Sidebar

27
Sat, Jul
5 New Articles

303. பல இருள்கள்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

303. பல இருள்கள்

திருக்குர்ஆனில் ஒளியைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் ஒளி என்று ஒருமையாகக் கூறப்படுகிறது.

ஆனால் இருளைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் 'இருள்கள்' என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

2:17, 2:19, 2:20, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 10:27, 13:16, 14:1, 14:5, 17:78, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11 இவையே அந்த வசனங்களாகும்.

இருள் என்று ஒருமையாகப் பேசுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும் போது, மக்களின் பேச்சுவழக்கிற்கு மாற்றமாக பன்மையாகக் கூறியிருப்பதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை அடங்கியுள்ளது.

ஒளியை ஒரே நிறத்தில் நாம் பார்த்தாலும் அது ஏழு வண்ணங்களின் தொகுப்பாகும். இந்த வண்ணங்களின் ஊடுருவும் ஆற்றல் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகும்.

உதாரணமாக, சூரியனிலிருந்து வரும் ஒளியில் அனைத்து நிறங்களும் உள்ளன. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலை நீளம் உண்டு. அலை நீளம் குறைவாக உள்ள ஒளி, ஊடகத்தினால் அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது. அலை நீளம் அதிகமாக உள்ள ஒளி, ஊடகத்தினால் குறைவாகச் சிதறடிக்கப்படுகிறது.

சில வண்ணங்கள் குறுகிய தொலைவுடன் நின்று விடும். இன்னும் சில வண்ணங்கள் அதை விட சற்றுத் தொலைவுடன் நின்று விடும்.

ஒவ்வொரு நிறமும் அதன் அலை நீளத்திற்கேற்ப ஊடுருவாமல் தடுக்கப்படும் போது அந்த நிறத்தைப் பொறுத்த வரை அது இருளாகின்றது. மூன்று நிறங்கள் தடுக்கப்பட்டு மற்ற நிறங்கள் நம்மை வந்தடைந்தால் அங்கே மூன்று இருள்கள் ஏற்பட்டுள்ளன என்று பொருள்.

ஒரு அறிவிப்புப் பலகையில் சிவப்பு, மஞ்சள், நீலம் மூன்று நிறங்களில் எழுதப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பலகையின் அருகில் நின்று பார்க்கும் போது மூன்று நிறங்களில் எழுதப்பட்டதையும் நம்மால் வாசிக்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் சென்று பார்க்கும் போது நீல நிற எழுத்தை நம்மால் பார்க்க முடியாது. அந்த இடத்தில் வெளிச்சம் இருந்தாலும் நீல நிறத்தைப் பொறுத்த வரை இருளாகி விடுகின்றது.

இன்னும் சற்றுச் தொலைவுக்குச் சென்றால் மஞ்சள் நிறமும் தடுக்கப்பட்டு, சிவப்பு நிற எழுத்து மட்டுமே கண்களுக்குத் தெரியும். அந்த இடத்தில் வெளிச்சம் இருந்தாலும் நீலம், மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களைப் பொறுத்த வரை இரண்டு இருள்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இவ்வாறு நிறங்களின் அலை நீளத்திற்கு ஏற்ப, அவை ஊடுருவுவது தடுக்கப்படுவதால் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு இருள் ஏற்பட்டு, பல இருள்கள் ஏற்படுகின்றன.

எனவே இருள் என்று ஒருமையில் கூறாமல், இருள்கள் என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுவது மிகப் பெரிய அறிவியல் சான்றாக உள்ளது.

அது போல் ஆழ்கடலில் ஏற்படும் இருள்களைப் பற்றியும் 24:40 வசனத்தில் திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறுகிறது.

ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன் கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

பட்டப்பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர்.

சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.

சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது.

சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமையாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்கு நிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

"கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது'' என அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.

இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற்பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட, பட்டப்பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது, திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account