477. மன அழுத்தத்துக்கு மாமருந்து
அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்று இவ்வசனத்தில் (13:28) கூறப்படுகிறது.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம் பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.
கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தமும், நோயின் தாக்கமும் எந்த வகையிலும் குறையவில்லை.
ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், "கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்சனையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இது தான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
தற்காலத்தில் மனஅழுத்தம் தான் மனிதனை ஆட்கொள்ளும் பெரிய நோயாகக் கருதப்படுகின்றது. உலகில் 75 சதவீதத்தினர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மன அழுத்தத்தின் காரணமாக நடைபெறுபவை என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இறைவனை ஒருவர் நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவருக்கு மனஅழுத்தம் கிஞ்சிற்றும் இருக்காது என்பது உறுதி. அந்த வகையில் இந்த ஆய்வு இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
477. மன அழுத்தத்துக்கு மாமருந்து
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode