Sidebar

27
Sat, Jul
6 New Articles

பன்மடங்காகப் பெருகும் வட்டி

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பன்மடங்காகப் பெருகும் வட்டி

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசங்களுக்கு பீஜே விளக்கம் எழுதினார். அதன் இரண்டாவது கட்டுரை இது)

நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன்: 3:130

இ ஸ்லாம் மார்க்கம் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய, நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை நெறியாகும். மார்க்கத்தைப் பற்றிய சரியான அறிவும், ஆய்வும் இல்லாத சிலர் நவீன காலத்துக்கு ஏற்றவாறு இஸ்லாத்தை வளைக்க முயன்று வருகின்றனர். இஸ்லாம் தடை செய்த பல விஷயங்களில் ஈடுபாடு கொண்ட இவர்கள் அதற்கு இஸ்லாமியச் சாயம் பூசி அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்.

மதுபானத்தை அல்லாஹ் ஹராமாக - விலக்கப்பட்டதாக - ஆக்கியுள்ளான். ஆனாலும், மதுவுக்கு புதுப்புது வியாக்கியானம் கொடுத்து பீர் குடிக்கலாம், பிராந்தி குடிக்கலாம், கள் சாராயம் தான் குடிக்கக் கூடாது என்று கூறி மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு இஸ்லாமிய வர்ணம் பூசுவோர் உள்ளனர்.

இது போன்ற பிரச்சினைகளில் வட்டியும் ஒன்றாகும். வட்டியை அல்லாஹ் தடை செய்து விட்டான். மிகப் பெரிய குற்றம் எனவும் பிரகடனம் செய்து விட்டான்.

275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றிகெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

278. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!84

279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

திருக்குர்ஆன்: 2:275-2:279

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்பதும், அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்கிறார்கள் என்பதும் சாதாரணமான எச்சரிக்கை அல்ல. இறைவனை அஞ்சுகிற எந்த முஸ்லிமும் நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற காரியத்தை ஒருக்காலும் செய்ய மாட்டான்.

ஆனால், இன்றைய நவீன உலகில் வட்டியை அறவே தவிர்க்க முடியவில்லை. பல உலக நாடுகள் வட்டியைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து விட்டன. வட்டியில்லாத எந்தக் கொடுக்கல் வாங்கலையும் காண முடியவில்லை. அரசாங்கம் கூட வட்டியின் அடிப்படையில் தான் நாட்டு மக்களுக்கு உதவுவதைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் பார்க்கும் சிலர் இஸ்லாம் வட்டியைத் தடை செய்துள்ளதே! ஆனால், அது தவிர்க்க முடியாததாக இருக்கிறதே! வட்டியைத் தடை செய்யாமல் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்றெல்லாம் எண்ணத்  தலைப்படுகின்றனர். வட்டியை அனுமதிக்கின்ற வகையில் அல்லது ஓரளவுக்காவது வட்டியை அனுமதிக்கின்ற வகையில் ஒரு ஆதாரம் இருக்கக் கூடாதா? என்று கருதுவோரின் கண்ணில் பட்ட ஆதாரம் தான் நாம் ஆரம்பமாக எடுத்துக்காட்டியுள்ள வசனம்.

பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! என்ற வாசகத்துக்கு புதுமையான விளக்கம் கூறிக் கொண்டு இஸ்லாமும் ஓரளவு வட்டியை ஆதரிக்கவே செய்கிறது என்று கூறினார்கள்.

(திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி போன்றவர்களும் இதிலிருந்து தப்பவில்லை. பின்னர் அது திருத்தப்பட்டது)

வட்டிக்கு வட்டி; அந்த வட்டிக்கும் வட்டி என்ற அடிப்படையில் தான் வட்டி வாங்கக் கூடாது. பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில் என்று கூறப்படுவதன் விளக்கம் இது தான். எனவே, சாதாரண வட்டி கூடும், கொடும் வட்டி, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் தருகின்றனர்.

அறிவு ஜீவிகள் எனப்படுவோரும் குர்ஆன் மட்டுமே போதும் நபி வழி தேவையில்லை என்று கூறும் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவர்களும் இவ்வாறு கூறுபவர்களில் முக்கியமானவர்களாவர்.

இவர்கள் கூறும் விளக்கம் தவறானது என்பது திருக்குர்ஆனைச் சிந்தித்தாலே விளங்கும்.

2:279 வசனத்தைப் பாருங்கள்!

"நீங்கள் வட்டியிலிருந்து விலகிக் கொண்டால் உங்கள் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநியாயம் செய்ய வேண்டாம். அநியாயம் செய்யப்படவும் வேண்டாம் என்று அவ்வசனம் கூறுகிறது.

வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் திருந்துவதாக இருந்தால் கொடுத்த கடனை - அசலை - மூலதனத்தை - மட்டும் தான் திருப்பி வாங்க வேண்டும் என்று கூறப்படுவது கவனமாக சிந்திக்கப்பட வேண்டும்.

"கொடுத்த கடனும் சாதாரண வட்டியும் உங்களுக்கு உரியது'' என்று கூறவில்லை. அசல் மட்டுமே சொந்தம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து வட்டி சிறிதளவும் அனுமதிக்கப்படவில்லை என்பதை  அறியலாம்.

"பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில்'' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை இப்போது ஆராய்வோம்.

பொதுவாக வட்டி என்பதே சாதாரணமாகப் பன்மடங்காகவே பெருகிக் கொண்டு தான் இருக்கும். சாதாரண வட்டியிலும் கூட அந்த நிலை இருக்கத் தான் செய்யும். "நூறு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வட்டி'' என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு காலம் கடந்தாலும் இரண்டு ரூபாயை மட்டும் வட்டியாக வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அந்த மாதம் இரண்டு ரூபாய் அடுத்த மாதம் இரண்டு ரூபாய் அசலைத் திருப்பித் தர எவ்வளவு மாதம் ஆகுமோ அவ்வளவு இரண்டு ரூபாய் என்று பெருகிக் கொண்டே செல்லும்.

பத்து ரூபாய் பொருளை 20 ரூபாய்க்கு விற்றாலும் அத்துடன் உறவு முடித்து விடும். மாதா மாதம் பத்து ரூபாய் கொடுக்க மாட்டோம்.

வட்டியில் - அது எந்த வகை வட்டியானாலும் அது பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கும். பல்கிப் பெருகுதல் வட்டிக்கு வட்டியில் மட்டும் தான் ஏற்படும் என்பது தவறாகும்.

இதைப் புரிந்து கொண்டு 2:279 வசனத்தையும் சிந்திக்கின்ற யாரும் எல்லாவிதமான வட்டியையும் இஸ்லாம் அடியோடு தடுத்திருப்பதை அறிந்து கொள்வர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account