தஹஜ்ஜுத் தொழுகை எவ்வாறு தொழுவது?
தஹஜ்ஜத் தொழுகையை எவ்வாறு தொழுவது? அதில் என்ன சூரா ஓத வேண்டும்?
சபீர் கான்.
பதில்:
இரவில் இஷாவுக்குப் பிறகு நிறைவேற்றும் தொழுகைகளுக்கு இரவுத் தொழுகை என்று பெயர். இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். இதை நிறைவு செய்யும் போது ஒரு ரக்அத்தைத் தொழுது ஒற்றைப்படையாக முடிக்க வேண்டும்.
இதே தொழுகையை இரவின் இறுதியில் தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் (இரவின் கடைசிப் பகுதியில் நிறைவேற்றப்படும் தொழுகை) என்று சொல்லப்படுகின்றது. தஹஜ்ஜத் தொழுகையில் நேரம் மட்டுமே வேறுபடும். தொழும் முறையில் வேறுபாடு இல்லை.
473 حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلَاةُ اللَّيْلِ فَقَالَ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْت رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, "இரவுத் தொழுகை எவ்வாறு?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழவேண்டும்; சுப்ஹுத் தொழுகையை நீங்கள் அஞ்சினால் (கடைசியில்) ஒற்றையான ஒரு ரக்அத் தொழுது கொள்வீர்களாக! நீங்கள் தொழுது முடித்தவற்றை அது ஒற்றையாக (வித்ராக) ஆக்கிவிடும்'' என்றார்கள்.
நூல் : புகாரி 473
இத்தொழுகையை இரவின் இறுதியில் தொழுவது சிறப்பு.
1145 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1145
இந்தத் தொழுகையில் குறிப்பிட்ட சூராக்களைத்தான் ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே எந்த சூராவையும் ஓதிக்கொள்ளலாம்.
فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا (20)73
குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.
திருக்குர்ஆன் 73 : 20
தஹஜ்ஜுத் தொழுகை எவ்வாறு தொழுவது?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode