Sidebar

16
Mon, Sep
1 New Articles

இஸ்லாமிய ஆட்சி கோசம்!

கிலாஃபத் ஆட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

அரசியல்இஸ்லாமிய ஆட்சி கோசம்!

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அல்லாஹ்வுடைய தூதர் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தவே வந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் இயங்குகின்றனர். இவர்கள் ஜனநாயக முறையை முழுக்க முழுக்க எதிர்க்கின்றனர். இந்தக் கொள்கையைப் பற்றிய முழு விளக்கத்தையும், இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா என்பதையும் விளக்கவும்.

இஸ்மாயீல், துபை

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே வந்தார்கள் என்று கூறுவது, இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் பல இறைத் தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.

தாவூத் நபியவர்கள் தாலூத் என்ற மன்னரின் படையில் போர் வீரராக இருந்துள்ளார்கள். நபிமார்கள் அனுப்பப்பட்டது ஆட்சி அமைக்கத்தான் என்று இருந்தால் தாவூத் நபி அவர்கள் இன்னொருவரை மன்னராக ஏற்று அவரின் கீழ் செயல்பட்டு இருக்க முடியாது.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? 'எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்' என்று தமது நபியிடம் கூறினர். 'உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?' என்று அவர் கேட்டார். 'எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

'தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். 'எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை' என்று அவர்கள் கூறினர். 'உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 2:246, 247

மூஸா நபிக்குப் பின் வந்தஒரு  சமுதாயம் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு உள்ளாகி இருந்த போது எதிரிகளை எதிர்த்து போரிட ஒரு மன்னரை ஏற்படுத்தித் தருமாறு தங்களின் நபியிடம் அவர்கள் கேட்டனர். அதை ஏற்று நபியல்லாத தாலூத் என்பவரை அல்லாஹ் மன்னராக நியமிக்கிறான். அந்த நபியையே அல்லாஹ் மன்னராக ஆக்கவில்லை. ஆட்சியமைப்பதற்குத் தான் நபிமார்கள் அனுப்பப்படுகிறார்கள் என்பது முற்றிலும் தவறானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணி புரிந்துள்ளார்கள்.

'அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன்' என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது 'இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக் குரியவராகவும் இருக்கிறீர்' என்றார். 'இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:55

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். இறைத் தூதர்களின் பணி என்னவென்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!' என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

அல்குர்ஆன் 21:25

எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.

அல்குர்ஆன் 5:99

தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா?

அல்குர்ஆன் 16:35

இதே கருத்து 16:82, 24:54, 29:18, 36:18, 64:12 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது தான் இறைத்தூதர்களின் பணியாக இருந்துள்ளது. இதைத் தவிர வேறு கடமை அவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

இவ்வளவு தெளிவாக திருக்குர்ஆன் பிரகடனம் செய்யும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் கடமை என்று ஒருவர் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகிறார் என்று தான் அர்த்தம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் அவர்கள் குறிப்பிட்டதே இல்லை.

குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, 'இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள்' என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.

صحيح البخاري 

3612 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، عَنْ خَبَّابِ بْنِ الأَرَتِّ، قَالَ: شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ فِي ظِلِّ الكَعْبَةِ، قُلْنَا لَهُ: أَلاَ تَسْتَنْصِرُ لَنَا، أَلاَ تَدْعُو اللَّهَ لَنَا؟ قَالَ: «كَانَ الرَّجُلُ فِيمَنْ قَبْلَكُمْ يُحْفَرُ لَهُ فِي الأَرْضِ، فَيُجْعَلُ فِيهِ، فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَتَيْنِ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الحَدِيدِ مَا دُونَ لَحْمِهِ مِنْ عَظْمٍ أَوْ عَصَبٍ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَاللَّهِ لَيُتِمَّنَّ هَذَا الأَمْرَ، حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ، لاَ يَخَافُ إِلَّا اللَّهَ، أَوِ الذِّئْبَ عَلَى غَنَمِهِ، وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ' விலிருந்து ஹளர மவ்த்' வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)

நூல்: புகாரி 3612, 3852

நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, 'இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் லட்சியம்; உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள்' என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும்; பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதே சமயம் இஸ்லாம் வெற்றியடையும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.

எனவே நம்முடைய கடமை, இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றி அதைப் பிற மக்களுக்கும் எடுத்துரைத்து, அதில் ஏற்படும் சோதனைகளின் போது பொறுமை காப்பது தான்.

அவ்வாறு நாம் பொறுமையுடன் இருக்கும் போது, இஸ்லாமிய ஆட்சியைக் கூட இறைவன் நமக்கு வழங்கலாம். அவ்வாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இஸ்லாமிய ஆட்சி தான் இலக்கு என்று ஒரு போதும் நபியவர்கள் சொன்னதும் இல்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் இல்லை.

எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.

சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள்.

முதலில் ஒற்றுமை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன், ஹதீஸை ஏற்றுக் கொண்ட மக்களைத் தான் அல்லாஹ் ஒற்றுமையாக இருக்கச் சொல்கிறான். கொள்கையை விட்டுவிட்டு அதனால் ஏற்படுகின்ற ஒற்றுமை ஒரு போதும் இஸ்லாம் கூறும் ஒற்றுமையாக இருக்க முடியாது.

ஓர் ஊரிலுள்ள அத்தனை பேரும் வரதட்சணை வாங்குவதை ஆதரிக்கிறார்கள். ஒருவர் மட்டும் எதிர்க்கிறார் என்றால் அதனால் ஒற்றுமை குலையத் தான் செய்யும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஒருவரும் வரதட்சணை வாங்குவதை ஆதரிக்கத் தான் வேண்டும் என்று கூற முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த போது ஒற்றுமையைக் குலைப்பதாகத் தான் முஷ்ரிக்குகள் கூறினார்கள். அப்படிப்பட்ட ஒற்றுமை தேவையில்லை என்பதால் தான் எந்த ஒரு சுன்னத்தையும் விடாத, அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒரு சமுதாயத்தை - ஒற்றுமையான சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள்.

இவர்கள் வாதிடுவது போல் குர்ஆன், ஹதீஸைப் புறக்கணித்து விட்டு, அதனால் ஏற்படும் ஒற்றுமையை அல்லாஹ்வோ, அவன் தூதரோ காட்டித் தரவில்லை.

இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

இதுவும் அபத்தமான வாதமாகும்.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

இந்த இஸ்லாமிய ஆட்சி கோஷம் போடுவோர் ஜனநாயகத்தையும் எதிர்ப்பதாகக் கூறினார்கள்.

ஆனால் தற்போது அதெல்லாம் மலையேறி விட்டது. இந்தக் கோஷ்டியினரின் அரசியல் இப்போது சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது.

பாபர் மசூதி மீட்புக்காக நாம் போராட்டம் நடத்தும் போது கூட கிண்டல் செய்த இவர்கள், இன்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கருணாநிதியின் புகைப்படத்தைப் போட்டு டிஜிட்டல் பேனர் வைக்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளையும் அழைத்துப் பொதுக் கூட்டம் நடத்துகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது மட்டும் தான் பாக்கி! இது தான் இஸ்லாமிய ஆட்சி கோஷ்டியினரின் தற்போதைய நிலையாகும்.

2009 ஆம் ஆண்டு எழுதப்பட்டது

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account