தர்கா, சூனியம் உள்ளிட்ட இணை வைப்பை நம்பும் பெண்ணுடன் வாழலாமா?
முஸ்லிமாக இருந்து கொண்டே இணை கற்பித்தால் அல்லாஹ்விடம் அவர்கள் இணை கற்பிப்பவர்களாகவே கருதப்படுவார்கள். திருந்திக் கொள்ளாமல் மரணித்து விட்டால் அவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள்.
இதில் எந்த சமரசமும் இஸ்லாமில் இல்லை.
இணை கற்பிக்கும் பெண்களையும், ஆண்களையும் மணக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளது.
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (221)2
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப் படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 2:221
வேதம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்களும், அன்றைய கிறித்தவர்களும் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்துக் கொண்டு இருந்தனர்.
உசைரையும், ஈஸா நபியையும் அல்லாஹ்வின் மகன்கள் என்ற கொள்கையில் இருந்தனர்.
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ (30)9
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏகஇறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
திருக்குர்ஆன் 9:30
அல்லாஹ்வுக்கு மகன்கள் இருப்பதாக நம்புவதை விட பெரிய இணைவைப்பு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய பகிரங்க இணைவைப்பு கொள்கையில் உள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதிக்கிறான். அவர்கள் அறுத்தவைகளை உண்ணவும் அனுமதிக்கிறான்.
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ (5)5
தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 5:5
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இணை கற்பிக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்ற போதும் அவர்களைத் திருமணம் செய்வதற்கும், அவர்கள் அறுத்ததை உண்பதற்கும் அல்லாஹ் அனுமதி அளிக்கிறான்.
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பது வரலாற்றுப்படி நபிகள் காலத்தில் இருந்த யூத, கிறித்தவர்களைத் தான் குறிக்கும். ஆனாலும் அந்தச் சொல்லின் பொருளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேதத்தை நம்புபவர்கள் என்பது யூத கிறித்தவர்களுக்குப் பொருந்துவதை விட முஸ்லிமாக இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடியவர்களுக்கு அதிகம் பொருந்தும்.
யூதர்கள் வேதத்தை மாற்றி மறைத்து சிதைத்தது போல் முஸ்லிமாக இருந்து கொண்டு இணை கற்பிப்போர் குர்ஆனைச் சிதைக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேதத்தை நம்புகிறார்கள். எனவே வேதமுடையோர் என்ற சொல்லுக்குள் நிச்சயம் இவர்கள் அடங்குவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை கற்பித்தவர்கள் இருக்கவில்லை. இருந்திருக்க முடியாது. அவர்கள் காலத்தில் இந்தக் கேள்விக்கு இடமிருக்கல்லை. பிற்காலத்தில் இஸ்லாமில் இருந்து கொண்டே இணை கற்பிப்பவர்கள் உருவானார்கள். இவர்களையும் உள்ளடக்கும் விதமாகவே வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற சொல் அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் முஸ்லிம்களாக இருப்பவர்களில் சிலர் இணை கற்பிக்கலானார்கள். சமாதிகள் வழிபாடு, ஷைகுமார்கள் வழிபாடு, கொடிமர வழிபாடு, தாயத்து, சூனியம் உள்ளிட்ட இணைகற்பிக்கும் போக்கு நிலைபெற்றுள்ளது.
இவர்கள் இணை கற்பித்தாலும் வேதக்காரர்கள் என்ற சொல்லில் இவர்களும் அடங்குவார்கள். குர்ஆன் என்ற வேதத்தை நம்புகிறார்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்து அல்லது இணைந்து சில இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தாலும் அவர்களின் பெண்களை மணக்கலாம்.
முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்து அல்லது இணைந்து சில இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தாலும் அவர்கள் அறுத்தவைகளை உண்ணலாம்.
இதனால் அவர்கள் இணை கற்பிக்கவில்லை என்று ஆகாது.
ஆயினும் இணைகற்பிக்காமல் மார்க்கத்தைச் சரியான முறையில் கடைப்பிடிக்கும் பெண்களைத் தேர்வு செய்வதே நல்லது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.صحيح البخاري
5090 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " تُنْكَحُ المَرْأَةُ لِأَرْبَعٍ: لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ، تَرِبَتْ يَدَاكَ "
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5090