Sidebar

06
Sun, Jul
0 New Articles

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று கூறாமல் குகைக்கும், ஏட்டுக்கும் உரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவர்களது வரலாற்றுடன் ஒரு ஏடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. "அந்த ஏடு" என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன ஏடு? என்பது பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

"சாவுக்கடல் சாசனச் சுருள்கள்'' என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

(அந்த வீடியோ பதிவுகள் onlinepj.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முகவரி

சாவுக்கடல் சாசனச்சுருள்கள்

https://onlinepj.in/index.php/videos/online-videos/kadanthu-vantha-paathai/savukadal-sasanangal)

அதன் விபரங்கள்:

1947ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி "கும்ரான் மலைப் பகுதி" என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவற்றில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.

அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்'' என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், "அது தனியார் சொத்து'' என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த குகைகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.

1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் கையெழுத்துப் பிரதிகள் இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டு உள்ளனர்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.

பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போது, அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.

இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் இரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் இரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை மைக்ரோஃபிலிம் (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.

அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக அவர் வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டதாகவும் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப்பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச்சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.

மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறும்போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்கையில் அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறுகாட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞர் பேசும் போதும், அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகிறார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.

ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எந்த வகையில் திருக்குர்ஆனையும், இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.

அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

"ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்'' என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க: மத்தேயு 4:23, மாற்கு 1:14)

எந்த இறைவேதத்தை இவர்கள் மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

"திருக்குர்ஆனை ஒத்திருக்கின்றது'' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account