Sidebar

27
Sat, Jul
5 New Articles

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் தமிழ்

தமிழ் நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

நூலின் ஆசிரியர்: பீ. ஜைனுல் ஆபிதீன்

மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே’ என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது ‘ஊமை கண்ட கனவு போல்’ என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.

கனவு காணாதவன் மனிதனாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அம்சமாக மாறிவிட்ட கனவு பற்றி இஸ்லாம் கூறுவதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும்.

கனவு பற்றி ஒருவன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதன் அடிப்படையில் அவனது வாழ்க்கையிலும் மாறுதல் ஏற்படுவதால் இதுபற்றி விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது.

கனவு கண்டு விட்டு தன் மனைவியை சந்தேகித்தவர்கள்

அவளை விவாக விலக்கு செய்தவர்கள்

குழந்தைகளை நரபலியிட்டவர்கள்

கனவில் கண்டது போலவே தங்கள் பொருட்களைச் செலவிட்டவர்கள்

பணக்காரனாக ஆவது போல் கண்டு அதை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எனப் பட்டியல் நீள்கிறது.

உயிரினுமினிய ஈமானையும் பறிகொடுக்க

கனவுகளை காரணம் காட்டுவோர் ஏராளம்!

எனவே கனவுகள் பற்றி முழுமையாக முஸ்லிம்கள் விளங்க வேண்டும் என்பதற்காக ‘இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்’ என்ற நூலை வெளியிட்டோம். மக்களிடம் தொடர்ந்து கிடைத்த வரவேற்பின் காரணமாக இதுவரை இந்நூல் ஆறு பதிப்புகளைக் கண்டு, தற்போது ஏழாவது பதிப்பு உங்கள் கைகளில் தவழ்கிறது.

இந்த நூலை வாசிப்பவர்கள் கனவுகளால் ஏற்படும் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும். கனவுகளால் வழிதவறாமல் தடுத்து நிறுத்தும் வகையில் கீழ்க்காணும் தலைப்புக்களில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கனவுகள் பலவிதம்

கனவுகள் மூன்று வகை

நல்ல கனவுகள்

நல்ல கனவு கண்டால்…

கெட்ட கனவுகளைக் கண்டால்

காணாத கனவைக் கண்டதாகக் கூறுதல்…

நபிகள் நாயகத்தைக் கனவில் காணுதல்

கனவில் வரும் உரிமை எவருக்கும் இல்லை

கனவுகளின் பலன்கள்

குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்பட்டுள்ள சில கனவுகள்

யூசுப் நபியின் கனவு

இரண்டு கைதிகளின் கனவு

மன்னரின் கனவு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதாகக் கண்ட கனவு

எதிரிகளின் தோல்வியைக் கனவில் காணுதல்

லைலதுல் கத்ர் இரவு பற்றிய கனவு

ஈஸா நபியைக் கனவில் காணுதல்

பல்வேறு அளவுகளில் சட்டையைக் காணுதல்

பாலருந்துவது போல கனவு காணுதல்

பொய் நபிகளைக் கனவில் காணுதல்

உமரின் மாளிகையைக் காணுதல்

ஹிஜ்ரத் பற்றிய கனவு

உடைந்த வாளைக் காணுதல்

கப்பல் படை

திருமணத்திற்கு முன்பே மனைவியைக் காணுதல்

தலைவிரி கோலத்தில் பெண்ணைக் காணுதல்

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

இஸ்லாத்திற்கு எதிரான பல கொள்கைகளை இஸ்லாம் என்று தமிழக முஸ்லிம்களின் பலர் எண்ணுகின்றனர். இவ்வாறு அவர்கள் எண்ணுவதற்கு கனவுகள் பற்றிய அறியாமை முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. அவர்களில் பலர் ஏமாற்றப்படுவதற்கும் கனவுகள் பற்றிய அவர்களின் அறியாமையே காரணமாக அமைந்துள்ளது.

தர்ஹாக்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கும், அங்கே காணிக்கைகள் செலுத்துவதற்கும் பெரும்பாலும் கனவு தான் காரணமாக உள்ளது. ‘இந்த மகான் எனது கனவில் தோன்றி இந்த தர்ஹாவுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்’ என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் ஒரே ஆதாரமாகத் திகழ்கிறது.

எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லாமல் திடீர் திடீரென்று தர்ஹாக்கள் முளைப்பதற்குக் கூட கனவு தான் காரணமாக உள்ளது.

மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடும் போலிகள் கனவுகளுக்கு விளக்கம் கூறுகிறோம் என்று உளறிக் கொட்டி பிழைப்பு நடத்துவதையும், அவர்களின் உளறல்களை உண்மை என நம்பும் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதையும் நாம் காண முடிகின்றது.

கனவுகள் பற்றியும், அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பதைப் பற்றியும் சரியான விளக்கம் இல்லாததால் இன்னும் பல மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன.

நாம் கனவில் காண்பது யாவும் உண்மை நிகழ்ச்சிகள் தாமா?

கனவில் காண்பதை நடைமுறைப்படுத்துவது அவசியமா?

நாம் காணுகின்ற கனவுகள் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? கவலை தரும் கனவுகளைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?

நல்ல கனவுகளையும், கெட்ட கனவுகளையும் வேறு படுத்தி எவ்வாறு அறிந்து கொள்வது?

கனவுகளின் பலன்களை எவ்வாறு கண்டறிவது?

என்பன போன்ற கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் நபிவழியை ஆதாரமாகக் கொண்டு விளக்கத்தை அறிந்து கொண்டால் கனவுகள் மூலம் ஏற்படும் கேடுகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

கனவுகள் பலவிதம்

3 எந்தக் கனவையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

3 காணுகின்ற கனவுகள் அனைத்துமே அர்த்தம் நிறைந்தவை. கனவில் காண்பது யாவும் கட்டாயம் பலிக்கும். கனவில் நமக்கு ஏதேனும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டால் அதை அப்படியே நாம் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று வேறு சிலர் கூறு கின்றனர். இந்தக் கருத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

3 கனவுகளில் அர்த்தமுள்ளவையும் உள்ளன. அர்த்த மற்றவையும் உள்ளன என்பது தான் இஸ்லாத்தின் நிலையாகும்.

கனவுகள் மூன்று வகை

صحيح مسلم 6 - (2263) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ، وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا، وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَالرُّؤْيَا ثَلَاثَةٌ: فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللهِ، وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ، فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ، وَلَا يُحَدِّثْ بِهَا النَّاسَ "

‘கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4200

நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள பொருட்செல்வம், மழலைச் செல்வம், பட்டம், பதவிகள் போன்றவற்றை முன்கூட்டியே கனவின் மூலம் இறைவன் அறிவிப்பான். இது முதல் வகை கனவு. அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தி என்பதன் கருத்து இது தான்.

கவலையை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் உள்ள ஈடுபாட்டைக் குறைப்பதற்காகவும், போலிகளிடம் விளக்கம் கேட்டு இறை நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதற்காகவும் ஷைத்தான் நடத்தும் நாடகம் இன்னொரு வகையான கனவாகும்.

நமது ஆழ் மனதில் பதிந்துள்ள எண்ணங்களும் கனவுகளாக வெளிப்படுகின்றன. இதில் மகிழ்ச்சியடையவோ கவலைப்படவோ ஒன்றுமில்லை. இதற்கு எந்த அர்த்தமுமில்லை. இது மூன்றாவது வகையாகும். முதல் வகையான நல்ல கனவு பற்றி குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வழியில் ஆராய்வோம்.

நல்ல கனவுகள்

صحيح البخاري  6987 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»

‘நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் (இறைவனிடமிருந்து தூதர்களுக்கு கிடைக்கும் தூதுச் செய்தியின்) நாற்பத்தி ஆறு பங்கில் ஒரு பங்காகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 6987, 6988, 6989, 6983, 6994

சில அறிவிப்புக்களில் ’45ல் ஒரு பங்கு’ என்று கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம் 4200)

வேறு சில அறிவிப்புகளில் ’70ல் ஒரு பங்கு’ என்று கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம் 4205)

நல்ல கனவுகள் நுபுவ்வத்தில் 45ல் ஒரு பங்கு, அல்லது 46ல் ஒரு பங்கு, அல்லது 70ல் ஒரு பங்கு என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதைச் சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இறைவனுடைய தூதர்களான நபிமார்களுக்கு நான்கு வழிகளில் இறைச் செய்திகள் கிடைத்தன.

1. நேரடியாக இறைவன் தனது தூதர்களிடம் பேசுதல்

2. வானவரை அனுப்பி அவர் வழியாக தனது செய்திகளைக் கூறி அனுப்புதல்

3. தான் சொல்ல நினைக்கும் செய்தியைத் தனது தூதரின் உள்ளத்தில் உதிக்கச் செய்தல்

4. கூற வேண்டிய செய்திகளைக் கனவின் வழியாகக் காட்டுதல்

முதல் மூன்று வழிகளில் இறைச் செய்தி வரும் என்பதை 42:51 வசனத்திலிருந்து அறியலாம்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 42:51)

இந்த நான்கு வழிகளில் முதலிரண்டு வழிகள் இறைத் தூதர்களுக்கு மட்டும் உரியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதித் தூதர் என்பதால் அவர்களுக்குப் பின் யாருக்கும் முதலிரண்டு வகைகளில் செய்திகள் வராது. 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3 ஆகிய வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கு சான்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் ரஸூலும் வர மாட்டார்கள் என்பதற்கு நபிமொழிகளிலும் சான்றுகள் உள்ளன.

صحيح البخاري 3455 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ القَزَّازِ، قَالَ: سَمِعْتُ أَبَا حَازِمٍ، قَالَ: قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي، وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ» قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ، أَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ»

‘இஸ்ரவேல் சமுதாயத்தினரை அவர்களின் நபிமார்கள் வழிநடத்திச் சென்றனர். ஒரு நபி மரணித்தவுடன் இன்னொரு நபி அவருக்குப் பகரமாக வருவார். நிச்சயமாக எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. கலீஃபாக்கள் தான் தோன்றுவார்கள். அவர்கள் அதிகமாகவும் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 3455

مسند أحمد 13824 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ، فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ "، قَالَ: فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ، قَالَ: قَالَ: " وَلَكِنِ الْمُبَشِّرَاتُ "، قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَا الْمُبَشِّرَاتُ؟ قَالَ: " رُؤْيَا الرَّجُلِ الْمُسْلِمِ، وَهِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ "

‘தூதுத்துவமும், நபித்துவமும் முற்றுப் பெற்றுவிட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்கு கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எனினும் நற்செய்தி கூறுபவை உண்டு’ என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்ட போது ‘முஸ்லிம் காணுகின்ற கனவாகும்’ என்று விளக்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அஹ்மத் 13322

மூன்றாவது வகையான உள்ளுனர்வை ஏற்படுத்துதல் அவ்வப்போது இறைத் தூதர்கள் அல்லாத மனிதர்களிடமும் ஏற்படலாம்.

ஈஸா நபியின் சீடர்களுக்கு இத்தகைய வஹீ வந்தததாக 5:111 வசனம் கூறுகிறது.

என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!’ என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்த போது ‘நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக!’ என அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 5:111

தேனீக்களுக்கு இத்தகைய வஹீயை அனுப்பியதாக 16:68 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

‘மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

திருக்குர்ஆன் 16:68

மூஸா நபியின் தாயாருக்கு இத்தகைய வஹீயை அனுப்பியதாக 20:38 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! (திருக்குர்ஆன் 20:38)

தான் அறிவித்த செய்தியைப் பற்றி இவ்வசனங்களில் குறிப்பிடும் போது வஹீ என்ற சொல்லையே இறைவன் பயன்டுத்தியுள்ளான்.

இல்லாத செய்திகளை உள்ளுணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இறைவன் சிலருக்கு சில நேரங்களில் அறிவிப்பான் என்பதை இவ்வசனங்களின் வாயிலாக அறியலாம். இதுபோல் கனவுகள் மூலம் இறைச் செய்தி மனிதர்களுக்குக் கிடைக்கும் வாசலும் முழுமையாக அடைக்கப்படவில்லை.

மேலே நாம் எடுத்துக் காட்டிய நபிமொழி இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

உள்ளுணர்வு மூலம் இறைச் செய்தி கிடைத்தல், கனவு மூலம் இறைச் செய்தி கிடைத்தல் என்பது இறைத்தூதர்களுக்கு வருவது போல் மற்றவர்களுக்கும் வரும் என நாம் நினைக்கக் கூடாது.

ஏனெனில் இறைத் தூதர்களுக்குக் கனவின் மூலம் கொள்கை விளக்கங்கள், சட்ட திட்டங்கள் கூட வரலாம். மேலும் உள்ளுணர்வின் மூலமும் சட்டங்களும் அவற்றுக்கான விளக்கமும் இறைத் தூதர்களுக்கு வரலாம். இவ்வாறு வந்துள்ளன.

இது போன்ற இறைச் செய்திகள் இறைத் தூதர்களைத் தவிர மற்றவர்களுக்கு எந்த வகையிலும் வந்து சேராது. ஏனெனில் சட்டதிட்டங்கள், கொள்கை விளக்கங்கள் யாவும் நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்திலேயே இறைவனால் முழுமைப்படுத்தப்பட்டு விட்டன.

‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப்படுத்தி விட்டேன்; எனது அருளை நிறைவாக்கி விட்டேன்; இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக நான் பொருந்திக் கொண்டேன்’ என்று இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 5:3

இஸ்லாம் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் இதன் பின்னர் எந்தக் கொள்கை விளக்கமும், சட்டதிட்டமும் வழிபாட்டு முறைகளும் இறைவன் புறத்திலிருந்து வராது என்பது பொருள். மார்க்கம் என்ற பெயரால் கூற வேண்டிய அனைத்தையும் ஒன்று விடாமல் இறைவன் கூறி விட்டான் என்பது பொருள்.

கனவின் மூலமோ, உள்ளுணர்வின் மூலமோ கிடைக்கும் செய்திகளில் ‘இத்தனை ரக்அத் தொழு! இந்த நாளில் நோன்பு வை! இந்த உண்டியலில் காணிக்கை செலுத்து’ என்பன போன்ற செய்திகள் அறவே இருக்காது. இவற்றையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக ஏற்கனவே இறைவன் கூறிவிட்டான். அவற்றை விளக்க வேண்டிய வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு விளக்கி விட்டனர். அவை இறைவனால் பாதுகாக்கப்பட்டு நம்மையும் வந்து அடைந்து விட்டன.

‘இதைச் செய்யுமாறு தனக்குக் கனவில் செய்தி வந்தது!’ என்று ஒருவர் நம்பினால் அவர் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இஸ்லாம் முழுமைப்படுத்தப்படவில்லை என்று கருதியவராவார்.

அவர் தனது கனவில் இது போல் கண்டாலும் அது ஷைத்தானின் சேட்டை என்று தான் நம்ப வேண்டுமே தவிர இறைவன் கனவு மூலம் தனக்குக் கட்டளையிட்டான் என்று நம்பக் கூடாது.

கனவின் மூலம் கொள்கை வழிகாட்டுதலோ, சட்ட விளக்கமோ வராது என்றால் ‘நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் நாற்பத்தி ஆறில் ஒரு பங்கு’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதன் பொருள் என்ன?

இதையும் விளக்கமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு வரும் செய்திகள் இரண்டு அம்சங்களைக் கொண்டவையாக இருந்தன.

இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடு, வணக்க வழிபாடு மற்றும் சட்ட திட்டங்கள் பற்றிய செய்தி முதல் வகை.

எதிர்காலத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை முன் கூட்டியே அறிவித்துக் கொடுத்தல் இரண்டாவது வகை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதன் மூலம் முதல் வகையான செய்திகளின் வருகை நிறுத்தப்பட்டு விட்டது. உலகம் உள்ளளவும் யாருக்கும் சட்டதிட்டங்களைப் பற்றிய எந்தச் செய்தியும் வராது.

ஆனால் இரண்டாம் வகையான இறைச் செய்தியில் மார்க்கத்துடன் தொடர்புடைய முன்னறிவிப்புக்கள், மார்க்கத்துடன் தொடர்பில்லாத தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறிவித்தல் என இரு வகைகள் உள்ளன.

இந்த இரு வகை முன் அறிவிப்புக்களில் மார்க்கம் தொடர்பான முன் அறிவிப்புக்களின் வருகையும் நிறுத்தப்பட்டு விட்டது. மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற வசனமே இதற்கும் போதிய ஆதாரமாகும்.

உலகம் அழிவதற்கு முன் ஏற்படவுள்ள மாறுதல்கள், யுக முடிவு நாளின் அடையாளங்கள் போன்ற செய்திகள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்திலேயே தெரிவிக்கப்பட்டு நம்மையும் வந்து அடைந்து விட்டன.

ஏழையாக இருப்பவன் நாளை செல்வந்தனாகலாம். பல வருடங்களாக குழந்தை இல்லாத ஒருவனுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கலாம். இது போன்ற செய்திகள் மார்க்கத்துடன் தொடர்பில்லாதவை. தனிப்பட்ட மனிதன் சம்மந்தப்பட்டவை. இத்தகைய எதிர்கால நிகழ்வுகளில் சிலவற்றை இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவருக்குக் கனவின் மூலம் காட்டுவான். இந்த வாசல் அடைக்கப்படவில்லை. ‘நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் நாற்பத்தி ஆறில் ஒரு பங்கு’ என்ற நபிமொழியின் கருத்து இது தான்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த விளக்கத்தை அளித்துள்ளார்கள்.

صحيح البخاري  6990 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلَّا المُبَشِّرَاتُ» قَالُوا: وَمَا المُبَشِّرَاتُ؟ قَالَ: «الرُّؤْيَا الصَّالِحَةُ»

‘நற்செய்தி கூறுவதைத் தவிர நுபுவ்வத்தில் (இறைவனிடமிருந்து மனிதனுக்கு வரும் செய்தியில்) எதுவும் மிச்சம் வைக்கப்படவில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘நற்செய்தி கூறுபவை யாவை?’ என நபித்தோழர்கள் கேட்ட போது, ‘நல்ல கனவுகள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6990

مسند أحمد 13824 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ، فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ "، قَالَ: فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ، قَالَ: قَالَ: " وَلَكِنِ الْمُبَشِّرَاتُ "، قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَا الْمُبَشِّرَاتُ؟ قَالَ: " رُؤْيَا الرَّجُلِ الْمُسْلِمِ، وَهِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ "

‘நபித்துவமும், தூதுத்துவமும் முற்றுப் பெற்று விட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் (தூதரும்) இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்குக் கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எனினும் நற்செய்தி கூறுபவை உள்ளன’ என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்ட போது ‘முஸ்லிம் காணும் கனவாகும். இது நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்’ என்று விடையளித்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 13322

இறைவனிடமிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் செய்திகள் (நுபுவ்வத்) இரு வகைகள் உள்ளன என்ற கருத்தும், அதில் நற்செய்தி கூறுபவை தவிர மற்றவை நிறுத்தப்பட்டு விட்டன என்ற கருத்தும், அவை கனவுகள் வழியாக மனிதனை வந்தடையும் என்ற கருத்தும் இந்த நபிமொழிக்குள் அடங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

இதைப் பற்றி இன்னும் விளக்கமாக அறிந்து கொண்டால் கனவுகளால் வழி தவறுவதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

‘இந்த இரவில் இத்தனை ரக்அத்கள் தொழு!’ என்று ஒருவர் கூறுவது போல் ஒருவர் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது நிச்சயம் இறைவன் புறத்திலிருந்து வந்த கனவல்ல. ஏனெனில் இந்த நாளில் இவ்வளவு தொழ வேண்டும் என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இறைவன் நமக்குக் காட்டித் தந்து விட்டான். கனவின் மூலம் காட்டித் தரும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறை ஏதும் வைக்கவில்லை.

மேலும் இது போன்ற செய்திகள் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்றால் அனைத்து முஸ்லிம்களின் கனவிலும் இது போல் கூறப்பட வேண்டும். ஏனெனில் வணக்க வழிபாடுகளில் அனைவரும் சமமானவர்களே. மார்க்கத்தில் உள்ள நல்ல செயல் ஒன்றை ஒரே ஒருவருக்கு மட்டும் காட்டிவிட்டு மற்றவர்களுக்கு அதைக் காட்டாமல் இருப்பது இறைவனின் நீதிக்கு எதிரானதாகும்.

‘இந்த இடத்தில் ஒரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்காக அந்த இடத்தில் ஒரு தர்ஹாவைக் கட்டு’ என்று ஒருவரது கனவில் கூறப்பட்டால் அதுவும் ஷைத்தானிடமிருந்து வந்த கனவு தான்.

ஏனெனில் இறந்தவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்கள் கட்டுவதையும் வழிபாட்டுத் தலங்கள் எழுப்புவதையும், சமாதிகள் பூசப்படுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டனர். எழுப்பப்பட்ட கட்டடங்களை இடித்துத் தகர்க்கும் படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் ஏற்கனவே நமக்கு அறிவித்து விட்டான்.

அந்த அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை இறைவன் கூற மாட்டான் என்பதால் இது ஷைத்தானின் வேலை தான் என்று கண்டு கொள்ளலாம்.

3 அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை அனுமதிப்பது போன்றவை

3 அல்லது அனுமதித்தவைகளைத் தடுப்பது போன்றவை

3 வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் வகையில் அமைந்தவை

போன்ற கனவை யார் கண்டாலும் அது ஷைத்தானின் வேலை தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கனவுகள் மூலம் சட்டங்கள் வர முடியாது என்றால் இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிடுவது பற்றிய கட்டளையைக் கனவின் மூலமாகத் தானே பெற்றார்கள் என்ற சந்தேகம் ஏற்படலாம்.

இந்தச் சந்தேகம் தேவையற்றதாகும். ஏனெனில் இறைவனின் தூதர்களுக்கு மட்டும் சட்டதிட்டங்கள் பற்றிய செய்திகள் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும். இத்தகைய செய்திகள் கனவின் மூலமும் மற்ற மூன்று வழிகளிலும் அவர்களுக்குக் கிடைக்கலாம்.

இறைத்தூதர்களின் கனவுகளில் ஷைத்தான் குறுக்கிட முடியாது. எனவே அவர்களுக்கு கனவில் வரும் கட்டளைகளும் இறைவனின் கட்டளையாகத் தான் இருக்க முடியும். அப்படித் தான் அதை இப்ராஹீம் நபியவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ‘என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு’ என்று கேட்டார். ‘என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்’ என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத் திய போது, ‘இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூ வழங்குவோம்’ என்று அவரை அழைத்துக் கூறினோம்.

திருக்குர்ஆன் 37:102, 103 104, 105

‘கனவை மெய்ப்பித்து விட்டீர்! இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் பதிலளிப்போம்’ என்று கூறுவதன் மூலம் அந்தக் கனவு தன்னுடைய செய்தி தான் என்று இறைவன் உறுதிப்படுத்துகிறான்.

நபிமார்களுக்கும் ஷைத்தானின் கனவுகள் வர முடியும் என வைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு வேறு மூன்று வழிகளில் இறைவனிடமிருந்து செய்திகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே தாம் கண்ட கனவின் நிலையை அந்த வழிகளில் அவர்களால் அறிந்து கொள்ள இயலும். மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.

நல்ல கனவு கண்டால்…

நற்செய்தி கூறும் வகையில் நாம் கனவு கண்டால் நமக்கு ஏற்படவுள்ள நன்மையை முன் கூட்டியே அல்லாஹ் அறிவித்துத் தருவதாக கருதிக் கொள்ள வேண்டும்.

(நல்ல கனவின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை கனவின் பலன்கள்’ என்ற தலைப்பில் பின்னர் நாம் கூறியுள்ளோம்)

நல்ல கனவைக் காணும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் நமக்கு வழிகாட்டியுள்ளது.

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் தமக்குப் பணிவது போல் யூசுப் நபியவர்கள் கனவு கண்டு தமது தந்தையிடம் கூறினார்கள். அப்போது தந்தை யஃகூப் (அலை) அவர்கள் பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்.

‘என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களுக்குக் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாவான்’ (திருக்குர்ஆன் 12:5)

யூசுப் நபியவர்களின் சகோதரர்கள் அவருக்கு எதிரியாக இருந்தனர் என்று யூசுப் அத்தியாயத்தில் பல இடங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

எனவே நல்லது நடப்பது போல், அல்லது தீமை விலகுவது போல் நாம் கனவு கண்டால் நாம் மிகவும் நேசிக்கக் கூடிய, நம்மை நேசிக்கக் கூடிய மக்களிடம் மட்டும் தான் அதைத் தெரிவிக்க வேண்டும். மற்றவர்களிடம் தெரிவிக்கக் கூடாது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறியலாம்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவாக நமக்கு விளக்கியுள்ளனர்.

صحيح البخاري  6985 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا، فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لِأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ»

‘உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது தான். எனவே அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். அதைப் பிறருக்கும் கூறட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 6985

صحيح البخاري  7044 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: لَقَدْ كُنْتُ أَرَى الرُّؤْيَا فَتُمْرِضُنِي، حَتَّى سَمِعْتُ أَبَا قَتَادَةَ، يَقُولُ: وَأَنَا كُنْتُ لَأَرَى الرُّؤْيَا تُمْرِضُنِي، حَتَّى سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرُّؤْيَا الحَسَنَةُ مِنَ اللَّهِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلاَ يُحَدِّثْ بِهِ إِلَّا مَنْ يُحِبُّ، وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ، وَلْيَتْفِلْ ثَلاَثًا، وَلاَ يُحَدِّثْ بِهَا أَحَدًا، فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ»

‘நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். எனவே ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தமக்கு மிகவும் விருப்பமானவரைத் தவிர யாருக்கும் அதைத் தெரிவிக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல்: புகாரி 7044

مسند أحمد ط الرسالة  9129 - حَدَّثَنَا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الرُّؤْيَا ثَلَاثَةٌ: فَبُشْرَى مِنَ اللهِ، وَحَدِيثُ النَّفْسِ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ، فَلْيَقُصَّهَا إِنْ شَاءَ، وَإِذَا رَأَى شَيْئًا يَكْرَهُهُ، فَلَا يَقُصَّهُ عَلَى أَحَدٍ، وَلْيَقُمْ فَلْيُصَلِّ "

‘தமக்கு விருப்பமான கனவை ஒருவர் கண்டால் அவர் விரும்பினால் மற்றவருக்குச் சொல்லட்டும்’ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 8766

நல்ல கனவு கண்டவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்பதையும், அவர் விரும்பினால் அது பற்றி தமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டும் கூறலாம் என்பதையும் மற்றவர்களிடம் கூறக் கூடாது என்பதையும் இந்த நபிமொழிகளிலிருந்து நாம் அறியலாம்.

கெட்ட கனவுகளைக் கண்டால்

கெட்ட கனவுகளைக் கண்டால் அதற்காகக் கவலைப்படுவோர் உள்ளனர். அதனால் ஏற்படும் தீங்குகளிலிருந்து விடுபடுவதற்காக ஏதேனும் பரிகாரம் உண்டா என்று தேடியலைந்து நிம்மதியை இழப்பவர்களும் உள்ளனர்.

கெட்ட கனவு கண்டவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

صحيح البخاري  7044 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ: لَقَدْ كُنْتُ أَرَى الرُّؤْيَا فَتُمْرِضُنِي، حَتَّى سَمِعْتُ أَبَا قَتَادَةَ، يَقُولُ: وَأَنَا كُنْتُ لَأَرَى الرُّؤْيَا تُمْرِضُنِي، حَتَّى سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرُّؤْيَا الحَسَنَةُ مِنَ اللَّهِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلاَ يُحَدِّثْ بِهِ إِلَّا مَنْ يُحِبُّ، وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ، وَلْيَتْفِلْ ثَلاَثًا، وَلاَ يُحَدِّثْ بِهَا أَحَدًا، فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ»

‘நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தனக்கு விருப்பமானவரைத் தவிர மற்றவருக்கு அதைக் கூற வேண்டாம். தனக்குப் பிடிக்காத கனவை ஒருவர் கண்டால் அதனால் ஏற்படும் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் அவர் பாதுகாவல் தேடட்டும். மேலும் இடது புறம் மூன்று தடவை துப்பட்டும். எவரிடமும் அது பற்றிக் கூறவும் கூடாது. இவ்வாறு நடந்து கொண்டால் அவருக்கு அவரது கனவால் எந்தக் கேடும் எற்படாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 7044

صحيح البخاري  3292 - حَدَّثَنَا أَبُو المُغِيرَةِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ح وحَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا الوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالحُلُمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ أَحَدُكُمْ  حُلُمًا يَخَافُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ»

‘நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். தனக்கு அச்சத்தை ஏற்படுத்தும் கெட்ட கனவை ஒருவர் கண்டால் தனது இடது புறத்தில் துப்பி விட்டு அதன் தீங்கை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். இவ்வாறு செய்தால் அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 3292

صحيح مسلم  6 - (2263) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ، وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا، وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَالرُّؤْيَا ثَلَاثَةٌ: فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللهِ، وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ، فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ، وَلَا يُحَدِّثْ بِهَا النَّاسَ "

‘கெட்ட கனவைக் கண்டால் எழுந்து அவர் தொழட்டும். அதை மனிதர்களிடம் கூற வேண்டாம்’ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4200

 கெட்ட கனவு காண்பவர்கள் ‘இறைவா! இதன் கேடுகளிலிருந்தும் ஷைத்தான் மூலம் ஏற்படும் கேடுகளிலிருந்தும் பாதுகாப்பாயாக’ எனக் கூற வேண்டும்.

 இடது புறமாக மூன்று தடவை துப்ப வேண்டும்.

 கெட்ட கனவு கண்டு விழித்தவுடன் எழுந்து இயன்ற அளவுக்குத் தொழ வேண்டும்.

 கெட்ட கனவை வேண்டியவரிடமோ, வேண்டப்படாதவரிடமோ எவரிடமும் கூறக் கூடாது.

இந்த விஷயங்களை மேற்கண்ட நபிமொழிகள் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்தக் கனவைக் காணும் போது நமக்கு கவலையோ, அச்சமோ ஏற்படுகிறதோ அவை தாம் கெட்ட கனவுகள்.

அது தவிர அர்த்தமற்ற கனவுகளையும் நாம் காணலாம். இதுவும் கூட கெட்ட கனவுகள் தாம். அது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கியுள்ளனர்.

صحيح مسلم  14 - (2268) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِأَعْرَابِيٍّ جَاءَهُ فَقَالَ: إِنِّي حَلَمْتُ أَنَّ رَأْسِي قُطِعَ فَأَنَا أَتَّبِعُهُ، فَزَجَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «لَا تُخْبِرْ بِتَلَعُّبِ الشَّيْطَانِ بِكَ فِي الْمَنَامِ»

ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘என் தலை வெட்டப்படுவது போலவும் அதை நான் விரட்டிச் செல்வது போலவு கனவு கண்டேன்’ என்று அவர் கூறும் போது, ‘ஷைத்தான் உன்னோடு கனவில் விளையாடுவதைப் பற்றி (யாருக்கும்) கூறாதே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4211, 4213

صحيح مسلم  15 - (2268) وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ رَأْسِي ضُرِبَ فَتَدَحْرَجَ فَاشْتَدَدْتُ عَلَى أَثَرِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَعْرَابِيِّ: «لَا تُحَدِّثِ النَّاسَ بِتَلَعُّبِ الشَّيْطَانِ بِكَ فِي مَنَامِكَ» وَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ، يَخْطُبُ فَقَالَ: «لَا يُحَدِّثَنَّ أَحَدُكُمْ بِتَلَعُّبِ الشَّيْطَانِ بِهِ فِي مَنَامِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் ‘ஒருவரது கனவில் ஷைத்தான் விளையாடினால் அதை யாருக்கும் கூற வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4212

காணாத கனவைக் கண்டதாகக் கூறுதல்…

ஒருவர் கனவு கண்ட விஷயம் அவருக்கும், அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகும். கனவு கண்டவர் கூறாத வரை மற்றவர்களால் அதை அறிந்து கொள்ள முடியாது. கனவு கண்டது உண்மை தான் என்பதை எந்த சாட்சியத்தின் மூலமும் நிரூபிக்க முடியாது. கனவு கண்டவனின் சொல்லை நம்பித் தான் அவனது கனவையும் நம்ப வேண்டும்.

எந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசினாலும் மக்கள் அதற்கு ஆதாரம் கேட்பார்கள். ஆனால் கனவு கண்டதாக ஒருவர் கூறினால் அதற்கு யாரும் ஆதாரம் கேட்க மாட்டார்கள்.

அந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு காணாததைக் கண்டதாக மனிதன் தயக்கமில்லாமல் பொய் சொல்லக் கூடாது என்பதற்காக இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான குற்றமாக அறிவிக்கிறார்கள்.

صحيح البخاري  3509 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا حَرِيزٌ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الوَاحِدِ بْنُ عَبْدِ اللَّهِ النَّصْرِيُّ، قَالَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَعْظَمِ الفِرَى أَنْ يَدَّعِيَ الرَّجُلُ إِلَى غَيْرِ أَبِيهِ، أَوْ يُرِيَ عَيْنَهُ مَا لَمْ تَرَ، أَوْ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُلْ»

‘தன் தந்தையல்லாத இன்னொருவரைத் தந்தை எனக் கூறுவதும், கனவில் காணாததைக் கண்டதாகக் கூறுவதும், நான் கூறாததைக் கூறியதாகச் சொல்வதும் பொய்களில் மிகப் பெரிய பொய்களாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா (ரலி)

நூல்: புகாரி 3509

صحيح البخاري  7042 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ، وَلَنْ يَفْعَلَ، وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ، وَهُمْ لَهُ كَارِهُونَ، أَوْ يَفِرُّونَ مِنْهُ، صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ القِيَامَةِ، وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبَ، وَكُلِّفَ أَنْ يَنْفُخَ  فِيهَا، وَلَيْسَ بِنَافِخٍ»

‘காணாத கனவைக் கண்டதாக யாரேனும் கூறினால் (மறுமையில்) இரண்டு கோதுமைகளுக்கிடையே முடிச்சுப் போட்டு இணைக்குமாறு அவன் கட்டாயப்படுத்தப் படுவான். அவனால் அதை ஒருக்காலும் செய்ய முடியாது’ எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7042

கோதுமை வழுக்கக் கூடியதாக இருப்பதால் ஒரு முடிச்சுக்குள் இரண்டு கோதுமையை யாராலும் இணைக்க முடியாது. இந்தச் செயலைச் செய்யுமாறு அவன் கட்டாயப்படுத்தப்படுவான் என்பது கனவு விஷயத்தில் பொய் சொல்பவர்களுக்குப் போதுமான எச்சரிக்கையாகும்.

நபிகள் நாயகத்தைக் கனவில் காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான்.

ஒருவர் இறை நேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள் நாயகத்தைக் கனவில் காண்பது தான் எனவும் மார்க்க அறிவு குறைந்த சிலர் நினைக்கின்றனர்.

இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் கனவில் நபிகள் நாயகத்தைக் கண்டதாகப் புளுகி மக்களிடம் இறை நேசர் என்ற பட்டத்தைப் பெற்று விடுகின்றனர்.

குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரான கருத்துக்களுடன் இயற்றப்பட்ட புர்தா’ என்ற பாடலை %சிரி என்ற புலவன் எழுதினான். அவன் தனது கவிதையில் ஒரு இடத்தில் தடுமாறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனுடைய கனவில் தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்று புளுகி புர்தா’ என்ற கட்டுக் கதையைப் புனிதமாக்கியுள்ளதைக் காண்கிறோம். மார்க்க அறிவு சிறிதும் இல்லாத %சிரி என்ற புலவனை இறை நேசராகச் சித்தரிப்பதையும் காண்கிறோம்.

புர்தாவைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டி எழுதப்பட்ட புளுகு மூட்டை தான் சீராப்புராணம். குர்ஆன் ஹதீஸைப் பற்றி ஓரளவு அறிவு உள்ளவர் கூட சீராப்புராணத்தைக் கட்டுக்கதை என்று கண்டு கொள்வார். இதைப் புனைந்த உமருப்புலவர் என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் காட்சியளித்து புராணத்தை அங்கீகரித்ததாக மார்க்கத்தை அறியாதவர்கள் புளுகி வருகின்றனர்.

முரீது என்ற பெயரால் மக்களை வழிகெடுக்கும் பித்தலாட்டக்காரர்களும் கூட தாங்கள் நபிகள் நாயகத்தைக் கனவில் கண்டதாகக் கூறித் தான் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? என்பது பற்றிய அறிவும் நமக்கு இருப்பது அவசியமாகும்.

صحيح البخاري  6197 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

‘யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6197

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.

صحيح البخاري 6993 - حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَآنِي فِي المَنَامِ فَسَيَرَانِي فِي اليَقَظَةِ، وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي»

‘என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்’ என்பது தான் அந்த நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.

‘என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும் போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.

அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும் போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.

இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தையும் அதற்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கனவில் ஒருவர் தோன்றி, நான் தான் முஹம்மத் நபி’ என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நபிகள் நாயகத்தின் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்ற நபிமொழியின் அடிப்படையில் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் வந்தார்கள் என்று கருதலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.

நான் தான் முகம்மது நபி’ என்று ஒருவர் கூறுகூது போல் கனவு கண்டாலும் அது நபிகள் நாயகம் அல்லர். ஷைத்தான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தியுள்ளான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் நபிகள் நாயகத்தின் வடிவத்தை எடுக்க மாட்டான் என்று தான் அந்த நபிமொழி உத்தரவாதம் தருகிறது. ஷைத்தான் தனக்கே உரிய வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று அந்த நபிமொழி கூறவில்லை.

‘என் வடிவில் ஷைத்தான் வர மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கனவில் ஒருவர் வந்தால் அவர் நபிகள் நாயகமா அல்லவா? என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவராக இருக்க வேண்டும்.

நேரில் அவர்களை எந்த வடிவத்தில் பார்த்தாரோ அதே வடிவில் கனவிலும் வந்தால் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று அவரால் அறிந்து கொள்ள இயலும்.

நபிகள் நாயகத்தின் வடிவத்தைக் காணாத ஒருவரால் இதை அறிந்து கொள்ள இயலாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தை எடுப்பதை விட்டும் தான் ஷைத்தான் தடுக்கப்பட்டுள்ளான். வேறு வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகத்தை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு ‘நபிகள் நாயகத்தை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்’ என்றெல்லாம் கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

கனவில் வரும் உரிமை எவருக்கும் இல்லை

ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அது போன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக இன்று உயிருடன் உலகத்தில் வாழும் ஒருவரை நாம் கனவில் காண்பதாக வைத்துக் கொள்வோம். கனவில் அவரைப் பார்த்த பின்னர் காலையில் அவரை நாம் நேரிலும் சந்திக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மனிதர் ‘நான் நேற்றிரவு உன் கனவில் வந்தேனே?’ என்று கூறுவாரா? என்றால் நிச்சயமாகக் கூற மாட்டார்.

நமது கனவில் அவர் வந்தது நமக்குத் தான் தெரியுமே தவிர அவருக்குத் தெரியாது. ‘உங்களை நான் கனவில் கண்டேன்’ என்று அவரிடம் நாம் கூறினால் தான் அதை அவரால் அறிந்து கொள்ள முடியும்.

அவர் தமது கனவில் எத்தனையோ விஷயங்களைப் பேசுவதாக நாம் கனவு கண்டிருப்போம். நாம் அவரிடம் போய் ‘நேற்று என் கனவில் நீங்கள் கூறிய அறிவுரையை மீண்டும் கூறுங்கள்’ என்று கேட்டால் அவரால் அதைக் கூற முடியாது. ‘நான் கனவில் என்ன அறிவுரை கூறினேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்?’ என்பது தான் அவரது பதிலாக இருக்கும்.

எனவே ஒருவரை நாம் கனவில் கண்டால் அவரே வந்து விட்டார் என்றும் கருதக் கூடாது. அவர் நம்மோடு பேசியது அனைத்தும் அவரது வார்த்தைகள் என்றும் நாம் நினைக்கக் கூடாது. அவருக்கு நமது கனவில் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அவரை எடுத்துக் காட்டி அவர் கூறுவது போல் சில செய்திகளை இறைவன் நமக்குக் கூறலாம். அல்லது ஷைத்தான் அவரது வடிவத்தில் வந்து நமக்கு கெட்ட கனவை ஏற்படுத்தியிருப்பான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உயிருடன் உள்ள ஒருவரை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கூட கனவில் காண முடியும். அவர் ஆயிரம் இடத்துக்குச் சென்று காட்சியளித்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

ஒருவரை வீடியோவில் பதிந்து மற்றவருக்கு காட்டுவது போல் தான் கனவில் காண்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

‘நான் நாளை இரவு உனது கனவில் வரட்டுமா?’ என்று எந்த மனிதரும் எந்த மனிதரிடமும் கேட்க முடியாது. இதிலிருந்து கனவில் தென்படுபவர் அவராக முடிவு செய்து நமது கனவில் வருவதில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

கனவுகளின் பலன்கள்

நல்ல கனவுகள் நற்செய்தி கூறுபவை என்றால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? நாம் காணுகின்ற கனவுகளின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது? இது பலருக்கும் இருக்கின்ற சந்தேகம்.

கனவுகளின் பலன்கள் என்ற பெயரில் பலரும் நூல்களை எழுதித் தள்ளியுள்ளனர். இப்னு ஸீரின் என்பவர் கனவுகளின் விளக்கத்தை அறிந்தவராக இருந்தார் எனவும் கூறி வருகின்றனர். இவையாவும் கட்டுக் கதைகள் தான்.

இன்னின்ன கனவுக்கு இது தான் பலன் என்றெல்லாம் அவர்கள் கூறுவதற்கு குர்ஆனிலோ, நபிமொழியிலோ எந்த ஆதாரமும் இல்லை.

‘யானையைக் கண்டால் இது நடக்கும். பூனையைக் கண்டால் அது நடக்கும்’ என்றெல்லாம் உளறும் போலிகளின் பேச்சை நம்பி நாம் நிம்மதி இழக்கத் தேவையில்லை.

நல்ல கனவுகள் மூலம் இறைவன் நமக்கு நற்செய்தி கூறுகிறான் என்றால் அதன் விளக்கம் நமக்கே புரியும் வகையில் தான் கூறுவான்.

‘அனைத்தையும் அறிந்தவனை (அல்லாஹ்வை) போல் வேறு எவரும் உமக்கு விளக்க முடியாது’

என்று அல்லாஹ் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 35:14

எனவே நமக்கு ஒரு நற்செய்தி கூறு விரும்பும் இறைவன் நமக்குப் புரியாத வகையில் கூறிவிட்டு இந்த உளறுவாயர்களின் விளக்கத்தைக் கேட்கும் படி விட மாட்டான்.

எனவே காணும் கனவுக்கு எவரிடமும் விளக்கம் கேட்கத் தேவையில்லை. அது எந்த நற்செய்தியைக் கூறுகிறது என்று நமக்குத் தோன்றுகிறதோ அது தான் அதற்கான விளக்கம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் பல கனவுகளும் அவற்றின் விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்தால் நமது கனவின் பலன் என்னவாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கான வழி நமக்குத் தென்படும்.

பொதுவாக கனவுகளுக்குப் பலன் கூறுவோர் ‘கல்யானத்தைக் கண்டால் கருமாதி நடக்கும் என்றும் கருமாதியைக் கண்டால் கல்யாணம் நடக்கும்’ என்றும் ஏறுக்குமாறாக கூறி வருகின்றனர். ஆனால் கனவுகளின் விளக்கம் நாம் எதைக் கண்டோமோ அதுவாக இருக்கும். அல்லது அதை ஒட்டியதாக இருக்கும். அதற்கு நேர் முரணாக இருக்காது.

குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ள கனவுகளிலிருந்து இந்த உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.

குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்பட்டுள்ள சில கனவுகள்

யூசுப் நபியின் கனவு

12-வது அத்தியாயம் 4-வது வசனத்தில் யூசுப் நபியவர்கள் கண்ட கனவைக் கூறுகிறான்.

‘என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்’ என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 12:4

இந்தக் கனவின் பலன் என்ன என்பதை இதே அத்தியாயத்தின் 100-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். ‘என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்’ என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:100

யூசுப் நபியவர்கள் பிற்காலத்தில் அதிபராக ஆகி அவர்களின் ஆட்சியின் கீழ் அவர்களின் தாய் தந்தையர் வாழும் நிலை ஏற்படும் என்பதையும் அவரது அண்ணன்மார்களும் அவருக்குக் கீழே இருக்கும் நிலை ஏற்படும் என்பதையும் சூரியன், சந்திரன், பதினொரு நட்சத்திரங்கள் அவருக்குப் பணிவதாகக் காட்டுவதன் மூலம் இறைவன் அறிவித்தான்.

அதாவது அவர்கள் எவ்வாறு கனவு கண்டார்களோ அதற்கு ஏற்ப அதன் பலனும் அமைந்தது.

இரண்டு கைதிகளின் கனவு

யூசுப் நபியுடன் வேறு இரண்டு கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இரு கைதிகளும் வெவ்வேறு கனவுகளைக் கண்டு அதற்கான விளக்கத்தை யூசுப் நபியிடம் கேட்டனர்.

அவருடன் இரு இளைஞர்கள் சிறைக்குச் சென்றனர். ‘நான் மது ரசம் பிழிவதைப் போல் கனவு கண்டேன்’ என்று ஒருவர் கூறினார். ‘நான் என் தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க, அதைப் பறவை சாப்பிடக் (கனவு) கண்டேன்’ என்று இன்னொருவர் கூறினார். ‘இதன் விளக்கத்தை எங்களுக்குக் கூறுவீராக! உம்மை நன்மை செய்வோரில் ஒருவராக நாங்கள் காண்கிறோம்’ (என்றனர்).

திருக்குர்ஆன் 12:36

இதற்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

‘என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்குப் மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது’ (என்றார்.)

திருக்குர்ஆன் 12:41

தனது தலையின் மேல் ரொட்டியைச் சுமந்து செல்லும் போது அவற்றைப் பறவைகள் உண்பது போல் கனவு கண்டவர் மரண தண்டனை அடைவார் என்று யூசுப் நபி விளக்கினார்கள். அவரது உணவு முடிந்து விட்டது என்பதை பறவைகள் சாப்பிட்டதன் மூலம் அல்லாஹ் காட்டினான். அதன் பலனும் அவ்வறே அமைந்தது.

பழரசம் பிழிவது போல கனவு கண்டவருக்கு அவர் கனவு கண்டது போல் எஜமானருக்கு பழரசம் பிழிந்து புகட்டும் வேலை கிடைக்கும் என்றார்கள்.

இந்த இருவரும் எதைக் கனவில் கண்டார்களோ அதற்கேற்ப பலனும் அமைந்தது.

யூசுப் நபியிடம் இரு கைதிகள் விளக்கம் கேட்டது போல் நாமும் மற்றவர்களிடம் விளக்கம் கேட்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. இறைத்தூதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து செய்திகள் கிடைப்பதால் அவர்களால் மிகத் தெளிவான பலனைக் கூற முடியும்.

இறைத்தூதராக இல்லாத ஒருவரிடம் பலன் கேட்க எந்தச் சான்றும் இல்லை.

மன்னரின் கனவு

யூசுப் நபி காலத்தில் எகிப்தை ஆண்ட மன்னர் கண்ட கனவும் அந்தக் கனவுக்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் 12வது அத்தியாயம் 43 முதல் 49 வரை கூறப்பட்டுள்ளது.

‘கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!’ என்று மன்னர் கூறினார்.

‘இவை அர்த்தமற்ற கனவு. அர்த்தமற்ற கனவின் விளக்கத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை’ என்று அவர்கள் கூறினர்.

‘நான் உங்களுக்கு அதற்கான விளக்கம் தருகிறேன். என்னை அனுப்புங்கள்!’ என்று அவ்விருவரில் விடுதலையானவர் நீண்ட காலத்திற்குப் பின் நினைவு வந்தவராக கூறினார்.

யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்றதற்கும், ஏழு பசுமையான கதிர்கள் மற்றும் காய்ந்த கதிர்களுக்கும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! மக்களிடம் (இத்தகவலுடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் (என்றார்.)

தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றில் உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்!

இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலதைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டு விடும்.

‘இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழ ரசங்களைப் பிழிவார்கள்’ (என்றார்)

திருக்குர்ஆன் 12:43-49

மெலிந்த ஏழு மாடுகள் = வரட்சியான ஏழு ஆண்டுகள்

கொளுத்த ஏழு மாடுகள் = செழிப்பான ஏழு ஆண்டுகள்

மெலிந்த மாடு கொளுத்த மாட்டைச் சாப்பிடுதல் = வரண்ட ஆண்டுகள் செழிப்பான ஆண்டுகளின் சேமிப்பைச் சாப்பிடுதல்

என்று கனவும் அதன் பலனும் ஒத்ததாக அமைந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதாகக் கண்ட கனவு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த ஊரை விட்டு விரட்டப்பட்டனர். ஆயினும் அவர்கள் சொந்த ஊரான மக்காவுக்குள் நுழைந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் அல்லாஹ் கனவில் காட்டினான். அவன் காட்டியது போலவே அது அப்படியே நிறைவேறியது.

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.

திருக்குர்ஆன் 48:27

எதிரிகளின் தோல்வியைக் கனவில் காணுதல்

பத்ருக் களத்தில் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையிலும் எதிரிகள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனவில் எதிரிகள் குறைவாகவும் முஸ்லிம்கள் அதிகமாகவும் இருப்பது போல் இறைவன் காட்டினான். முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை இதன் மூலம் இறைவன் முன்னறிவிப்புச் செய்தான்.

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 8:43

லைலதுல் கத்ர் இரவு பற்றிய கனவு

லைலதுல் கத்ர் இரவில் மழை பெய்வது போலவும், அதனால் தரை சேறும் சகதியுமாகி அதில் ஸஜ்தாச் செய்வது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். அவர்கள் கனவு கண்டவாறு மறுநாள் இரவு மழை பெய்து, களி மண்ணில் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எதைக் கண்டார்களோ அது போலவே அதன் பலனும் அமைந்தது.

புகாரி 813, 2016, 2018, 2027, 2036, 2040 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.

ஈஸா நபியைக் கனவில் காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கனவில் கஃபாவைத் தவாப் செய்வது போல கண்டார்கள். அதே கனவில் ஈஸா நபியையும், தஜ்ஜாலையும் கண்டார்கள். அவ்விருவரின் அங்க அடையாளங்களை நமக்கும் விவரித்தார்கள்.

இது புகாரி 3441, 3440, 5902, 6999, 7026, 7128 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் எந்த வடிவத்தில் கனவில் கண்டார்களோ அதுவே அவர்களின் வடிவமாக இருந்தது.

பல்வேறு அளவுகளில் சட்டையைக் காணுதல்

மனிதர்கள் பலவித அளவுகளில் சட்டை அணிந்தவர்களாக நபிகள் நாயகம் கனவு கண்டார்கள். சிலரது சட்டை மார்பு வரையும், சிலரது சட்டை அதை விடக் குறைவாகவும் இருந்தது. உமர் அவர்களின் சட்டை தரையில் இழுபடும் அளவுக்கு இருந்தது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதன் விளக்கம் என்ன என்று உமர் (ரலி) கேட்ட போது ‘மார்க்கம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கம் தந்தார்கள். (புகாரி 23, 3691, 7008, 7009)

அதிகமான மார்க்கப் பற்று உள்ளவர் பெரிய ஆடை அணிந்தது போன்றும், மார்க்கப்பற்று குறைவாக உள்ளவர் அதற்கேற்ப சிறிய அளவில் சட்டை அணிந்தது போன்றும் கனவு கண்டு நபிகள் நாயகம் விளக்கமும் தந்துள்ளார்கள்.

பாலருந்துவது போல கனவு காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் அருந்துவது போலவும் மீதியை உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்தது போலவும் கனவில் கண்டார்கள். கல்வியே பால் வடிவில் காட்டப்பட்டதாகவும் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

(புகாரி 82, 3681, 7006, 7007, 7027, 7032)

பொய் நபிகளைக் கனவில் காணுதல்

صحيح البخاري  3621 - فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " بَيْنَمَا أَنَا نَائِمٌ، رَأَيْتُ فِي يَدَيَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَيَّ فِي المَنَامِ: أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ، يَخْرُجَانِ بَعْدِي " فَكَانَ أَحَدُهُمَا العَنْسِيَّ، وَالآخَرُ مُسَيْلِمَةَ الكَذَّابَ، صَاحِبَ اليَمَامَةِ

இரு கைகளிலும் தங்கக் காப்புகள் அணிவிக்கப்பட்டது போல் என் கனவில் கண்டேன். அது எனக்குச் சுமையாக இருந்தது. அதை ஊதுமாறு அல்லாஹ் எனக்கு அறிவித்தான். நான் ஊதியதும் இரு காப்புகளும் பஞ்சாய்ப் பறந்தன. சன்ஆ, எமன் ஆகிய பதிகளில் தம்மை நபியென வாதிட்ட இரு பொய்யர்களுக்கு ஏற்படும் தோல்வியை அல்லாஹ் இவ்வாறு காட்டுவதாக விளங்கிக் கொண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3621, 4375, 7034, 7037)

உமரின் மாளிகையைக் காணுதல்

மறுமையில் உமர் (ரலி) அவர்களுக்குக் கிடைக்கும் மாளிகையை நபிகள் நாயகம் கனவில் கண்டு அதை உமர் (ரலி) யிடம் கூறினார்கள்.

(புகாரி 3242, 3680, 5227, 7023, 7025)

புகாரி 3679-ல் உமர், பிலால், ருமையா ஆகியோரின் மாளிகைகளைக் கனவில் கண்டதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஹிஜ்ரத் பற்றிய கனவு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்வது போல் கண்டார்கள். பேரீச்சை மரம் நிறைந்த அந்த ஊர் யமாமா என்ற ஊராக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளங்கிக் கொண்டார்கள். ஆனால் அது மதீனாவாக அமைந்து விட்டது.

இது புகாரியில் 3622, 7035 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

உடைந்த வாளைக் காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாள் உடைந்தது போலவும் பின்னர் உடைந்த வாள் சரியாகி விட்டது போலவும் கனவு கண்டார்கள். அது உஹதுக் களத்தில் முன்னர் ஏற்பட்ட தோல்வியையும் பின்னர் வெற்றி கிடைத்ததையும் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) விளக்கினார்கள்.

(புகாரி 3622, 4081, 7041)

கப்பல் படை

தமது சமுதாயத்தில் கடற்படை அமைவது போலவும் அந்தப் படையில் உம்மு ஹராம் என்ற பெண்மணி இடம் பெறுவது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். தாம் கண்டவாறு நிறைவேறும் என்று விளக்கினார்கள்.

(புகாரி 2789, 2800, 2878, 2895, 2924, 6282, 7002)

திருமணத்திற்கு முன்பே மனைவியைக் காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு முன்பே கனவில் ஆயிஷா (ரலி) யைக் கண்டு அல்லாஹ் நாடினால் இது நடக்கும் என்றார்கள். அவ்வாறே நடந்தது.

(புகாரி 3895, 5078, 5125, 7011, 7012)

தலைவிரி கோலத்தில் பெண்ணைக் காணுதல்

மதீனாவில் கொள்ளை நோய் ஏற்பட்ட போது கனவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஜுஹ்ஃபா என்ற இடத்துக்குச் செல்வது போல் கனவு கண்டார்கள். அந்த நோய் மதீனாவை விட்டு ஜுஹ்பா என்ற பகுதிக்குச் சென்றதாக விளக்கினார்கள்.

(புகாரி 7038, 7039, 7040)

இப்படி ஏராளமான கனவுகள் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

வாளியில் தண்ணீர் இறைப்பது போன்ற கனவு புகாரி 3664, 7021, 7022, 7475 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

தேனையும் நெய்யையும் கனவில் கண்டதாக புகாரி 7046வது ஹதீஸில் காணலாம்.

பசுமையான பேரீச்சம் பழத்தைக் கனவில் கண்டது முஸ்லிம் 4215வது ஹதீஸில் காணலாம்.

இவை அனைத்தையும் நாம் ஆய்வு செய்தால் நாம் எதைக் கனவில் காணுகிறோமோ அது அப்படியே நிறைவேறலாம். அல்லது நாம் கண்டதற்கு நெருக்கமானதாக அதன் விளக்கம் அமையலாம் என்பதை அறியலாம்.

மேலும் நபிகள் நாயகம் கண்ட அதே கனவை நாமும் கண்டால் அதே பலன் என்று முடிவு செய்யக் கூடாது.

கனவு காண்பவரின் காலம், அவர் சந்தித்த பிரச்சினை போன்றவற்றுக்கேற்ப அதன் பலன் இருக்கலாம்.

தலைவிரி கோலமாக ஒரு பெண்ணைப் பார்த்து கொள்ளை நோய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். கொள்ளை நோய் இல்லாத போது அது போல கனவு கண்டால் அதே விளக்கத்தைக் கொடுக்க முடியாது.

காணுகின்ற மனிதர் சிந்தித்துப் பார்த்தால் இது எதைக் குறிக்கிறது என்று தீர்மானிக்க முடியும்.

எதையுமே தீர்மானிக்க முடியாவிட்டால் பேசாமல் அதை அலட்சியப்படுத்தி விடலாம். அதில் ஏதேனும் செய்தி இருந்தால் நமக்குத் தெளிவாகப் புரியும் வகையில் அதை வேறு கனவின் மூலம் அல்லாஹ் காட்டுவான்.

கனவில் காண்பதை நாம் விளங்கும் போது கனவில் கண்டது அப்படியே வரிக்கு வரி நடக்கும் என்று கருதக் கூடாது. நாம் புரிந்து கொண்டது நடக்காமல் அதற்கு நெருக்கமானதும் நடக்கலாம்.

யூசுப் நபியவர்கள் பதினொரு நட்சத்திரங்கள் தமக்குப் பணிந்ததாகக் கனவு கண்டார்கள். அதற்கு ஏற்ப 11 சகோதரர்களும் அவரைப் பணிந்தார்கள். கனவில் சூரியனும், சந்திரனும் தமக்குப் பணிந்ததாகக் கண்டார்கள். இது அப்படியே நிறைவேறுவது என்றால் யூசுப் நபியின் தாயும், தந்தையும் யூசுப் நபிக்குப் பணிய வேண்டும். ஆனால் தாயையும் தந்தையையும் சிம்மாசனத்தில் அமரச் செய்து அனைவரும் அவ்விருவருக்கும் பணிந்தார்கள் என்று தான் 12:100 வசனம் கூறுகிறது. கனவில் காட்டப்பட்டது ஒரு அளவுக்குத் தான் நடந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஊருக்கு ஹிஜ்ரத் செய்வது போல் கண்டார்கள். அந்த ஊர் யமாமா’ என்று நபிகள் நாயகம் (ஸல்) நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது மதீனாவாக இருந்தது. இதிலிருந்து கனவில் காட்டப்படும் செய்தி நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் இருக்காது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

எனவே கனவு பற்றி சரியாக விளங்கி இம்மை மறுமை பேறுகளை அடைந்திட வல்ல அல்லாஹ அருள் புரிவானாக!

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account