தரும்போது ஐந்து பவுன் தங்கத்துக்கு உரிய தொகை என்னவோ அதைத்தான் தர வேண்டும் என்று பேசி கடன் கொடுத்தால் அதில் தவறு இல்லை.

ரியாலாகக் கடன் கொடுத்து விட்டு இந்திய ரூபாயில் திருப்பித்தருமாறு பேசிக் கொண்டால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் ரியாலாகக் கடன் கொடுக்கும் போது நான் இந்திய ரூபாய் மதிப்பில் தான் கடன் தருகிறேன். எனவே திருப்பித் தரும் போது இந்திய ரூபாய் மதிப்பில் தான் திருப்பித் தர வேண்டும் என்று பேசிக் கொண்டால் அதன்படி திரும்பப் பெறுவது குற்றமில்லை.

உதாரணமாக ஒரு ரியால் பதினைந்து ரூபாய் என்று இருக்கும் போது நாம் 4000 ரியால்கள் ஒருவருக்குக் கடன் கொடுக்கிறோம். இந்திய ரூபாய் மதிப்பில் நாம் அறுபதாயிரம் ரூபாய்க்குச் சமமான தொகையைக் கொடுக்கிறோம். எனக்கு திருப்பித் தரும்போது அறுபதாயிரம் இந்திய ரூபாய்களுக்குச் சமமான மதிப்பில் ரியால்களைத் தர வேண்டும் என்று நாம் கருதினால் அப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இப்படி ஒப்பந்தம் செய்தபின் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாகலாம். அல்லது குறையலாம்.

ஒரு ரியால் இருபது ரூபாய் என்ற அளவுக்கு ஏறி விட்டால் நாலாயிரம் ரியாலுக்கு பதிலாக மூவாயிரம் ரூபாய்களைக் கொடுக்க வேண்டும். மூவாயிரம் ரியால் கொடுத்தாலே அறுபதாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைத்து விடும்.

ஒரு ரியால் பத்து ரூபாய் என்ற அளவுக்கு இறங்கி விட்டால் நாலாயிரம் ரியாலுக்கு பதிலாக ஆறாயிரம் ரூபாய்களைக் கொடுக்க வேண்டும். ஆறாயிரம் ரியால் கொடுத்தால் தான் அறுபதாயிரம் இந்திய ரூபாய்கள் கிடைக்கும்.

இப்படி தெளிவுபடுத்தி பேசாமல் கடன் கொடுத்தால் கொடுத்த இந்திய ரூபாயைத் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் இந்திய ரூபாயின் மதிப்பில் தான் கடன் கொடுத்தோம்.

வெளிநாட்டு கரன்ஸிகளின் மதிப்பு மட்டுமல்ல! இந்தியாவிலேயே பண மதிப்பு நாளுக்கு நாள் மாறிக் கொண்டு தான் வருகின்றது. ஒரு நாட்டின் பண மதிப்பு குறைவதற்கும், உயர்வதற்கும் அந்த நாட்டை ஆள்பவர்களின் நிர்வாகத் திறனே காரணம். தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பண மதிப்பு குறைந்து போகின்றது.

ஆட்சியாளர்களின் நிர்வாகக் குளறுபடிகளால் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு, கடன் கொடுத்தவர்கள் நட்டமடைந்து வருகின்றனர். இது எந்த விதத்திலும் நியாயமில்லை.

கரன்ஸி நோட்டுகள் நடைமுறைக்கு வந்த பின் பணமதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இன்று ஒரு லட்சம் ரூபாய் நாம் கடனாகக் கொடுக்கிறோம். இந்தக் கடன் நமக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பக் கிடைத்தால் எண்ணிக்கையில் தான் அது ஒரு லட்சமாக இருக்கும். அதன் மதிப்பு நாம் கொடுத்த ரூபாயின் மதிப்பை விட குறைவாகத் தான் இருக்கும். இதனால் கடன் கொடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதைக் கவனத்தில் கொண்டு இன்றைய மதிப்பில் கடனைத் திருப்பிக் கேட்கலாமா என்றால் அது கூடாது. ஏனெனில் கடன் கொடுக்கும் போது பண மதிப்பைப் பற்றி சிந்திக்காமல் ஒரு லட்சம் ரூபாய் என்ற எண்ணிக்கையைத் தான் இருவருமே கருத்தில் கொண்டார்கள்.

ஒரு பவுன் நகை 12 ஆயிரமாக இருக்கும் போது நாம் ஐந்து பவுன் நகை வாங்குவதற்காக 60 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறோம். அவசரத்துக்காக ஒருவர் கடன் கேட்கும் போது 60 ஆயிரத்தைக் கொடுக்கிறோம். அவர் ஆறு மாதம் கழித்து திருப்பித் தரும் போது ஒரு பவுன் விலை 15 ஆயிரமாகி விடுகிறது. இப்போது 60 ஆயிரம் ரூபாயில் ஐந்து பவுன் வாங்க முடியாது. நான்கு பவுன் தான் வாங்க முடியும். கடன் கொடுக்காமல் அப்போதே நகையாக வாங்கி இருந்தால் நாம் ஐந்து பவுன் வாங்கி இருக்க முடியும். கடன் கொடுத்ததால் நமக்கு ஏற்பட்ட நட்டம் ஒரு பவுன் அதாவது 15 ஆயிரம் ரூபாய்கள்.

இதன் காரணமாகத் தான் கடன் கொடுப்பதற்கு பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

நாம் கடன் கொடுக்கும் போது நமக்கு நட்டம் வராத வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஐந்து பவுன் தங்கத்தின் மதிப்புக்கு உரிய தொகையை உனக்குக் கடனாகத் தருகிறேன். நீ திருப்பித் தரும் போது ஐந்து பவுன் தங்கத்துக்கு உரிய தொகை என்னவோ அதைத் தான் தர வேண்டும் என்று பேசி கடன் கொடுத்தால் அதில் தவறு இல்லை.

12.01.2017. 1:47 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account