Sidebar

21
Tue, May
52 New Articles

முஹம்மது நபியைப் படைக்காவிட்டால் உலகமே இல்லையா?

நபிமார்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

முஹம்மது நபியைப் படைக்காவிட்டால் உலகமே இல்லையா?

கேள்வி:

இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்க மாட்டேன் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா?

M.சம்சுதீன்

பதில் :

முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம் பெற்றிருக்கின்றது.

اللآلي المصنوعة - 

وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات

الموضوعات لابن الجوزي

ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة. وقال الدارقطني: متروك.

இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும், நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று தஹபீ, தாரகுத்னீ, இப்னுல் ஜவ்ஸீ அஹ்மது பின் ஹம்பல் ஆகியோர் கூறியுள்ளனர்.

تلخيص كتاب الموضوعات للذهبي

195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا

قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة

இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும், இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் லாயிலாஹ இல்லல்லாஹூ என்பதுடன் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்றும் எழுதப்பட்டிருந்ததாம். இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார் என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன் என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தச் செய்தியின் கருத்து குர்ஆனுடன் முரண்படுகிறது. அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த உலகத்தை படைத்ததற்கான காரணத்தைப் பற்றி கூறும் போது அவனை வணங்குவதற்காகத் தான் இந்த உலகத்தைப் படைத்ததாகக் குறிப்பிடுகிறான்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

திருக்குர்ஆன் 51:56

இறைவன் தன்னை வணங்குவதற்காகத் தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கும் போது இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.

இந்த உலகம் முஹம்மது நபிக்காக படைக்கப்பட்டு இருந்தால் அவர்களையே முதல் படைப்பாக அல்லாஹ் படைத்து இருப்பான். மேலும் முஹம்மது நபி மரணித்த உடன் உலகை அழித்து இருப்பான்.

முஹம்மது நபி அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னரும் இந்த உலகம் இருந்தது. அவர்கள் மரணித்த பின்னரும் இருக்கிறது. எனவே இந்த உலகம் அனைத்து மனிதர்களையும் சோதித்து அறிவதற்காகவே படைக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்..

மேலும் ஆதம் (அலை) அவர்கள் எப்படி மன்னிப்பைப் பெற்றார்கள் என்பதை அல்லாஹ் நமக்கு சொல்லித் தந்துள்ளான். மன்னிப்புக்கு உரிய வார்த்தைகளை அல்லாஹ் கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் சொல்லி இருக்கும் போது அதற்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்துள்ளது.

இது குறித்து திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளதைக் காண்க!

ஆதம் அலை அவர்கள் மன்னிப்பு கேட்டது எப்படி?

மேலும் முஹம்மது நபியின் சமுதாயம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கூறி நம்பிக்கை கொள்ள வேண்டும். மற்ற சமுதாயத்தினர் தமக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை நம்ப வேண்டும்.

மூஸா நபி சமுதாயம் மூஸா ரசூலுல்லாஹ் என்றும் ஈஸா நபி சமுதாயம் ஈஸா ரசூலுல்லாஹ் என்றும் இப்ராஹீம் நபி சமுதாயம் இப்ராஹீம் ரசூலுல்லாஹ் என்றும் நம்ப வேண்டும்.

ஆனால் சொர்க்கத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ் உடன் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று எழுதப்பட்டதாக இந்தக் கதையில் சொல்லப்படுகிறது.

அனைவரும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று நம்ப வேண்டும் என்ற பொய்யான செய்தியை இது உள்ளடக்கி உள்ளதால் இது கட்டுக்கதை என்பது மேலும் உறுதியாகிறது.

இந்தக் கட்டுக்கதையை தமிழக முஸ்லிம்களிடம் பரப்பியவர் உமறுப்புலவர் ஆவார். இஸ்லாமிய அறிவு இல்லாத இவர் சீறாப்புராணத்தில் அவிழ்த்து விட்டுள்ள பொய்களில் இதுவும் ஒன்றாகும்

'கலைமறை முகம்மதென்னும் காரணம் இல்லையாகில் உலகு விண் இரவி திங்கள் ஒளிர் உடுக்கணம் சுவர்க்கம் மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை நிலையுறப் படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே' 

முஹம்மது நபி இல்லாவிட்டால் ஆதமே உம்மையும், உலகையும் வானம் சூரியன் சந்திரன், கடல் மலை பாதாளம் சொர்க்கம் உள்ளிட்ட எதையும் நான் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னதாக உமருப்புலவர் கூறியது இந்தக் கட்டுக்கதையை ஆதாரமாகக் கொண்டுதான்.

பூமான் நபிகள் தோன்றாவிட்டால் உலகம் வந்தே இருக்காது என்ற நாகூர் ஹனீபா பாடலுக்கும் இந்தக் கட்டுக்கதையே அடிப்படை.

02.04.2010. 23:44 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account