ஒளியிலிருந்து
-பி.ஜே
(1986 ஆம் ஆண்டு பீஜே அந்நஜாத் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த போது செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை)
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; இறுதி நபியாகவும், மறுமையில் ஷஃபாஅத் என்னும் பரிந்துரை செய்வர்களாகவும், மாகமுன் மஹ்மூத் என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த சிறப்புக்கள் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடுவது மிகப் பெரும் குற்றமாகும். காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்புகள் அல்லாஹ் சொல்லாமல் நாமாக அறிந்து கொள்ள இயலாத ஒன்றாகும்.
இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
ஷைத்தான் உங்களைக் கெடுத்து விடவேண்டாம் நான் அப்துல்லாவின் மகன் முஹம்மதாவேன், மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்.
நூல் : அஹ்மத், பைஹகீ, ஸுனன் ஸயீது இப்னுமன்ஸுர்
எனது தகுதிக்கு மேல் என்னை உயர்த்தாதீர்கள் ! ஏனெனில் அல்லாஹ் என்னை அவனது தூதராக ஆக்குமுன்பே என்னை அவனது அடியானாக ஆக்கி விட்டான்.
நூல்கள் : ஹாகீம், தப்ரானி
கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் மீறிப் புகழாதீர்கள்!
நூல்கள் : புகாரி, தாரமி, அஹமத், ஷமாயில் திர்மிதீ, மஜ்வுல் பவாயித்
மேற்கூறிய மூன்று நபிமொழிகளிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை வரம்பு மீறிப் புகழ்வதைக் கண்டித்துள்ளார்கள். அவர்கள் உத்தரவுக்கு மாற்றமாகப் புகழ்கிறோம் என்ற எண்ணத்தில் வரம்பு மீறுவது உண்மையில் புகழாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகிவிடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்டபின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாக நுழைவோம்.
முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாவுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். ஈஸா (நபி) தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர் ஆன் ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.
இன்னும் அவன் தான் மனிதனை (ஒரு குறிப்பிட்ட) நீரிலிருந்து படைத்தான்
(அல் குர் ஆன் 25 :54)
அவனை நாம் விந்துவிலிருந்து படைத்தோம் என்பதை மனிதன் அறிய வேண்டாமா?
(அல் குர் ஆன் 36 :77)
இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப் பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.
களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்.
(அல் குர் ஆன் 32:7)
அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்.
(அல் குர் ஆன் 35 :11)
இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
இதற்கு மாற்றமாக
முதலில் அல்லாஹ் , முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான் . அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புக்களையும் படைக்கத் துவங்கினான் என்று கூறுவது திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.
களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அல்லாஹ்) துவக்கினான்.
(அல்குர் ஆன் 32:7)
இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராயந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே களிமண்தான் என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களி மண்தான் மனிதப் படைப்பின் துவக்கம் ,ஆரம்பம், என்று அல்லாஹ் கூறிகொண்டிருக்க, இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளிதான் ஆரம்பம் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு தாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித் தனமாகவும் தோன்றவில்லையா? (நவூதுபில்லாஹ்)
அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும், நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறவே இல்லை. நபி (ஸல்) அவர்களும் தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான் என்று கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படவில்லை.
இந்தக் கதையைக் கட்டி விட்டவர்கள் முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற ஹதீஸ் நூலில் இது உள்ளதாக ஆதாரம் காட்டிக் கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளாக இது நம்பப்பட்டு வந்தது. வழிகெட்ட பரேலவிகள் இந்த முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் எனற நூலையே தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் கூறிக் கொண்டிருந்தனர்.
முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூல் உண்மையும், பொய்யும் கலந்த ஒரு நூல் . அது ஆதாரமாக எடுத்து வைக்கும் அளவுக்கு உயர்ந்த நூல் அல்ல என்பதால் அறிஞர்கள் அந்த நூலுக்கு முக்கியத்துவம் தரவில்லை . அவர்கள் கூறுவது அந்த நூலிலாவது இருக்கிறதா என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தர்ஜுமானுல் ஹதீஸ் என்ற மாத இதழின் ஆசிரியர், இஹ்ஸான் இலாஹி ழஹீர் என்ற அறிஞர் வரிக்கு வரி பார்வையிட்டு அந்தக் கதை அதில் இல்லை என்று கூறிய பிறகு தான். இந்த அறிவீனர்கள் எவ்வளவு துணிந்து பொய் சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மை உலகுக்குத் தெரியலாயிற்று.
(முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூல் இந்தியாவிலும் அச்சிடப்பட்டு தற்போதும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சந்தேகமுள்ளவர்கள் பார்த்துக் கொள்லாம்)
எந்த நூலில் இந்தக் கதை இருப்பதாக இதுகாலம் வரை கூறிக் கொண்டிருந்தார்களோ, எதை நம்பி, பல நூல்களில் எழுதி வைத்து சென்றார்களோ. அந்த நூலிலேயே அது இல்லை என்று நிரூபணமாகி விட்டபின், எள்ளளவும் ஆதாரமற்ற கட்டுக் கதைதான் அது என்பது ஜயத்திற்கிடமின்றி முடிவாகி விட்டது.
இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக ! என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆ செய்பவர்களாக இருந்துள்ளார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : புஹாரி, முஸ்லிம், அபுதாவூத், திர்மிதீ, அஹ்மத்
நபி (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியாக இருந்திருந்தாலோ, இந்தப் பிரார்த்தனையை அடிக்கடி செய்திருக்க வேண்டியதில்லை. ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது இதை சொல்பவர்களின் நிலை என்ன ?
நூரே முஹம்மதியா எனறு கூறித் திருபவர்களின் நிலை என்ன? அதையும் அல்லாஹ்வின் தூதரே தெளிவுபடுத்துகிறார்கள்.
எவன் என்மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்கிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் . இந்த நபிமொழி இடம்பெறாத ஹதீஸ் நூலே இல்லை.
முதவாதிர் என்ற அந்தஸ்து பெற்ற ஹதீஸ்களில் முதலிடத்தை வகிக்கின்ற ஹதீஸ் இது. இதற்கு ஆதாரம் குறிப்பிடக் கூற வேண்டாத அளவு , எல்லா ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை மீறி துணிந்து இப்படிப் பொய்யைப் பிர்ச்சாரம் செய்வர்கள் எங்கே செல்ல விரும்புகின்றனர்?
நபி (ஸல்) அவர்களின் உண்மையான தனி சிறப்புக்களைச் சொல்லவே நேரம் போதவில்லை. அவர்களின் ஒழுக்கம், நேர்மை, தூய்மையான அரசியல், சிறந்த இல்லறம், வணக்க வழிபாடு, அவர்களின் வீரம் , தியாகம், போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள். மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரகணத்திற்கு ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டிய போது நபி (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக்கண்டித்துள்ள வரலாறு ( புஹாரி, முஸ்லிம்) எவரும் அறிந்த ஒன்று
இந்தக் கதையை அடிப்படையாக வைத்து நபி (ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது என்ற துணைக்கதை வேறு. இதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது. இது போன்ற பொய்களைக் கூறி நரகத்திற்கு ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்.
17.04.2013. 23:30 PM
ஒளியிலிருந்து நபிகள் படைக்கப்பட்டார்களா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode