137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு
இவ்வசனத்தில் (5:5) வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கே உணவு என்று சொல்லப்படுவது சைவ வகை உணவைத் தான் குறிக்கும் என்றும், அறுத்து உண்ணப்படும் பிராணிகளை இது குறிக்காது என்றும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் அசைவ உணவுகளை உண்ணக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.
சைவ உணவுகளைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப்படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவைகளே. அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம்.
வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக ஆட்டிறைச்சியில் விஷம் வைத்துக் கொடுத்தனர் என்று ஏற்கத்தக்க ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரீ 2617)
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்ற பொதுவான சட்டத்திலிருந்து வேதமுடையோர் அறுத்தவை விதிவிலக்குப் பெறுகின்றன என்பதே சரியானதாகும்.
மேலும் இது மாற்றப்பட்டு விட்டது என்றும் கருத முடியாது. ஏனெனில் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிக் கட்டத்தில் இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். (பார்க்க: நஸாயீ 2434)
எனவே நமக்குத் தடைசெய்யப்படாத உணவுப் பொருட்களை வேதக்காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக்கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர்.
இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.
பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இஸ்ரவேலர்கள் தரும் உணவுகளை மட்டுமே இது குறிக்கும்.
இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ணலாகாது என்பதே சரியான கருத்தாகும்.
137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode