Sidebar

25
Thu, Apr
17 New Articles

பெண்களின் கால்களில் முத்தமிட்ட போப்

கிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பெண்களின் கால்களில் முத்தமிட்ட போப்

பெண்களை தேவாலயப் பணிகளில் ஈடுபடுத்த புதிய யுக்தி(?)

கடந்த மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறித்தவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளிக்கு முந்தைய தினமான புனித வியாழன் தினத்தை அனுசரித்தார்கள். ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய தினம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் விருந்து நிகழ்ச்சியில் தனது 12 சீடர்களின் கால்களைக் கழுவி ஏசு முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூரும் புனித வியாழன் வழிபாடு வாடிகன் நகரத்தில் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி ஆண்டுதோறும் போப் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள போப் பிரான்சிஸ் இது வரையிலான மரபுகளை மாற்றினார்.

பெண்களின் கால்களை முத்தமிட்டு புதிய புரட்சி(?):

இதற்கு முன்பு போப்பாக இருந்தவர்களெல்லாம் ஆண்களுடைய கால்களில் தான் முத்தமிட்டனர். ஆனால் புதிய போப்போ இரண்டு பெண்களது கால்களை முத்தமிட்டு சரித்திர சாதனை புரிந்துள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

பெரிய வியாழன் என்று சொல்லப்படக்கூடிய தினமான மார்ச் 28ஆம் தேதி ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்த 14 வயது முதல் 21 வயதுள்ள இளம் குற்றவாளிகளுக்கும், அங்கிருந்த 2 இளம்பெண்களுக்கும் அவர்களது பாதங்களை கழுவி போப் முத்தமிட்டார்.

இதற்கு முன்னர் இருந்த எந்த போப்பும் பெண்களது பாதங்களைக் கழுவி முத்தமிட்டதில்லை. முதல் முறையாக சர்ச் மரபுகளுக்கு மாறாக போப் பிரான்சிஸ் செய்தது சரியா தவறா என்று விவாதம் தற்போது எழுந்துள்ளது.

கேள்விக்குரிய ஒரு முன்னுதாரணத்தை போப் ஏற்படுத்தி இருக்கிறார் என்று போப் செய்த செயலை எதிர்ப்பவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஆனால், சர்ச் நடவடிக்கைகளில் பெண்களையும் இடம்பெறச் செய்ய போப்பின் இந்த முத்த நடவடிக்கை உதவும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முத்தம் கொடுத்துவிட்டு ஆற்றிய உரை:

பெண்களது காலில் முத்தம் கொடுத்துவிட்டு போப் பேசியதாவது :

உங்கள் பாதங்களைக் கழுவியதன் அர்த்தம், நான் உங்களுக்காக சேவை செய்யவே இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள்.

இயேசு இதைத்தான் நமக்கு கற்றுத் தந்தார். அதைத்தான் நான் செய்கிறேன். ஒரு போதகராக, ஒரு பிஷப்பாக மனப்பூர்வமாக நான் இதை செய்கிறேன். இதற்கு விளக்கம் தேவையில்லை. சேவை செய்ய வேண்டியது என் கடமை என்று தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதாவது பெண்களுக்கு யாராவது சேவை செய்ய விரும்பினால் அவர்களது கால்களைக் கழுவி முத்தமிட வேண்டும் என்பதுதான் புதிய போப்பின் புதிய அறிவுரை.

போப் மீது குற்றச்சாட்டு :

இயேசு தனது ஆண் சீடர்களின் கால்களைத் தான் கழுவினாரே தவிர, பெண்களுடைய கால்களைக் கழுவி பெண்களுக்கு முத்தம் கொடுக்கவில்லை. இயேசுவுடைய வழிகாட்டுதலை மீறி போப் பெண்களது காலில் முத்தம் கொடுத்துள்ளார். இது தவறான அணுகுமுறை என்று கிறித்தவர்களில் ஒரு தரப்பினர் பகிரங்க குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர்.

ஆனால் இவர்களது குற்றச்சாட்டுகளுக்கு அசராத போப் அவர்களோ, பெண்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தத்தான் பெண்களது கால்களையும் கழுவி அவர்களுக்கு முத்தம் கொடுத்தேன் என்ற கருத்துப்பட விளக்கமளித்துள்ளார்.

பெண்களுக்கு போப் ஆண்டவர் முத்தம் கொடுத்தது தவறு என்று இவரை எதிர்க்கக்கூடியவர்கள் வைக்கக்கூடிய மற்றொரு வாதம் ரொம்ப நகைச்சுவையானதும், அதே நேரத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாக உள்ளது.

விசித்திர விளக்கம் :

போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது இயேசுவுடைய வழிகாட்டுதலில் இல்லாத செயல். எனவே போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது தவறு. போப் ஆண்டவருக்கு பெண்கள் முத்தம் கொடுத்தால் அது தவறில்லை.

மேற்கண்ட விளக்கத்தைக் கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளனர். காரணம் என்னவென்றால் ஏசுவுக்கு ஒரு பெண் தைலம் பூசிவிட்டு ஏசுவுடைய பாதங்களை முத்தமிட்டுள்ளார். அதை ஏசுவுடைய சீடர்கள் கண்டித்தபோது, முத்தம் கொடுத்த பெண்ணை கண்டித்த சீடர்களை ஏசு கண்டித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது இது போன்று எனக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா? இல்லையே! இந்தப் பெண் எனக்கு முத்தம் கொடுப்பதை நீங்கள் ஏன் தடுக்கின்றீர்கள்? இப்படி அவள் எனக்கு தைலத்தைப் பூசிவிட்டு, முத்தம் கொடுத்த காரணத்தால் அவளது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன என்று இயேசு கூறியுள்ளார்.

(பார்க்க : லூக்கா அதிகாரம் 7 : 27 முதல் 48 வரை, யோவான் அதிகாரம் 12 : 3முதல் 8 வரை)

அதாவது பெண்கள் பாதிரியார்களுக்கு தைலம் பூசி, அவர்களது பாதங்களில் முத்தம் கொடுத்தால் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஏசுவின் வழிகாட்டுதல். அதைவிடுத்துவிட்டு பாதிரியாராக இருக்கக்கூடியவர் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் என்பது தான் போப் ஆண்டவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஆழமான(?) கேள்வி.

பெண் அதிபருக்கு முத்தம் கொடுத்த போப்:

அது மட்டுமல்லாமல் புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்றவுடன் அர்ஜெண்டினாவின் பெண் அதிபர் கிரிஸ்டினா பெர்னான்டிஸ் கடந்த மார்ச் 18 ஆம் தேதி போப் ஆண்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அப்போது போப் ஆண்டவர் பெண் ஜனாதிபதிக்கு பல பரிசுகளை வழங்கினார். அத்தோடு பெண் ஜனாதிபதியைக் கட்டித்தழுவி முத்தத்தையும் பரிசாக வழங்கினார் போப்.

பின்னர் வெளியே வந்த பெண் ஜனாதிபதியோ, போப் எனக்கு முத்தம் கொடுத்தார். இதுவரை இப்படி நான் எந்த போப்பிடமும் முத்தம் பெறவில்லை என்று பெருமையாக பத்திரிக்கையாளர்களிடத்தில் தெரிவித்தார். இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தீமையோடு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம் என்று இயேசு சொன்ன உதாரணத்தைக் கூறி நான் எந்தத் தீமையையும் எதிர்க்க மாட்டேன்; தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன் என்று போப் ஆண்டவர் உரை நிகழ்த்தியதன் அர்த்தம் இதுதானா என்று பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நீங்கள் செய்யக்கூடிய அநியாயங்களைத் தட்டிக் கேட்கமாட்டேன்; அது போல நான் செய்யக்கூடிய இது போன்ற சேட்டைகளை நீங்களும் கண்டுகொள்ளக் கூடாது; கண்டிக்கக் கூடாது; கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்பதைத் தான் புதிய போப் சூசகமாகச் சொல்லியுள்ளாரோ என்று அனைவரும் சந்தேகப்படுகின்றனர்.

அதே நேரத்தில் போப் ஆண்டவரிடத்தில் மற்றுமொரு கேள்வியையும் நாம் கேட்க விரும்புகின்றோம். தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்று சொல்லும் தாங்கள் தீமைகளைச் செய்தவரை சிறையில் தள்ளி அழகு பார்க்கலாமா?

தீமைகளைக் கண்டிக்கக் கூடாது என்றால் அந்த தீமைகளைச் செய்தவர்களை சிறையிலும் அடைக்கக் கூடாதல்லவா? அவர்களது கால்களைக் கழுவி அவற்றை முத்தமிடுவது அவர்களுக்குச் செய்யும் சேவையா? அல்லது திருடர்களை விடுதலை செய்து சிறைக் கொட்டடிகளை ஒழித்துக் கட்டுவது அவர்களுக்கு உதவுவதா என்பதை போப் முதலில் விளக்க வேண்டும்.

ஆகமொத்தத்தில் போப் செய்யும் அத்தனை செயல்களும் பைபிளுக்கும், இயேசுவின் போதனைகளுக்கும் மாற்றமாக உள்ளதோடு மட்டுமல்லாமல் பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.

05.04.2013. 2:35 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account