Sidebar

27
Sat, Jul
5 New Articles

நம் செலவு போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுத்தால் போதுமா

ஜகாத்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

கேள்வி

வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா?

பதில்

திருக்குர்ஆன் (9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை.

செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல.

தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும். தேவைக்கு மேல் என்றால் ஒரு நாள் தேவையா? ஒரு மாதத் தேவையா? ஒரு வருடத் தேவையா? என்பது பற்றி பலரும் பலவாறாக விளக்கம் கூறிக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் இருக்கும் தந்திரத்தை இதன் மூலம் கையாள்வார்கள்.

ஒருவன் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு இது என் தேவைக்கு உரியது என்று கூறலாம். இன்னும் தனது தோட்டம், துரவு, கார், பங்களா ஆகிய அனைத்துமே தனது தேவைக்கு உரியது என்று வாதிட இந்தக் கருத்து வழி வகுக்கும்.

கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு கணவனை மகிழ்விக்கும் தேவைக்காக இதை வைத்துள்ளேன் என்று பெண்கள் கூறலாம்.

மொத்தத்தில் ஜகாத் என்பதே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.

صحيح البخاري

1463 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عَلَى المُسْلِمِ فِي فَرَسِهِ وَغُلاَمِهِ صَدَقَةٌ»

ஒருவருக்குச் சொந்தமான குதிரை, சொந்தமான அடிமை ஆகியவற்றுக்காக ஜகாத் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(நூல் : புகாரி 1463, 1464)

மார்ககத்தில் விதிவிலக்கு இருந்தால் இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள். ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு. இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது இன்றைய மதிப்பில் 50 முதல் 55 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

ஒருவரிடம் 40 ஆடுகள் அல்லது ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் அவர் செல்வந்தராவார் என்று இஸ்லாம் வரையரை செய்துள்ளது. இந்த வரையறை மூலம் ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார்.

சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 720 கிராம் வெள்ளிக்கான அளவுக்கு அவரிடம் பணமோ, பண்டபாத்திரங்களோ, இதர சொத்துக்களோ சேர்ந்து விட்டது என்றால் அந்த 720 கிராமுக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

720 கிராம் வெள்ளிக்கும் கீழ் கையிருப்பின் மதிப்பு இருந்தால் அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 720 கிராம் வெள்ளியின் மதிப்புக்கு பணம் உள்ளது என்றால் இவர் 720 கிராமுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account