Sidebar

25
Mon, Sep
0 New Articles

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா?

விழா கேளிக்கை கொண்டாட்டம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா?

மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசைக்கருவிகள் இசைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்கள்.

இசைக் கருவிகள் கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசைக்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்.

எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசைக் கருவிகள் கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்யும் போது இசைக் கருவிகள் கூடாது என ஏற்கனவே நாம் முன்னர் எடுத்த முடிவே சரியானது என்பது உறுதியானது.

இசை கூடாது என்று கூறுவோர் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

صحيح البخاري

5590 – وقال هشام بن عمار: حدثنا صدقة بن خالد، حدثنا عبد الرحمن بن يزيد بن جابر، حدثنا عطية بن قيس الكلابي، حدثنا عبد الرحمن بن غنم الأشعري، قال: حدثني أبو عامر أو أبو مالك الأشعري، والله ما كذبني: سمع النبي صلى الله عليه وسلم يقول: " ليكونن من أمتي أقوام، يستحلون الحر والحرير، والخمر والمعازف، ولينزلن أقوام إلى جنب علم، يروح عليهم بسارحة لهم، يأتيهم – يعني الفقير – لحاجة فيقولون: ارجع إلينا غدا، فيبيتهم الله، ويضع العلم، ويمسخ آخرين قردة وخنازير إلى يوم القيامة

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) கூறுகிறார்:

அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் இருவரும் என்னிடம் பொய் சொல்லவில்லை. அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டோம் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் ஏழைகள் தமது தேவைக்காக செல்ல்லும் போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

நூல் : புகாரி 5590

விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்டவைகளுடன் இசைக்கருவிகளும் இந்த ஹதீஸில் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

இவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள் ​ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் இசைக் கருவிகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பிரச்சனை உள்ளதாகக் கூறி இசைக் கருவிகள் கூடும் என்போர் வாதிடுகிறார்கள்.

இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத் தன்மை மாத்திரம் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.

ஒருவர் நல்ல மனனத்தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பிவிட்டால் அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டுவிட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது.

ஒரு ஹதீஸை அறிவிப்பவர் மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா? அல்லது பின்பு அறிவித்ததா? என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.

تهذيب الكمال للمزي (30/ 248) وقال عبد الرحمان بن أبي حاتم (3): سمعت أبي يقول: هشام ابن عمار لما كبر تغير فكل ما دفع إليه قرأه، وكلما لقن تلقن، وكان قديما أصح، كان يقرأ من كتابه

மேலுள்ள ஹதீஸில் இடம் பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறருக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று அபூஹாதம் கூறியுள்ளார். அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அவற்றை அப்படியே இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 30, பக்கம்: 242

இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்திகள் தான் சரியானது என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா? அல்லது பின்பு அறிவித்தாரா என்று தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை இசைக் கருவிகள் கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.

இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

السنن الكبرى للبيهقي

6100 – أَخْبَرَنَا أَبُو عَمْرٍو مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَدِيبُ , أنبأ أَبُو بَكْرٍ الْإِسْمَاعِيلِيُّ، أَخْبَرَنِي الْحَسَنُ يَعْنِي ابْنَ سُفْيَانَ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا صَدَقَةُ يَعْنِي ابْنَ خَالِدٍ، ثنا ابْنُ جَابِرٍ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، حَدَّثَنِي أَبُو عَامِرٍ، أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ، وَاللهِ يَمِينًا أُخْرَى مَا كَذَبَنِي، أَنَّهُ سَمَعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ. وَأَخْبَرَنِي الْحَسَنُ أَيْضًا , ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، ثنا بِشْرٌ يَعْنِي ابْنَ بَكْرٍ، ثنا ابْنُ جَابِرٍ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ قَالَ: قَامَ رَبِيعَةُ الْجُرَشِيُّ فِي النَّاسِ فَذَكَرَ حَدِيثًا فِيهِ طُولٌ، قَالَ: فَإِذَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الْأَشْعَرِيُّ، قُلْتُ: يَمِينٌ حَلَفْتُ عَلَيْهَا , قَالَ: حَدَّثَنِي أَبُو عَامِرٍ، أَوْ أَبُو مَالِكٍ، وَاللهِ يَمِينٌ أُخْرَى حَدَّثَنِي أَنَّهُ سَمَعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ " قَالَ: فِي حَدِيثِ هِشَامٍ: " الْخَمْرَ وَالْحَرِيرَ " , وَفِي حَدِيثِ دُحَيْمٍ: " الْخَزَّ، وَالْحَرِيرَ، وَالْخَمْرَ، وَالْمَعَازِفَ، وَلَيُنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ تَرُوحُ عَلَيْهِمْ سَارِحَةٌ لَهُمْ فَيَأْتِيهِمْ طَالِبُ حَاجَةٍ فَيَقُولُونَ: ارْجِعْ إِلَيْنَا غَدًا، فَيُبَيِّتُهُمْ فَيَضَعُ عَلَيْهِمُ الْعَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيمَةِ ". قَالَ دُحَيْمٌ: " وَيَمْسَخُ مِنْهُمْ آخَرِينَ "، ثُمَّ ذَكَرَهُ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ، قَالَ: وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ فَذَكَرَهُ، وَذَكَرَ فِي رِوَايَتِهِ الْخَزَّ

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா, பாகம்: 3, பக்கம்: 272

இந்த ஹதீஸ் இரு வழிகளில் தனக்குக் கிடைத்ததாக பைஹகீ கூறுகிறார். ஒன்று ஹிஷாம் பின் அம்மார் வழியாகக் கிடைத்தது; மற்றொன்று பிஷ்ர் பின் அபீ பக்ர் வழியாகக் கிடைத்தது என்று இதில் பதிவு செய்துள்ளார்.

பிஷ்ர் பின் அபீ பக்ர் வழியாக அறிவிக்கும் எல்லா அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக உள்ளனர்.

எனவே பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் மார்க்கத்தில் இசைக் கருவிகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது.

பைஹகீயில் உள்ள இந்த சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.

எனவே இசைக் கருவிகள் இசைப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும் என்பதே சரியான கருத்தாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account