Sidebar

16
Tue, Apr
4 New Articles

குலா என்றால் என்ன? தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன?

தலாக் விவாகரத்து
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

குலா என்றால் என்ன? தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன?

நூர் முஹம்மத்,

பதில் :

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

صحيح البخاري

5273 – حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5273

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை மேற்கண்ட செய்தியிலிருந்து அறியலாம்.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்பந்திக்கவில்லை.

صحيح البخاري

5283 – حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ: «يَا عَبَّاسُ، أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَاجَعْتِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَنَا أَشْفَعُ» قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيهِ

பரீராவின் கணவர் முகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5283

குலா சட்டத்தின் சுருக்கம்

ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.

அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.

அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும்.

கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை.

கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போல் மனைவி குலா செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது.

தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலா அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது.

அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்து கொள்ளலாம். தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

سنن النسائي

3498 – أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ رُبَيِّعَ بِنْتِ مُعَوِّذٍ، قَالَ: قُلْتُ لَهَا: حَدِّثِينِي حَدِيثَكِ، قَالَتْ: اخْتَلَعْتُ مِنْ زَوْجِي ثُمَّ جِئْتُ عُثْمَانَ، فَسَأَلْتُهُ مَاذَا عَلَيَّ مِنَ الْعِدَّةِ؟ فَقَالَ: «لَا عِدَّةَ عَلَيْكِ إِلَّا أَنْ تَكُونِي حَدِيثَةَ عَهْدٍ بِهِ، فَتَمْكُثِي حَتَّى تَحِيضِي حَيْضَةً». قَالَ: «وَأَنَا مُتَّبِعٌ فِي ذَلِكَ قَضَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرْيَمَ الْمَغَالِيَّةِ، كَانَتْ تَحْتَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ فَاخْتَلَعَتْ مِنْهُ»

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி)

நூல் : நஸாயீ

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account