Sidebar

13
Sun, Oct
44 New Articles

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா?

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா?

இவ்வசனங்களில் (4:65, 5:44, 5:45, 5:47, 5:50, 6:57, 6:114, 12:40, 12:67, 24:48, 24:51, 40:12) அல்லாஹ்வின் சட்டங்களுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழ்வோர் அந்த நாட்டுச் சட்டங்களுக்குக் கட்டுப்படக் கூடாது எனவும், எந்தப் பதவிகளையும் வகிக்கக் கூடாது என்றும் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பெரும்பான்மைக்கு அதாவது ஜனநாயகத்துக்குக் கட்டுப்படுவது மிகப்பெரிய இணைவைப்பாகும் எனவும் கூறி வருகின்றனர்.

இது குறித்து நாம் சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.

பெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதா என்றால் ஒருக்காலும் எதிரானதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மிகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று நியமனம் செய்யாமல் மரணித்து விட்டார்கள். பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை தமக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் தான் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

எந்த ஒரு இயக்கமானாலும், தேசமானாலும் அதன் தலைவரை அதிகப்படியான உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். தலைவர் யார் என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து வஹீ வராது. எனவே இவர்களின் வாதம் முற்றிலும் தவறானது.

ஜனநாயகம் இணைவைத்தல் என்று வாதிடும் இயக்கத்தின் தலைவர்கள் வானுலகில் இருந்து வரவில்லை. இவர்களை தலைவர்களாக அல்லாஹ் நியமிக்கவுமில்லை. இவர்களின் இயக்கத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் ஒப்புக் கொண்டதால் தான் தலைவர்களாக ஆனார்கள். ஜனநாயகத்தின் அடிப்படையில் தங்களின் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை வகித்துக் கொண்டு அதை இணைவைத்தல் என்று இவர்கள் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆட்சியும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இவ்வசனங்களில் (5:49, 50, 6:57, 12:40, 12:67) கூறப்படுகிறது. ஜனநாயகம் நவீன இணைவைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைப்பவர்கள் மேற்கண்ட வசனங்களைத் தங்களின் வாதத்துக்கு சான்றாகக் காட்டுகின்றனர்.

ஆட்சியும், சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கே என்று இந்தியாவில் உள்ள ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் திருக்குர்ஆனுக்கு எதிரானது. அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களிடம் கொடுப்பதால் இது நவீன இணை வைப்பு என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள். திருக்குர்ஆன் கூறாத கருத்தை திருக்குர்ஆனில் திணித்த இவர்கள், அலீ (ரலி) அவர்களாலும், முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.

அந்த வரலாற்றை ஓரளவு அறிந்து கொண்டால் இந்த நவீன கால காரிஜிய்யாக்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள்.

அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்கள். பெரும்பாலான மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை.

உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடன்பாடோ இல்லை. ஆயினும் கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்; கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார் என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது. ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர்.

அலீ (ரலி) அவர்களது ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலீயின் ஆதரவாளர்களைப் போல் நடித்தவர்களும் இருந்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள். முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். சிஃப்பீன் என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

இதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டனர். இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சினையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சமாதானத் திட்டம்.

இத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது என அவர்கள் அஞ்சினார்கள்.

அதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள். இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குக் கொள்கைச் சாயம் பூசி இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர்.

இந்த விஷக்கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.

அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று திருக்குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது திருக்குர்ஆனுக்கு முரண் என்பது இவர்களின் வாதம்.

அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் இறைமறுப்பாளர்கள் எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.

5:44 வசனத்தைத் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் இறைமறுப்பாளர்கள் என்றனர். அனைவரையும் இறைமறுப்பாளர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் இறை மறுப்பாளர்களுடன் போர் செய்ய வேண்டும்; இறை மறுப்பாளர்களைக் கொல்ல வேண்டும்; அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத் என்று அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.

ஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்குச் சான்றாக எடுத்துக் காட்டி இதை நியாயப்படுத்தினர். இவர்கள் திருக்குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் காரிஜியாக்களின் தலைமையகம் அமைந்த ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள். இப்போது கவனியுங்கள்!

மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது இறைமறுப்பு என்று காரிஜிய்யாக்கள் எப்படி வாதிட்டார்களோ அது போலவே நவீன காரிஜிய்யாக்களான இவர்கள் மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது நவீன இணைவைப்பு எனக் கூறுகின்றனர். அவர்கள் எந்த வசனங்களைத் தவறான இடத்தில் பயன்படுத்தினார்களோ அதே வசனங்களை அதே இடத்தில் இவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் வாதமும், இவர்களின் முன்னோடிகளான காரிஜிய்யாக்களின் வாதமும் சரியா என்பதை ஆராய்வோம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.

எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சினைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படுவோராக இருந்தனர். தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர்.

இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சினை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று 4:35 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.

மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று 4:58, 5:42 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.

உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று 5:95 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.

தாவூது, ஸுலைமான் ஆகியோரின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று 38:21, 21:78 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணானதல்ல.

மனிதர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும்போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் (49:9) தெளிவாக அனுமதிக்கின்றது.

அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.

மறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் குறித்து சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்று அல்லாஹ் கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனங்களிலும், இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.

மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்டித்தர அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும், அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது மதீனாவின் நபித்தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே எனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித்தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4713, 4711, 4712

எது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம்? எது மனிதனுக்கு உள்ள அதிகாரம்? என்பது இந்த நபிமொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

உலகின் ஜனநாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.

சில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழிகெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.

இந்த இடத்தில் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் திருக்குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தையே மனிதர்களுக்கு இல்லை என்று வாதிடும் இவர்கள் எந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதோ அந்த அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்குகின்றனர்.

மறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்திருக்க இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; மத்ஹபைப் பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன? வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு; அல்லாஹ்வுக்கு இல்லை என்பது தானே?

இவர்கள் மத்ஹப் அடிப்படையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள்.

உலக விஷயங்களில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது இணைவைத்தல் என்று கூறும் இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய இணைவைத்தல் ஆக வேண்டுமல்லவா?

மீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தராதவைகளைச் செய்வது தானே பித்அத். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது?

இதிலிருந்து தெரிய வருவது என்ன? எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள்.

எந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமையும், அயோக்கியத்தனமும் வெளிச்சத்துக்கு வருகின்றன.

இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளும் அம்பலப்படுத்துவதை நாம் காணலாம்.

இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித்தான் திருக்குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.

ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும்.

அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்ற வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாதத்தைச் செய்யும் ஒரே ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் அறிவித்து விடுகின்றனர்.

இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ, சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.

கட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன் கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.

இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே இவர்கள் பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.

இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.

மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை இப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ, அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின்படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர்.

மனிதச் சட்டங்களின்படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை என்று கூற வேண்டியது தானே?

இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் திருட்டுப் போய் விடுகின்றன. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.

அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்து கொண்டிருந்த வாதம் இப்போது என்னவானது?

ஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.

மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா? அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா?

இவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.

தங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.

அல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.

ஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000 ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான். அதாவது 1000 ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10 ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு! அந்த ரூபாய் செல்லாது என்று அரசு அறிவித்து விட்டால் அந்த மதிப்பும் கூட இருக்காது.

மனிதச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000 ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.

ஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.

குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலைவிதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

யாரும் சொல்லாத தத்துவத்தைச் சொன்னால் கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.

தேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.

தமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.

மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.

அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.

இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் ஒன்றிரண்டு சட்டங்கள் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.

முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை!

வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கே சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே! அது எப்படி?

தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வர வேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்களே! இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.

அதுபோல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.

நமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக் கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.

மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.

நம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூஸுஃப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.

யூஸுஃப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும்போது, கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.

யூஸுஃப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின் படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள். (திருக்குர்ஆன் 12:55)

இதுபற்றி கூடுதல் விபரம் அறிய 233, 237வது குறிப்புகளைப் பார்க்கவும்.

ஜனநாயகம் ஒரு இணைவைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு சான்றையும் முன்வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது திருக்குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் தவறான வாதமாகும்.

அடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் உள்ளிட்ட மறுமை வெற்றிக்கான வழிமுறைகளில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

பெரும்பாலான மக்கள் கோதுமை உணவு உட்கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை. பெரும்பாலான மக்கள் நோய் வரும்போது சிகிச்சை செய்து கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை.

பெரும்பாலோர் ஆடை அணிந்ததால் அவர்களுக்கு எதிராக நிர்வாணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதிக்கவில்லை.

இன்றும் கூட பெரும்பான்மையோர் செய்யும் காரியங்களை நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் எந்த ஜனநாயக நாட்டிலும் இரண்டு ரக்அத் தொழுவதா? நான்கு ரக்அத் தொழுவதா என்று வாக்கெடுப்பு நடத்துவதில்லை.

எந்த அமைப்பாக இருந்தாலும் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் தான் அதன் தலைவர் தேர்வு செய்யப்பட முடியும். தப்லீக், தரீக்கா போன்ற இயக்கங்களில் தலைவரை மக்கள் தேர்வு செய்யாவிட்டாலும் நியமனத்தை அந்த இயக்க உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வதால் தான் தலைமை உருவாகிறது. அதன் உறுப்பினர்களின் அதிகமானோர் ஏற்க மறுத்தால் தலைவராக முடியாது.

உங்கள் இயக்கத்துக்கு நீங்கள் எப்படி தலைவரானீர்கள்? அல்லாஹ் வஹீ மூலம் நியமித்து தலைவரானீரா? அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா? இக்கேள்விக்கு அவர்கள் அளிக்கும் விடையில் இருந்தே ஜனநாயகம் இணைவைத்தல் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account