Sidebar

18
Thu, Apr
4 New Articles

பள்ளிவாசலில் கிறித்தவர்கள் ஜெபம் செய்ய நபியவர்கள் அனுமதித்தார்களா?

பள்ளிவாசல் சட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பள்ளிவாசலில் சிலை வணக்கத்திற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்களா?

கிறித்தவ பாதிரிமார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்த போது அவர்கள் நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் தொழுகை நட்த்த அனுமதித்தார்கள் என்று ஒரு செய்தி உள்ளது.

இந்தச் செய்தி பொய்யானதும் இட்டுக்கட்டப்பட்டதுமாகும்.

அந்தச் செய்தி இதுதான்

عن محمد بن جعفر بن الزبير ، قَالَ: " لَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ ، فَدَخَلُوا عَلَيْهِ مَسْجِدَهُ حَيْنَ صَلَّى الْعَصْرَ ، عَلَيْهِمْ ثِيَابُ الْحِبَرَاتِ ، جُبَبٌ وَأَرْدِيَةٌ ، فِي جَمَالِ رِجَالِ بَنِي الْحَارِثِ بْنِ كَعْبِ . قَالَ: يَقُولُ بَعْضُ مَنْ رَآهُمْ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمئِذٍ: مَا رَأَيْنَا وَفْدًا مِثْلَهُمْ ، وَقَدْ حَانَتْ صَلَاتُهُمْ ، فَقَامُوا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلُّونَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  دَعُوهُمْ  ، فَصَلَّوْا إلَى الْمَشْرِقِ ".

أخرجه ابن إسحاق في "السيرة" (1/574) ، ومن طريقه ابن جرير الطبري في "تفسيره" (2/171) ، والثعلبي في تفسيره "الكشف والبيان" (3/6) ،

கிறித்தவ பாதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க மதீனா வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அசர் தொழுகை முடித்த நேரத்தில் அவர்கள் மஸ்ஜிதுன்னபஇக்கு வந்தனர். பாதிரிகளுக்கான ஆடை மற்றும் மேலங்கியுடன் அவர்கள் வந்திருந்தனர். அப்போது அவர்களின் வழிபாட்டு நேரம் வந்து விட்டது. உடனே அவர்கள் நபிகளின் பள்ளிவாசலில் கிழக்கு நோக்கி வணங்கலானார்கள். அவர்களை தடுக்காமல் விட்டு விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச்செய்தி இப்னு இஸ்ஹாக் என்பாரின் சீரா நூலிலும், தபரியின் தஃப்சீரிலும், சஃலபி அவர்களின் தப்சீரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தி நடந்த செய்தியை அக்காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தான் அறிய முடியும். அறிவிக்க முடியும். இந்தச் செய்தியை அறிவிப்பவர் முஹம்மத் பின் ஜஅஃபர் பின் சுபைர் ஆவார். இவர் நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையாகிய தாபியீன்களில் உள்ளவரும் இல்லை. அதற்கடுத்த தலைமுறையாகிய தபவுத் தாபிய்யின் தலைமுறையைச் சேர்ந்தவர் ஆவார்.

நபிகள் நாயகம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் பிறந்த ஒருவர் அறிவிக்கும் செய்தி பொய்யாகத் தான் இருக்கும்.

 இதே செய்தியை மற்றொரு அறிவிப்பாளர் வழியாக ச அலபி அவர்கள் தமது தப்சீரில் பதிவு செய்துள்ளார். இதை முஹம்மத் பின் மர்வான் அஸ்ஸதீ என்பார் அறிவிக்கிறார்.

இவர் பொய்யர் என்றும் இட்டுக்கட்டுபவர் என்றும் புகாரி, நஸாயீ, அபூஹாத்தம், இப்னு ஹிப்பான் உள்ளிட்ட அறிஞர்கள் விமசித்துள்ளனர்.

எனவே இதுவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

இந்தச் செய்தி மற்றொரு அறிவிப்பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியும் சஅலபி அவர்களின் தப்சீரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளரான ரபீவு பின் அனஸ் என்பார் பலவீனமானவர் என்று அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், நஜ்ரான் பகுதி கிறித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாதப்பிரதிவாதங்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் ஏனைய பல நூற்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்புகளிலும் நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று கூறப்படவில்லை.

இப்படி ஒரு சம்பவம் நபியவர்கள் காலத்தில் நடந்திருந்தால் பிரபல்யமான இந்தச் சம்பவத்தை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்திருப்பார்கள். அவை ஆதாரப்பூர்வமான நூற்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் எந்த ஒரு நபித்தோழருமே இது போன்ற ஒரு சம்பவத்தை அறிவித்ததாக எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்தச் சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டதாக இருப்பதுடன் இது திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதக் கூடியதாக அமைந்துள்ளது.

பள்ளிவாசல்கள் என்பது அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஆலயங்களாகும். அங்கு ஒரு போதும் அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படக் கூடாது என்பதுதான் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 72:18

இந்த இறைக் கட்டளைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய பள்ளியில் கிறித்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கு அனுமதித்திருப்பார்களா?

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account