Sidebar

20
Fri, Sep
4 New Articles

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

அல்லாஹ்வை நம்புதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி:

அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?

- அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.இ.

பதில்:

இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இது தமிழ்மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். பலரைக் குறிப்பதற்கு ஹூம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.

அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூவ (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூம் (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் ஹூவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஹூவ என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

ஹூவ (அவன்) என்று குறிப்பிடும் போது பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் HE என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. பலரைக் குறிப்பிடுவதற்கு THEY என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக THEY என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை.

இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.

ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கத்துக்கு வந்தது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது.

மரியாதை கொடுக்காத போது அவன் எனவும்,

மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும்,

அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன் என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான், கம்பன் கூறுகிறான், ராமன் வில்லை உடைத்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

அது போலவே மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது அவன் என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது நீ என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்களைக் குறிப்பிடும் போது அவர்கள் என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம். கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம்.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம்.

எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில் பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும், கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம் அறவே இல்லை.

கடவுளை அவன் என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு காரணத்துக்காகவும் முஸ்லிம்கள் இறைவனை அவன் என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர்.

அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.

அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.

மரியாதையை விட இறைவன் ஒரே ஒருவன் என்று கூறுவது தான் முக்கியமானது என்பதால் அல்லாஹ்வை அவன் என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.

அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.

மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் அவன் எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account