Sidebar

20
Fri, Sep
4 New Articles

நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் செய்யக்கூடாதா?

பீஜே PJ
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் செய்யக்கூடாதா?

உங்களது ஜமாஅத்தில் நிர்வாகிகளாக இருக்கக் கூடியவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்யக் கூடாது; அது செய்யக் கூடாது; இது செய்யக் கூடாது என்று ஆயிரத்து எட்டு கண்டிசன்களைப் போடுகின்றீர்கள். அப்படியானால், ஒருவர் உங்களது ஜமாஅத்தில் நிர்வாகியாக வந்ததன் காரணமாக தனது தொழிலை இழந்து நட்டமடைய வேண்டுமா?

உங்களின் இந்த முடிவு சரியனாது தானா?

இப்படி ஆயிரத்து எட்டு கண்டிசன்களைப் போடுவீர்களேயானால் வியாபாரத்தையும் இழந்து, யார் நிர்வாகியாக முன்வருவார்கள். பதிலளிக்கவும்

- அப்துல் காதர், கோயம்பேடு

? ஆயிரத்து எட்டு கண்டிஷன்கள் போடவில்லை. மிகக் குறைந்த கண்டிஷன்கள் தான் போடப்பட்டுள்ளன. நிர்வாகியாக வரக்கூடியவர்கள் மார்க்கம் அனுமதித்துள்ள எந்தத் தொழிலையும் செய்யலாம்.

ஆனால் ரியல் எஸ்டேட், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புதல் போன்ற தொழிலில் நிர்வாகிகள் ஈடுபடுவதையும், பகிரங்கமாக அறிவிப்புச் செய்து மற்றவர்களிடம் முதலீடுகள் பெறுவதையும் நிர்வாகிகள் செய்யக் கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தக்க காரணத்துடன் முடிவு செய்துள்ளது.

இதன் விபரீதங்களைச் சிலர் புரிந்து கொள்ளாமல் குறை கூறுகின்றனர். ஒரு மாவட்ட நிர்வாகியோ, கிளை நிர்வாகியோ இது போன்ற தொழிலில் ஈடுபடலாமா என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள மாநிலத்தில் இருந்து இதை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த இயக்கத்தின் தலைவனாக இருக்கும் நான் சில ஏக்கர்களை வாங்கிப் போட்டு அவற்றை பிளாட்டுகளாகப் பிரித்து விற்பனை செய்வதாக விளம்பரம் செய்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களின் பிளாட்டுகள் குறித்து எத்தகைய விசாரணை செய்வார்களோ அது போல் விசாரிக்காமல் என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக எதையும் விசாரிக்காமல் பலர் அதை வாங்குவார்கள். நான் சொல்லக்கூடிய வசதிகள் நிச்சயமாக இருக்கும் என்று நம்பும் சகோதரர்கள் ஏராளமாக உள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.

இப்படி நான் நடந்து கொண்டால் அதைச் சட்டப்படி யாரும் குறை கூற முடியாது என்றாலும், இதனால் மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

ஒரு சாரார் என் மீது நம்பிக்கை வைத்து நான் விற்பனை செய்யும் பிளாட்டுகளை வாங்கினாலும் அதிகமான மக்கள் என்ன நினைப்பார்கள்? இவன் தவ்ஹீத் என்று பேசி கணிசமான மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று இப்போது அதை வைத்துப் பணம் சம்பாதிக்கிறான் என்று நினைப்பார்கள். நாம் செய்யும் பிரச்சாரமே இது போல் ஜமாஅத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்குத் தான் என்று அவர்கள் நினைக்கும் போது நமது சொல்லுக்கு எந்த வெயிட்டும் இல்லாமல் போய் விடுமா? இல்லையா?

அது போல் நான் விற்பனை செய்யும் பிளாட்டுகள் என்னளவில் சரியான தரத்தில் உள்ளது என்றாலும், வாங்குபவருக்கு என்று ஒரு பார்வை உள்ளது. இவனை நம்பி இப்படியெல்லாம் இருக்கும் என்று நம்பி பணத்தைக் கொடுத்தேன்; ஆனால் கழுத்தை அறுத்து விட்டான் என்று சிலராவது சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

வசதிகள் நான் சொன்னபடி சரியாக இருந்தாலும் இந்த இடத்தில் இவ்வளவு விலை அநியாயம். அவன் இதை விடக் குறைவாக தருகிறானாமே? இவன் குறைவாகத் தருகிறானாமே? என்ற குரல்களும் எழும்.

எந்த மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார்களோ அவர்களின் நம்பிக்கையும் கணிசமாகச் சரிந்து விடும். என்னை வெறுத்தால் கூடப் பரவாயில்லை. நான் பிரச்சாரம் செய்யும் கொள்கையைக் கூட அவர்களில் சிலர் சந்தேகிக்கும் நிலை இதனால் ஏற்படுமா? இல்லையா?

ஏனென்றால் இது போன்ற வியாபாரங்கள் பொருளைப் பார்த்து பேரம் பேசி வாங்குவது அல்ல. முக்கால்வாசி நம்பிக்கை தான் இதன் முதலீடு. ஆனாலும் எனது நடவடிக்கையால் எனது கொள்கைக்குப் பங்கம் வரக்கூடாது என்பதற்காகவே நான் என்னளவில் இதைக் கடைப்பிடிக்கிறேன். மற்றவர்களைப் பார்த்து சில நேரங்களில் சலனம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் அருளால் அதை வென்று வருகிறேன்.

இந்த அடிப்படையில் தான் ஜமாஅத் இந்த முடிவை எடுத்துள்ளது.

நான் இது போன்ற தொழிலைச் செய்தால் அப்போது அதை அனைவரும் விமர்சிப்பார்கள். அதே விமர்சனம் மற்றவர்கள் செய்யும் போதும் வருமா? இல்லையா?

பாக்கர் செய்த ஹஜ் வியாபாரத்தின் போது அவரால் அழைத்துச் செல்லப்பட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்து வண்டி வண்டியாக என்னிடம் முறையிட்ட போது என்னால் கூனிக் குறுகித் தான் நிற்க முடிந்தது. அது போன்ற நிலையை நான் ஜமாஅத்துக்கு ஏற்படுத்தக் கூடாது அல்லவா? அது போல் அனைத்து மட்ட நிர்வாகிகளும் ஏற்படுத்தக் கூடாது.

இந்த ஜமாஅத்துக்கு என்று சமுதாயத்தின் ஒரு நம்பகத்தன்மை இருக்கிறது. அந்த நம்பகத்தன்மை யாரால் வியாபாரமாக்கப்பட்டாலும் உடனே அந்த நம்பகத்தன்மை குறைய ஆரம்பித்து விடும். ஒரு மாவட்ட நிர்வாகியை நம்பி ஒரு இடத்தை வாங்கியவர் அதில் குறைபாடுகளைக் காணும் போது இவன் தவ்ஹீத் ஜமாஅத்காரன் என்று நம்பித்தான் நான் இடம் வாங்கினேன். ஆனால் இவன் சொன்னபடி எதுவும் சரியாக இல்லை என்று பாதிக்கப்பட்டவன் விமர்சனம் செய்தால் அது ஜமாஅத்தை நிச்சயமாகப் பாதிக்கும், அவர்களின் செயலால் நாங்களும் தலைகுனியும் நிலை ஏற்படும்.

அது மட்டுமில்லாமல் இந்த ஜமாஅத்தைத் தான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள்.; எனவே இதில் போய் சேர்ந்து பிளாட் வியாபரம் செய்வோம் என்று சில பேர் ஊடுருவி பொறுப்புக்கு வர ஆசைப்படலாம். அது போன்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த விதியின் காரணமாக ஊடுருவ இயலாமல் போகும்.

சில நிகழ்வுகளையும் நான் இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் தமுமுக அமைப்பாளராக இருந்த போது சவூதியில் சில சகோதரர்கள் மக்களிடம் முதலீட்டைத் திரட்டி இந்தியாவில் ஒரு தொழில் துவங்க திட்டமிட்டனர். அப்போது என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள் மிகவும் பொருளாதார சிரமத்தில் இருக்கிறீர்கள். எனவே நாங்கள் ஒரு தொழிலைத் துவங்க உள்ளோம். அதில் நீங்கள் முதலீடு எதுவும் செய்யாமல் ஒரு பார்ட்னராக இருக்க முதலீடு செய்பவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் ஆலோசகர்களில் ஒருவராக நீங்களும் இருக்கிறீர்கள் என்று என்னிடம் தெரிவித்தனர்.

அவர்கள் என் மீதுள்ள அக்கறையில் இந்தத் திட்டத்தில் என்னயும் பங்குதாரராகச் சேர்த்தாலும், நான் அதைக் கடுமையாகக் கண்டித்ததுடன் முதலீடுகள் திரட்டுவதை உங்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர என் பெயரை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. இதில் நான் பங்குதாரராக இருக்க விரும்பவில்லை. நான் அதில் அங்கம் வகிக்கிறேன் என்பதற்காக மற்றவர்கள் முதலீடு தருவதை நான் விரும்பவில்லை என்று அடியோடு மறுத்து விட்டேன். அவர்களில் சிலர் இன்னும் நம் ஜமாஅத்தில் உள்ளனர். சிலர் எனக்கு எதிராகவும் ஆகிவிட்டனர்.

இதற்குக் காரணம் எனது நம்பகத்தன்மை வர்த்தகப் பொருளாகி விடக் கூடாது என்பது தான்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் பெரிய ஆட்டுப் பண்ணை அமைக்க உள்ளதாக மக்களிடம் முதலீடு திரட்டினார்கள். இலாபத்தில் பீஜேக்கும் ஒரு பங்கு கொடுக்க உள்ளோம் என்று வாய்மொழியாகப் பலரிடமும் சொன்னார்கள். இறுதியில் என்னிடமும் இதைச் சொன்னார்கள். நான் இதைக் கண்டித்ததுடன் நான் யாருக்கும் முதலீடு செய்யுமாறு பரிந்துரை செய்யவில்லை; என் பெயரைப் பயன்படுத்தினால் யாரும் நம்பாதீர்கள் என்று பகிரங்கமாக அறிக்கையும் வெளியிட்டேன். எனக்கு பங்கு தருவதாகச் சொல்லி என்மீது உள்ள அன்பை வெளிக்காட்டிய அந்த புண்ணியவான் அன்று முதல் எனக்கும் இந்த ஜமாஅத்துக்கும் எதிராகச் செயல்பட்ட சம்பவங்கள் ஏராளம். ஆட்டுப் பண்ணையும் ஊத்தி மூடப்பட்டது. எனக்கு நன்மை செய்வதாகச் சொல்பவர்களில் சிலர் என்னை வைத்து சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் எனக்கு படித்துக் கொடுத்தது.

இன்னொரு மவ்லவியும் இதே ஆட்டுப் பண்ணை சமாச்சாரத்தைக் கையில் எடுத்தார். ஊர் ஊராகச் சென்று முதலீடு திரட்டினார். அவர் எனக்கு நெருக்கமானவராக இருந்ததால், எனது ஆதரவோடு இதை நடத்துவதாக பலரிடமும் அவர் சொன்னது என் கவனத்துக்கு வந்த போது அந்த நிமிடமே உணர்வில் பகிரங்கமாக அறிவிப்புச் செய்தேன். நான் எந்த ஆட்டுப் பண்ணைக்கும் யாரையும் பங்கு சேர்க்கச் சொல்லவில்லை என்று விளம்பரம் கொடுத்தேன்.

அப்போதே அவர் என்னுடன் எதற்காக நெருக்கம் காட்டினார் என்பது வெளிச்சமானது. வாங்கிய முதலீட்டையும் சாப்பிட்டதுடன் நமக்கு எதிராகச் செயல்படும் நெல்லை மாவட்ட ஜாக் பள்ளியில் சேர்ந்து கொண்டு எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதை முழுநேர வேலையாக ஆக்கிக் கொண்டார்.

இறைவனுடைய அருளால், இவர்கள் அனைவரும் இப்போது இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டனர் என்பது தனி விஷயம்.

என்னுடைய உரைகளை சீடியாகப் போட்டு விற்பனை செய்த சிலர் துபையிலும், இந்தியாவிலும் அதில் எனக்கும் பங்கு தரப்படுகின்றது என்றும், யாரும் இதைக் காப்பி எடுக்கக் கூடாது என்றும் விளம்பரம் செய்த போது, அந்தக் கால கட்டத்தில் வெளியான அனைத்து சீடிகளிலும் பொது அறிவிப்பு செய்ய வைத்தேன். எனது உரையை எந்த நிறுவனத்துக்கும் நான் காப்பிரைட் போட்டு கொடுக்கவில்லை. எனக்கு எந்த ஆதாயமும் இதில் இல்லை. இதை யார் வேண்டுமானாலும் காப்பி எடுத்துக் கொள்ளலாம்., வியாபாரம் செய்யலாம். எனது அனுமதி பெறத் தேவை இல்லை என்று அறிவிப்புச் செய்தேன்.

அந்த அறிவிப்பு இது தான்

எனக்கு பீஜே காப்புரிமை கொடுத்துள்ளார் என்று கூறி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிடி வியாபாரம் செய்தவர்களை விட்டு அல்லாஹ் இந்த ஜமாஅத்தை தூய்மையாக்கி விட்டதால் இப்போது வெளியிடும் சீடிகளில் மேற்கண்ட அறிவிப்பை சேர்ப்பதில்லை.

மதுரையைச் சேர்ந்த ஒரு சகோதரர் தவணை முறையில் பிளாட் விற்பனை செய்தார். அவர் நம்பகமானவர் என்று எனக்குத் தெரியும். மாதம் ஆயிரம் ரூபாய் தவணை என்று வைத்திருந்ததால் நானும் அதில் சேர்ந்து எனக்காக ஒரு மனையைப் பதிவு செய்தேன்.

ஆனால் அந்தச் சகோதரர் மனை வாங்கியவர்கள் என்ற பட்டியலை வெளியிடும் போது அதில் என் பெயரையும் போட்டு விளம்பரம் செய்தார். பீஜே மனை வாங்கினால் அது சரியாகத் தான் இருக்கும் என்று ஒரே ஒரு சகோதரன் நம்பி இதில் சேர்ந்தால் அது கூட எனது நம்பகத்தன்மையை வியாபாரமாக்கியதாக ஆகிவிடும் என்று நான் அஞ்சி அந்தச் சகோதரரிடம் நான் இந்தத் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் எனக் கூறி விலகி விட்டேன்.

நான் ஒரு தொழில் தொடங்கத் திட்டம் போட்டுள்ளேன், அதில் நீங்கள் முதலீடு செய்கிறீர்களா என்று நான் கேட்டுக் கொண்டால் என்னை நம்பி பல கோடி ரூபாய்களை மக்கள் தருவதற்குத் தயாராக உள்ளனர். ஆனால் அப்படி நான் முதலீடுகளைப் பெற்றால் இந்த ஜமாஅத்தின் முக்கியப் பிரமுகர் என்ற நம்பகத் தன்மைக்காகத் தான் அவர்கள் தருவார்கள்.

அது கூட நம்பகத் தன்மையை வியாபாரமாக்கியதாக ஆகி விடும் என்று நான் கருதுகிறேன். நம்பகத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்ட நிலையில் நான் மரணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு விரும்புவதையே என் கொள்கைச் சகோதரர்களுக்கும் நான் விரும்புகிறேன்.

இது போன்ற சம்பவங்கள் என் வாழ்வில் ஏராளமாக உள்ளன. ஒரு நூலாக எழுதும் அளவுக்கு உள்ள இந்தச் சம்பவங்கள் கற்றுத் தந்த பாடங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நாங்கள் அனைவரும் கூடி இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.

நம் ஜமாஅத்தின் நம்பகத்தன்மையை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்பது மட்டும் தான் இதில் உள்ள பிரச்சினை. இதனால் ஜமாஅத்துக்கும் அதில் சேவை செய்பவர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் தான் ஏற்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நாம் அனைவரும் சேர்ந்து இந்த ஜமாஅத்தின் நம்பகத்தன்மையைக் காப்போம்.

உணர்வு 16:25

இவ்வாறு நான் எழுதியது என்னளவில் எடுத்துக் கொண்ட முடிவு தான். ஜமாஅத்தின் முடிவு என்ற கருத்தை தரும் வகையில் நான் எழுதியது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. உடனே அடுத்த இதழில் உணர்வு 16:26 ல் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளேன்.

ரியல் எஸ்டேட் ஓர் விளக்கம் :

மாநில நிர்வாகிகளோ, மாவட்ட நிர்வாகிகளோ, கிளை நிர்வாகிகளோ ரியல் எஸ்டேட் தொழில் செய்யக்கூடாது என்ற கருத்தில் பதில்கள் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இது குறித்து நிர்வாகக் குழுவில் முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தேன்.

மாநில நிர்வாகக் குழுவில் இவ்வாறு நாம் முடிவு செய்யவில்லை; வேறு விதமாகத்தான் முடிவு செய்திருந்தோம் என்று சக நிர்வாகிகள் சிலர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். மினிட் புக்கையும் பார்த்து உறுதி செய்யுமாறு அவர்கள் கூறினார்கள்.

அவர்கள் கூறியது சரி தான். நான் தான் கவனக் குறைவாக மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன்.

மாநில நிர்வாகிகள் தனது பெயரை அல்லது பொறுப்பை அல்லது ஜாமாஅத் பணிக்காக விளம்பரம் செய்யப்பட்ட போன் நம்பரை விளம்பரப்படுத்தி, ரியல் எஸ்டேட் தொழில் செய்யக்கூடாது. அவ்வாறு இல்லாமல் தனிப்பட்ட முறையில் அவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம்.

மாவட்ட, கிளை நிர்வாகிகளும் தனிப்பட்ட முறையில் இத்தொழிலைச் செய்யலாம். ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது.

மாநில மாவட்ட நிர்வாகிகள் செய்யும் தொழிலாக இருந்தாலும் மற்றவர்கள் விஷயத்தில் மக்கள் எவ்வாறு விசாரித்துக் கொள்கிறார்களோ அவ்வாறு விசாரித்துக் கொள்ளுமாறும் அவர்களது சேவைகளிலும் குறைபாடு இருக்கலாம் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அடிக்கடி உணர்வில் விளம்பரம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு தான் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மினிட் புத்தகத்தைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன்.

மேற்கண்ட நிர்வாகக்குழுக் கூட்டத்தில் நான் உணர்வில் எழுதியது போல் என் கருத்தை எடுத்து வைத்தேன். பெரும்பான்மை நிர்வாகிகளால் அது ஏற்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

இவண்

P.ஜைனுல் ஆபிதீன்

உணர்வு 16:26

இவ்வாறு நான் விளக்கம் அளித்தது எடுத்த முடிவை தெரிவிப்பதற்குத் தானே தவிர நான் அந்தத் தொழிலைச் செய்வதற்காக அல்ல. எந்த விதிகளும் இல்லாவிட்டால் கூட நான் இது போல் செய்யப் போவதில்லை. ஒரு தவறான தகவலைத் திருத்தும் நோக்கத்தில் தான் மேற்கண்ட மறுப்பு அறிக்கைன் வெளியிட்டேன்.

21.02.2012. 13:24 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account