Sidebar

12
Thu, Dec
3 New Articles

தனியார் ஹஜ் சர்வீஸ் கொள்ளை

ஹஜ்ஜின் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தனியார் ஹஜ் சர்வீஸ் கொள்ளை

ஹஜ் செய்வதற்கு அரசு மூலமாக சென்றால் என்ன செலவாகும்? இதற்கான வழி முறைகள் என்ன? தனியார் மூலம் செல்வது நல்லதா?

ஆசிக், ஊட்டி

இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின் மார்க்கப் பற்றை மூலதனமாகக் கொண்டு கொள்ளை அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறைந்த செலவிலும், பாதுகாப்பான முறையிலும் ஹஜ் செய்ய மத்திய, மாநில அரசுகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளன என்பதை ஹஜ் பயணிகள் சரியான முறையில் அறிந்து கொள்ளாததும், ஹஜ் தொழில் செய்யும் தனியார்களின் மனதை மயக்கும் போலி விளம்பரங்களால் ஈர்க்கப்படுவதும் தான் இந்த நிலைக்குக் காரணம்.

முதலில் இந்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஹஜ் கமிட்டி மூலம் ஒருவர் ஹஜ் செய்ய விரும்பினால் அவர், குரூப் பச்சை, குரூப் வெள்ளை, குரூப் அஸீஸிய்யா ஆகிய மூன்று தரவரிசைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

பச்சை எனும் முதல் வகுப்பில் பயணம் செய்ய விரும்புபவர் 1,30,000 (ஒரு லட்சத்து முப்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

வெள்ளை எனும் இரண்டாம் வகுப்பைத் தேர்வு செய்பவர் 1,20,000 (ஒரு லட்சத்து இருபதினாயிரம்) ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

அஸீஸிய்யா எனும் மூன்றாம் வகுப்பைத் தேர்வு செய்பவர் 1,10,000 ( ஒரு லட்சத்து பத்தாயிரம்) ரூபாய்கள் செலுத்த வேண்டும்.

இந்த மூன்று வகுப்புக்களிலும் வசதிகளைப் பொருத்தவரை எந்த வேறுபாடும் இல்லை.

ஆறு பேருக்கு ஒரு அறை என்ற அடிப்படையில் தங்குவதற்கான வசதி செய்து தரப்படும்.

எந்த விதமான நோய் ஏற்பட்டாலும் அவர்களுக்கு இலவச மருத்துவ வசதி செய்து தரப்படும்.

மேலும், நாம் செலுத்திய அந்தக் கட்டணத்தில் நம்முடைய உணவுக் கட்டணமும் அடக்கம்.

எனவே ஹஜ் பயணிகள் மக்கா சென்ற உடன் அவர்கள் செலுத்திய பணத்தில் 2000 ரியால்கள் (சுமார் 27 ஆயிரம் ரூபாய்கள்) ஹஜ் கமிட்டியின் சார்பில் திருப்பித் தரப்படும். அது ஹஜ் செய்து முடிக்கும் வரை நம்முடைய அனைத்துச் செலவுகளுக்கும் தாரளமாக போதுமானதாகும். சாப்பாடு ஒரு பிரச்சனையே இல்லை.

மூன்று வகுப்புக்களுக்கு இடையே கட்டண வித்தியாசம் வசதிகளின் ஏற்படும் வித்தியாசத்துக்காக அல்ல. அனைவருக்கும் ஒரே மாதிரியான வசதிகளே செய்து தரப்படும்.

அதிகக் கட்டணம் செலுத்தி பச்சை எனும் பிரிவை தேர்வு செய்தவர்கள் ஹரம் ஷரீபில் இருந்து ஐநூறு மீட்டர் தொலைவிற்குள் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

இரண்டாம் வகுப்புக்கு சற்று தொலைவில் தங்கும் இடம் தரப்படும்.

மூன்றாம் வகுப்புக்கு அஸீஸிய்யா எனும் தூரமான பகுதியில் தங்கும் இடம் தரப்படும்.

ஆனாலும் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஹரம் வருவதற்கு இலவச பஸ்கள் உள்ளன.

எனவே தூரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாயில் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம்.

ஹரமுக்கு அருகில் தான் தங்க வேண்டும் என்று ஆசைப்படுவோர் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாயில் மன நிறைவுடன் ஹஜ் செய்யலாம்.

ஆனால் ஹஜ் தொழில் செய்யும் தனியார்கள் சுமார் நான்கு லட்சம் முதல் நான்கு லட்சத்தி ஐம்பதினாயிரம் வரை கட்டணம் பெற்றுக் கொள்கின்றனர்.

மேலும் கடைசி நேரத்தில் ரியால் மதிப்பு கூடி விட்டது. பெட்ரோல் விலை கூடி விட்டது என்று பொருத்தமில்லாத காரணம் கூறி கடைசி நேரத்தில் பத்தாயிரம், இருபதாயிரம் என்று மேலதிகமாக இன்னொரு கொள்ளையும் அடிக்கின்றனர். ஹாஜிகளுக்கு வேறு வழி இல்லை என்பதாலும், எவ்வளவு கேட்டாலும் தந்து விடுவார்கள் என்பதாலும், இந்தப் பலவீனத்தை ஆதாயமாக்கிக் கொள்கின்றனர்.

தனியார் ஹஜ் கொள்ளையர்கள் மூலம் ஒருவர் ஹஜ் செய்யும் செலவில் கணவன்,மனைவி, இரண்டு பிள்ளைகள் என நான்கு பேர் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்து விடலாம். அந்த அளவுக்கு இவர்கள் அடிக்கும் கொள்ளை அமைந்துள்ளது.

இவர்கள் இரண்டு காரணங்களைக் கூறித்தான் மக்களைக் கவர்கிறார்கள்.

ஒன்று ஹரமுக்கு அருகில் உங்களுக்கு தங்கும் இடம் என்பார்கள்.

ஆனால் ஹரமுக்கு அருகில் தங்குமிடம் பெறுவதற்கு ஹஜ் கமிட்டி மூலம் சென்றவர்களுக்குத் தான் முன்னுரிமை என்பது மக்களுக்குத் தெரிவதில்லை.

ஹஜ் கமிட்டி மூலம் ஹாஜிகள் அழைத்துச் செல்லப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்னால் தனியார் ஹஜ் தொழில் செய்பவர்கள் ஹாஜிகளை முன் கூட்டியே அழைத்துச் செல்வார்கள். அப்போது ஹரமிற்கு அருகில் இருக்கும் விடுதிகள் காலியாக இருப்பதால் அந்த நாட்களில் மட்டும் ஹரமுக்கு அருகில் உள்ள விடுதிகளில் சில நாட்கள் தங்க வைப்பார்கள்.

ஹஜ் கமிட்டி மூலம் வரும் ஹாஜிகள் மக்கா வரத் துவங்கியதும் தனியார்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இடத்தைக் காலி செய்து விட வேண்டும். ஹஜ்ஜுக்கு நெருக்கமான நாட்களில் ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் தான் ஹரமுக்கு அருகில் தங்க வைக்கப்படுவார்கள்.

தனியார் மூலம் அழைத்து வரப்பட்டவர்களை ஹரமுக்கு அருகில் இருந்து அப்புறப்படுத்தும் போது மதீனாவின் சிறப்புக்களைக் கூறி அதற்காக ஹாஜிகளை மதீனாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மதீனாவில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஹஜ் கிரியை ஆரம்பமாகும் போது தான் இவர்களை மினாவுக்கு அழைத்து வருவார்கள். அதன் பின்னர் ஹரமுக்குத் தொலைவில் உள்ள தங்கும் விடுதிகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள்.

ஹரமுக்கு அருகில் என்று சொல்வது யாரும் வராத நாட்களில் ஓரிரு நாட்கள் தங்க வைப்பது தான். இதற்குத் தான் மும்மடங்கு கொள்ளை அடிக்கப்படுகிறது.

சில அயோக்கியர்கள் இதிலும் மோசடி செய்து சொன்ன சொல்லை மீறி, சில நாட்கள் கூட ஹரமுக்கு அருகில் உள்ள விடுதிகளில் தங்க வைக்காமல் அதிக தொலைவில் உள்ள அஸிஸிய்யாவில் தங்க வைத்து அதிக ஆதாயம் பார்த்து விடுவார்கள்.

அடுத்ததாக சுவையான சாப்பாடு என்பது இவர்கள் வீசும் மாய வலை.

ஹஜ் கமிட்டி திருப்பித் தரும் 2000 ரியாலில் அதே சுவையான சாப்பாட்டை நாம் சாப்பிட முடியும். ஹஜ் நேரத்தில் மந்தம் ஏற்படுத்தும் சாப்பாட்டைப் போட்டு சோம்பலாக்குவதற்குத் தான் இவ்வளவு பெரிய கொள்ளை அடிக்கப்படுகிறது.

மத்திய அரசிடம் சட்டப்படி அனுமதி பெற்று ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்பவர்கள் அடிக்கும் கொள்ளை இது. இவர்கள் என்ன தான் கொள்ளை அடித்தாலும் உறுதியாக ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

ஆனால் இவர்களையும் மிஞ்சிய கொள்ளையர்களும் உள்ளனர். இவர்கள் ஹஜ் சர்வீஸ் செய்வதற்கு முறையாக அரசிடம் அனுமதி பெறாதவர்கள். இவர்கள் ஹஜ் தொழில் நடத்தும் பெரிய நிறுவனங்களிடம் பேசி வைத்துக் கொண்டு ஒரு ஹாஜிக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் கமிஷன் பேசிக் கொண்டு தாங்களே ஹஜ் சர்வீஸ் நடத்த சட்டப்படி அனுமதி பெற்றது போல் மக்களிடம் ஏமாற்றி விளம்பரம் செய்வார்கள். பெரிய நிறுவனத்திடம் இரண்டு லட்சம் என்று பேசிக் கொண்டு மக்களிடம் நான்கு லட்சம் என்று கறந்து விடுவார்கள்.

அடுத்ததாக, பயணிகளை அழைத்துச் செல்வதிலும், விமான சேவையிலும் அடுத்த கொள்ளை அடிப்பார்கள். விமானத்தில் சென்னையில் ஏறி ஜித்தாவில் இறங்கினால் அதற்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். சென்னையில் ஏறி ஏதாவது நாட்டில் ஓரிரு நாட்கள் தங்கவைத்து, பிறகு இன்னொரு விமானத்தில் ஏற்றி ஜித்தாவுக்கு அனுப்பினால் அதற்குக் கட்டணம் குறைவு. இதற்கு டிரான்சிட் என்று சொல்லப்படுகிறது. ஹஜ் வியாபாரிகளில் பலர் இந்த வகையிலும் மக்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தி இதிலும் கொள்ளை அடிப்பார்கள்.

எப்படியும் அதிகக் கோட்டா கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பெரிய நிறுவனங்கள் இவர்களுடன் டைஅப் வைத்துக் கொள்ளும். பெரிய நிறுவனங்கள் எதிர்பார்த்தவாறு கூடுதலாக இடம் கிடைக்காவிட்டால் அவர்கள் தங்களிடம் நேரடியாகப் பதிவு செய்தவர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த டைஅப் கும்பலுக்கு அல்வா கொடுத்து ஹஜ் பயணிகள் ஹஜ் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

சட்டப்படி அனுமதி பெறாமல் பணத்தாசையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு ஹஜ் வணக்கத்தில் விளையாடும் கொள்ளைக் கூட்டம் மற்றொரு மோசடியிலும் ஈடுபடுவதுண்டு.

சில மாநிலங்களில் அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு மக்கள் சேர்வதில்லை. அவர்கள் தமிழக முஸ்லிம்கள் போல் ஏமாளிகள் அல்ல. ஹஜ் கமிட்டி மூலம் மட்டுமே அந்த மாநிலத்தவர்கள் ஹஜ் செய்வார்கள். இதனால் தனியாரின் கோட்டாக்கள் நிரம்புவது இல்லை. இப்படி மீதமாக உள்ள கோட்டாவைப் பிற மாநிலத்தில் உள்ள இது போன்ற கொள்ளையர்கள் மூலம் ஆள் பிடித்து நிரப்புவது வழக்கம்.

இத்தகைய பிராடுகள் மூலம் நாம் ஹஜ் செய்யும் கடமை நமக்கு இல்லை. முறையாக விண்ணப்பித்து ஹஜ் கமிட்டி மூலம் நமக்கு வாய்ப்பு கிடைத்தால் ஹஜ் கடமையாகும். வாய்ப்பு கிடைக்காவிட்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். மீண்டும் விண்ணப்பிக்கலாம். இரண்டு முறை குலுக்கலில் நமக்கு வாய்ப்பு இல்லாவிட்டால் மூன்றாம் முறை குலுக்கல் இல்லாமல் நமக்கு வாய்ப்பு கிடைத்து விடும்.

ஹஜ்ஜை வியாபாரமாக்கி குறைந்த செலவில் ஹஜ் செய்யும் உரிமைகளைப் பறித்து வரம்பு மீறிய கொள்ளைக்காரர்களுக்குத் துணை செய்யும் கடமை நமக்கு இல்லை.

இறையச்சத்திலும் நன்மையிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் உதவாதீர்கள் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறந்ததால் தான் இந்தப் பாதிப்பு.

ஹஜ்ஜை வியாபரமாக்கி இது போன்ற மோசடிகள் வளராமல் தடுக்க வேண்டுமானால் சமுதாயம் இவர்களுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது அவர்கள் மீதுள்ள கடமையாகும்.

ஆனால் இஸ்லாமியப் பத்திரிகைகளும், இஸ்லாமியத் தொலைக்காட்சிகளும் இவர்களின் பித்தலாட்டம் குறித்து வாய் திறக்க மாட்டார்கள். காரணம் ஹஜ் கொள்ளையர்கள் தான் இவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர். அதை இழக்க யாருக்கும் மனம் இல்லை.

இரு நூறு பேரை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் குறைந்தது ஒரு கோடி ரூபாய் லட்டு போல் லாபம் கிடைக்கும் போது அதில் சில ஆயிரங்களைப் பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுக்கு எளிதானது தான். எனவே தான் கொந்தளித்து குமுறி எழ வேண்டிய முஸ்லிம்கள் யாருக்கோ வந்த விருந்து என்பது போல் அலட்சியம் காட்டுகின்றனர். எலும்புத் துண்டுகளுக்கு விலை போகும் முஸ்லிம் ஊடகங்கள் தான் இந்த அயோக்கியத் தனத்தை அம்பலப்படுத்துவதில்லை.

ஹாஜிகளின் கண்ணீரும் அவர்களின் பத்துவாவும் இவர்களைச் சும்மா விடாது. வணக்கத்தை வியாபாரமாக்கும் அனைவரையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதைப் பிரசுரமாக வெளியிட்டு ஹஜ் பெயரால் நடக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம்.

உணர்வு 16:35

16.05.2012. 6:43 AM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account