Sidebar

19
Fri, Apr
4 New Articles

RSS மதமாற்றத் திட்டம் பற்றி

அரசியல் சமுதாயப் பிரச்சனைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

RSS மதமாற்றத் திட்டம் பற்றி

ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதமாற்றம் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கும்?

கேள்வி

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்து மதத்தைத் தழுவினால் முஸ்லிம்களுக்கு 5 இலட்சம் என்றும், கிறிஸ்தவர்களுக்கு 2 இலட்சம் என்றும் ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ள இந்த அறிவிப்பு சிறுபான்மையின மக்கள் மத்தியில் எடுபடுமா? இதனால் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்க வாய்ப்பிருக்கும்?

-ஜைனப் அஸ்மத், வண்ணாங்குண்டு, இராமநாதபுரம் மாவட்டம்.

பதில் :

இந்த அறிவிப்பு சங்பரிவாரத்துக்குத் தான் அவமானம். எங்கள் மதத்தில் உருப்படியான ஒரு கொள்கையும் இல்லை. மற்ற மதத்தவர்களின் கொள்கைகளைவிட மேலான கொள்கை ஒன்றும் எங்களிடம் இல்லை என்பதுதான் இதற்குரிய ஒரே அர்த்தம்.

ஐந்து லட்சம் தருகிறோம் என்று வேசித்தொழிலுக்கு நிகரான அறிவிப்பு செய்து நாம் மதித்து பின்பற்றும் மதத்தை இழிவுபடுத்தி விட்டார்களே என்று இந்துப் பொதுமக்கள் இதற்கு எதிராகக் கொந்தளிக்க வேண்டும்.

மேலும் இவர்கள் பிற மதத்தவர்களை மதமாற்ற எப்போது இறங்கினார்களோ அப்போதே இவர்கள் இந்து மதத்தில் இருந்து விலகி விட்டனர்.

ஏனெனில் ஒருவர் இந்துவாகப் பிறக்க முடியுமே தவிர, இந்துவாக மாற முடியாது என்பதுதான் இந்து மதத்தின் கொள்கை. பிறப்பால் மட்டுமே இந்துவாக முடியும் எனும் போது இந்துவாகப் பிறக்காத ஒருவரை இந்து மதத்தில் சேர்க்க முடியாது.

அதாவது இந்து அல்லாதவரை இந்துவாக்கும் போதே இந்து மதம் செத்து விடுகிறது. அடுத்தவனை இந்துவாக்கும் அதே நேரத்தில் இவர்கள் இந்து மதத்தை விட்டு விலகி விடுகிறார்கள்.

மேலும் இந்து மதம் மனிதர்கள் நான்கு வர்ணங்களாக உள்ளனர் என்ற வர்னாசிரமம் எனும் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

 (1)பிராமணர்கள்

 (2)சத்திரியர்கள்

 (3)வைசியர்கள்

 (4)சூத்திரர்கள்

 இதில் சேராதவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனும் தலித்துகள்.

இந்த ஐந்து பிரிவுகளில் ஒன்றாகத் தான் இந்துக்கள் இருக்க முடியும்.

இவர்கள் மதமாற்றம் செய்யும் போது மதம் மாற விரும்புவோரை எந்த வர்ணத்தில் சேர்ப்பார்கள்? இதைத் தெளிவாகச் சொல்ல இவர்களுக்குத் திராணி இல்லை. சொல்ல முடியாது.

நான் இந்துவாக மாறுகிறேன் என்னை பிராமணனாக ஆக்குங்கள் என்று ஒருவன் முன்வந்தால் அதைச் செய்யத் தயாராக இருக்கிறார்களா?

தலித் தவிர மதம் மாறியவனை வேறு எந்தச் சாதியில் இவர்கள் சேர்த்தாலும் அந்த வர்ணத்தைச் சேர்ந்த இந்து சமுகம் கடுமையாக எதிர்க்கும். அவனைத் தமது இனத்தவன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள்.

ஆக இவர்கள் ஒருவரையும் இந்துவாக்க முடியாது. இது ஒரு நாள் விளம்பரத்துடன் முடிந்து விடும்.

இந்தத் திட்டம் அவர்களுக்குக் கை கொடுக்குமா? மிகச் சிறிய அளவில் கை கொடுக்கலாம். ஆனால் அவர்களுக்குக் கை கொடுப்பதை விட முஸ்லிம்களுக்கு அதிகம் கை கொடுக்கும் என்பதுதான் உண்மை.

இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் இந்த நாட்டையே விலையாகக் கொடுத்தாலும் இஸ்லாத்தை விட்டு விலக மாட்டார்கள். பீரங்கிகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டாலும் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். தமது மார்க்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இத்தகைய முஸ்லிம்களில் ஒருவரைக் கூட இவர்களால் வென்றெடுக்க முடியாது.

உறுதியான கொள்கைப் பிடிப்பு இல்லாமல் மேலோட்டமாக இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுகும் மக்களையும் இவர்களால் வென்றெடுக்க முடியாது.

உறுதியான கொள்கைப் பிடிப்பு இல்லாமல், இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுகாமல் முஸ்லிம் என்ற இனப்பற்று உள்ள பெயர் தாங்கி முஸ்லிம்களைக் கூட இவர்கள் விலைக்கு வாங்க முடியாது.

இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமல், முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளால் கூட எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் முஸ்லிமல்லாதவர்களுடன் அவர்களைப் போலவே பழகி வரும் சிலர் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே இஸ்லாத்தை விட்டு விலகியவர்கள்தான்.

பள்ளிவாசலுக்கு வராமல் கோவிலுக்குப் போவார்கள். சாமியார்களிடம் போய் குறி கேட்பார்கள். முஸ்லிமல்லாதவர்களைப் போலவே வாழும் இவர்கள் ஏற்கனவே இஸ்லாத்தை விட்டு போனவர்கள் தான். அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது மட்டுமே குறை.

இது போன்றவர்களைத் தான் இந்து மதத்தில் சேர்ப்பதாக நாடகம் நடத்துவார்கள்.

இது போன்றவர்கள் அதிகாரப்பூர்வமாக தம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டால், இஸ்லாத்துக்கு நன்மைதான். இவர்களைப் பார்த்து இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்துக்கும் வேறுபாடு இல்லை என்று கருதி இஸ்லாத்துக்கு வரத் தயங்கியவர்களின் கவனம் இஸ்லாத்தின் பால் அதிகம் திரும்பும்.

ஆனால் இவர்களும் இந்து மதத்தின் நான்கு வர்ணங்களில் ஒன்றாகச் சேர்க்கப்படாமல் விடப்படும்போது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களின் போது வேறு மதங்களுக்கு மீண்டும் போய்விடுவார்கள்.

மேலும் இதுபோல் சங்பரிவாரம் செய்யும் இழிசெயலால் இஸ்லாம் குறித்தும், இந்து மதம் குறித்தும் வாதப்பிரதிவாதங்கள் அதிகரிக்கும். ஏனோதானோ என்று இந்து மதத்தில் இருக்கும் மக்கள் இரு மதங்களும் சொல்வது என்ன என்று சிந்திப்பார்கள். இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு காது கொடுப்பார்கள். எப்போதெல்லாம் இஸ்லாம் விவாதப் பொருளாகிறதோ அப்போதெல்லாம் இஸ்லாம் படுவேகமாகப் பரவும் என்பதுதான் வரலாறு.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய செயல் இஸ்லாத்துக்கு எதிரான செயல் என்ற போதும், இதன் காரணமாக இஸ்லாம் என்றால் என்ன? அதன் கொள்கை என்ன? அதற்கும் கிறித்தவத்துக்கும் வேறுபாடு என்ன என்ற வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், பிரான்சிலும், ஜெர்மனியிலும் மற்றும் பல நாடுகளிலும் இஸ்லாம் தாறுமாறாகப் பரவியது. எப்போது இஸ்லாம் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டாலும் அப்போதெல்லாம் இஸ்லாம் வளர்ச்சியையே அடைந்துள்ளது என்பதற்கு இது சமீபத்திய உதாரணம்.

ஏற்கனவே முஸ்லிம்களாக இல்லாதவர்களை இந்து மதத்தில் சேர்க்கும் நாடகம் அதிகமாகும் போது இஸ்லாத்தின் பெயரைக் கெடுத்த கழிவுகள் வெளியேறியதால் முஸ்லிம் சமுதாயம் இன்னும் தூய்மையாகக் காட்சி தரும். இஸ்லாத்தின் வளர்ச்சி பன்மடங்காக அதிகரிக்கும். இதற்காக நாம் கலங்கிடத் தேவை இல்லை.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இதுபோல்தான் ஆரிய சமாஜம் என்ற இயக்கத்தினர் இந்து மதத்தில் முஸ்லிம்களைச் சேர்க்கும் திட்டத்தில் இறங்கினார்கள்.

இந்து மதத்தில் சேர்க்க முயற்சித்ததால் இஸ்லாம் குறித்து விமர்சனங்களைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். குர்ஆன் குறித்தும் அல்லாஹ்வைக் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும், மறுமை வாழ்வு குறித்தும் கேள்விகள் எழுப்பினார்கள். இதுபோல் கேள்விகள் அடங்கிய சத்யப் பிரகாஷ் (உண்மை ஒளி) எனும் நூலையும் வெளியிட்டனர்.

ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் ஏகத்துவவாதியான மிகச்சிறந்த அறிஞர் சனாவுல்லா அமிர்தரஸீ அவர்கள் இந்த நூலுக்கு வரிக்கு வரி மறுப்பளித்து ஹக் பிரகாஷ் (உண்மை ஒளி என்பதுதான் இதற்கும் பொருள்) என்ற நூலை வெளியிட்டார்.

ஆரிய சமாஜம் கேட்ட கேள்விகள் அனைத்தையும் அறிவுப்பூர்வமான வாதங்களால் முறியடித்து இந்து மதத்தின் கொள்கைகள் குறித்தும் எதிர்வாதங்களையும் எடுத்து வைத்தார். ஆரிய சமாஜம் ஒரு முஸ்லிமை இந்துவாக்குவதற்குள் நூறு இந்துக்கள் முஸ்லிம்களாகும் அதிசயம் நிகழ்ந்தது.

ஏற்கனவே இந்துவாக மாற்றப்பட்டவர்கள் எந்தச் சாதியிலும் சேர்க்கப்படாமல் மீண்டும் பழைய மதத்துக்கு திரும்பினார்கள்.

இதனால் கதிகலங்கிப் போன ஆரிய சமாஜம் இந்த முயற்சியைக் கைவிட்டது. பெயரளவுக்கு மட்டும் அவ்வப்போது இந்துவாக்கும் நாடகத்தை நடத்தி வருகிறது.

ஆரிய சமாஜத்தின் அந்த வழியைத் தான் சங்பரிவாரம் கையில் எடுத்துள்ளார்கள். அப்போது ஏற்பட்ட அதே விளைவுதான் இப்போதும் ஏற்படும். இன்ஷா அல்லாஹ்

(உருது மொழி பாண்டித்தியம் பெற்ற தமிழறிந்தவர்கள் ஹக் பிரகாஷ் நூலை தமிழில் மொழி பெயர்த்துத் தர முன்வந்தால் நாம் அதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வோம்)

26.12.2014. 23:50 PM

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account