விளையாட்டும், உடற்பயிற்சியும்
விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றை இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 421, 2868, 2869, 2870, 7336
கடை வீதியில் அம்பு எறியும் போட்டியை அஸ்லம் கூட்டத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே வந்தனர். இஸ்மாயீல் நபியின் சந்ததிகளே! நீங்கள் அம்பு எறியுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அவர்கள் அம்பு எறிபவராக இருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இரு அணிகளாக இருந்தவர்களில் ஒரு அணியைக் குறிப்பிட்டு,நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறி அந்த அணியில் சேர்ந்து கொண்டார்கள். எதிரணியில் இருந்தவர்கள் அம்பு எறிவதை நிறுத்தி விட்டார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, நீங்கள் இந்த அணியில் ஒருவராகச் சேர்ந்திருக்கும் போது உங்களுக்கெதிராக நாங்கள் எப்படி அம்பு எறிவோம்? என்று அவர்கள் விடையளித்தனர். அப்படியானால் நான் இரண்டு அணிக்கும் பொதுவானவனாக இருந்து கொள்கிறேன். இப்போது எறியுங்கள்! என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வஃ (ரலி)
நூல் : புகாரி 2899, 3373, 3516
நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : அஹ்மத் 22989, 25075, அபூதாவூத் 2214
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முன்னிலையில் பள்ளி வாசலில் அபீஸீனியர்கள் தங்களின் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விளையாடினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 455, 950, 988, 2907, 3530, 5190
இது போன்ற வீர விளையாட்டுக்களையும், பயனுள்ள பயிற்சிகளையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. சூதாட்டம், உடலுக்கோ, அறிவுக்கோ பயன்தராத வீண் விளையாட்டுக்கள், ஆடல், பாடல், கச்சேரிகள் போன்ற விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.
விளையாட்டும், உடற்பயிற்சியும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode