Sidebar

10
Tue, Dec
4 New Articles

ஸஃபர் மாதம் பீடையா?

மூட நம்பிக்கைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

ஸஃபர் மாதம் பீடையா?

முஸ்லிமல்லாத மக்கள் சில மாதங்களையும், சில நாட்களையும் சில நேரங்களையும் கெட்டவை என்று கருதுகின்றனர். அவர்களைக் காப்பியடித்த மார்க்கம் அறியாத முஸ்லிம்கள் ஸஃபர் எனும் மாதத்தை பீடை மாதம் என்று கருதி வருகின்றனர்.

இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.

மா இலைகளில் ஸலாமுன் கவ்லன் மின் ரப்பிர் ரஹீம் என்ற வசனத்தை எழுதி அதைக் கரைத்துக் குடிக்கிறார்கள். உடலிலும் பூசிக் கொள்கிறார்கள்.

இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து அரபுகள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதி வந்தனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) நிராகரிக்கும் விதமாக ஷவ்வால் மாதத்தில் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

صحيح مسلم

73 - (1423) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَاللَّفْظُ لِزُهَيْرٍ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «تَزَوَّجَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ، وَبَنَى بِي فِي شَوَّالٍ، فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟»، قَالَ: «وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ»،

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வாலில் திருமணம் செய்தார்கள். ஷவ்வாலில் தான் என்னோடு இல்லறத்தைத் துவக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எந்த மனைவியர் என்னை விட நபிகளுக்கு விருப்பமானவராக இருந்தார்? என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.

صحيح البخاري

4826 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: " يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ

ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : புகாரி 4826

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பீடை நாட்கள் உண்டு எனக் கூறுவோர் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம்.

திருக்குர்ஆன் 54:19

இவ்வசனத்தில் பீடை நாளில் ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இஸ்லாத்தில் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் உள்ளன என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை அறிவதற்கு முன்னால் நல்ல நாள், கெட்ட நாள் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சகுனம் பார்த்தல், நாள் நட்சத்திரம் பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.

நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக்கூடியதும் கிடையாது. முற்றிலும் தீமை பயக்கக்கூடியதும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ, துக்கமோ, நிம்மதியின்மையோ யாருக்கும் ஏற்படக் கூடாது. இப்படி ஒரு நாள் வரலாற்றில் உண்டா என்றால் இல்லவே இல்லை.

எந்த நாள் கெட்ட நாள் என்று சிலரால் ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம் பெற்றவர்களும், பொருள் வசதி பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி) படுகொலை செய்யப்பட்டார்கள்.

மூஸா நபி காப்பாற்றப்பட்டதால் அதை நல்ல நாள் என்பதா?

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால் அதைக் கெட்ட நாள் என்பதா?

நாட்களுக்கும், நல்லது கெட்டது ஏற்படுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

'இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம் என்று 3:140 வசனம் கூறுகிறது.

சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும். மேல்பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.

நன்மை தீமை யாவும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன் என்ற உறுதிமொழி எடுத்த முஸ்லிம்கள் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதிமொழிக்கு முரணாகும்.

ஒரு நாள், நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ் தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர எவராலும் அறிய முடியாது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்ல நாட்கள் என்று கூறவில்லை. அல்லாஹ்வின் தூதரும் கூறவில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால் எப்படி அறிய முடியும்?

இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவன் எழுதியதைப் பார்த்து அல்லது அவன் சொல்வதைக் கேட்டு நல்ல நாட்களையும், கெட்ட நாட்களையும் தீர்மானிக்கிறார்கள். நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்? இதைச் சிந்திக்க வேண்டும்.

வருங்காலத்தில் நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும், சோதிடமும் ஒன்று தான். ஒரு மந்திரவாதியிடம்(?) அல்லது மத குருவிடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.

صحيح مسلم

125 - (2230) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ نَافِعٍ، عَنْ صَفِيَّةَ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً»

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 4137

مسند أحمد

9536 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَوْفٍ، قَالَ: حَدَّثَنِي خِلَاسٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَالْحَسَنِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ أَتَى كَاهِنًا، أَوْ عَرَّافًا، فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ " (2)

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.

நூல் : அஹ்மத் 9171

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்கள், மதகுருமார்களின் நிலைமையைப் பாருங்கள்! அவர்கள் வறுமையிலும், தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும், மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம் காணலாம்.

அவர்கள் தங்களுக்காக விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிலிருந்தே தெளிவாகிறது.

முஸ்லிம்கள் எந்த நாளிலும், எந்த நேரத்திலும், எந்த நல்ல காரியங்களையும் செய்யலாம். நாள் நட்சத்திரம், சகுனம், ஜோதிடம் ஆகிய அனைத்திலிருந்தும் விலகிக் கொள்வது அவசியமாகும்.

அப்படியானால் பீடை நாளில் ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டார்கள் என்று இவ்வசனம் கூறுவது ஏன்?

ஒரு நாளில் ஒரு மனிதனுக்குக் கேடு ஏற்பட்டால் அவனுக்கு அது கெட்ட நாள் என்று சொல்லலாம். அந்த அடிப்படையில் தான் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கருத்தில் தான் சொல்லப்பட்டது என்பதற்கு இவ்வசனத்திலேயே ஆதாரம் உள்ளது.

இவ்வசனத்தின் கருத்துப்படி ஆது சமுதாயத்தில் இருந்த கெட்டவர்கள் மட்டும் தான் அழிக்கப்பட்டனர். ஹுது நபியும், நன்மக்களும் பாதுகாக்கப்பட்டனர். இந்த அடிப்படையில் ஹூது நபிக்கு இது கெட்ட நாளாக இருக்கவில்லை. எதிரிகள் அழித்தொழிக்கப்பட்டதால் அது ஹூது நபிக்கு நல்ல நாளாகவே இருந்தது.

நாட்களால் நன்மை தீமை ஏற்படாது என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது. அந்த நாட்களே பீடை நாட்கள் என்றால் ஹூது நபி உள்ளிட்ட அனைவருக்கும் அழிவு ஏற்பட்டிருக்கும்.

நல்ல நாள், கெட்ட நாள் என்பதைப் பிற மதத்தவர் பயன்படுத்துவதற்கும், இஸ்லாம் பயன்படுத்துவதற்கும் முக்கிய வேறுபாடு உள்ளது.

பிற மதத்தவர்கள் ஒரு நாளை நல்ல நாள் என்று எந்தக் கருத்தில் சொல்கிறார்கள்? அந்த நாளில் நல்ல காரியத்தைச் செய்தால் அது சிறந்து விளங்கும்; நல்லது செய்கின்ற தன்மை அந்த நாளுக்கே உண்டு என்ற கருத்தில் கூறுகின்றனர். கெட்ட நாள் என்றால் அந்த நாளில் செய்கின்ற எந்தக் காரியமும் உருப்படாது என்ற கருத்தில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இஸ்லாம், இந்தப் பொருளில் இச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ ஒரு கேடு ஏற்பட்ட பிறகு அந்தக் கேடு ஏற்பட்ட மனிதனுக்கு அது கெட்ட நாள்; அனைவருக்கும் கெட்ட நாள் இல்லை என்ற கருத்தில் இஸ்லாம் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றது.

பிற மதத்தவர்களைப் போன்று, ஒரு நாளை நல்ல நாள், கெட்ட நாள் என்று முன் கூட்டியே இஸ்லாம் தீர்மானிப்பதில்லை.

இவ்வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், இன்னொரு வசனத்தில் (41:16) ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்களைக் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்டநாள் என்பதை எவ்வாறு கண்டுபிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account