Sidebar

19
Sun, May
26 New Articles

பீஜே என்ற பட்டப்பெயர் சரியா?

தமிழக தவ்ஹீத் வரலாறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பீஜே என்ற பட்டப்பெயர் சரியா?

ஜைனுல் ஆபிதீன் என்ற அழகான பெயரை விட்டுவிட்டு பீஜே என்ற அர்த்தமில்லாத பெயரை ஏன் வைத்துக் கொண்டீர்கள்? பட்டப்பெயர் வைக்கக் கூடாது என்று தடை இருப்பதாகக் கேள்விப்படுகிறோமே?

முஹம்மத் இத்ரீஸ்

பதில்

இஸ்லாத்தில் பட்டப் பெயர்கள் முழுவதும் தடை செய்யப்படவில்லை. ஒருவரிடம் உள்ள குறைபாட்டைக் குத்திக்காட்டும் வகையில் அல்லது அவரிடத்தில் இல்லாத குறையை அவருடன் இணைத்துப் பேசும் வகையில் அவருக்குப் பட்டப்பெயர் சூட்டுவதையே மார்க்கம் தடை செய்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 49:12

குட்டையாக ஒருவர் இருந்தால் அவரைப் பார்த்து பெரியவர் வருகிறார் என்று கேலி செய்வதும், கொஞ்சம் உயரமாக இருந்தால் பனை மரம் வருகிறது என்று பட்டப் பெயரிட்டு அழைப்பதும் கூடாது. இந்தப் பட்டப் பெயர்கள் மனிதனின் மனதைப் புண்படுத்தும் என்ற காரணத்துக்காக இவை தடை செய்யப்பட்டுள்ளன.

11 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ رواه البخاري

அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது) என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 11

ஒருவரைப் பாராட்டி அவருக்கு நல்ல பட்டப் பெயர் வைப்பதும், ஒருவரை அறிந்து கொள்வதற்காக அவரை மட்டும் குறிக்கும் வகையில் அடையாளப் பெயர் வைப்பதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இது போன்ற பெயர்களைக் கூறி அழைப்பதால் அழைக்கப்படுவர் நோவினை அடைய மாட்டார். இதை அவரும் பொருந்திக் கொள்வார்.

நபியவர்கள் காலத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு சைஃபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதை நபியவர்கள் தடை செய்யவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர் என்பதாகும். இது அழகான பெயர் தான். ஆனால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பூனையின் தந்தை (அபூ ஹுரைரா) எனச் செல்லமாக அழைத்துள்ளார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் பொருந்திக் கொண்டார்கள்.

எனவே யாருடைய மனதையும் புண்படுத்தாத இது மாதிரியான அடையாளப் பெயர்களைச் சூட்டுவது தவறல்ல.

அர்த்தமுள்ள பெயர் இருக்கும் போது அர்த்தமில்லாத பெயரை ஒருவர் பட்டப் பெயராக வைத்துக் கொண்டால் அவரது பெயர் பறிபோய் விடாது.

பீஜே என்பது அர்த்தமற்ற சொல் இல்லை. பீ.ஜைனுல் ஆபிதீன் என்பதன் சுருக்கம் என்பதால் இதன் அர்த்தமும் ஜைனுல் ஆபிதீன் என்ற அர்த்தமும் ஒன்றுதான்.

நீங்கள் உட்பட அனைவரும் தந்தையின் பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் தந்தை பெயர் இப்ராஹீம் என்றால் ஐ என்று இனிஷியல் போட்டுக் கொள்கிறீர்கள். இப்ராஹீம் என்ற அழகான பெயரை விட்டு விட்டு உங்கள் தந்தைக்கு ஐ என்று பட்டப்பெயர் வைத்து விட்டதாக உங்களுக்குத் தோன்றுவதில்லை.

பீ.ஜைனுல் ஆபிதீன் என்று சொன்னாலும், எனது தந்தை பெயரை பீ என்று நான் சுருக்கியவனாக - அதாவது உங்கள் பாஷையில் அர்த்தமற்ற பட்டப் பெயர் வைத்தவனாக - ஆவேனே அது பரவாயில்லையா?

இப்படி உலகில் எல்லோருமே இனிஷியலைப் பயன்படுத்தி தங்கள் தந்தையின் பெயரைச் சுருக்கிக் கொள்கிறார்கள். என்னவோ தெரியவில்லை ஜைனுல் ஆபிதீன் எது செய்தாலும் கேள்வியாகி விடுகிறது. பீஜே செய்வது போல் தாங்களும் செய்து கொண்டே கேள்வியும் கேட்கிறார்கள்.

ஒருவரது பெயர் முஹம்மத் என்றால் மூனா எனவும், சாஹுல் என்றால் சாவன்னா எனவும், அப்துல் காதிர் என்றால் ஆனா காவன்னா எனவும் சொல்லும் வழக்கம் உள்ளது. அதே பெயரைத் தான் சுருக்கிச் சொல்கிறார்களே தவிர பட்டப்பெயர் வைத்து விட்டார்கள் என்று ஆகுமா?

முஹம்மத் என்ற அழகான பெயர் இருக்க புகாரி (புகாரா என்ற ஊர்க்காரர்) என்று பட்டப் பெயருக்குரியவர் தான் புகாரி இமாம்.

முஹம்மத் என்ற அழகான பெயர் இருக்க திர்மிதி (திர்மித் எனும் ஊர்க்காரர்) என்ற பட்டப் பெயருக்கு உரியவர் தான் திர்மிதி இமாம்.

ஆயிரக் கணக்கானவர்களுக்கு இப்படி பெயர்கள் உள்ளன.

22.08.2011. 16:44 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account