பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?
ஃபஸ்லான், இங்கிலாந்து
பதில் :
முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் பகுதிகளில் அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.
இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாக அவர்கள் கருதும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும் என்பதன் காரணமாகவே இது குறித்து கேள்விகள் எழுகின்றன.
நம்முடைய மார்க்க வரம்பை மீறாமலும், அவர்கள் தவறாக எண்ணாமலும் இருக்கும் வகையிலான வழிமுறைகள் இருந்தால் அதைக் கடைப்பிடிப்பதில் தவறு இல்லை.
இஸ்லாம் மார்க்கத்துக்கு இப்ராஹீமின் மார்க்கம் என்று மற்றொரு பெயரை அல்லாஹ் சூட்டியுள்ளான். அவர்களின் வாழ்க்கையில் நமக்கு முன்மாதிரி உள்ளது என்றும் அல்லாஹ் கூறுகிறான். அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது
பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார். நான் நோயாளி எனக் கூறினார். அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.
திருக்குர்ஆன் 37:89
இவ்வசனத்தில் நான் நோயாளியாக இருக்கிறேன் என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.
இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
(பார்க்க: முஸ்லிம் 4371)
இப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாவிட்டாலும், இறைவனுக்காக நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.
இது போல் ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது.
முஸ்லிம் அல்லாத மக்கள் இவ்வுலகில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய நமக்கு அனுமதி இருக்கிறது. அது போல் அவர்கள் நேர்வழிக்கு வந்து மறுமையில் வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனை செய்வதற்கும் அனுமதி இருக்கிறது.
இந்த அனுமதிக்கு உட்பட்டு நல்வழி நடந்து எல்லா நாட்களும், எல்லா வளமும் உங்களுக்குக் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்பது போன்ற கருத்தைத் தரும் வார்த்தைகளைத் தேர்வு செய்து கூறினால் அவர்கள் அதை வாழ்த்து என்று புரிந்து கொள்வார்கள். நாமும் வரம்பு மீறியவர்களாக மாட்டோம்.
இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பயன்படுத்தும் வாழ்த்துக்களை விட இது அவர்களுக்கு அதிக மனநிறைவைத் தரும். நம்முடைய துஆ அல்லாஹ்வால் ஏற்கப்பட்டால் அவர்கள் இஸ்லாத்தில் ஈர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு.
மேலும் அந்தப் பண்டிகை தினத்தில் மட்டும் இன்றி அவ்வப்போது இது போல் பயன்படுத்திக் கொண்டால் பண்டிகைக்காக வாழ்த்தியதாக ஆகாது.
23.01.2010. 18:18 PM
பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode