Sidebar

20
Mon, May
49 New Articles

மலக்குகளை ஏமாற்றிய? இத்ரீஸ் (அலை)

நபிமார்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

மலக்குகளை ஏமாற்றிய இத்ரீஸ் (அலை)

இத்ரீஸ் (அலை) அவர்கள் "மலக்குல் மவ்த்'துக்கு நண்பராக இருந்தார்களாம்! மரணத்தை அனுபவ ரீதியில் உணர, தாம் விரும்புவதாக மலக்குல் மவ்த்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து, பின்பு உயிர்ப்பித்தாராம். "நான் நரகத்தைக் கண்கூடாகக் காண வேண்டும்'' என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்த்திடம் இத்ரீஸ் நபி சமர்ப்பித்தார்களாம்! மலக்குல் மவ்த் தமது இறக்கையில் அவரைச் சுமந்து நரகத்தைச் சுற்றிக் காண்பித்தாராம்! "நான் சொர்க்கத்தைக் கண்கூடாகக் காண வேண்டும்'' என்று மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினாராம். சொர்க்கத்தைச் சுற்றிப் பார்த்த பின் சொர்க்கத்திலிருந்து வெளியே வர மறுத்து விட்டு இன்று வரை சொர்க்கத்திலேயே இத்ரீஸ் நபி இருக்கிறார்களாம்!

இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மையானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

இந்தக் கதையில் மலக்குல் மவ்த், சொர்க்கம், நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் தான் நமக்குச் சொல்லித் தர முடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறிய முடியாது. இது போல் நடந்ததாக அல்லாஹ் திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் காலித் என்பவர் மூலமாக தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இது சரியான ஹதீஸ் அல்ல. இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனையாகும்.

ஏனெனில் "இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் காலித் பெரும் பொய்யன்; இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவை'' என்று ஹாபிழ் ஹைஸமீ கூறுகிறார்கள்.

மேலும் திருக்குர்ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.

"இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்த்தை ஏமாற்றினார்கள்'' என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. "சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு, சொர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம் ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா?

வல்ல இறைவன் தனது திருமறையில்

இவ்வேதத்தில் இத்ரீஸையும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 19:56

என்று கூறுகிறான்.

"அவர் மிக்க உண்மையாளராக இருந்தார்'' என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட மலக்கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா? நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்குக் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும்  "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!'' என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 19:73

குர்ஆனின் இந்தக் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்?

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

"நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான். அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்ய மாட்டார்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள்'' என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.

நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி இத்ரீஸ் நபியை மலக்குல் மவ்த் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும்?

மேலும் உயிரை நீக்குவது தான் மலக்குல் மவ்த்துக்கு வழங்கப்பட்ட அதிகாரம். எடுத்த உயிரைத் திருப்பிக் கொடுப்பது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதன்று. இந்தக் கதை மலக்குல் மவ்த்துக்கு அந்த அதிகாரத்தை வழங்குகின்றது.

மேலும் மரணித்தவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. அதை மறுக்கும் வகையிலும் இந்தக் கதை அமைந்துள்ளது.

அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும். அதுவே வெளிப்படும் நாள்.

திருக்குர்ஆன் 50:42

அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.

திருக்குர்ஆன் 18:99

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.

திருக்குர்ஆன் 79:13,14

ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

திருக்குர்ஆன் 78:18

ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள்! ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும், சாட்சியுடனும் வருவர்.

திருக்குர்ஆன் 50:20

சூர் ஊதப்பட்ட பின்பே மரணித்தவர்கள் எழுப்பப்படுவார்கள். என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. சூர் ஊதப்படாமல் இத்ரீஸ் நபி உயிர்ப்பிக்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகின்றது.

மேலும் மலக்குல் மவ்த் என்பவர் தன் இஷ்டப்படி எவரது உயிரையும் வாங்க முடியாது. இறைவனது கட்டளைப்படியே அதைச் செய்ய முடியும். இத்ரீஸ் நபியின் கோரிக்கையை ஏற்று அவர் இஷ்டத்திற்கு உயிர் வாங்கியதாக இந்தக் கதை கூறுகிறது.

மேலும் பின்வரும் குர்ஆன் வசனத்துடன் இந்தக் கதை நேரடியாகவே மோதுகின்றது.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.

திருக்குர்ஆன் 20:55

எந்த மனிதரும் மரணித்து விட்டால் அவர் பூமியில் சேர்க்கப்பட்டாக வேண்டும். ஆனால் இத்ரீஸ் (அலை) மரணித்த பிறகும் பூமியில் அடக்கம் செய்யப்படவில்லை என்று இந்தக் கதை கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தைப் பொய்யாக்குகின்றது.

சொர்க்கத்தை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. ஒரு முஸ்லிம் நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சொர்க்கத்தைத் தரும்படி பிரார்த்தனை தான் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித் தான் செய்துள்ளார்கள்.

 குர்ஆனின் 26:85 வசனம் இதை நமக்கு நன்றாகத் தெளிவுபடுத்துகின்றது.

குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்து விடாமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக! அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account